You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு ரூ.7500 வழங்கும் தமிழ்நாடு அரசு: விண்ணப்பிப்பது எப்படி?
- எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
- பதவி, பிபிசி தமிழ்
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7500 வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பப்பது என்பதை பார்ப்போம்.
அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு பெறுபவர்களின் எண்ணிக்கை என்பது குறைந்த அளவிலேயே உள்ளது. கடந்த மே மாதம் வெளியான அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுகளுக்கான முடிவுகளில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இடம்பெறவில்லை.
மேலும் 933 மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஐ.எஃப்.எஸ் பணிகளுக்குத் தேர்வாகியிருக்கும் நிலையில், இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 42 பேர் மட்டுமே தேர்வாகினர்.
கடந்த ஆண்டை பொறுத்தவரை தேர்வான 685 பேரில் 27 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இவ்வாறு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சிபெறும் தமிழ்நாடு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதை கருத்தில்கொண்டு அதனை அதிகரிக்கும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
ஊக்கக் தொகை திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு அரசு
குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், கடந்த மார்ச் 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு மேம்பட்டப் பயிற்சி, பயிற்சி பொருட்கள் வ. ழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்“ என்று அறிவித்தார்
இதேபோல், " மதிப்பீட்டுத் தேர்வு மூலம் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் முதல்நிலை தேர்விற்குத் தயாராகுவதற்காக மாதத்திற்கு 7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் . முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்" என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.
ஊக்கத்தொகை- மதிப்பீட்டுத் தேர்வு அறிவிப்பு
தற்போது, ஊக்கத்தொகைக்கு நபர்கள் தேர்வு செய்யப்படும் நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதில், " தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வின் ஊக்கத் தொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை 10.09.2023 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது. இத்தேர்வின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு மாதம் 7,500 வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? தகுதிகள் என்னென்ன?
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு தேர்வுக்கான ஊக்கத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://nmcep.tndge.org/apply_now என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த மாதாந்திர உதவித் தொகை திட்டத்திற்கு தேர்வு செய்யப்படும் 1000 விண்ணப்பதாரர்களில் 50 மாணவர்கள் புதியவர்களாக (முதல்முறையாக யுபிஎஸ்சி தேர்வுக்கு முயற்சிப்பவர்கள்) இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியவர்கள் ( 50 இடங்கள்)
அதன்படி புதியவர்களுக்கான வயதுத் தகுதி என்பது குறைந்தபட்சம் 21 ஆண்டுகளாகவும் அதிகபட்சம் 22 ஆண்டுகளாகவும் இருக்க வேண்டும். மருத்துவம், ஒங்கிணைந்த பட்டப் படிப்பு, கால்நடை மருத்துவம் போன்றவற்றில் பட்டம் பெற்றவர்களுக்கு அதிகபட்ச வயதில் தளர்வு வழங்கப்படும்.
பொதுவானவர்கள் (950 இடங்கள்)
குறைந்தபட்ச வயது : 21
அதிகபட்ச வயது: ஆதி திராவிடர்/ பழங்குடியினர்/ அருந்ததியர் ஆகியோர் 37 வயதுக்கும், மாற்றுத்திறனாளிகள் 42 வயதுக்கும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோர் 35 வயதுக்கும், பொதுப்பிரிவினர் 32 வயதுக்கும் மிகாதவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி- நுழைவுத் தேர்வு மையங்கள்
விண்ணப்பதாரர் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் உள்ளன என்றும் விண்ணப்ப படிவத்தில் தேர்வு மையத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?
ஏற்கனவே மத்திய மாநில அரசுப் பணிகளில் பணிபுரியும் விண்ணப்பதாரர்கள் இந்த மதிப்பீட்டுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், உதவித்தொகையைப் பெறும் மாணவர்கள் 26 மே 2024 அன்று நடைபெறவுள்ள மத்திய அரசின் குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்து, ஆவணங்களை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திடம் சமர்ப்பிக்க தவறிய விண்ணப்பதாரர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் எப்போது?
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு தேர்வுக்கான ஊக்கத் தொகை திட்டத்திற்கான இணைய வழி விண்ணப்பம் ஆகஸ்ட் 2, 2023 தொடங்கியது. விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு ஆகஸ்ட் 17ஆம் தேதி கடைசி நாள் ஆகும். நுழைவுச் சீட்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடப்பட்டு செப்டம்பர் 10ஆம் தேதி காலை 10 முதல் பகல்1 மணி வரை தேர்வு நடைபெறும்.
தேர்வு எப்படி நடத்தப்படும்?
பொது அறிவு, CSAT (Civil Services Aptitude Test) ஆகிய இரு பாடத்திட்டங்களை அடிப்படையாக கொண்டு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்படும். மொத்தம் 150 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும் இதில் 100 கேள்விகள் பொது அறிவு சார்ந்தும் 50 கேள்விகள் CSAT சார்ந்தும் இருக்கும். கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.
தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் 22.09.23 அன்று வெளியிடப்பட்டு 25.09.23 அன்று(உத்தேசமாக) சான்றியழ் சரிபார்க்கப்பட்டு, 02.10.23 அன்று (உத்தேசமாக) வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்