You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி திட்டம்: பக்க விளைவு வருமா? வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. `தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்பு உடல் வலியோ, சிறிது சோர்வோ வரலாம் அல்லது வராமலும் போகலாம். அண்மைக் காலமாக தடுப்பூசியால் எந்தவித விளைவுகளும் ஏற்படவில்லை'' என்கின்றனர் சுகாதாரத்துறை வல்லுநர்கள்.
யார் யாருக்கு பூஸ்டர் டோஸ்?
தமிழ்நாட்டில் தற்போது வரையில் 92 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சென்னையில் மட்டும் 71 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகள் என 20 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் சுகாதாரப் பணியாளர்கள் 5.65 லட்சம் பேரும் முன்களப் பணியாளர்களில் 9.78 லட்சம் பேரும் உள்ளதாகவும் இவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதிக்கு முன்னதாக இரண்டாவது தவணை செலுத்திக் கொண்டவர்கள், பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். இதற்காக தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றை கொண்டு செல்வது அவசியமாக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 60 வயதைக் கடந்தவர்கள் தங்களுக்கு இணை நோய்கள் இருப்பதற்கான எந்தவித சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளைவுகள் என்னென்ன?
அதேபோல், முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசியின்போது எந்த நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்டதோ, அதே தடுப்பூசியே பூஸ்டர் டோஸ் செலுத்தும்போதும் போடப்படும் எனவும் அதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த திங்கள்கிழமையன்று இதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னைப் பட்டினப்பாக்கத்தில் தொடங்கி வைத்தார்.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படுவதாகவும் சுகாதாரத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம், பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதால் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியபோது என்ன பக்க விளைவுகள் ஏற்பட்டதோ அதே மாதிரியான மிதமான விளைவுகளே ஏற்படும் எனவும் இதில் ஊசி போட்ட இடத்தில் வலியும் சோர்வும் சிலருக்குத் தலைவலியும் ஏற்படலாம் என சுகாதாரத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் 0.01 சதவீதம் என்ற அளவில் மட்டும் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு 3 மாதத்துக்கும் பூஸ்டர் டோஸா?
தடுப்பூசியின் விளைவுகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவர் பிரேமா, `` எந்த அறிவியல் ஆதாரத்தின் அடிப்படையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த உள்ளனர் எனத் தெரியவில்லை. இதுதொடர்பாக எந்தத் தகவலும் பொதுவெளியில் வைக்கப்படுவதில்லை. முதலில் தடுப்பூசியின் பலன் ஒன்பது மாதம் என்றார்கள், பின்னர் ஆறு மாதம் என்றார்கள். இப்போது மூன்று மாதம் என்கிறார்கள். அப்படியானால், ஒவ்வொரு மூன்று மாதத்துக்கு ஒருமுறையும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமா? அதற்கான தேவை என்ன உள்ளது?'' எனக் கேள்வி எழுப்புகிறார்.
தொடர்ந்து பேசுகையில், ``30 பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டாலும் தடுப்பூசி செலுத்தியவர்கள், மற்றும் செலுத்தாதவர்கள் இடையே எந்த வேறுபாடுகளும் இருக்கப் போவதில்லை. தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் அவர் மூலமாக வேறு நபர்களுக்கு கொரோனா பரவாது என்பதற்கும் எந்தவித உத்தரவாதமும் இல்லை. தொற்று பரவுவதைத் தடுப்பூசி தடுக்காது என தடுப்பூசி நிறுவனங்களும் உலக சுகாதார நிறுவனமும் சொல்லியுள்ளன.
தொற்று பரவுவதைத் தடுக்கும் என்றால், அதனை அனைவருக்கும் செலுத்துவதில் தவறு இல்லை. இந்தியாவில் உள்ள வைரலாஜி நிபுணர்களும் ஆய்வாளர்களும், `இலக்கு வைத்து தடுப்பூசி செலுத்துங்கள், இணை நோய்கள் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவது போதுமானது' என்கிறார்கள். இதைப் பற்றி ஏன் அரசோ பிற மருத்துவர்களோ ஏன் பேசுவதில்லை?'' என்கிறார்.
