உணவும் உடல்நலமும்: ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமா? - 3 முக்கிய டிப்ஸ்

    • எழுதியவர், அனாலியா லோரென்டே
    • பதவி, பிபிசி

நமது உடலுக்குத் தேவையான முக்கியமான ஆற்றல் மூலமாக குளுக்கோஸ் இருக்கிறது. 

ஏனெனில் அதிலிருந்து கிடைக்கும் சக்தியே நாம் இயங்குவதற்கும் சிந்திப்பதற்கும் நம் இதயம் துடிப்பதற்கும் துணைபுரிகிறது. உடலின் முக்கிய உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளுக்கு குளுக்கோஸ் அத்தியாவசியம். 

ஆனால், ரத்தத்தில் குளுக்கோஸ் (சர்க்கரை) தேவையான அளவு இல்லையென்றால், பல்வேறு தீவிர உடல்நல பிரச்னைகள் ஏற்படும். 

அவற்றுள் முக்கியமானதாக நீரிழிவு நோய் உள்ளது. நீரிழிவு நோயால் காலப்போக்கில் இதயம், ரத்த நாளங்கள், கண்கள், சிறுநீரகம், நரம்பு உள்ளிட்டவற்றுக்கு பாதிப்புகள் ஏற்படும். 

வயது வந்தோரிடையே பரவலாக ஏற்படும் டைப் 2 நீரிழிவு நோய், நமது உடல் போதுமான இன்சுலினை சுரக்காதபோது ஏற்படுகிறது. 

அதிக வருமானம் கொண்ட நாடுகளைவிட குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க என்னென்ன சாப்பிட வேண்டும், என்னென்ன சாப்பிட கூடாது என்பதே பெரும்பாலானோருக்கு எழும் கேள்வியாக உள்ளது. 

இதற்கான விடையை தெரிந்துகொள்ள லத்தீன் அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் துணை தலைவரும் கொலம்பியா தேசிய பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை இணை பேராசிரியருமான பெரேஸ் குவால்ட்ரானிடம் பேசினோம். 

ரத்த சர்க்கரை அளவை ஏன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்?

நீங்கள் சர்க்கரை சாப்பிட்டால் உங்கள் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்துவிடும் என நினைப்பீர்கள், ஆனால் அதுதான் இல்லை. 

குளுக்கோஸ் அளவை 24 மணிநேரமும் சரியான அளவில் வைத்திருக்கும் வகையிலான என்சைம் நம் உடலில் உள்ளது. 

ஆனால், அதனை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். அதாவது, அதன் அளவு அதிகரிக்கவும் கூடாது, குறையவும் கூடாது. 

நீண்ட காலத்திற்கு ஒருவர் அதிகளவு குளுக்கோஸை உடலில் கொண்டிருந்தால், உடல் பல நச்சுகளை வெளியிட்டு காலப்போக்கில் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். 

கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகமாக உள்ள (ஹைப்பர்கிளைசீமியா) நீரிழிவு நோயாளிகள் கண்பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுவர். மேலும், கை, கால்களை அகற்றும் அளவுக்கும் இது சென்றுவிடும். 

ரத்த சர்க்கரை அளவு குறைந்தால், சில நொடிகளிலேயே நோயாளி உயிரிழக்கும் அபாயமும் ஏற்படும். 

எனவே, ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கவும் கூடாது, குறையவும் கூடாது. 

நீரிழிவு நோயாளிகள் கொண்டிருக்க வேண்டிய ஆரோக்கியமான குளுக்கோஸ் அளவுகள் உள்ளன.

உதாரணமாக, ஒருவர் ஆறு முதல் எட்டு மணிநேர உண்ணாநிலைக்குப் பிறகு (Fasting) 100 அல்லது அதற்கும் கீழே குளுக்கோஸ் அளவு இருக்க வேண்டும்.

உணவு எடுத்துக்கொண்ட பின்னர் இந்த அளவு 140-ஐ தாண்டக்கூடாது. அதைத்தாண்டினால் பிரச்னை. 

ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உணவுகள் உண்டா?

ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் உணவுகளும் எடுத்துக்கொள்ளக் கூடாத உணவுகளும் உண்டு. ஆரோக்கியமான உணவு முறையை கடைபிடிக்க மூன்று வழிமுறைகள் உண்டு. 

  • பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • செறிவூட்டப்பட்ட சர்க்கரை உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • நிறைவுற்ற கொழுப்பு உணவுகளை (Saturated Fats) தவிர்த்து ஒற்றை நிறைவுறா கொழுப்பு உணவுகளை (Mono unsaturated fats) எடுத்துக்கொள்ள வேண்டும். கோதுமை உள்ளிட்ட நார்ச்சத்து அடங்கிய உணவுகள் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதனுடன் அதிகளவில் நீர்ம உணவுகளையும் எடுக்க வேண்டும்.

என்னென்ன பழங்கள், காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்? எவ்வளவு உண்ண வேண்டும்?

உங்களால் எவ்வளவு காய்கறிகளை உண்ண முடியுமோ உண்ணுங்கள். அதில் கட்டுப்பாடு இல்லை.

ஆனால், நாம் எடுத்துக்கொள்ளும் பழங்களுக்கு அளவு இருக்கிறது. 

பகுதி அளவு மட்டுமே பழங்களை உண்ண வேண்டும். தினசரி மூன்று வேளை உணவில் இருவேளை பழங்களும் மூன்று வேளை காய்கறிகளும் எடுக்கலாம். 

ஒரு நாளைக்கு மூன்று வெவ்வேறு நிறமுடைய காய்கறிகளை எடுத்துக்கொள்ளும்போது, உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்டவை கிடைக்கும். 

பல சமயங்களில் நம்மில் பலரும் அதிகளவிலான வாழைப்பழங்களை உண்போம். ஆனால், மற்ற பழங்களைவிட வாழைப்பழத்தில் சர்க்கரையின் அளவு அதிகம். 

பெரும்பாலான பழங்களில் 10% குளுக்கோஸ் உள்ளது. அதாவது, 100 கிராம் பழத்தில் 10% குளுக்கோஸ் தான் இருக்கும். ஆனால், வாழைப்பழத்தில் 20% குளுக்கோஸ் உள்ளது. ஆரஞ்சு பழத்தில் 5% குளுக்கோஸ் உள்ளது. 

ஒருவர் நான்கு ஆரஞ்சுகளை சாப்பிடுவதும் ஒரேயொரு வாழைப்பழத்தை சாப்பிடுவதும் சர்க்கரை அளவை பொறுத்தவரை ஒன்றுதான். 

செறிவூட்டப்பட்ட சர்க்கரை அடங்கிய உணவுகள் என்னென்ன?

பெரும்பாலான நாடுகளில் காலை உணவில் காபி சர்க்கரையுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனவே, காபியில் சேர்க்கப்படும் சர்க்கரையை நாம் தவிர்க்க வேண்டும். 

சர்க்கரை சேர்க்காமல் காபி கசக்கிறது எனக்கூறும் நோயாளிகள், சர்க்கரைக்கு பதிலாக ஸ்வீட்னர் எடுத்துக்கொள்ளலாம். 

கலோரி கொண்ட ஸ்வீட்னர், கலோரி இல்லாத ஸ்வீட்னர் என இருவகைகள் உண்டு. கலோரி கொண்ட ஸ்வீட்னரை எடுத்துக்கொண்டால் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். அதனால், கலோரி இல்லாத ஸ்வீட்னரை எடுக்க வேண்டும். 

ஆனால், கலோரி இல்லாத ஸ்வீட்னர் இரைப்பையில் உள்ள பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகளை பாதிக்கிறது. இதனால் சில ஆபத்துகள் ஏற்படும். 

இந்த நுண்ணுயிரிகளே நமது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கிறது. மேலும், நாம் மகிழ்ச்சியாக உணரும் வகையிலான நரம்பியக் கடத்திகளை உற்பத்தி செய்வதும் இவைதான். 

பெரும்பாலான குளிர்பானங்கள் கலோரி இல்லாத ஸ்வீட்னர்களால் தயாரிக்கப்படுகிறது. இவை நம் குடல் நுண்ணுயிரிகளை பாதிக்கின்றன. 

மேலும், பழச்சாறு உள்ளிட்ட அதிகமாக சர்க்கரை அடங்கிய நீர்ம உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. 

