அதிமுக vs பாஜக: தமிழ்நாட்டில் முக்குலத்தோர் வாக்குகள் யாருக்கு கிடைக்கும்?

    • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் இரண்டாண்டு இடைவெளியில் தேர்தல் கூட்டணி கணக்குகள் முற்றிலுமாக மாறிப் போய்விட்டிருக்கின்றன. 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் ஒரே அணியாக இருந்த அதிமுகவும், பாஜகவும் தற்போது தனித்தனியாக களம் காண்கின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிட்டு 5.38% வாக்குகள் பெற்ற டிடிவி தினகரனும், அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர் செல்வமும் இந்த முறை பாஜக கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளனர். இவர்கள் மொத்தமாக மூன்றே தொகுதிகளில் மட்டுமே களமிறங்குகின்றனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கடந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் பெற்ற வாக்குகளில் கணிசமானவை முக்குலத்தோர் சமுதாய வாக்குகள். இந்த முறை அந்த வாக்குகள் தினகரன், ஓ.பி.எஸ். மூலமாக பாஜக கூட்டணிக்குச் கிடைக்குமா அல்லது முக்குலத்தோர் கட்சி என்று அரசியல் அரங்கில் பேசப்படும் அளவுக்கு அதிமுக வாக்கு வங்கியாக இருந்த அவர்கள் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு வாக்களிப்பார்களா?

தமிழ்நாட்டின் தேர்தல் களம்

தமிழ்நாட்டின் தேர்தல் களம் இந்த முறை நான்கு முனைப் போட்டியாக அமைந்திருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக, ஐயுஎம்எல், கொ.நா.ம.தே.க கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதிமுக கூட்டணியில் தேமுதிக, எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும், பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, தாமாக, புதிய நீதி கட்சி, ஐ.ஜே.கே ஆகிய கட்சிகளும் உள்ளன. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்தே போட்டியிடுகிறது.

வட தமிழ்நாட்டில் வன்னியர் சமூக வாக்கு வங்கியை கணிசமாக கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியும், தென்மாவட்டங்களில் பரவலாக உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தினரிடையே செல்வாக்கு பெற்றவர்களாக கருதப்படும் தினகரன், ஓபி.எஸ். ஆகியோரும் வலு சேர்ப்பார்கள் என்று பாஜக கருதுகிறது.

முக்குலத்தோர் சமூக மக்கள் மதுரை, தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களில் பரவலாக வாழ்கின்றனர்.

தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகளைப் பொறுத்தவரை அதிமுகவிற்கே முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிகம். இதற்கான பின்னணியில் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் அந்த சமூகத்தைச் சேர்ந்த வி.கே.சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முக்கியப் பொறுப்புகளில் இருந்ததே காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அமமுகவிற்கு முக்குலத்தோர் வாக்குகள் கிடைத்ததன் பின்னணி என்ன?

கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். அதன் பின்னர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றார்.

பின்னர் அவர் ராஜினாமா செய்ய, ஜெயலலிதாவின் தோழியான வி.கே சசிகலா முதலமைச்சராக வேண்டி, எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். அடுத்த ஓரிரு நாட்களில் சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதித் தீர்ப்பு வர அவர் கைது செய்யப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பங்களால், எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு வி.கே.சசிகலா சிறைக்குச் சென்றார். அதிமுகவில் டிடிவி தினகரன் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.

ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஓரணியில் சேர்ந்து டிடிவி தினகரனை அதிமுகவை விட்டு வெளியேற்ற, 2018-ம் ஆண்டு அவர் அமமுக என்ற தனிக்கட்சி கண்டார்.

காலச் சக்கரத்தின் சுழற்சியில் அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி வசமாகிட, டிடிவி தினகரனோ அதிமுகவை மீட்போம் என்ற முழக்கத்துடன் அமமுகவை நடத்துகிறார். மறுபுறம் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து தினகரனை வெளியேற்றிய ஓ.பன்னீர்செல்வமும் அதே வழியில் அதிமுகவை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அமமுகவால் அதிமுகவிற்கு சரிந்த தென் மாவட்ட வாக்கு வங்கி

கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி 38 தொகுதிகளில் களமிறங்கியது. அதுவரையிலும் அதிமுகவை ஆதரித்து வந்த முக்குலத்தோர் சமுதாய மக்களின் ஆதரவு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு கிடைக்க, அக்கட்சி கணிசமான வாக்குகளை பெற்றது.

