You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகிலேயே முதல்முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதருக்குப் பொருத்தி அமெரிக்காவில் சாதனை - அறிவியல் அதிசயம்
உலகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் ஒருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
பால்டிமோரில் 7 மணிநேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் டேவிட் பென்னெட் உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையே பென்னெட்டின் உயிரை காப்பாற்றுவதற்கான இறுதி நம்பிக்கையாக கருதப்பட்டது. எனினும், அவர் உயிர் பிழைப்பதற்கான நீண்ட கால வாய்ப்புகள் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
"இது வாழ்வா சாவா என்பதற்கிடையிலான அறுவை சிகிச்சை," என, அறுவைசிகிச்சைக்கு முன்னதாக, 57 வயதான பென்னெட் தெரிவித்தார்.
"இது வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு என்ற போதிலும் என்னுடைய இறுதி வாய்ப்பு இதுவாகும்" என்றார்.
இதனை செய்யாவிட்டால் பென்னெட் இறந்துவிடுவார் என கருதப்பட்டதால், இதனை மேற்கொள்ள மேரிலேண்ட் மெடிக்கல் சென்டர் பல்கலைக்கழக மருத்துவர்களுக்கு, அமெரிக்க மருத்துவக் கட்டுப்பாட்டு அமைப்பு சிறப்பு பரிந்துரை வழங்கியது.
மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவை பொறுத்தவரை, இது பல ஆண்டு ஆராய்ச்சியின் உச்சத்தைக் குறிக்கிறது. மேலும், இது உலகம் முழுதும் பலரின் வாழ்க்கையை மாற்றலாம்.
அறுவை சிகிச்சை நிபுணர் பார்ட்லே பி. கிரிபித் கூறுகையில், "உறுப்பு பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு இந்த அறுவை சிகிச்சை உலகை ஒருபடி மேலே கொண்டு வரும்," என அப்பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த நெருக்கடி என்னவென்றால், அமெரிக்காவில் ஒருநாளுக்கு 17 பேர் அறுவை சிகிச்சைக்கு மாற்று உறுப்பு கிடைக்காமல் இறப்பதாகவும், 1 லட்சத்துக்கும் அதிகமானோர் காத்திருப்புப் பட்டியலில் இருப்பதாகவும், கூறுகிறது OrganDonor.gov.
இந்த தேவையைப் பூர்த்தி செய்ய செனோடிரான்ஸ்பிளன்டேஷன் (xenotransplantation) என்று அழைக்கப்படும், விலங்கு உறுப்புகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு நீண்டகாலமாக கருதப்படுகிறது. மேலும், பன்றியின் இதய வால்வுகளை பயன்படுத்துவது ஏற்கனவே பொதுவானது ஆகும்.
கடந்த அக்டோபர் 2021 அன்று, நியூயார்க்கில் அறுவை சிகிச்சை நிபுணர்கள், வெற்றிகரமாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதருக்குப் பொருத்தியதாக அறிவித்தனர். அச்சமயத்தில், அந்த அறுவை சிகிச்சை மிகவும் முன்னோடியான பரிசோதனையாக கருதப்பட்டது.
ஆனால், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபர், மூளைச்சாவு அடைந்தார். எனினும், இந்த அறுவை சிகிச்சை தன் வாழ்க்கையை தொடர அனுமதிக்கும் என நம்புகிறார் பென்னெட்.
அவர் அறுவைசிகிச்சைக்கு முன்பு ஆறு வாரங்களாக படுத்த படுக்கையாக இருந்தார், இதய நோய் கண்டறியப்பட்ட பின்னர் அவரை உயிருடன் வைத்திருப்பதற்கான கருவியுடன் அவர் இணைக்கப்பட்டிருந்தார்.
"எனக்கு உடல்நிலை சரியானதும் படுக்கையிலிருந்து எழுவதை எதிர்பார்க்கிறேன்," என அவர் தெரிவித்தார்.
மிகச்சரியாக அடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட பன்றி, மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் சர்க்கரையை உருவாக்கும் மரபணுவை சிறிது நேரம் உணர்விழக்கச் செய்யும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டதாக, ஏ.எப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31வரை நீட்டிப்பு - முழு விவரம்
- தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி திட்டம்: பக்க விளைவு வருமா? வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?
- சித்தார்த் சர்ச்சை: சாய்னா மீது விமர்சனம் - மகளிர் ஆணையம் தலையீடு
- "இலங்கையில் தமிழ், சிங்களத்துக்கு குறையும் மவுசு - சீன மொழி ஆதிக்கம் ஓங்குகிறதா?"
- நிலவுக்கு சரக்கு டெலிவரி: நாசாவோடு சேர்ந்து களத்தில் இறங்கும் நிறுவனங்கள்
- இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் - யார் போடலாம்? என்ன பயன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்