You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர்த்ரிட்டீஸ் நோய் ஏன் ஏற்படுகிறது? பாதிப்பை குறைப்பது எப்படி?
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
கீல்வாதம் என்று சொல்லப்படும் ஆர்த்ரிட்டீஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் மூட்டு பகுதியில் தேய்ந்த சிறிய பகுதியை மட்டும் மாற்றி அமைக்கும் மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை வசதிகள் இருப்பதால், மூட்டு பகுதியை முழுமையாக மாற்றும் அறுவை சிகிச்சை பற்றிய அச்சம் மக்களிடம் குறைந்துள்ளது என சென்னையை சேர்ந்த எலும்பியல் நிபுணர் அஸ்வின் விஜய் கூறுகிறார். ஆர்த்ரிட்டீஸ் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன, பாதிப்பை குறைப்பது எப்படி, அறுவை சிகிச்சைகள் நீடித்த பயனை தருகிறதா உள்ளிட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
ஆர்த்ரிட்டீஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போது அறுவை சிகிச்சை தேவை?
ஆர்த்ரிட்டீஸ் நோயில் இரண்டு வகை ஆர்த்ரிட்டீஸ் நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். அவை கீல்வாதம் (Osteoarthritis) மற்றும் முடக்கு வாதம் (Rheumatoid arthritis) ஆகும். இதில் கீல்வாதத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு, பாதிப்பின் அளவை பொறுத்துத்தான் அறுவை சிகிச்சை தேவையா என்று முடிவு செய்யப்படும். பாதிப்பு அளவில் நான்கு படிநிலைகள் உள்ளன. அதில் நான்காவது நிலையில் இருப்பவருக்குத்தான் அறுவை சிகிச்சை தேவை. அதிலும், முழுமையாக மூட்டு பகுதியை மாற்றுவதை விட, அதிகம் தேய்மானம் ஆகியுள்ள சிறிய பகுதியை மட்டும் மாற்றும் சிகிச்சைகள் வந்துவிட்டன. அதனால், முழுமையான மூட்டு பகுதியை மாற்றுவதை தவிர்க்கலாம். இதனால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை குறித்த பயம் மக்களிடம் குறைந்துள்ளது. அதேநேரம், அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வல்ல. தீவிர பிரச்னை இல்லாத நோயாளிக்கு அவரது வாழ்வியல், ஆரோக்கியத்தை முறைப்படுத்தினால், அடுத்த படிநிலைக்கு செல்வதை தவிர்க்கலாம்.
ஆர்த்ரிட்டீஸ் நோய் ஏற்படுவதற்கு காரணங்கள் என்ன?
நீரிழிவு நோய் பாதிப்புள்ளவர்கள், மது மற்றும் புகைப்பழக்கம், 50வயதுக்கு பின்னர் ஏற்படும் மூட்டு தேய்மானம் காரணமாக கீல்வாதம் ஏற்படுகிறது. சிறுவயதில், விபத்தில் சிக்கி மூட்டு பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கும் கீல்வாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதில் கீல்வாதத்தால் பாதிக்கப்படுபவர்கள் முதியவர்கள் மட்டுமல்ல இளைஞர்களுக்கும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு முதல் காரணம், வாழ்வியல் முறை. உடற்பயிற்சி இல்லாமை, முறையான தூக்கம் இல்லாமல் இருப்பது ஆகியவைதான். இதனை தொடர்ந்து அதிக உடல் பருமன் ஏற்படுகிறது, உடல் எடையை குறைக்காமல் பல காலம் மூட்டுகள் அதிக எடையை சுமப்பதாலும் கீல்வாதம் இளைஞர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் மூட்டுப்பாதிப்பு பெரும்பாலும் கை, முழங்கால், இடுப்பு, முதுகெலும்பு ஆகியவற்றைப் பாதிக்கும். முடக்கு வாதத்தை பொறுத்தவரை, பரம்பரையில் ஒருவருக்கு முடக்கு வாதம் இருந்திருந்தால், அது தொடர்வதற்கு வாய்ப்புள்ளது. மற்றொரு காரணம், உடலில் ஏற்படும் ஆட்டோ இம்யூன் நிலை, அதாவது உங்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பு உங்கள் உடலில் உள்ள திசுக்களை தாக்குவதால் ஏற்படுகிறது. இதனால், உடலில் உள்ள மூட்டு பகுதிகள் மட்டுமல்லாமல், நுரையீரல், கண், இதயம், ரத்த நாளங்கள், நரம்பு உள்ளிட்டவையும் பாதிக்கப்படும்.
மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்தால், கீல்வாதத்தில் முழுமையாக விடுபடமுடியுமா?