அந்தத் தேர்தலில் அமமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லையென்றாலும் 22 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. 20 தொகுதிகளில் அக்கட்சி மூன்றாமிடம் பெற்றது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக பதிவான வாக்குகளில் 5.38% வாக்குகளை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

திருச்சி, தஞ்சை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகரில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. இது அதிமுகவின் வெற்றியை தடுத்துவிட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறினர்.

அமமுக வாக்கு சரிவு, ஓ.பி.எஸ் நீக்கம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரனின் செயல்பாட்டில் அமமுகவினர் அதிருப்தியடைந்தனர். அவரை நம்பி அதிமுக எம்.எல்.ஏ பதவியை விட்டு வந்தவர்கள் மீண்டும் திமுக, அதிமுகவை நோக்கி நகரத் தொடங்கினர்.

அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைத்துக் கொண்டார்.

இதனால் கடந்த 2021இல் நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் அமமுகவின் வாக்கு வங்கி 5.5 சதவிகிதத்திலிருந்து 2.5 ஆக குறைந்தது. அமமுகவின் கணிசமான வாக்குகள் திமுகவிடம் சென்றன.

சட்டமன்ற தேர்தல் தோல்வி அதிமுகவில் கடுமையாக எதிரொலித்தது. அடுத்தடுத்த மாற்றங்களால் கட்சியில் இருந்து ஓ.பி.எஸ். வெளியேற்றப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இன்றும் உரிமை கோரும் ஓ.பி.எஸ்.சால் அக்கட்சியின் கொடி மற்றும் சின்னத்தைக் கூட பயன்படுத்த முடியாத அளவுக்கு நீதிமன்ற உத்தரவு அவரை கட்டிப் போட்டிருக்கிறது.

தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைத்ததா பாஜக?

பாஜக கூட்டணியில் பாஜக 19 தொகுதிகள், பாமகவிற்கு 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3, அமமுகவிற்கு 2, ஓ.பி.எஸுக்கு 1 (சுயேச்சை சின்னம்), புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய 4 கட்சிகளும் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.

அதிமுக vs பாஜக

திருச்சி, தஞ்சை மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த முறை அமமுக ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்ற 8 தொகுதிகளில் அதிமுக களமிறங்குகிறது. இதில் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் பாஜகவுடனும், திருச்சி, தேனி, இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் தினகரன், ஓ.பி.எஸூக்கு எதிராகவும் அதிமுகமோதுகிறது

இத இடத்தில்தான் ஒரு கேள்வி எழுகிறது. பாஜக, அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முக்குலத்தோர் வாக்குகள் கிடைக்குமா அல்லது அதிமுகவை நோக்கி அந்த வாக்குகள் மீண்டும் திரும்புமா?

முக்குலத்தோர் வாக்குகள் யாருக்கு?

பாஜக கூட்டணிக்கு முக்குலத்தோர் வாக்குகள் செல்லாது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறும்போது,

“தமிழ்நாட்டில் 6-7% வரையிலான முக்குலத்தோர் வாக்கு வங்கியிருக்கிறது. அதில் 75% அதிமுகவிற்கே கிடைத்து வந்தJ. இதற்கு முக்கிய காரணம் அந்த சமூகத்தைச் சேர்ந்த சசிகலா, டிடிவி, ஓ.பி.எஸூக்கு கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்.

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்ட அதேநேரத்தில், பாஜகவை எதிர்த்த சசிகலாவும் டிடிவி தினகரனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதன் அடிப்படையில் முக்குலத்தோரின் வாக்குகள் சசிகலா, தினகரனை நோக்கியே இருந்தன.

இதன் காரணமாகவே 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முக்குலத்தோர் வாக்குகள் பெருவாரியாக அமமுக பக்கம் சாய்ந்தன. அந்த தேர்தலில் தினகரன் ஐந்தரை சதவீதம் வாக்குகளை பெற்று இருந்தார்.

அதேநேரத்தில், ஏழு உட்பிரிவு சாதிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கலாம் என பாஜக அரசு சட்டம் கொண்டு வந்தது. தங்களது சமூகத்தை பாஜக கண்டு கொள்ளவில்லை என்ற ஒரு உணர்வும் அந்த சமூக மக்களிடையே இருந்து வருகிறது.

இந்த நிலையில் டிடிவி தினகரனும் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருந்தாலும் அந்த சமூக வாக்குகள் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளன” என்றார்.

