மூன்று லட்சம் கிலோ எடை கொண்ட பிரமாண்ட திமிங்கலம் - எங்கே வாழ்ந்தது தெரியுமா?

    • எழுதியவர், ஜொனாதன் அமோஸ்
    • பதவி, பிபிசி அறிவியல் செய்தியாளர்

பூமியில் வாழும் மிகப்பெரிய உயிரினமான நீலத் திமிங்கலம், பழங்காலத்தில் மிகப்பெரும் உருவ அமைப்பைக் கொண்டிருந்திருந்தது. இதற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நீண்ட காலத்துக்கு முன்பே அழிந்துபோன அந்த திமிங்கலத்தின் எடை சுமார் 3 லட்சம் கிலோவாக இருந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை அறியப்பட்ட மிகப்பெரும் நீலத் திமிங்கலங்கள் மட்டுமே அவற்றின் உயரம் மற்றும் உடல் எடைக்குப் போட்டியாக இருந்திருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

புதைபடிவமாக இருந்த அந்த திமிங்கலத்தின் பழமையான எலும்புகள் பெரு நாட்டின் தென்பகுதியில் உள்ள ஒரு பாலைவனத்தில் தோண்டியெடுக்கப்பட்டதால் அதற்கு பெருசெட்டஸ் கொலோசஸ் (Perucetus colossus) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புதைபடிவ எலும்பு எவ்வளவு காலத்துக்கு முற்பட்டது என ஆய்வு செய்தபோது, அது சுமார் 4 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

"உண்மையில் இந்த படிவ எலும்புகள் 13 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இந்த எலும்புகள் மிக அதிக எடை கொண்டதாக இருந்ததால் பெரு நாட்டின் தலைநகர் லிமாவுக்கு அவற்றைக் கொண்டுவரவே 3 ஆண்டுகள் ஆகின.

லிமாவுக்கு அவற்றை எடுத்துவந்த பிறகு அந்த எலும்புகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன," என்று பழங்காலம் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் மரியோ உர்பினா தலைமையிலான கண்டுபிடிப்பு குழுவில் பணிபுரிந்த டாக்டர் எலி ஏம்சன் தெரிவிக்கிறார்.

இந்த குழுவினர் மேற்கொண்ட ஆராய்ச்சியின்போது, 13 முதுகெலும்புகள், 4 நெஞ்சக எலும்புகள் மற்றும் ஒரு இடுப்பெலும்பு என இந்த கடல்வாழ் பாலூட்டியின் 18 எலும்புகள் கிடைத்துள்ளன.

துண்டு துண்டாக கிடைத்திருக்கும் இந்த எலும்புகள் மற்றும் அவற்றின் வயதைக் கருத்தில் கொண்டு, விஞ்ஞானிகள் இந்த உயிரினத்தைப் பற்றி பெரிய அளவில் புரிந்துகொள்ள முடிந்தது.

குறிப்பாக, இந்த எலும்புகள் மிகவும் அடர்த்தியாக இருந்தன. உடலுக்குள் இயற்கையாக நடக்கும் ஆஸ்டியோஸ்கிளிரோசிஸ் எனப்படும் ஒரு செயல் மூலம் எலும்பின் உள்பகுதியில் உள்ள துவாரங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும், அவற்றின் வெளிப்புற அமைப்புக்கள் கூடுதலான வளர்ச்சியைக் கொண்டுள்ளளன. இது பேச்சியோஸ்டோசிஸ் என்று அழைக்கப்படுகிறது

எலும்புகள் இந்த அளவுக்கு உறுதியாக இருப்பது நோயின் காரணமாக ஏற்படவில்லை என்று ஆராய்ச்சிக் குழு கூறியது. மேலும், இந்த பெரிய திமிங்கலத்தின் அதிக எடை காரணமாக ஆழமற்ற நீரில் மட்டுமே உணவுகளை உட்கொண்டுவந்திருக்கும். உலகின் சில பகுதிகளில் கடலோரங்களில் தற்காலத்தில் வசிக்கும் கடல் பசுக்களில் இதே போன்ற எலும்பு அம்சங்கள் காணப்படுகின்றன.

நீண்ட காலத்துக்கு முன் அழிந்துபோன ஒரு உயிரினத்தின் எலும்புக்கூட்டைக் கண்டுபிடிக்கும் போது, ​​​​ விலங்குகளின் உடல் வடிவத்தை சரியான முறையில் கட்டமைக்க விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர். அவற்றுடன் ஒப்பிடக்கூடிய உயிரினங்களின் உயிரியல் பற்றி அவர்களுக்கு தெரிந்த விவரங்களின் அடிப்பமையில் அவர்கள் இதைச் செய்கிறார்கள்.

