You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'தலைவி' கங்கனா ரணாவத் பா.ஜ.க. சார்பில் போட்டி - சினிமா முதல் அரசியல் வரை என்ன சாதித்தார்?
வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளராகக் களமிறங்குகிறார் நடிகை கங்கனா ரணாவத். அவர் பிறந்த ஊரான, இமாச்சல பிரதேச மண்டி நாடாளுமன்றத் தொகுதியில் அவர் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை, இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது ஐந்தாவது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில் கங்கனா ரணாவத்துக்கு மண்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தல்களில் கங்கனா ரணாவத் பாஜக வேட்பாளராக போட்டியிடலாம் என்பது எதிர்ப்பார்க்கப்பட்டது தான்.
வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முந்தைய நாள், தான் தேர்தலில் நிற்கக் கூடும் என்பதை சூசகமாக தெரிவித்திருந்தார் கங்கனா. இமாச்சல பிரதேசம் கங்கராவில் உள்ள பகல்முகி கோயிலுக்கு வந்திருந்த கங்கனா, “எனது தாய் விருப்பப்பட்டால், நான் நிச்சயமாக மண்டி தொகுதியிலிருந்து போட்டியிடுவேன்” என்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்திருந்தார்.
பாஜகவில் சீட் கிடைத்தது பற்றி கங்கனா கூறியது என்ன?
வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு, “நான் எப்போதும் எனது பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளேன். இன்று பாஜக தேசிய தலைமை எனக்கு நான் பிறந்த ஊரான மண்டியிலிருந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
சமீப ஆண்டுகளில் தனது சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக தலைப்பு செய்திகளில் இடம் பெற்றிருந்தவர் கங்கனா. மகாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் ஐக்கிய சிவ சேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு குறித்த அவரது விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. அவர் அரசியலில் நுழைய இடம் தேடுவதால் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வருகிறார் என்று கூறினர்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் மகாவிகாஸ் அகாடி அரசை கடுமையாக தாக்கி பேசிய அவருக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அப்போது அவர் விரைவில் பாஜகவில் சேரவுள்ளார் என்று பேசப்பட்டது.
பாலிவுட் திரையுலகில் கங்கனா ரணாவத் என்ற பெயர் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இருந்து வந்தது- சில சமயம் அவரது திறமையான நடிப்புக்காக, சில சமயம் சர்ச்சைகளுக்காக.
கங்கனா ரணாவத் சினிமாவில் நுழைந்தது எப்படி?
இமாச்சல பிரதேசத்தில் பிறந்த கங்கனா ரணாவத் நடிக்க வேண்டும் என்று விரும்பிய போது, டெல்லியில் உள்ள நாடக இயக்குநர் அர்விந்த் கவுரிடமிருந்து தனது முதல் பாடங்களை கற்றுக் கொண்டார். அதன் பிறகு மும்பை சென்றார்.
மும்பை வந்த பிறகு, அவர் நிறைய சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது. அவருக்கு ஆதித்ய பஞ்சோலியின் ஆதரவு இருந்தது. அவர்கள் இருவரின் உறவு குறித்து நிறைய பேசப்பட்டன, கங்கனா அவரது காதலி என்றும் பேசப்பட்டது.
தனது தலைவிதியை தேடி அலைந்த போது, திரைப்பட இயக்குநர் மகேஷ் பட் -ஐ சந்தித்தார். 2006ம் ஆண்டு ‘கேங்ஸ்டர்’ திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகி பாத்திரம் வழங்கினார். அந்த படத்தை அனுராக் பாசு இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தின் கதாபாத்திரம் கங்கனா மீது கவனம் பெற வைத்தது. தனது முதல் படத்தில் அவரது நடிப்புக்காக, பாராட்டு மட்டும் பெறவில்லை. சிறந்த புதுமுகத்துக்கான தேசிய விருதையும் பெற்றார்.
அதன் பிறகு, கங்கனா தன் திரைவாழ்வில் புதிய உச்சங்களை தொட்டுக் கொண்டே இருந்தார்.
2007ம் ஆண்டு அவரது நடிப்பில் ‘வோ லாம்ஹே’ மற்றும் ‘ லைஃப் இன் அ மெட்ரோ’ ஆகிய திரைப்படங்கள் வெளியாயின. ஆனால் 2008ம் ஆண்டு வெளியான ‘ஃபேஷன்’ கங்கனாவுக்கு மற்றொரு தளத்தை வழங்கியது.
மது பண்டார்கரின் ‘ஃபேஷன்’ படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடித்திருந்தார். கங்கனாவுக்கு அந்த படத்தில் மிக சிறிய பாத்திரம் தான் வழங்கப்பட்டது. எனினும் துணை கதாபாத்திரத்துக்காக கங்கனாவுக்கு தேசிய விருது கிடைத்தது.
அதன் பிறகு அவர் நடித்த ‘ராஸ்-3’ வெளியானது. அந்த படத்தின் கதாநாயகன் ஆத்யன் சுமனுடன் அவர் தொடர்பில் இருந்ததாக செய்திகள் கசிந்தன. ஆனால் வெகு விரைவில் அவர்களின் உறவு முறிந்துவிட்டது.
தமிழில் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியிருந்தார் கங்கனா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைப் படமான ‘தலைவி’ வெப் சீரிஸில் ஜெயலலிதாவாக நடித்திருந்தார்.
திரையுலகில் உச்சம் தொட்ட கங்கனா
ஒரு காதல் நகைச்சுவை கதையான ‘தனு வெட்ஸ் மனு’ என்ற 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் கங்கனாவை திரை வாழ்வில் புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகமும் பெரும் வெற்றி பெற்றது. அந்த படத்துக்கு கங்கனா சிறந்த கதாநாயகிக்கான தேசிய விருது பெற்றார். நல்ல வசூலை கொடுத்த இரண்டு திரைப்படங்களும் மக்கள் மற்றும் திரை விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றன.
2014ம் ஆண்டு அவர் நடித்த ‘குயின்’ திரைப்படம் அவரை பாலிவுட்டின் ராணியாக்கியது. மக்களிடமும் பாக்ஸ் ஆப்-ஸிலும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படமும் கங்கனாவுக்கு தேசிய விருதை பெற்று தந்தது. இரண்டு மூன்று படங்கள் தோல்வியுற்றாலும் அதற்கு இடையில் ஒரு நல்ல படம் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது.
நடிப்பில் களை கட்டிய கங்கனா அடுத்து திரை இயக்கத்தில் களம் கண்டார். ‘மணிகர்னிகா’ என்ற திரைப்படத்தை இயக்கி, ஜான்சியின் ராணியாக தானே நடிக்கவும் செய்தார்.
சர்ச்சைகளில் கங்கனா ரணாவத்
திரையுலகிலும் கங்கனாவுக்கான சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. அவரும் அனைவருடனும் மிக நல்ல நட்புறவை கொண்டிருக்கவில்லை என்பது அவரது குற்றச்சாட்டுகளிலிருந்து தெரிகிறது.
அவருக்கு முதலில் ஆதரவு அளித்த ஆதித்ய பாஞ்சோலி குடித்து விட்டு வன்முறையில் ஈடுபட்டதாக அவர் மீது பின் நாட்களில் புகார் அளித்திருந்தார். தனது முதல் படமான ‘கேங்ஸ்டர்’ -ன் இயக்குநர் அனுராக் பாசு மீதும் புகார் அளித்திருந்தார். அப்போது அவர் இயக்கி தான் நடித்து வெற்றியுறாத ‘கைட்’ படத்தில் தனது கதாபாத்திரம் சிறப்பானதாக இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.
கங்கனாவுக்கும் ஹிரித்திக் ரோஷனுக்கும் இடையிலான சச்சரவுக்கள் உலகம் அறிந்ததே. இந்த சண்டை காவல் நிலையம் வரை சென்றடைந்தது. இந்த விவகாரத்தில், கங்கனாவுடன் ஏற்கெனவே நடித்திருந்த ஆத்யன், ஹிரித்திக் ரோஷனுக்கு ஆதரவு அளித்திருந்தார். கங்கனா தன்னையும் துன்புறுத்தியதாக அவர் தெரிவித்திருந்தார்.
அதேபோன்று, கரண் ஜோஹரிடமும் கங்கனாவுக்கு மாற்றுக் கருத்துகள் இருந்தன. அவர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைத்த போதும் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள கரண் ஜோஹர் விரும்பவில்லை.
சினிமா உலகில் துணிச்சல் பெண்ணாக வலம் வந்தது எப்படி?
வெற்றிப் படமான ‘தனு வெட்ஸ் மனு’வின் இயக்குநர் ஆனந்த் எல் ராயுடனும் கங்கனாவுக்கு பிரச்னைகள் இருந்ததால், ஆனந்த் இனியும் கங்கனாவுடன் இணைந்து வேலை செய்ய மாட்டார் என்று செய்திகள் வலம் வந்தன.