இதற்கு ஓர் சிறந்த உதாரணம் உண்டு: உருளைக்கிழங்கு, ஸ்ட்ராபெர்ரி - இவை இரண்டில் எது இனிப்பாக இருக்கும் என்று கேட்டால் அனைவரும் ஸ்ட்ராபெர்ரி என்று கூறுவார்கள்.

ஆனால் இரண்டில் எதில் சர்க்கரை அதிகமாக உள்ளது? 100 கிராம் ஸ்ட்ராபெர்ரியில் 5% சர்க்கரை உள்ளது. ஆனால், 100 கிராம் உருளைக்கிழங்கில் 20% சர்க்கரை உள்ளது. 

ஸ்ட்ராபெர்ரியில் பழச்சாறு செய்தால் அதிலுள்ள சர்க்கரை கரைந்துவிடும். அதனால், நமது உடல் சீக்கிரமாகவே சர்க்கரையை உறிஞ்சிவிடும். ஆகவே, ஸ்ட்ராபெர்ரியை பழச்சாறாக அல்லாமல் அப்படியே சாப்பிடுவதே நல்லது. இதே விதி உருளைக்கிழங்குக்கும் பொருந்தும். 

இவைதான் உணவுப்பழக்கத்தில் நாம் கடைபிடிக்கும் சுகாதாரம்.

நிறைவுற்ற கொழுப்பு உணவுகள் என்றால் என்ன?

நிறைவுற்ற கொழுப்பு உணவுகளை தவிர்த்து ஒற்றை நிறைவுறா கொழுப்பு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதற்கு ஆலிவ் எண்ணெய் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. 

அறை வெப்பநிலையில் திடப்பொருளாக மாறும் கொழுப்பு உணவில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளது. 

இது, நமது ரத்தத்தில் இன்சுலின் கட்டுக்குள் இல்லாமல் இருப்பதற்கு வழிவகுக்கிறது. 

இதனால் உடலில் சர்க்கரை அளவு இயல்பாகவே அதிகரிக்கிறது.

தினசரி 20 மி.லி. ஆலிவ் எண்ணெய் எடுத்துக்கொள்வது சிறந்ததாக கருதப்படுகிறது. இதனால் நமது உடலில் குளுக்கோஸ் அளவு குறையும். 

நீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட கூடாது?

அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகள், குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். 

நட்ஸ் வகைகள், ஆழ்கடல் மீன் வகைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உணவு மட்டுமல்லாது தினசரி நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். 

ஸ்கேட்டிங், நீச்சல் பயிற்சியும் நல்லது. எனினும், தினசரி 7,000 அடிகளுக்கும் அதிகமாக நடப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். 

நீண்ட நேரமாக அமர்ந்திருப்பதை தவிருங்கள். ஒருவரை கொல்வது நாற்காலிதான். நாற்காலி ஓர் அமைதியான எதிரி. 

ஒரு நாளில் எட்டு மணி நேரம் அமர்ந்திருக்கிறீர்கள் என்றால், அதில் இரண்டு அல்லது மூன்று பங்கு குறைக்க வேண்டும். நின்றுகொண்டோ அல்லது நடந்துகொண்டோ வேலை செய்ய ஆரம்பியுங்கள்.

ஒரு கோப்பை ஒயின் எடுத்துக்கொள்வது ஆபத்தா?

மிதமான அளவில் மது அருந்துவது இதயத்திற்கு சாதகமானதாக கருதப்படுகிறது. ஆனால், அளவு அதிகமானால் ஆபத்துதான். 

ஆல்கஹால் கல்லீரலில் புதிய ட்ரைகிளிசரைடுகளை உருவாக்குவதற்கு சாதகமாக இருப்பதால், நீரிழிவு நோயாளிக்கு அது தீங்கு விளைவிக்கும்.

வேறு என்ன செய்ய வேண்டும்?

தூங்கும் நேரம் மிகவும் முக்கியம். 

உறக்கத்தை சீராக்க என்ன செய்ய வேண்டும்? தினசரி உடல் உழைப்பை அதிகப்படுத்த வேண்டும். 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: • ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக் • டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர் • இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம் • யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்