You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் யார்? தேர்தல் களத்தில் என்ன செய்கிறார்கள்?
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியவர்கள் 71 வயதாகும் மு க ஸ்டாலின் மற்றும் 69 வயதாகும் எடப்பாடி கே பழனிசாமி. இன்று தமிழ்நாட்டு அரசியலின் முக்கிய முகங்களாக அவர்கள் இருக்கின்றனர்.
அதேநேரத்தில், திமுக, அதிமுக, பாஜக, மதிமுக, பாமக, என அனைத்துக் கட்சிகளிலும் புதிய இளம் முகங்கள் அரசியல் களத்தில் இறங்கியுள்ளன. இதில் சிலர் நேரடியாக உயர் பொறுப்புகளுக்கு வந்தவர்கள்.
தமிழ்நாட்டின் மூத்த அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன், வட சென்னையில் போட்டியிடும் கலாநிதி வீராசாமி ஆகியோரும் வாரிசுகளே. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் தென் சென்னை தொகுதியில், நீலகிரியில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷூம் போட்டியிடுகிறார். கோவையில் அதிமுக சார்பாக போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரனும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் மகனே.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ, கட்சியின் முதன்மைச் செயலாளராக உள்ளார். அவர் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் இந்த முறை போட்டியிடுகிறார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் விஜயகாந்தின் சொந்த ஊரான விருதுநகரில் போட்டியிடுகிறார். பாஜகவுடன் இணைந்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமாரும் அங்கு போட்டியிடுகிறார். பாமக சார்பாக தருமபுரியில் முதல் முறையாக அன்புமணி ராமதாஸின் மனைவி சௌம்யா அன்புமணி போட்டியிடுகிறார்.
தமிழ்நாடு தேர்தல் களத்தில் அடுத்த தலைமுறை தலைவர்களாக இந்த அரசியல்வாதிகள் பார்க்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் அடுத்த தலைமுறை தலைவர்கள் என்ன செய்கிறார்கள்? வாரிசு அரசியலை தவிர்க்கவே முடியாதா? தமிழ்நாட்டைத் தாண்டி இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் வாரிசு அரசியல் இருக்கிறதா? நிலைமை என்ன?
வாரிசு அரசியல் விமர்சனம் - திமுக பதில் என்ன?
திமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலின் தற்போது முதல்வராக உள்ளார். வாரிசு அரசியல் என்று பட்டியலில் அவரும் இடம் பெறுவார் என்றாலும், அவரது வளர்ச்சி கட்சியில் அவசர அவசரமாக நடக்கவில்லை. ஆனால், மாநில விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், சில ஆண்டுகள் முன்பு வரை முழுநேர திரைப்பட நடிகராக இருந்து விட்டு குறுகிய காலத்தில் கட்சியிலும் ஆட்சியிலும் மற்ற மூத்த தலைவர்களுக்கு எளிதாக கிடைக்காத வாய்ப்பை பெற்றது குறித்து விமர்சனங்கள் எழவே செய்கின்றன.
திமுகவில் வாரிசு அரசியல் குறித்து கேட்ட போது, “திமுகவில் முதல்வர் குடும்பத்தை தாண்டியும் அடுத்தக் கட்டத் தலைவர்கள் உள்ளார்களே. கருணாநிதியின் விருப்பத்துக்கு ஆளான ஆ.ராசா உள்ளார். முதல்வர் குடும்பத்துக்கு விசுவாசம் இருந்து கட்சியை வரும் நாட்களில் வழி நடத்தக் கூடிய வகையில் தங்கம் தென்னரசு, பழனிவேல்ராஜன் உள்ளிட்டோர் இருக்கிறார்கள்” என்று திமுக அமைச்சர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
எனினும் கட்சியின் அடுத்த தலைமை யார் என்பது ஒரு குடும்பத்துக்குள்ளேயே தீர்மானிக்கப்படுவதற்கு சொத்துகளை நிர்வகிப்பது போன்ற நடைமுறை காரணங்கள் இருக்கின்றன என்கிறார் திமுகவின் மூத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். அவர் பிபிசியிடம் பேசுகையில், “அண்ணாதுரை கட்சி மற்றும் கொள்கை குறித்து மட்டும் தான் கவலைப்பட்டார். ஆனால் கருணாநிதி, அதனுடன் சேர்த்து சொத்துகள் பற்றியும் கவலைப்பட வேண்டியிருந்தது. இந்திய அரசியலில் சொத்து பரிவர்த்தனைகள் வெளிப்படையாக இருந்திருந்தால், கட்சியில் தேர்ந்த தலைவர்கள், மக்களை ஈர்க்கும் பேச்சாளர்கள் இருந்த போதும் தங்களது வாரிசுகளிடமே தலைமை பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது” என்றார்.
அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லையா?
அதிமுகவில் நிலைமைகள் வேறுபட்டதாக இருந்தாலும், அதிலும் அடுத்த தலைமுறையினர் பொறுப்புகளுக்கு வர தொடங்கியுள்ளனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.ரவீந்திரநாத் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். அதேபோன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் மக்களவை உறுப்பினராக இருந்து தற்போது மீண்டும் போட்டியிடுகிறார்.
அதிமுகவில் பிளவுகள் ஏற்படவில்லை என்றால், அங்கும் நிலைமைகள் வேறு மாதிரி இருந்திருக்கும். ஜெயலலிதாவின் நெருங்கிய சகோதரி சசிகலாவின் குடும்பத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் அதிமுக இருந்திருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
அதிமுகவில் ஜெயலலிதாவும் சரி, எம்.ஜி.ஆரும் சரி தங்களுக்கு பிறகு கட்சியை யார் வழிநடத்த வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக இரு தலைவர்களின் மறைவுக்கு பிறகும், கட்சி பல பிளவுகளை சந்தித்தது. அதிமுகவில் இளம் முகங்கள் என்று அடையாளம் காணப்படக் கூடியவர்கள் எல்லாமே கட்சியின் கீழ் நிலை பொறுப்புகளிலேயே உள்ளனர்.
“அதிமுகவை தற்போது தலைமையில் இருப்பவர்களே மேலும் பல ஆண்டுகளுக்கு கட்சியை வழி நடத்தக் கூடிய நிலையில் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தபடியாக 50 முதல் 60 வயதில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, தங்கமணி, ஆர் பி உதயகுமார் உள்ளனர்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கூறினார்.
தேமுதிகவில் நிலைமை என்ன?
தமிழக அரசியல் வரலாற்றில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் வீ.அரசு, “கொள்கைகளின் அடிப்படையில் கட்சிகள் நடப்பது என்பது பெரியார் காலத்துடன் முடிந்து விட்டது. குடும்ப அரசியல், அதிலும் சாதி அரசியல் தான் தற்போது ஆக்கிரமித்துள்ளது. இன்றைய சூழலில், குடும்பம் அல்லது ஊடகம் – மக்களிடம் அறிமுகமாவதற்கு இவை இரண்டில் ஒன்று தான் தேவைப்படுகிறது.
தனக்கு செல்வாக்கு இருக்கிறது என நம்பி கட்சியிலிருந்து வெளியேறினார் வைகோ. ஆனால் இன்று மதிமுக சோபிக்கவில்லை. இப்போது கட்சியில் இருப்பவர்கள் அதுபோன்ற எதிர்ப்பு எதையும் தெரிவிக்க விரும்புவதில்லை. எந்த தொந்தரவும் இல்லாமல் கட்சியில் இருந்தால் போதும் என நினைக்கிறார்கள்” என்றார்.
2011-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு சட்டமன்றத்தில் திமுகவை மூன்றாவது இடத்துக்கு தள்ளி எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் அமர்ந்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். திராவிடக் கட்சிகள் போன்ற வலுவான கட்சி கட்டமைப்பை கொண்டிருக்கவில்லை என்றாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்களின் நம்பிக்கையையும் வாக்குகளையும் கணிசமாக பெற்றிருந்தது தேமுதிக.
கடந்த தேர்தலின் போது, தனது ஆவேசமான சில பேச்சுகள் மூலம் அறிமுகமாகியிருந்த விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், தந்தையின் மறைவுக்கு பிறகு, தற்போது தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்.
தேர்தல் களத்தில் துரை வைகோ, சௌம்யா அன்புமணி
மறுபுறம் களத்தில் இருப்பது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். வாரிசு அரசியலை எதிர்த்து திமுகவிலிருந்து விலகி தனிக் கட்சியை தொடங்கினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அவரது நீண்ட அரசியல் வாழ்க்கை, பல ஆண்டுகளாக கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பு என்றிருந்தும் கூட, அவரது கட்சியிலும் கூட அவருக்குப் பிறகு தலைமைப் பொறுப்புக்கு அவரது மகனே தயார்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
“வைகோவின் இயலாமையை தான் இது குறிக்கிறது. தானே ஸ்டாலினின் வாரிசு அரசியலை எதிர்த்து கட்சியிலிருந்து விலகிவிட்டு, இன்று அவரது மகன் தந்தைக்காக கட்சிக்கு வந்தது குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் உலா வருகிறது” என்று வைகோவுடன் 1990களில் நெருக்கமாக இருந்த அதிமுக தலைவர் ஒருவர் பிபிசியிடம் கூறினார். முதல் முறையாக தேர்தலை சந்திக்க போகும் துரை வைகோ திருச்சி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார் .
84 வயதான ராமதாஸ் சமீபத்தில் தான், கட்சித் தலைமையை 55 வயதான தனது மகன் அன்புமணியிடம் ஒப்படைத்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சிப் பொறுப்பை தனது மனைவி பிரேமலதாவுக்கு கொடுத்திருந்தாலும், நலிந்து கிடக்கும் கட்சியை மீட்டெடுக்கும் பொறுப்பு அவர் முன் இருக்கிறது. இதேபோன்ற நிலை தான் பாமகவிலும் இருக்கிறது.
