இந்தியா - வங்கதேசம்: நிதிஷ் குமார் ரெட்டியின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் டி20 தொடரை வென்ற இந்திய அணி

IND vs BAN 2nd T20I

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க. போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங்கின் அற்புதமான பேட்டிங் டெல்லியில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற உதவியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது. 222 ரன்கள் எனும் இமாலய இலக்கைத் துரத்திய வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்து 86 ரன்களில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையுடன், தொடரை வென்றது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்த அனைத்து டி20 தொடர்களையும் இந்திய அணி வென்று வருகிறது. அந்த வகையில் உள்நாட்டில் இந்திய அணி வெல்லும் 16வது டி20 தொடர் இது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இளம் கூட்டணி

இந்திய அணி ஒரு கட்டத்தில் 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங் கூட்டணி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் சென்றனர். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா(32), ரியான் பராக்(15) அருமையான கேமியோ ஆடி பெரிய ஸ்கோருக்கு இட்டுச் சென்றனர்.

ஆட்டநாயகன் நிதிஷ் குமார் ரெட்டி

நிதிஷ் குமார் ரெட்டி அறிமுகமாகி 2வது போட்டியிலேயே இந்திய அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டு முத்தாய்ப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆட்டத்தில் நிதிஷ் குமார் தனது முதலாவது டி20 அரைசதத்தைப் பதிவு செய்து, 34 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

நிதிஷ் குமார் 217 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். அவரது கணக்கில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அற்புதமான ஆட்டத்தையும், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நிதிஷ்குமார் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய டி20 அணிக்கு நீண்டகாலத்துக்குப்பின் அற்புதமான ஆல்ரவுண்டராக நிதிஷ் குமார் ரெட்டி கிடைத்துள்ளார்.

இதுபோன்ற ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர் என நீண்ட பட்டியல் இந்திய அணிக்கு இருப்பது மிகப்பெரிய பலம்.

வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் பேசியபோது, “மூன்று விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் என்ற நிலையை நான் விரும்பினேன். அப்போதுதான் நடுவரிசை பேட்டர்கள் எவ்வாறு பேட் செய்வார்கள், அணியை தூக்கி நிறுத்துவார்கள் என்பதைப் பார்க்க முடியும்," என்று கூறினார்.

7 பந்துவீச்சாளர்களுக்கும் விக்கெட்

IND vs BAN 2nd T20I

பட மூலாதாரம், Getty Images

டெல்லி மைதானம் அளவில் சிறியது, பேட்டர்களுக்கு சொர்க்கபுரி, இந்த மைதானத்திலும் தங்களால் சிறப்பாகப் பந்துவீச முடியும் என்பதையும் இந்திய பந்துவீச்சாளர்கள் வெளிப்படுத்தினர். கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக வந்தபின் அணியில் பந்துவீசும் திறமையுள்ள பேட்டர்கள் அனைவரும் பந்துவீச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு ஏற்றாற்போல் எப்போதுமில்லாத வகையில் நேற்று 7 பந்துவீச்சாளர்களை இந்திய அணி பயன்படுத்தியது. ஏழு பந்துவீச்சாளர்களும் ஏமாற்றமின்றி விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதில் நிதிஷ்குமார் ரெட்டி, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் ஷர்மா, அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், மயங்க் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்திய அணியை எந்த நிலையிலும் தூக்கி நிறுத்தக்கூடிய இளம் பேட்டர்கள், ஆல்ரவுண்டர்கள் அதிகமான அணி, பந்துவீச்சு தேர்வுக்குப் பஞ்சமில்லாத வீரர்கள் என வேறு கட்டத்துக்கு இந்திய டி20 அணி முன்னேற்றப்படுகிறது. இந்திய அணியின் இந்த உருமாற்றம், நிச்சயம் உலக அணிகளுக்கு எதிர்காலத்தில் பெரிய சவாலாக மாறக்கூடும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

வங்கதேச அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் 12 ஓவர்கள் வீசி 102 ரன்களையும், சுழற்பந்துவீச்சாளர்கள் 8 ஓவர்கள் வீசி 116 ரன்களையும் வாரி வழங்கினர். ஆனால், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் 9 ஓவர்கள் வீசி 49 ரன்களை மட்டுமே வழங்கி, 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் எந்த ஆடுகளத்திலும் பந்துவீச முடியும் என்பதை இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் நிரூபித்து வருகிறார்கள்.

டாப் ஆர்டர் தடுமாற்றம்

IND vs BAN 2nd T20I

பட மூலாதாரம், Getty Images

டாஸ் வென்ற வங்கதேச அணி இரவுநேரப் பனிப்பொழிவை பயன்பபடுத்தும் நோக்கில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதற்கு ஏற்றாற்போல் இந்திய டாப் ஆர்டர் பேட்டர்கள் சஞ்சு சாம்ஸன்(10) தஸ்கின் அகமது பந்துவீச்சிலும், ஹசன் சஹிப் பந்துவீச்சில் அபிஷேக் ஷர்மா(15), முஸ்தபிசுர் ரஹ்மான் வேகத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவ்(8) என பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்து தடுமாறியது.

