You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலத்தில் வெளிப்படும் பெருங்குடல் புற்றுநோயின் முதல் அறிகுறி என்ன? எப்படி குணப்படுத்துவது?
- எழுதியவர், பிலிப்பா ராக்ஸ்பி
- பதவி, பிபிசி
'உங்கள் மலத்தை கவனியுங்கள்’.
பிபிசி தொகுப்பாளர் டெபோரா ஜேம்ஸ் தனது பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரத்தில் இதைத்தான் வலியுறுத்தினார். இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சில மாதங்களுக்கு முன்பு தனது 40ஆவது வயதில் உயிரிழந்தார்.
பிரபல அமெரிக்க நடிகை கிர்ஸ்டி ஆலி இந்த புற்றுநோய் காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார். அவருக்கு இந்த நோய் இருப்பது தாமதமாகவே கண்டறியப்பட்டது.
பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? அதை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?
பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள்
எந்தவித காரணமும் இன்றி ரத்தத்துடன் மலம் வெளியேறுவது. ரத்தம் பிரகாசமான சிவப்பு அல்லது அடர் சிவப்பாக இருக்கலாம்.
- அடிக்கடி கழிவறைக்குச் செல்வது மற்றும் மலம் அதிக திரவமாகவோ அல்லது கடினமாகவோ வெளியேறுவது என குடல் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும்.
- வயிறு நிரம்பியிருக்கும் போது அடிவயிற்றில் வலி அல்லது வீக்கத்தை உணர்தல்.
- உடல் எடை குறைதல்.
- மலம் கழித்த பிறகும் முழுமையாக மலம் கழிக்காத உணர்வு ஏற்படுதல்.
- வழக்கத்திற்கு மாறாக சோர்வு அல்லது மயக்கத்தை உணர்தல்.
இந்த அறிகுறிகள் இருந்தால் அவை குடல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால், மூன்று வாரங்களுக்கு மேல் இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் செல்வது நல்லது.
ஏனென்றால் தொடக்க நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டால், எளிதாக குணப்படுத்திவிடலாம்.
சில நேரங்களில் பெருங்குடல் புற்றுக்கட்டிகள் குடல் வழியாக கழிவுகள் வெளியேறுவதைத் தடுத்துவிடும். இதன் காரணமாக தீவிர வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் உடல்நலக் குறைபாடு ஏற்படும்.
இது மாதிரியான சூழல்களில் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.
நம் மலத்தை எப்படி கவனிப்பது?
நீங்கள் மலம் கழிக்கும் போது வெளியேறும் மலம் எப்படி உள்ளது என்பதை நன்கு கவனியுங்கள். அது குறித்துப் பேச வெட்கப்படக் கூடாது.
மலத்தில் ரத்தம் ஏதேனும் உள்ளதா, ஆசன வாயின் அடிப்பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறுகிறதா என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.
மலத்துடன் அடர் சிவப்பு ரத்தம் வெளியேறுவதற்கு மூலம் போன்ற ஆசன வாயில் உள்ள ரத்த நாளங்களின் வீக்கம் காரணமாக இருக்கலாம். அதே நேரத்தில், இது பெருங்குடல் புற்றுநோய் காரணமாகவும் ஏற்படலாம்.
மலத்தில் உள்ள அடர் சிவப்பு அல்லது கருப்பு ரத்தம் குடல் அல்லது வயிற்றில் இருந்து வெளியேறலாம். இதுவும் கவலைக்குரிய ஒன்றே.
குறைந்த திடத்தன்மையுடன் மலம் வெளியேறுதல், அடிக்கடி மலம் கழித்தல் போன்ற குடல் இயக்க செயல்பாட்டில் மாற்றங்களை நீங்கள் கவனிக்கலாம்.
பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட என்ன காரணம்?
பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து யாரிடமும் தெளிவான பதில் இல்லாவிட்டாலும், சாத்தியமுள்ள சில காரணங்களைப் பார்ப்போம்.