இந்த நீலத்திமிங்கலத்தின் நீளம் 17 முதல் 20 மீட்டர் இருந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆனால் அதன் எலும்பின் எடை மட்டும் 5.3 முதல் 7.6 டன்கள் வரை இருந்திருக்கும். இத்துடன் பிற உறுப்புகள், தசைகள் மற்றும் உடலில் உள்ள பிற அம்சங்களையும் சேர்க்கும் போது, அதன் மொத்த எடை 85 ஆயிரம் கிலோவிலிருந்து 3 லட்சத்து 20 ஆயிரம் கிலோ வரை இருக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

ஜெர்மனியின் ஸ்டேட் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி ஸ்டட்கார்ட்டின் கண்காணிப்பாளரான டாக்டர் அம்சன், திமிங்கலங்களின் உடல் எடையைக் குறிக்க 180 என்ற சராசரி எண்ணைப் பயன்படுத்துகிறார்.

தற்போது எல்லாமே வணிகமயமாகிவிட்ட நிலையில், இக்காலகட்டத்தில் கிடைத்த மிகப்பெரிய நீல திமிங்கலங்கள் இந்த அளவில் தான் இருந்தன.

"நாங்கள் சொல்ல விரும்புவது என்னவென்றால், 'பெருசெட்டஸ்', நீல திமிங்கலம் வாழும் பகுதியில் மட்டுமே வாழ்ந்திருக்கிறது," என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார்.

"ஆனால் நமக்குக் கிடைத்திருக்கும் இந்த நீலத்திமிங்கலம் பெரிய திமிங்கலமா அல்லது சிறிய திமிங்கலமா என யோசிக்க எந்த காரணமும் இல்லை; அது அந்த திமிங்கலங்களின் பொதுவான அளவைப் பிரதிபலிக்கும் ஒன்றாகவே இருந்திருக்கும். எனவே நாம் சராசரி மதிப்பீட்டைப் பயன்படுத்தும்போது, ​​​​நீலத் திமிங்கலங்களின் உருவ அமைப்பாக ஏற்கெனவே நாம் அறிந்துவைத்துள்ள அளவுகளின் உச்சபட்ச அளவாகத் தான் இருக்கிறது."

லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட எவருக்கும் மிகவும் பரிச்சயமான ஒரு நீலத் திமிங்கலத்தைத் தான் இந்த ஆய்வுக் குழுவினர் பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட திமிங்கலத்துடன் ஒப்பிட்டுள்ளனர்.

ஹோப் எனப்பெயரிடப்பட்ட இந்தத் திமிங்கலத்தின் எலும்புக்கூடு 2017-இல் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பிரதான மண்டபத்தின் மேலிருந்து தொங்கவிடப்பட்ட போது, அது அருங்காட்சியகத்தின் பெருமையாகக் கருதப்பட்டது.

ஆனால் அந்த எலும்புக்கூடு அங்கே காட்சிப்படுத்தப்பட்டதற்கு முன்பு, அதை முழுக்க முழுக்க விரிவாக ஆய்வு செய்து அதன் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் தான் தற்போது உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளுக்கு ஒரு முக்கியமான தரவு ஆதாரமாக உள்ளன.

லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள திமிங்கலம் ஐந்து மீட்டர் நீளமாக இருந்தாலும், பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட நீலத்திமிங்கலமான 'பெருசெட்டஸ்' வாழ்ந்த போது, அதன் எலும்பு நிறை நாம் நினைப்பதைவிட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக இருந்திருக்கும்.

என்.ஹெச்.எம்.-மில் உள்ள கடல்வாழ் பாலூட்டிகளின் கண்காணிப்பாளரான ரிச்சர்ட் சபின், பெருவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நீலத்திமிங்கலம் பற்றிக் கேள்விப்பட்ட போது அவரது உடல் சிலிர்த்துவிட்டது. பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளில் சிலவற்றை லண்டனுக்கு கொண்டு வந்து காட்சிப்படுத்த அவர் விரும்புகிறார்.

"ஹோப் என்ற அந்த திமிங்கலத்தின் எலும்பு எடையை அளந்து, அதை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அதன் மொத்த உருவ அமைப்பைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து அந்த விவரங்களை டிஜிட்டல் மயமாக்க நாங்கள் போதுமான காலஅளவை எடுத்துக் கொண்டோம். தற்போது இந்த திமிங்கலம் பற்றிய விவரங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக மாறியிருக்கின்றன," என்று அவர் கூறினார்.

"இந்தத் திமிங்கலம் தான் மிகப்பெரியது என நாங்கள் எப்போதும் கருதுவதில்லை. இது போன்ற தகவலையும் இங்கே நாங்கள் பதிவுசெய்துவைக்கவில்லை. ஏனென்றால் அறிவியல் உலகம் எப்போதும் ஒரு புதுத் தகவலைத் தந்துகொண்டே இருக்கும். நாங்கள் இங்கே ஒரு தகவலை நிரந்தரமாக்க முடியாது என்பதை நன்கு அறிவோம்."

"நான்கரை மில்லியன் ஆண்டுகளுக்குள் தான் இது போன்ற மாபெரும் உயிரினமான திமிங்கலங்கள் உருவாகியிருக்கவேண்டும் என பொதுவாகக் கருதப்பட்டு வரும் நிலையில், சுமார் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இது போல் ஒரு மாபெரும் விலங்கு வாழ்ந்து வந்துள்ளது என்பது 'பெருசெட்டஸ்' குறித்த மிகப்பெரும் ஆச்சரியமாக உள்ளது."

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: