You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரத்த அணுக்களுடன் போராடிய 13 வயது சிறுமிக்கு உதவிய மரபணு மாற்று சிகிச்சை
- எழுதியவர், ஜேம்ஸ் கல்லேகர்
- பதவி, உடல்நலம் மற்றும் அறிவியல் செய்தியாளர்
பதின்பருவ சிறுமிக்கு இருந்த குணப்படுத்தவே முடியாத புற்றுநோய், புரட்சிகரமான புதிய வகை மருந்து மூலம் அவரது உடலில் இருந்து முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது.
லுகேமியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த அலிசாவுக்கு மற்ற அனைத்து சிகிச்சைகளும் பலன் தரவில்லை.
ஆகவே, கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனை மருத்துவர்கள், உயிர் பொறியியலின் மகத்தான சாதனையான மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய மருந்தை உருவாக்கினர்.
இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்ட 6 மாதங்களுக்குப் பிறகு அலிசாவின் உடலில் புற்றுநோய் இல்லை. ஆனாலும், அவரை புற்றுநோய் மீண்டும் தாக்குகிறதா என்று மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
லீசெஸ்டரைச் சேர்ந்த 13 வயதேயான அலிசாவை ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மிகுதியால் வரக்கூடிய டி-செல் ஏகியூட் லிம்போப்ளாஸ்டிக் லுகேமியா (T-cell acute lymphoblastic leukaemia) எனும் நோய் தாக்கியிருந்தது கடந்த ஆண்டு மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.
டி-செல்கள் நம் உடலுக்கு வரும் அச்சுறுத்தல்களை கண்டறிந்து அழித்து, உடலின் காவலன்களாக திகழ்பவை. ஆனால், அலிசாவைப் பொருத்தவரை அவையே கட்டுப்பாடின்றி அதிகரித்து பெரும் ஆபத்தாக மாறிவிட்டன.
அவரைத் தாக்கிய புற்றுநோய் மிகவும் மோசமான ஒன்று. கீமோதெரபி, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகளை செய்த போதிலும் அது குணமாகவில்லை.
சாவை எதிர்நோக்கியிருந்த அலிசாவுக்கு பரிசோதனை மருந்துகள் இல்லாவிட்டால், அவரை முடிந்தவரை வசதியாக இருக்கச் செய்வது என்ற ஒரு வாய்ப்பு மட்டுமே எஞ்சி இருந்திருக்கும்.
“முடிவில் நான் இறந்திருப்பேன்” என்கிறார் அலிசா. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் வேளையில், “இதுவே மகளுடன் கொண்டாடும் கடைசி கிறிஸ்துமசாக இருக்கும்” என்று அவரது அம்மா கியோனா பயந்திருக்கிறார்.
கடந்த ஜனவரியில் மகளின் 13-வது பிறந்தநாளில் அவர் அழுதே விட்டார்.
அதன் பிறகு நடந்ததையெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பு நம்மால் நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது. மரபியலில் கண்ட வியத்தகு வளர்ச்சியால்தான அது சாத்தியமானது.
வெறும் 6 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட, மரபணு குறியீடுகளை திருத்துதல் தொழில்நுட்பத்தை கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனை மருத்துவர்கள் பயன்படுத்தினர்.
மரபணு குறியீட்டின் அடிப்படை அலகுகளே நம் வாழ்க்கையின் மொழி. மொத்தம் 4 வகையான அடிப்படை அலகுகள் உள்ளன. அடினைன்(ஏ), சைட்டோசின் (சி), குவானைன் (ஜி), தைமின் (டி) ஆகிய அவை நான்கும் மரபியல் குறியீட்டின் அடிப்படை அலகுகளாகும். எழுத்துகளாலான வார்த்தைகள் பொருள் தருவது போல, நம் மரபணுவில் (DNA) உள்ள கோடிக்கணக்கான அடிப்படை அலகுகளும் நம் உடல் வடிவம், இயக்கத்திற்கான கட்டளைகள் அடங்கிய கையேடாக திகழ்கின்றன.
மரபணு குறியீடுகளை திருத்தும் தொழில்நுட்பம் நம் மரபணுவில் குறிப்பிட்ட இடத்தை பெரிதாக்கி அறிவியலாளர்கள் துல்லியமாக பார்க்க உதவுகிறது. பிறகு, அதன் ஒரே ஒரு அடிப்படை அலகில் உள்ள மூலக்கூறு கட்டமைப்பை மாற்றி, அதனை மற்றொன்றாக்கி, மரபணு கட்டளைகளை மாற்ற வழிவகை செய்கிறது.
இந்த கருவியைப் பயன்படுத்தி, அலிசாவின் உடலில் புற்றுநோய்க்கு காரணமான டி-செல்களை வேட்டையாடி அழிக்க வல்ல புதிய வகை டி-செல்களை அறிவியலாளர்கள் மற்றும் மருத்துவர்களைக் கொண்ட மிகப்பெரிய குழு உருவாக்கியது.
