You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஃபாஸ்ட் & ப்யூரியஸ் நடிகர் வின் டீசல் மீது முன்னாள் உதவியாளர் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு
- எழுதியவர், மேக்ஸ் மட்ஸா
- பதவி, பிபிசி நியூஸ்
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தில் நடித்த அமெரிக்க நடிகர் வின் டீசலின் முன்னாள் உதவியாளர் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். 2010ஆம் ஆண்டு ஃபாஸ்ட் ஃபைவ் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட போது தன்னை பாலியல்ரீதியாக அவர் துன்புறுத்தியதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வின் டீசல் என அழைக்கப்படும் மார்க் சின்க்ளேரின் வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் "இந்தக் குற்றச்சாட்டை முழுவதுமாக மறுக்கிறார்," என்றார்.
ஆஸ்டா ஜோனாசன், அந்த நடிகர் தன்னைச் சுவருடன் சேர்த்துப் பிடித்துக்கொண்டு தனக்குத்தானே பாலியல் செயலைச் செய்ததாகக் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும், அந்தச் சம்பவம் நடந்து சில மணிநேரத்துக்குள் அவர் எந்தவித காரணமும் இன்றி பதவி நீக்கம் செய்யப்பட்டதாக மற்றொரு வழக்கைத் தொடுத்துள்ளார்.
வியாழனன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தாக்கல் செய்யப்பட்ட ஜோனாசனின் வழக்கில், ‘ஃபாஸ்ட் ஃபைவ்‘ படப்பிடிப்பின்போது அட்லான்டாவின் செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் அந்தப் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தற்போது 56 வயதாகும் நடிகர் சின்க்ளேர், தனது ஹோட்டல் சூட்டில் உடல்ரீதியாக தன்னைத் தாக்கியதாகவும், "அதற்குத் தன்னுடைய ஒப்புதல் இல்லை என தெளிவாகத் தெரிவித்த பின்னரும் அதைப் புறக்கணித்ததாகவும்" அவர் அந்த வழக்கில் கூறுகிறார்.
வின் டீசலின் சகோதரி மீதும் வழக்கு
"உடனடியாக அவர் அலறியடித்துக்கொண்டு அருகிலுள்ள குளியலறையை நோக்கி ஓடியதாக" தெரிவித்துள்ளார். பின்னர் நடிகர் வின் டீசல், "தன் உடல் பலத்தால் சுவரில் அவரைச் சார்த்தி நிறுத்தி" தனக்குத் தானே பாலியல் செயலில் ஈடுபட்டதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நடந்த "வெறும் சில மணிநேரத்தில்", அந்த நடிகரின் சகோதரி சமந்தா வின்சென்ட் தன்னைத் தொடர்புகொண்டு அவரது தயாரிப்பு நிறுவனமான ‘ஒன் ரேஸ் ஃபிலிம்ஸில் இருந்து’ பணி நீக்கம் செய்ததாகத் தெரிவித்தார் என்றும் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் வின் டீசலின் சகோதரி மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனம் மீதும் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து சம்ந்தா வின்சென்டின் கருத்துகளை அறிய முயன்றபோது அவர் உடனடியாக பதிலளிக்கவில்லை.
"அவரால் இனி பயன் இருக்காது என்பதால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார் என்பது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெளிவாகத் தெரிந்தது. வின் டீசல் தனது பாலியல் ஆசைகளை நிறைவேற்ற அவரைப் பயன்படுத்தினார்," என்று இந்த வழக்கு குற்றம் சாட்டுகிறது.
மேலும், "அப்போது ஜோனாசன் உதவியற்றவராக உணர்ந்தார். அவரது சுயமரியாதை தகர்க்கப்பட்டது, அவர் தனது சொந்த திறன்களைக் கேள்விக்கு உள்ளாக்கினார் என்பதுடன் ஒரு வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வதற்காகத் தனது உடலை விற்பனை செய்ய வேண்டுமா என்று கலங்கினார்," என்று இந்த வழக்கு கூறுகிறது.
வின் டீசல் என அழைக்கப்படும் நடிகர் சின்க்ளேருடன் நடந்த அந்தச் சம்பவம் நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தின் மற்றொரு நிர்வாகி அதே ஹோட்டலில் அவருடன் இருக்க தன்னைக் கேட்டுக்கொண்டதாகவும் இந்த முன்னாள் உதவியாளர் கூறுகிறார்.
வின் டீசலின் வழக்கறிஞர் கூறுவது என்ன?
அந்த பாலியல் செயலுக்குக் கூடுதலாக, அவரது வழக்கில் பாலின பாகுபாடு, சட்டவிரோத பழிவாங்கல், உணர்ச்சி ரீதியான துன்பம் மற்றும் தவறான முடிவு ஆகியவை அடங்கும்.
நடிகர் வின் டீசலின் வழக்கறிஞர் பிரையன் ஃப்ரீட்மேன் வியாழன் அன்று சிஎன்என் (CNN) தொலைக்காட்சிக்கு அளித்த எழுத்துப்பூர்வ அறிக்கையில், "வின் டீசல் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கிறார்,” எனத் தெரிவித்துள்ளார்.
வெறும் 9 நாட்கள் மட்டுமே பணியாளராக இருந்ததாகக் கூறப்படும் ஒரு பெண்ணிடம் இருந்து 13 ஆண்டுகளுக்குப் பின்னர் இதுபோன்ற குற்றச்சாட்டைப் பற்றி அவர் கேள்விப்பட்டது இதுவே முதல்முறை என்றும் அதில் கூறியுள்ளார்.
ஜோனாசனின் வழக்கறிஞர் பிபிசிக்கு அளித்த பேட்டியில், "வின் டீசல் மற்றும் அவரது பாலியல் வன்கொடுமையை அனுமதித்தவர்கள், மூடி மறைத்தவர்களின் மோசமான செயல்களுக்கு நிச்சயமாகப் பொறுப்பேற்றே ஆகவேண்டும்," என்று தனது வாடிக்கையாளர் குற்றம் சாட்டுவதாகத் தெரிவித்தார்.
"இந்தக் குற்றச்சாட்டை முன்னெடுத்து வருவதற்கான அவரது தைரியமான முடிவு நீடித்த மாற்றத்தை உருவாக்க உதவுகிறது என்பதுடன் இதுபோல் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் அதிகாரம் அளிக்கிறது," என்று வழக்கறிஞர் கிளாரி-லிஸ் குட்லே கூறினார்.
ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் படத்தைத் தவிர, வின் டீசல் கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி, எக்ஸ்எக்ஸ்எக்ஸ்(XXX), ரிட்டிக் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் அனைவராலும் பிரபலமாக அறியப்படுகிறார்.
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் தொடரின் தயாரிப்பாளராகவும், ஹாலிவுட்டில் அதிக வசூல் செய்த நடிகர்களில் ஒருவராகவும் வின் டீசல் என அழைக்கப்படும் மார்க் சின்க்ளேர் உள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)