IND vs BAN 2nd T20I

பட மூலாதாரம், Getty Images

வாய்ப்புகளை தவறவிட்ட வங்கதேசம்

அதன் பிறகு 4வது விக்கெட்டுக்கு நிதிஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினர். அதிலும் நிதிஷ் குமார் ரெட்டியை ஆட்டமிழக்கச் செய்ய வங்கதேசத்துக்கு கிடைத்த இரு வாய்ப்புகளையும் அந்த அணி வீரர்கள் கோட்டைவிட்டனர்.

நிதிஷ் குமார் 6 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், தன்ஜிம் வீசிய ஓவரில் லிட்டன் தாஸ் கைக்கு ஒரு கேட்ச் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தவறவிட்டார். பிறகு நிதிஷ் குமார் 19 ரன்களில் இருந்தபோது, கால்காப்பில் வாங்கியபோது, நடுவர் அதை நோ-பால் என அறிவித்தார். அது நோபாலாக இல்லாமல் இருந்திருந்தால் நிதிஷ் குமார் ஆட்டமிழந்திருப்பார்.

மெகமதுல்லா வீசிய 9வது ஓவரில் நிதிஷ் குமார் ஒரு சிக்ஸர், பவுண்டரி என 15 ரன்களும், ரிஷாத் ஹூசைன் வீசிய 10வது ஓவரில் ரிங்கு சிங் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரும், நிதிஷ் குமார் 2 சிக்ஸர்களும் விளாசி, அணியின் ஸ்கோரை 100 ரன்களுக்கு உயர்த்தினர். ரிஷாத் ஓவரில் மட்டும் 24 ரன்களை இந்திய பேட்டர்கள் சேர்த்தனர்.

முதல் டி20 அரைசதம்

IND vs BAN 2nd T20I

பட மூலாதாரம், Getty Images

அதிரடியாக பேட் செய்த நிதிஷ் குமார் ரெட்டி 27 பந்துகளில் தனது முதலாவது டி20 அரைசதத்தை நிறைவு செய்தார். அதேபோல மெஹதி ஹசன் வீசிய 13வது ஓவரில் நிதிஷ் குமார் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 26 ரன்கள் சேர்த்தார். அதன்பின் முஸ்தபிசுர் வீசிய 14வது ஓவரில் மெஹதி ஹசனிடம் கேட்ச் கொடுத்து நிதிஷ் குமார் 74 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, தனது பங்கிற்கு கேமியோ ஆடி வங்கதேசத்தின் பந்துவீச்சை சிதறடித்தார். ரிஷாத் ஹூசைன் 15வது ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரியும் விளாசினார். தன்சிம் ஹசன் வீசிய 16வது ஓவரில் ரிங்கு சிங் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி 26 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்து, தஸ்கின் பந்துவீச்சில் 53 ரன்களில் ரிங்கு சிங் ஆட்டமிழந்தார். கடைசியில் களமிறங்கிய ரியான் பராக்(15), ஹர்திக் பாண்டியா(32) இருவரும் கேமியோ ஆடி ஸ்கோரை 221 ரன்களுக்கு உயர்த்திச் சென்றனர்.

இதில் ரிஷாத் ஹூசைன் வீசிய கடைசி ஓவரில் மட்டும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் என 3 விக்கெட்டுகள மளமளவென இழந்தது சற்றுப் பின்னடைவாகும்.

போராடாத வங்கதேசம்

IND vs BAN 2nd T20I

பட மூலாதாரம், Getty Images

வங்கதேச அணி 222 ரன்கள் எனும் மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கியது. அர்ஷ்தீப் வீசிய 2வது ஓவரிலேயே வங்கதேசம் முதல் விக்கெட்டை இழந்தது. அதன்பின் ஓவருக்கு ஒரு விக்கெட் வீதம் பவர்ப்ளே முடிவுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் எனத் தடுமாறியது.

வருண் வீசிய ஓவரில் கேப்டன் ஷாண்டோ(11), வாஷிங்டன் சுந்தர் ஓவரில் லிட்டன் தாஸ்(14), அபிஷேக் ஷர்மா ஓவரில் ஹர்தாய்(2) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. வங்கதேச அணி 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் சேர்த்தது.

ரியான் பராக் வீசிய 11வது ஓவரில் மெஹதி ஹசன்(16) விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் வந்த கடைசி வரிசை பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக மெஹமதுல்லா (41) ரன்கள் சேர்த்து நிதிஷ்குமார் ரெட்டி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் வங்கதேசம் அணி 33 ரன்கள் மட்டுமே சேர்த்து 2 விக்கெட்டுகளை இழந்தது.

வங்கதேச அணி டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 2018ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 215 ரன்கள் சேர்த்தது. இந்த ஸ்கோரை இதுவரை அந்த அணியாலேயே கடக்க முடியவில்லை. ஏறக்குறைய 6 ஆண்டுகளாகப் பல்வேறு டி20 போட்டிகளில் வங்கதேசம் ஆடியிருந்தாலும், 215 ரன்கள்தான் அதன் அதிகபட்ச ஸ்கோர். இந்த ஆட்டத்திலும் அது தொடர்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)