70, 80 வயதில் இருப்பவர்களுக்கு வலி அதிகம் பொறுக்கமுடியாமல், கீல்வாதத்தில் நான்காவது படிநிலையில் இருப்பவர்களுக்கு மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை செய்தபின்னர், அவர்களுக்கு வலி முன்பை போல இருக்காது. இயல்பாக அவர்கள் வாழ முடியும். ஆனால் இளமை காலத்தில் இருந்தது போல, ஓட முடியும் என்று சொல்லமுடியாது. கீல்வாதத்தில் பாதிக்கப்பட்ட நேரத்தில், அவர்களின் அனுதின வேலையை செய்வதற்கு பிறரின் உதவி தேவைப்பட்டிருக்கும். அது அறுவை சிகிச்சைக்கு பின்னர் 80 சதவீதம் தேவைப்படாது என்று சொல்லலாம்.
ஆண்களை விட பெண்களுக்கு கீல்வாதம் பாதிப்பு அதிகளவு ஏற்படுவது ஏன்?
குறிப்பாக, பெண்கள்தான் அதிகளவில் கீல்வாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு, உடலில் சுரந்த ஹார்மோன் அளவுகள் மாறும், அதனால், அவர்களின் எலும்புகள் பலம் இழக்கும், அதனால் கீல்வாதம் ஏற்படும் வாய்ப்புகள் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். ஆண்களுக்கு உடலில் டெஸ்ட்ரோஸ்டோன் என்ற ஹார்மோன் சுரக்கிறது. அதேபோல பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன் சுரக்கிறது. மாதவிடாய் நின்றுபோனால், இந்த ஹார்மோன் சுரப்பது மிகவும் குறைந்துவிடுகிறது. அதனால், சராசரியாக 48 முதல் 52 வயதில் பெண்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பது பெரும்பாலும் குறைந்துபோகிறது. எலும்புகள் வலுவாக இருப்பதற்கு ஈஸ்ட்ரோஜென் முக்கியம். அதன் சுரப்பு குறைந்துவிடுவதால், ஆண்களை விட, பெண்களுக்கு எலும்புகள் விரைவில் பலம் குன்ற தொடங்குகின்றன. அதனால் எலும்பு மெலிதல் என்ற ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் கீல்வாதம் அதிகளவில் பெண்களை தாக்குகிறது.
ஆர்த்ரிட்டீஸ் நோயின் ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்களின் பாதிப்பை குறைப்பது எப்படி?
ஆர்த்ரிட்டீஸ் பாதிக்கப்பட்டு, முதல் மற்றும் இரண்டாம் நிலை பாதிப்பில் இருப்பவர்கள், ஆரோக்கியமான வாழ்வியல் முறையை பின்பற்றுவதுமூலம், அவர்களுக்கு உள்ள பாதிப்பு அடுத்த நிலைக்கு செல்லாமல் இருப்பதை உறுதிசெய்யமுடியும். மூட்டுகளில் வலி இருப்பதால் உடற்பயிற்சிகளை செய்யாமல் இருப்பது வலியை மேலும் அதிகரிக்கும். நடைப்பயிற்சி தினமும் செய்வது முக்கியம். மூட்டு பகுதி, மூட்டுகளை சுத்தியுள்ள தசை பகுதிகளுக்குப் பிரத்தியேகமான பயிற்சிகள் உள்ளன, அவற்றை மருத்துவர் உதவியுடன் கற்றுக்கொண்டு தினமும் பின்பற்றுவது அவசியம். உடல் எடை சரியான அளவில் இருப்பதை உறுதி செய்யவேண்டும். வெள்ளசர்க்கரை பயன்பாட்டை முடிந்தவரை நிறுத்தவேண்டும். உடற்பயிற்சி செய்வதால் பலவிதமான நடைமுறைகள் உள்ளன,
ஆர்த்ரிட்டீஸ் காரணமாக அதிகம் வெளியிடங்களில் நடக்காமல், ஒரு சிலர் அவர்கள் வசிப்பிடங்களில், தினமும் 10,000 அடிகள் நடக்கும் பயிற்சி செய்கிறார்கள், இது சரியா?
ஒரு நாளில் , 10,000 அடிகள் நடக்கும் பயிற்சி கடந்த நான்கு ஆண்டுகளில் மிகவும் பிரபலமாகியுள்ளது. ஜிம்முக்கு போய் மட்டும்தான் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற தேவை இல்லை. சராசரியாக ஒரு நபர் ஒரு நாளில் 10,000 அடிகள் நடப்பது என்பது ஒரு நாளில் உடலுக்கு தேவையான பயிற்சியை அளிக்கும், ரத்தஓட்டத்தை சீராக்கும் என்பதால் இது தவறில்லை. ஒரு சிலர், வீட்டில் நின்ற படியே நடைப்பயிற்சி செய்வது, நின்றபடியே குதிக்கும் பயிற்சி செய்வது போன்றவற்றை கூட செய்கிறார்கள். சரியான பயிற்சியாளர்களிடம் கேட்டு செய்வது நல்லது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்