அவர் நடித்த ‘சிம்ரன்’ படத்தை ஒட்டியும் சர்ச்சைகள் கிளம்பின. அந்த கதையை எழுதியது அபூர்வா அஸ்ராணி, ஆனால் படத்தின் போஸ்டர்களில் கங்கனாவின் பெயர் இடம் பெற்றிருந்தது.
2018ம் ஆண்டு ‘மீ டூ’ பிரச்சாரம் தொடங்கிய போது, திரையுலகின் பலரை கங்கனா தாக்கியிருந்தார். ‘குயின்’ திரைப்படத்தின் இயக்குநர் விகாஸ் பால் “விசித்திரமான முறையில் கட்டி அணைத்து, தலைமுடி நன்றாக மணம் வீசுகிறது என்பார்” என்று கங்கனா பதிவிட்டிருந்தார். ‘மணிகர்னிகா’ திரைப்படத்தில் நடந்த சர்ச்சைகள் காரணமாக படத்தில் நடித்துக் கொண்டிருந்த சோனு சூத் பாதியிலேயே விட்டுச் சென்று விட்டார். படத்தின் இயக்குநர் க்ரிஷ்-ம் இடையிலேயே சென்று விட்டதால் மீதி படத்தை அவரே இயக்கினார்.
கங்கனாவுக்கு முதல் நாளிலிருந்தே கேமரா முன் எப்படி இருக்க வேண்டும் என்பது தெரியும். ‘மணிகர்னிகா’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, கங்கை ஆரத்தி எடுக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டது. அதன் பின் திடீரென கங்கனா கங்கையில் மூழ்கி நீராடினார். கங்கையில் மூழ்கி எழுவது ஊடகங்களில் பேசப்படும் என்று கங்கனாவுக்கு தெரியும். அடுத்த நாள் அது தான் தலைப்புச் செய்தி.
பல தடவை சர்ச்சைகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, “நான் இன்று ஆளாகியிருப்பது என்னால் தான். எனவே யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை” என்றார்.
சினிமா முதல் அரசியல் வரை
சுஷாந்த் சிங் ராஜ்புட் இறப்புக்கு பின் கங்கனாவின் அணுகுமுறை மேலும் கண்டிப்பாக மாறியது. ‘சினிமா மாஃபியா’ என்று பலரையும் விமர்சித்தார். கரண் ஜோஹர், சல்மான் கான், ஷா ரூக் கான், ஆமிர் கான் என யாரையும் விட்டுவைக்கவில்லை.
தற்போது பாலிவுட் விவகாரங்கள் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் நாட்டின் முக்கிய பிரச்னை எல்லாவற்றிலும் கருத்து தெரிவித்து வருகிறார். இந்த கருத்துகள் மோதி அரசுக்கு முழு ஆதரவை வழங்கும் வகையில் உள்ளன.
நிறைய சந்தர்ப்பங்களில் சபை நாகரிகத்தை மீறி பேசுவதாக அவரது பேச்சுகள் இருக்கின்றன. டெல்லி வன்முறைகள் குறித்து, கங்கனாவின் சகோதரி ரங்கோலி, “டெல்லி சிரியா போல் ஆகிவிட்டது. பாலிவுட் ஜிஹாதிகளுக்கு நெஞ்சில் அச்சம் தோன்றியுள்ளது. அவர்களை பூச்சிகளை போல நசுக்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.
சுஷாந்த் சிங் ராஜ்புட் வழக்கில், கங்கனா தானாக முன் வந்து கருத்து தெரிவித்தது மட்டுமில்லாமல், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா ஆகியவற்றின் கூட்டணி ஆட்சியான மகா விகாஷ் அகாடி அரசை எதிர்த்து பேசினார்.
மும்பையை “பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர்” என்று கங்கனா குறிப்பிட்டதால் அரசியல் தீப்பிடித்தது. பாஜகவும் சிவசேனாவும் நேருக்கு நேர் எதிராக இருந்தனர்.
பாஜக வெளிப்படையாக கங்கனாவுக்கு ஆதரவு தெரிவித்தது. அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர் பாஜகவில் இணைவார் என்று பேசப்பட்டு வந்தது.
மத்திய இணை அமைச்சர், சுதந்திரா கட்சியின் தலைவர் ராமதாஸ் அதவாலே, பாஜக கங்கனாவை வரவேற்க தயாராக உள்ளது என்று ஏற்கெனவே கூறியிருந்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)