You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது?
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார்.
இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.
'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம்
அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார்.
இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார்.
இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி.
அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.
"பிரதமருக்கு ஏன் வெள்ளை குடை?"
பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.
'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை
அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார்.
“2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன.
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார்.
தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.
பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார்.
தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)