வயதாகும்போது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் 50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களே பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
கீழ்கண்ட காரணங்களால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படலாம்.
- சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிகம் உண்பது.
- புகைபிடிக்கும் பழக்கம் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக அமையும்.
- அதிகப்படியான மது அருந்தும் பழக்கம்.
- அதிக எடை அல்லது உடல் பருமன்.
பெற்றோரிடமிருந்து குழந்தைக்குப் பரவுமா?
பெருங்குடல் புற்றுநோய் பரம்பரை நோய் அல்ல. ஆனால், உங்கள் உறவினர் யாருக்காவது 50 வயதிற்கு முன்னதாக இந்த நோய் கண்டறியப்பட்டிருந்தால் அதை மருத்துவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
லிஞ்ச் சிண்ட்ரோம் போன்ற சில மரபணு நிலைமைகள், பெருங்குடல் புற்றுநோயை உருவாக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இது குறித்து மருத்துவர்கள் அறிந்திருந்தால் இதையும் தடுக்கலாம்.
ஆபத்தைக் குறைப்பது எப்படி?
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் பாதிக்கும் மேற்பட்ட குடல் புற்றுநோய்களை தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதிக உடற்பயிற்சி செய்தல், நார்ச்சத்து மிகுந்த மற்றும் கொழுப்பு குறைந்த உணவை எடுத்துக்கொள்வது மற்றும் ஒரு நாளுக்கு ஆறு முதல் எட்டு கிளாஸ் தண்ணீர் அருந்துவது ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும்.
ஏதேனும் கவலைக்குரிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, புற்றுநோயைக் கண்டறியும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
பெருங்குடல் புற்றுநோயை எப்படி கண்டறிவது?
ஒரு நீண்ட குழாயில் கேமராவைக் கொண்டு முழு குடலின் உட்பகுதியையும் ஆய்வு செய்யும் கொலோனோஸ்கோபி செயல்முறை மூலமாகவோ அல்லது பகுதி அளவு ஆய்வு செய்யும் சிக்மாய்டோஸ்கோபி செயல்முறை மூலமாகவோ பெருங்குடல் புற்றுநோய் இருப்பதை உறுதிசெய்யலாம்.
ஆரம்பக் கட்டத்தில் பெருங்குடல் புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் உயிர்வாழ்வார்கள். தாமதமாக கண்டறியப்பட்டவர்களில் 44 சதவிகிதத்தினரே ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் உயிர்வாழ்வார்கள்.
பிரிட்டன் தரவுகளின்படி, கடந்த 40 ஆண்டுகளில் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் இருமடங்காக அதிகரித்துள்ளன. 1970களில் ஐந்தில் ஒருவர் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் உயிர் வாழ்ந்த நிலையில், தற்போது பாதிக்கும் மேற்பட்ட நோயாளிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழ்கின்றனர்.
என்ன மாதிரியான சிகிச்சைகள் உள்ளன?
தொடக்க நிலையிலேயே கண்டறியப்பட்டால் பெருங்குடல் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்தக் கூடியது.
தனிநபருக்கு ஏற்ப அளிக்கும் சிகிச்சைகள் முறைகள் தற்போது அதிகரித்துள்ளன.
இந்த அணுகுமுறை இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் ஆண்டுகள் உயிர்வாழ்வதை இது உறுதிசெய்கிறது.
புற்றுநோயின் நிலைகள் என்ன?
முதல் நிலை: சிறிய அளவில் உள்ளது. இன்னும் பரவவில்லை.
இரண்டாம் நிலை: பெரிய அளவில் உள்ளது. இன்னும் பரவவில்லை.
மூன்றாம் நிலை: சுற்றியுள்ள திசுக்களுக்கு பரவியுள்ளது.
நான்காம் நிலை: உடலில் உள்ள மற்ற உறுப்புகளுக்குப் பரவி, இரண்டாம் நிலை கட்டியை உருவாக்குகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்