வாரிசு அரசியலை தவிர்க்க இயலாது என்கிறார், மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் “ இந்திய அரசியலில் 90% வாரிசுகள் தான். இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே வாரிசு அரசியல் இருக்கிறது. எனவே அது தவிர்க்க இயலாதது. ஒரு பெரிய சமூக மாற்றம் ஏற்படும் போது தான், எந்தவித பின்னணியும் இல்லாத ஒரு தலைவர் உருவாவார். திராவிட இயக்கங்கள் உருவான போது அப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டது. அதிலிருந்து இயற்கையாக தலைவர்கள் உருவானார்கள். இப்போதும் அதற்கான சூழல் இருக்கிறது. சரியான அரசியல் புரிதல் மற்றும் பார்வை கொண்டிருப்பவர்கள் மாற்றத்தைக் கொண்டு வந்து தலைவர்களாக உருவாக முடியும்” என்றார்.
மேலும், “அரசியலின் தன்மையும் மாறி வருகிறது. தொலைக்காட்சி வந்த போது ஒரு மாற்றம் நிகழ்ந்தது, தற்போது சமூக ஊடக காலத்தில் மேலும் மாறி வருகிறது. தமிழ்நாடு அடுத்த பத்து ஆண்டுகளில் எந்தவிதமான சமூக அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ள போகிறது என்பதை பொறுத்து தான் அதன் தலைவர்கள் எப்படி இருப்பார்கள் என்று கூற முடியும். இதை யாராலும் கணிக்க முடியாது.
உதயநிதி ஸ்டாலின் வாரிசாக இருந்தாலும் அரசியல் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு அவர் கட்சியில் அவருக்கு இருக்கிறது. சௌம்யா அன்புமணி புதிதாக தேர்தல் களம் காண்கிறார். ஆனால் அவரது பார்வை எந்த விதத்தில் மற்றவர்களை விட புதிதாக உள்ளது? அவரால் என்ன மாற்றத்தை கொண்டு வர முடியும்?
விஜயகாந்த் தனக்கென தனி அரசியல் சிந்தாத்தை கொண்டிருக்கவில்லை, ஆளும் சக்திக்கு எதிர்ப்பு என்று அடிப்படையில் தான் அரசியலுக்கு வந்தார். இந்நிலையில், விஜயபிரபாகரனின் அரசியல் புரிதல் என்னவென்று மக்களுக்கு தெரியாது” என்றார்.
அரசியல் வாரிசுகள் மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறை தலைவர்கள் என்று கூறும் போது, தமிழ்நாட்டிலேயே எந்த கட்சியிலும் இல்லாத வகையில், 38வயதில் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜகவின் கே.அண்ணாமலை கண்டிப்பாக அந்தப் பட்டியலில் இருக்கிறார். மாநிலத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு அவர் முக்கிய பங்காற்றி வருகிறார் என்று பலர் நினைத்தாலும், இந்த வளர்ச்சி ஊடகங்களில் அவரது ஆவேச பேச்சுகளுடன் நின்றுவிடுகிறது என்று விமர்சனம் செய்பவர்களும் உண்டு.
மற்றொரு புறம் சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்குகிறேன் என காத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் 49 வயதான நடிகர் விஜய் இருக்கிறார்.
தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் சந்தேஷ், “கட்சியின் அடிமட்டத்திலிருந்து தான் தலைவர் உருவாக வேண்டும் என்று என்ன அவசியம் உள்ளது? மக்களின் தேவைகளை புரிந்திருக்க வேண்டும், உலக அறிவு வேண்டும். ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் இந்த நிலைமைகளை வேறு. சமூக ஊடக காலத்தில் மக்களிடம் தொடர்புப்படுத்திக் கொள்ளும் விதங்களும் மாறிவிட்டன” என்கிறார்.
இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக கூறும் மூத்த பத்திரிகையாளர் மாலன், “கட்சியின் முக்கியப் பொறுப்புகளுக்கு நேரடியாக வரும் போது, தொண்டர்களுடனும் மக்களுடன் உணர்வுப்பூர்வமான பிணைப்பு இருக்காது. அறிவு இருக்கலாம், ஆனால் அரசியல் திறன் இருக்காது. அது அடிமட்டத்திலிருந்து வந்தால் தான் கிடைக்கும்.
அரசியல் கட்சியை சமூக இயக்கமாக அல்லாமல் கார்ப்பரேட் நிறுவனம் போல் கட்டமைப்பதால் தான் அம்பானியின் மகன் அம்பானி சொத்துகளை சுவீகரிப்பது போல் கட்சித் தலைமை வழங்கப்படுகிறது. பணம் இருந்தால் பதவி கிடைக்கும், பதவி இருந்தால் பணம் கிடைக்கும் என்ற விஷ சுழற்சி இயங்குகிறது” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)