தரவுகளில் அலட்சியமா?
``தடுப்பூசி போட்ட பிறகு வரக்கூடிய பாதகங்களைப் பதிவு செய்வதற்கு எந்தவிதத் தரவுகளும் இல்லை. இதனை நான் சொல்லவில்லை. பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில், `இந்திய மருத்துவர்கள் Adverse event following immunization (AEFI) தரவுகளில் மிகவும் அலட்சியமாக உள்ளனர்' எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில் 150 கோடி டோஸ் போட்டுவிட்டதாக பிரதமர் கூறியுள்ளார்.
ஆனால், தடுப்பூசி பாதகங்களை முறையாகக் கண்காணிக்கக் கூடிய ஒன்றை மருத்துவர்கள் மத்தியில் கொண்டு செல்லவில்லை. ஆனால், முழுமையான பாதுகாப்பு எனப் பேசி வருகிறார்கள். அப்படியிருக்கும்போது மீண்டும் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்துவது சரியான ஒன்றல்ல. தடுப்பூசியால் யாரோ ஒருவருக்கு பாதிப்பு வந்தாலும், அதற்கு மருத்துவர்கள் சரியான விளக்கம் அளிக்காவிட்டால் மக்களுக்கு சந்தேகம் வருவது எளிது. நேரடியாக மக்களே புகார் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்'' என்கிறார் டாக்டர் பிரேமா.
தரவுகளை ஆராய்ந்த பிறகே அனுமதி
இது தொடர்பாக, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் ஆர்.ஜெயந்தியிடம் பிபிசி தமிழ் சார்பில் விளக்கம் கேட்டோம். `` உலக அளவிலும் இந்திய அளவிலும் இதற்கென ஏராளமான ஆலோசனைக் குழுக்கள் உள்ளன. குறிப்பாக, இந்தியாவில் தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உள்பட பல குழுக்கள் இயங்கி வருகின்றன. அவர்கள் உலகளாவிய தரவுகளை ஆய்வு செய்கின்றனர். பலமுறை ஆலோசித்து இறுதியில் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளனர்'' என்கிறார்.
மேலும், ``இந்தியாவில் யாருக்கு பூஸ்டர் தடுப்பூசியை முதலில் கொடுக்க வேண்டும் என்பதை முறைப்படுத்தியுள்ளனர். தற்போது தடுப்பூசி செலுத்துவது என்பது ஓர் இயக்கமாகவே மாறிவிட்டது. மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை கூறினால் அதை தெளிவுபடுத்துவோம். பூஸ்டர் தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்பாமல் இருந்தால் போதும். விளைவை உருவாக்கக் கூடிய ஒன்றை மருத்துவர்கள் பரிந்துரைக்கப் போவதில்லை'' என்கிறார்.
``பூஸ்டர் டோஸ் தடுப்பூசி என்பது வெளியில் இருந்து வந்த ஊசி கிடையாது. ஏற்கெனவே நாம் போட்டுக் கொண்ட ஊசிதான். ஏற்கெனவே போட்ட அதே ஊசியை செலுத்திக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டனர். உடல்வலியோ, சிறிது சோர்வோ இருக்கலாம். அது இல்லாமல்கூட இருக்கலாம். அண்மைக்காலமாக எந்தவித விளைவுகளும் வரவில்லை'' என்கிறார் மருத்துவர் ஆர்.ஜெயந்தி.
பிற செய்திகள்:
- ஏழை நாடுகளை தனது கடன் வலையில் சிக்க வைக்கிறதா சீனா?
- மிளகாய் பொடியை நுகர வைத்த தாய்: விபரீத தண்டனையால் 10 வயது சிறுமி உயிரிழப்பு
- இந்தியாவில் பூதாகரமாக உருவெடுக்கும் வேலை இல்லா திண்டாட்டம் - தப்பிக்க வழி என்ன?
- கடன் நெருக்கடியைத் தீர்க்க சீன வெளியுறவு அமைச்சரிடம் கோட்டபய வைத்த கோரிக்கை
- "நரகத்தின் நுழைவாயிலை" மூட துர்க்மெனிஸ்தான் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்