நன்கொடையாளரிடம் இருந்து பெற்ற ஆரோக்கியமான டி-செல்களைக் கொண்டு இதற்கான செயல்முறையை இந்த குழு தொடங்கியது.
- முதல் கட்டமாக, அந்த டி-செல்களில் இருந்த, உடலுக்கு வரும் அச்சுறுத்தலை கண்டுபிடிக்கக் கூடிய நுட்பத்தை செயலிழக்கச் செய்தனர். இதனால், அவை அலிசாவின் உடல் செல்களை தாக்காது.
- இரண்டாவதாக, அனைத்து டி-செல்களில் இருந்த சிடி-7 என்ற வேதியியல் குறியீடு நீக்கப்பட்டது.
- மூன்றாவதாக, அந்த டி-செல்களுக்கு அளிக்கப்பட்ட கண்ணுக்கு புலப்படாத உறை, அவை கீமோதெரபி சிகிச்சையின் போது கொல்லப்படாமல் காத்தது.
மரபணு மாற்றத்தின் இறுதிக்கட்டமாக, சிடி-7 என்ற குறியீடு கொண்ட டி-செல்களை வேட்டையாடுவதற்கான கட்டளைகள் நன்கொடையாளரின் டி-செல்களுக்கு தரப்பட்டன. இது அலிசாவின் உடலில் உள்ள புற்றுநோய் செல்கள் உள்பட அனைத்து டி-செல்களையும் அழித்துவிடும்.
அதனால்தான், நன்கொடையாளரின் டி-செல்களில் இருந்து சிடி-7 குறியீடுகள் முன்கூட்டியே நீக்கப்படுகின்றன. இல்லாவிட்டால், இந்த டி-செல்கள் தன்னைத்தானே அழித்துக் கொண்டுவிடும்.
இந்த சிகிச்சை எதிர்பார்த்த பலனை தந்தால், அலிசாவின் டி-செல் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு மண்டலம் இரண்டாவது எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் உருவாகிவிடும்.
அலிசாவின் குடும்பத்தினரிடம் இந்த யோசனை விவரிக்கப்பட்ட போது, அவரது தாயார் கியோனா சிந்தனையில் ஆழ்ந்தார். “உங்களால் அதைச் செய்ய முடியுமா?” என்றார் அவர்.
கடந்த மே மாதம் செய்யப்பட்ட, பல லட்சம் மரபணு மாற்றப்பட்ட செல்களை உள்ளடக்கிய பரிசோதனை அடிப்படையிலான சிகிச்சையை எடுத்துக் கொள்வது என்பது அலிசாவின் முடிவாகவே அமைந்தது.
“புதிய தொழில்நுடபத்தின்படி சிகிச்சை எடுத்துக் கொண்ட முதல் நபர் அலிசாதான்” என்று யூ.சி.எல். (UCL) மற்றும் கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் பேராசிரியர் வாசீம் குவாசிம் கூறுகிறார்.
மிக மோசமான பல நோய்களுக்கு தீர்வு தரும் சாத்தியங்களைக் கொண்டுள்ள, மரபணுக்களை கையாளும் இந்த நடைமுறை அறிவியலில் மிக வேகமாக வளர்ச்சி பெறும் பிரிவாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
மரபணு மாற்ற சிகிச்சைக்குப் பிறகு அலிசா, நோய்த் தொற்றுகளை தடுக்க முடியாத அளவுக்கு பலவீனமாகிவிட்டாள். ஏனெனில், நன்கொடையாளரின் மரபணு மாற்றப்பட்ட டி-செல்கள், அவரது உடலில் நோய்த் தொற்றுகளை தடுக்கக் கூடிய டி-செல்களையும், புற்றுநோய் பாதித்த டி-செல்களையும் அழித்துவிட்டன.
அதற்கு நிவாரணமாக, ஒரு மாதத்திற்குப் பிறகு அலிசாவுக்கு மீண்டும் நோய் எதிர்ப்பு மண்டலம் உருப்பெற இரண்டாவது எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அலிசா மொத்தம் 16 வாரங்களை மருத்துவமனையிலேயே கழிக்க நேரிட்டது. பள்ளி செல்லும் சகோதரனை அவரால் பார்க்க முடியவில்லை. அவர் மூலம் நோய்க்கிருமிகள் அலிசாவை தொற்றிவிடக் கூடும் என்பதே அதற்குக் காரணம்.
3 மாதங்களுக்குப் பின்னர் செய்யப்பட்ட பரிசோதனையில் அவரிடம் புற்றுநோய் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டது கவலை தரக் கூடியதாக இருந்தது. ஆனால், சமீபத்திய 2 பரிசோதனைகளிலும் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்படவில்லை.
“ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் பாராட்ட நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள். நான் இங்கே இருப்பதற்காக நன்றியுடன் இருக்கிறேன்” என்கிறார் அலிசா.
