சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: ஆளுநர் குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு காவல்துறை மறுப்பு

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதை அடுத்து, தேசிய குழந்தைகள் நல ஆணையம் இதுகுறித்துத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், சிறுமியர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியது, சிறுமியர்கள் அதனால் தற்கொலை முயற்சியை மேற்கொண்டது போன்ற குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு காவல்துறை மறுத்துள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் தமிழக அரசைப் பல்வேறு விவகாரங்களில் கடுமையாக விமர்சித்திருந்தார். அதில் சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் குறித்த குற்றச்சாட்டும் ஒன்று.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டு என்ன?

அந்தப் பேட்டியில், “சமூக நலத்துறையின் அதிகாரிகள், பொது தீட்சிதர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு நடவடிக்கை எடுத்ததார்கள். அங்கே தீட்சிதர்கள் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று புகார் கூறினார்கள்.

ஆனால், அங்கே அத்தகைய திருமணங்கள் நடக்கவில்லை. அது உண்மையில்லை. பெற்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், 6ஆம், 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ‘இருவிரல் பரிசோதனை’ என்னும் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டது.

இந்தக் கொடுமைகளால் அந்தச் சிறுமிகளில் சிலர் தற்கொலைக்கு முயன்றனர். இது குறித்துக் கேள்வியெழுப்பி முதல்வருக்கு நான் விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன்,” என்று ஆளுநர் கூறியிருந்தார்.

குழந்தைகள் நல ஆணையம் வழக்குப் பதிவு

இந்நிலையில், அந்தப் பேட்டியை அடிப்படையாகக் கொண்டு சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படும் விவகாரத்தில் தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து விசாரித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மைத்தன்மை இல்லை என்று மறுப்பு தெரிவித்து காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியதாகச் சொல்வது பொய்"

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பழிவாங்கும் நோக்கத்துடன் சமூக நலத்துறை அதிகாரிகள் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது குழந்தைத் திருமண குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதாகவும் அதன் அடிப்படையில் உறவினர்களைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் 6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவிகளை வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மருத்துவமனையில் இருவிரல் பரிசோதனை செய்ததாகவும் இதனால் சிறுமியர் சிலர் தற்கொலை முயற்சியை மேற்கொண்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், “குழந்தைத் திருமணம் நடந்ததாகப் புகார்கள் வந்த நிலையில் அதன் உண்மைத்தன்மையைக் கண்டறிந்த பின்னர், அதற்கான ஆதாரங்களைத் திரட்டிய பிறகு சிதம்பர டவுன் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் குழந்தைத் திருமண சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டன. அதன்படி, அந்தக் குற்றத்தில் தொடர்புடைய 8 ஆண்கள், 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி இரண்டு சிறுமிகள் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.

அந்தச் சிறுமியர் தற்கொலை செய்ய முயன்றனர் என்பது பொய்யான தகவல். அதுபோன்ற நிகழ்வு நடந்ததாகத் தகவல் இல்லை,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, “நான்கு குழந்தைத் திருமணங்கள் நடந்தது உண்மை என்பதற்கும் ஆதாரங்கள் இருந்தன என்பதால் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிறுமிகளிடம் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டது என்பதும் இதனால் சிறுமியர் சிலர் தற்கொலை செய்ய முயன்றனர் என்பதும் முழுக்க, முழுக்க பொய்யான குற்றச்சாட்டு,” என்று காவல்துறை தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குழந்தை திருமண பிரச்னை

ஐ.நாவின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் 2020ஆம் ஆண்டு வெளியிட்ட குழந்தைத் திருமண ஒழிப்பில் உலக நாடுகளின் நிலை குறித்த அறிக்கை, "இந்தியா குழந்தைத் திருமணம் மூலம் திருமணமான 22 கோடியே 30 லட்சம் பேரைக் கொண்ட நாடு. உலகளவில் அதிக குழந்தை மணப்பெண்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது," என்று கூறுகிறது.

18 வயதுக்குக் கீழே உள்ளவருக்கு திருமணம் செய்து வைப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்றாலும், இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 15 லட்சம் சிறுமிகளுக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தியாவில் இப்போது 15-19 வயதுக்குட்பட்ட பதின்பருவ சிறுமிகளில் 16 சதவீதம் பேருக்கு திருமணமாகியுள்ளது. இதுதொடர்பாகக் கிடைத்த ஆதாரங்கள், சிறுமியின் ஒப்புதல் இன்றியே குடும்பத்தினரால் இந்தத் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுவதாகக் கூறுகின்றன என்று ஐ.நா குழந்தைகள் நல அமைப்பு கூறுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதில் இந்தியா கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த பத்தாண்டுகளில் நாடு முழுவதும் இளம் வயதில் திருமணம் செய்து வைக்கப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை 47 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.

உலகளவில் கடந்த பத்தாண்டுகளில் சிறு வயதில் திருமண உறவுக்குள் தள்ளப்படும் பெண்களின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், இந்த முன்னேற்றம் 2030ஆம் ஆண்டு முடிவதற்குள் பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள உள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

கோவிட் பேரிடர் காரணமாக, உலகளவில் கோடிக்கணக்கான பெண் குழந்தைகள், வளரிளம் பருவ சிறுமிகள் பள்ளிப் படிப்பை இழந்துள்ளனர். அதில் 11 கோடி பேர் குழந்தைத் திருமண அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறார்கள் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: