You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகில் முதன்முறையாக குழந்தையின் இதய செயலிழப்புக்கு ஸ்டெம் செல் மூலம் சிகிச்சை
- எழுதியவர், மேத்யூ ஹில்
- பதவி, சுகாதார செய்தியாளர்
குழந்தை பிறக்கும்போது குழந்தையையும், தாயையும் பிணைத்திருக்கும் தொப்புள் கொடியிலுள்ள ஸ்டெம் செல்களை பயன்படுத்தி “உலகிலேயே முதன்முறையாக” செய்துள்ள அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையின் “உயிரைக் காப்பாற்றியிருக்கும் வாய்ப்பு உள்ளதாக” இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகிறார்.
பிரிட்டனிலுள்ள பிரிஸ்டல் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த பேராசிரியர் மாசிமோ கபுடோ, குழந்தை ஃபின்லியின் இதயக் குறைபாட்டை சரிசெய்வதற்காக ஸ்டெம் செல் சிகிச்சையைப் பயன்படுத்தினார்.
பிறவி இதய நோயுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக அறுவை சிகிச்சைகள் தேவைப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர் இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டுமென்று விரும்புகிறார்.
இப்போது இரண்டு வயதாகும் ஃபின்லி, “மகிழ்ச்சியோடு வளரும் ஒரு சிறுவனாக உள்ளார்.”
ஆனால், ஃபின்லி பிறந்தபோது இதயத்திலுள்ள தமனிகள் தவறான வகையில் அமைந்திருந்தன. இதனால் குழந்தை பிறந்த நான்கு நாட்களிலேயே குழந்தைகளுக்கான பிரிஸ்டல் ராயல் மருத்துவமனையில் இதய அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
துரதிர்ஷ்டவசமாக அறுவை சிகிச்சை அந்தப் பிரச்னையைத் தீர்க்கவில்லை. குழந்தை ஃபின்லியின் இதய செயல்பாடு கணிசமாக மோசமடைந்தது. ரத்தம் ஓட்டம் இல்லாமல் போனதால் இதயத்தின் இடது பக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
வில்ட்ஷயரில் உள்ள கோர்ஷாமை சேர்ந்த அவரது தாயார் மெலிசா, “அவன் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்தே எங்களை திடப்படுத்திக் கொண்டோம்.
12 மணி நேரத்திற்குப் பிறகு, ஃபின்லி இறுதியாக அறுவை சிகிச்சை முடிந்து வெளியே கொண்டுவரப்பட்டான். ஆனால், அவனை உயிருடன் வைத்திருப்பதற்காக, இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பைபாஸ் இயந்திரம் தேவைப்பட்டது. மேலும், அவனுடைய இதயத்தின் செயல்பாடு மோசமடைந்தது,” என்கிறார்.
பல வாரங்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, ஃபின்லியின் இந்த நிலைமைக்கு சிகிச்சையளிப்பதற்கு வழக்கமான வழி எதுவுமில்லை எனத் தோன்றியது. அவர் தனது இதயம் செயல்படுவதற்கு மருந்துகளைச் சாந்திருந்தார்.
ஆனால், தொப்புள்கொடி வங்கியிலிருந்து ஸ்டெம் செல்களை உள்ளடக்கிய ஒரு புதிய செயல்முறை முயற்சி செய்யப்பட்டது.
பேராசிரியர் கபுடோ, சேதமடைந்த ரத்த நாளங்கள் வளர உதவும் என்ற நம்பிக்கையில் செல்களை நேரடியாக ஃபின்லியின் இதயத்தில் செலுத்தினார்.
“அலோஜெனிக்” செல்கள் என்று அழைக்கப்படுபவை லண்டனில் உள்ள ராயல் ஃப்ரீ மருத்துவமனையின் விஞ்ஞானிகளால் வளர்க்கப்பட்டன. அவற்றில் லட்சக்கணக்கானவை ஃபின்லியின் இதய தசையில் செலுத்தப்பட்டன.
அலோஜெனி செல்கள் நிராகரிக்கப்படாமல் திசுக்களாக வளரும் திறனைக் கொண்டுள்ளன. அதோடு, ஃபின்லியின் விஷயத்தில், சேதமடைந்த இதய தசைகளை மீண்டும் உருவாக்குகின்றன.
“அவர் உட்கொண்ட அனைத்து மருந்துகளையும் படிப்படியாக நிறுத்தினோம், செயற்கை சுவாசக் கருவி பொருத்துவதைப் படிப்படியாக குறைத்தோம்,” என்கிறார் பேராசிரியர் கபுடோ.
பயோ-பிரின்டரை பயன்படுத்தி, ரத்த நாளங்களில் உள்ள வால்வுகளில் ஏற்படும் அசாதாரணங்களைச் சரி செய்வதற்கும் இதயத்தின் இரண்டு முக்கிய காற்றை பம்ப் செய்யும் அறைகளுக்கு இடையேயுள்ள துளைகளைச் சரி செய்யவும் இந்த ஸ்டெம் செல் சிகிச்சை செய்யப்படுகிறது.
செயற்கை திசு பொதுவாக குழந்தைகளுக்கு இதயக் குறைபாடுகளைச் சரிசெய்யப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அது தோல்வியடையும் என்பதோடு இதயத்தோடு சேர்ந்து வளராது. எனவே குழந்தைகள் வளரும்போது அவர்களுக்கு அதிக அறுவை சிகிச்சைகள் தேவைப்படும்.
வெற்றிகரமான ஆய்வகப் பணிகளுக்குப் பிறகு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதுகுறித்த மருத்துவ பரிசோதனை நடக்குமென்று பேராசிரியர் கபுடோ நம்புகிறார்.
ஸ்டெம் செல் பிளாஸ்டர்களின் சோதனை, வேல்ஸை சேர்ந்த லூயி போன்ற பிறவி இதயக் குறைபாடுகளைக் கொண்ட பல நோயாளிகளுக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது.
கார்டிஃப் நகரைச் சேர்ந்த இந்த 13 வயது சிறுவன் தனது முதல் இதய அறுவை சிகிச்சையை பேராசிரியர் கபுடோவிடம் இரண்டு வயதில் செய்துகொண்டார். அதற்குப் பிறகு மீண்டும் நான்கு வயதில் அவரது இதயத்தைச் சரி செய்யக்கூடிய பொருளை இதயத்திலிருந்து மாற்றினார்கள்.
ஆனால், அந்தப் பொருட்கள் முற்றிலும் உயிரியல் ரீதியாக இல்லாத காரணத்தால், அவற்றால் அவரோடு சேர்ந்து வளர்ச்சியடைய முடியாது. ஆகவே, அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.
லூயியை போலவே, பிரிட்டனில் ஒவ்வொரு நாளும், சுமார் 13 குழந்தைகளுக்குப் பிறவி இதயக் குறைபாடு இருப்பது கண்டறியப்படுகிறது. இது குழந்தை பிறப்பதற்கு முன்பே உருவாகும் இதய பாதிப்பு என்று பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது.
இதயத்தைச் சரிசெய்யப் பயன்படுத்தப்படும் பொருட்கள் நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் நிராகரிக்கப்படலாம் என்பதால், அவை இதயத்தில் வடுவை ஏற்படுத்தி, மற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடும். மேலும், அவை படிப்படியாக உடைந்து சில மாதங்கள் அல்லது ஆண்டுகளில் தோல்வியடையும்.
எனவே, ஒரு குழந்தை தனது குழந்தைப் பருவம் முழுவதும் ஒரே இதய அறுவை சிகிச்சையைப் பல முறை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும் பிறவி இதயக் குறைபாடுகளுக்கான அறுவை சிகிச்சைகள் சுமார் 200 முறை மீண்டும் செய்யப்படுகின்றன.
ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மற்றும் உடலுடன் வளரக்கூடிய திசுக்கள் மூலம் ஒருவர் எதிர்கொள்ளும் அறுவை சிகிச்சைகளின் அளவு கணிசமாகக் குறைக்கப்படும் என்று லூயி நம்புகிறார்.
“எனக்கு அடிக்கடி சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது பிடிக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
“இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓர் அறுவை சிகிச்சை தேவை என்பது நீண்ட காலத்திற்கு நல்லதல்ல. ஆகவே இது எனக்கு நிம்மதியைக் கொடுக்கிறது,” என்கிறார் லூயி.
ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலமாக, பேராசிரியர் கபுடோவும் அவரது குழுவினரும், இனி தேவைப்படாத ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்குமான 30,000 யூரோ செலவை தேசிய சுகாதார சேவையால் சேமிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பவுண்டுகள் சேமிக்கப்படும் என்கின்றனர்.
ஸ்டெம் செல் உயிரியலில் நிபுணரும் எஸ்.எல்.எம் ப்ளூ ஸ்கைஸ் இன்னோவேஷன்ஸ் லிமிடடின் இயக்குநருமான டாக்டர் மிங்கர், இந்த ஆராய்ச்சியைப் பாராட்டினார்.
அவர், “இதய செயலிழப்பு அல்லது சரியாகச் செயல்படாமை பாதிப்பு உள்ள பெரியவர்களில் நான் அறிந்த பெரும்பாலான ஆய்வுகள் ஸ்டெம் செல் உட்செலுத்துதல் மூலம் குறைந்தபட்ச சிகிச்சைப் பலன்களை மட்டுமே காட்டுகின்றன.
மருத்துவக் குழு ஒரு நிலையான மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது நமக்கு வெற்றியையும் இந்தச் செயல்முறையின் பின்னணி குறித்த புரிதலையும் ஏற்படுத்தும்,” என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்