You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கீழ் முதுகு வலியில் இருந்து மீள என்ன வழி? பெண்களின் மாதவிடாய் கால முதுகு வலிக்கு தீர்வு என்ன?
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
வயது மூப்பு காரணமாக வருவதைவிட வாழ்க்கை முறை காரணமாக கீழ் முதுகு வலி வருவது தற்காலங்களில் சாதாரணம் ஆகிவிட்டது.
அப்படி வாழ்க்கை முறை காரணமாகக் கீழ் முதுகு வலி ஏற்பட்டால் அதை ஆபத்தான அறிகுறியாகக் கருதவேண்டும் என சென்னையைச் சேர்ந்த எலும்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் அஸ்வின் விஜய் தெரிவிக்கிறார்.
கடந்த 20 ஆண்டுகளில் இளைஞர்கள் பலரிடம் முதுகுத் தேய்மானம், கீழ் முதுகு வலி போன்றவை காணப்படுவதற்கு, அமர்ந்த நிலையில் பல மணிநேரம் வேலை செய்வதுதான் முக்கியக் காரணம் என்கிறார் மருத்துவர் அஸ்வின் விஜய். ஒரு சிலர் திடீரென அதிக எடை தூக்கும் வகையில் ஜிம் பயிற்சி செய்வதாலும், அதிரடியாக உடற்பயிற்சி செய்வதாலும் கீழ் முதுகு வலிக்கு ஆளாகிறார்கள் என்றும் விபத்து காரணமாகவும் இந்த வலி ஏற்படும் என்கிறார் அஸ்வின் விஜய். ''ஒரு நாளில் பல மணிநேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்வதால், உடலில் எந்த அசைவும் இருக்காது. தொடர்ந்து இவ்வாறே வேலை செய்வதால் கீழ் முதுகு பகுதிக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. அதன்விளைவாக வலி ஏற்படுகிறது. முதுகுத் தண்டு பகுதி ஒரு சில மணிநேரமாவது செயல்பாட்டில் இருக்கவேண்டும்; அதை தொடர்ந்து ஓய்வு நிலையிலேயே வைத்திருந்தால், பல வியாதிகள் ஏற்படும். அதில் ஒன்றுதான் இந்த கீழ் முதுகு வலி,'' என்கிறார் அவர்.
கீழ் முதுகு வலி ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் பற்றி கேட்டபோது, ''தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு வலி நீடித்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கீழ் முதுகு வலி என்பது கால்களுக்கு பரவி, கால்கள் மறத்துப்போவது போன்ற உணர்வு உண்டாகும். கால் விரல்கள் மறத்துப்போகும் உணர்வு ஏற்பட்டால் உங்களுக்கு கீழ்முதுகு வலி இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்,'' என்றார்.
பெல்ட் அணிவதால் வலி குறையுமா?
கீழ் முதுகு வலி ஏற்பட்டவர்கள் ஒரு சிலர் பெல்ட் அணிவதை பழக்கமாக்கிக்கொள்வது ஆபத்தானது என்று கூறும் அவர், ''விபத்து காரணமாகவோ, பிற காரணங்களாலோ தீராத வலி உள்ளவர்கள் பெல்ட் அணிவதை ஒரு முதலுதவியாக பார்க்கலாம். வலியை முற்றிலுமாக அது குறைக்காது. வலியில் உள்ளவர்களுக்கு பெல்ட் அணிவது ஆறுதல் தரும். ஆனால் அதனை பழக்கமாக்கிக்கொண்டால், வலியில் இருந்து மீள்வது சிரமம்.
நம் உடலில் முதுகுத் தண்டு பகுதியை சுற்றி தசைகள், நரம்புகள் கொண்ட பெல்ட் போன்ற வடிவமைப்பை இயற்கை வழங்கியுள்ளது. செயற்கையான பெல்ட் அணிவதை பழக்கமாக வைத்திருந்தால், இயற்கையாக உடலில் உள்ள பெல்ட் போன்ற பகுதிகள் இயங்காமல் போகும். வலி என்பது நிரந்தரம் ஆகிவிடும்,'' என்கிறார் மருத்துவர் அஸ்வின் விஜய்.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலியை சமாளிப்பது எப்படி?
கீழ் முதுகு வலி மாதவிடாய் காரணமாக பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஏற்படும் என்றும் அதனை புரிந்துகொண்டால், எளிமையாக கையாளமுடியும் என்றும் அவர் கூறுகிறார்.
''மாதவிடாய் நாட்களுக்கு ஒரு சில நாட்களுக்கு முன் அல்லது மாதவிடாய் நேரத்தில், கீழ் முதுகு வலி ஏற்படும். அதை பற்றிய புரிதல் நம் சமூகத்தில் குறைவாக உள்ளது. இந்த வலி ஏற்படும்போது, வெந்நீர் அல்லது ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுப்பது சிறந்தது. உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகத்தான் இந்த வலி ஏற்படும் என்பதால், குணமாகிவிடும். புரிதலோடு அணுகுவது, மாதவிடாய் காலத்தை விடுத்தது பிற நாட்களில் முறையாக உடற்பயிற்சி செய்வது உதவும்,'' என்கிறார்.
வலி தீருவதற்கு வழி என்ன?
கீழ் முதுகு வலியின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்கள் நடை பயிற்சியை அவசியம் பின்பற்றவேண்டும் என்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால், அந்த வலியில் இருந்து மீள முடியும் என்கிறார் அவர்.
''தீவிர வலி இருப்பவர்கள், விபத்து காரணமாக கீழ் முதுகு வலிக்கு சிகிச்சை எடுப்பவர்கள் தவிர, ஆரம்பக் கட்ட வலியில் இருப்பவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி, நடை பயிற்சியை தனது அன்றாடப் பழக்கமாக கொண்டிருந்தால், வலி குறைய தொடங்கும், சில நாட்களில் வலி முற்றிலுமாக நீங்கிவிடும்,'' என்கிறார் மருத்துவர் அஸ்வின் விஜய்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்