“அது சிறுபிள்ளைத்தனம். நான் இந்த வாய்ப்பைப் பெற்றிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது, அதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், மேலும் இது எதிர்காலத்தில் மற்ற குழந்தைகளுக்கும் உதவப் போகிறது.”
நெருங்கிய உறவுப்பெண்ணுக்கு மணப்பெண் தோழியாக, வரும் கிறிஸ்துமசை அலிசா ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார். சைக்கிளில் பள்ளிக்குச் செல்வது உள்பட மற்றவர்களைப் போல அனைத்தையும் செய்கிறார்.
அலிசாவுக்கு புற்றுநோய் மீண்டும் வரவே வராது என்று அவரது குடும்பம் நம்புகிறது. ஆனால், இந்த சிகிச்சை மூலம் அவருக்கு கிடைத்துள்ள கூடுதல் வாழ்நாட்களை அவர்கள் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறார்கள்.
“கூடுதலாக கிடைத்துள்ள இந்த ஆண்டில், கடந்த 3 மாதங்களாக அலிசா வீட்டில் இருப்பது இந்த சிகிச்சை தந்த பரிசு” என்று நெகிழ்கிறார் கியோனா.
“நாங்கள் எவ்வளவு பெருமையாக உணர்கிறோம் என்பதை உரைப்பதே மிகவும் கடினம். அவர் எதை கடந்து வந்திருக்கிறாள்? ஒவ்வொரு சூழலிலும் வாழ்க்கையின் உயிர் சக்தியை அவள் எவ்வாறு மீட்டெடுத்திருக்கிறாள்? என்பதையும் காணும் போது அது மிகச் சிறப்பானதாக உணர முடிந்தது” என்கிறார் அலிசாவின் தந்தை ஜேம்ஸ்.
லுகேமியாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் தற்போதுள்ள முதன்மையான சிகிச்சையிலேயே குணமடைகின்றனர். ஆனால், ஆண்டிற்கு 12 குழந்தைகள் வரை இந்த புதிய சிகிச்சையால் பலன் பெறுவார்கள் என்று கருதப்படுகிறது.
மருத்துவப் பரிசோதனையின் ஒரு பகுதியாக, புதிய மருந்தை எடுத்துக் கொண்ட முதல் 10 பேரில் அலிசாவும் ஒருவர்.
“இது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது. உண்மையில் இது மருத்துவ சிகிச்சையில் புதிய களம். நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தையே புற்றுநோய்க்கு எதிராக போரிடுமாறு செய்ய முடியும் என்பது சிறப்பான ஒன்று” என்று கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையின் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைத் துறை மருத்துவர் ராபர்ட் சீசா கூறுகிறார்.
இது மரபணு மாற்ற சிகிச்சையின் தொடக்கம் தான். அதன் மூலம் சாத்தியமாகும் பலன்களில் ஒரு சிறு பகுதிதான்.
மரபணு குறியீடுகளை மாற்றும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட 6 ஆண்டுகளிலேயே அது பயன்பாட்டிற்கு வந்திருப்பதை நம்பவே முடியவில்லை என்று பிராட் கல்வி நிறுவனத்தில் அதனை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான மருத்துவர் டேவிட் லியூ ஆச்சரியத்துடன் குறிப்பிடுகிறார்.
அலிசாவுக்கான சிகிச்சையில், ஒவ்வொரு மரபணு திருத்தமும் அவரது மரபணு குறியீட்டை உடைக்கக் கூடியது. அதனால், அது இனி பலன் தராது. ஆனால், அதில் உள்ள நுணுக்கமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குறைபாடுள்ள மரபணுக்களை நீக்குவதற்குப் பதிலாக அவற்றை திருத்தி சரி செய்யலாம்.
உதாரணமாக, மரபணு குறியீட்டில் ஏற்படும் ஒரே ஒரு மாற்றத்தால் வரக் கூடிய சிக்கிள் செல் அனீமியா என்ற ரத்த சிவப்பணு குறைபாடு நோயை இந்த முறையில் சரி செய்துவிட முடியும்.
சிக்கிள் செல் அனீமியா நோயை மரபணு மாற்ற சிகிச்சை மூலம் குணப்படுத்துவதற்கான சோதனைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. பரம்பரை பரம்பரையாக வரக் கூடிய உடலில் அதிக கொழுப்பு சேரும் பிரச்னை மற்றும் பீட்டா தலசீமியா என்ற ரத்த குறைபாடு நோய்க்கும் இந்த சிகிச்சை முறை சோதிக்கப்படுகிறது.
“மரபணு குறியீடுகளை மாற்றி சிகிச்சை அளிக்கும் இந்த நடைமுறை ஒரு தொடக்கம் தான். நம் மரபணுக்களை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதை நோக்கி முக்கிய அடிகளை அறிவியல் முன்னெடுத்து விட்ட வேளையில், மனித மரபணு மாற்ற சிகிச்சை என்பது சாதாரண ஒன்றுதான்” என்கிறார் மருத்துவர் லியூ.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்