டிடிவி தினகரன் மீது அதிருப்தியில் முக்குலத்தோர்

தொடர்ந்து பேசிய அவர் “முக்குலத்தோருக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜகவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதால் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் தினகரனுக்கு எதிரான ஒரு மனநிலை உருவாகி இருக்கிறது.

எனவே, இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கான பிரதிநிதியாக தினகரனை பார்க்க மட்டார்கள். அதே சமயம் இந்த வாக்குகள் அதிமுகவிற்கும் செல்லாது. அதிமுக முன்பு முக்குலத்தோரின் ஆதரவு நிலையில் உள்ள கட்சியாக பார்க்கப்பட்டது.

ஆனால், எடப்பாடி பழனிசாமி வருகைக்குப் பிறகு அது கொங்கு வேளாளர் அதிக்கம் நிறைந்ததாக கட்சியாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த முறை வாக்குகள் அனைத்தும் பாஜக கூட்டணிக்கும் அதிமுகவிற்கும் செல்லாது. மாறாக அது திமுகவுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன”, என்றார்.

சாதி ரீதியாக வாக்குகள் செல்லாது

மக்களவைத் தேர்தலில் சாதி ரீதியாக வாக்குகள் செல்லாது என்று கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர மணி. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர்,

“தற்பொழுது நடக்க இருப்பது நாடாளுமன்ற தேர்தல். எனவே, சாதி பார்த்து வாக்களிக்கும் மனநிலையில் மக்கள் இருக்க மாட்டார்கள். குறிப்பாக தினகரன், ஓபிஎஸ் என்றெல்லாம் அவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

அந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் கட்சி ஆகியவற்றை பார்ப்பார்கள். சிலர் சாதி சார்ந்து வாக்களிக்க முயன்றாலும் அதற்கேற்ப அந்த கட்சியினர் அந்த குறிப்பிட்ட தொகுதியில் அந்த சாதியைச் சேர்ந்த வேட்பாளரையே நிறுத்தலாம்.

கட்சி பிடிக்கவில்லை என்றாலும் கூட சாதியைச் சார்ந்த நபர் நிற்பதால் அதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கும். இந்த முறை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகள் பாஜக கூட்டணி நோக்கி நகரும் என கூற முடியாது.

தினகரன் 2019இல் இருந்த அவரது நிலை தற்பொழுது இல்லை. அவர் பாஜகவுடன் இணைந்திருப்பதால் அவருக்கு எந்த அளவிலான வாக்குகள் செல்வது என்பதே கேள்விக்குறியாகவே இருக்கும்.

எனவே, இந்த தேர்தலில் குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகள் குறிப்பிட்ட கட்சிக்கு செல்லும் என கூற முடியாது. வாக்காளர்கள் பரவலாக பல்வேறு காரணிகள் அடிப்படையில் தங்களது வாக்கை செலுத்த உள்ளனர்”, என்றார்.

முக்குலத்தோர் வாக்கு வங்கியை நிரூபிக்கவே ஓபிஎஸும், தினகரனும் களமிறங்கி இருப்பதாக கூறுகிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி. இருகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர்,

"எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கியதிலிருந்து, முக்குலத்தோர் சமுதாயத்துக்கு எதிரான மனநிலையில் கட்சி இருப்பதாகவே அவர்கள் பார்க்கின்றனர்.

இதனால் டிடிவி தினகரன் ஓபிஎஸ்-க்கு அவர்களின் வாக்குகள் அதிகம் செல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. பல தொகுதிகளில் நின்றால் வாக்குகள் சிதறக்கூடும் என்பதற்காகவே ஒரு தொகுதியில் போட்டியிடுவதாக தினகரன் முடிவெடுத்து இருந்தார்

அதனால் தான், நான் ஒன்று கேட்டேன் பாஜக இரண்டு தொகுதி கொடுத்ததாக அவர் தெரிவித்தார். ஓபிஎஸ், டிடிவி தினகரனும் முக்குலத்தோர் சமூகம் அதிகம் உள்ள பகுதிகளில் களமிறங்கி அதிமுகவிற்கு கடும் போட்டியை கொடுப்பார்கள்.

சில இடங்களில் அதிமுகவிற்கு டெபாசிட் கூட இழக்க வாய்ப்புகள் உள்ளன. முக்குலத்தோர் வாக்குகள் அதிமுகவிற்கு செல்லாது. மாறாக திமுக, நாம் தமிழர் என பல்வேறு கட்சிகளுக்கு அது பிரியும்", என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)