ஔரங்கசீப்பும் கோஹினூரும்: பவன் கல்யாணின் படம் பேசும் அரசியல் என்ன?

பட மூலாதாரம், FB/Mega Surya Production
- எழுதியவர், ஜி.ஆர். மகரிஷி
- பதவி, பிபிசிக்காக
பவன் கல்யாண் நடித்துள்ள ஹரிஹர வீரமல்லு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பவன் ரசிகர்கள் மற்றும் ஜன சேனா கட்சித் தொண்டர்களின் நீண்ட நாள் காத்திருப்பு நிறைவேறியுள்ளது.
பல முறை தள்ளி வைக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இன்று ஒருவழியாக திரைக்கு வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கதை 16ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. ஒரு குடும்பத்திற்கு வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குழந்தை (சத்யராஜ்) கிடைக்கிறது. அந்தக் குழந்தை பலம் வாய்ந்த போர் வீரனாக வளர்கிறது.
ஒருபுறம் ஔரங்கசீப் மதமாற்றத்திற்கு மக்களைக் கட்டாயப்படுத்துகிறார். மதம் மாற மறுப்பவர்களைத் துன்புறுத்தி அவர்களுக்கு வரி விதிக்கிறார். மறுபுறம் பிரிட்டிஷார் மக்களிடம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்போதுதான் கதாநாயகன் அறிமுகம் ஆகிறார். மச்சிலிப்பட்டினத்தில் பிரிட்டிஷ் உயரதிகாரி ஒருவரிடம் இருந்து வைரத்தை திருடுவது போல அறிமுகக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஜமீந்தார் ஒருவர், குதுப்ஷாஹியிடம் இருந்து வைரத்தை திருடி வருமாறு கதாநாயகன் வீரமல்லுவுக்கு ஒரு வேலை கொடுக்கிறார். அவரது கட்டளையை நிறைவேற்றச் சென்ற இடத்தில் கதாநாயகி பஞ்சமி (நிதி அகர்வால்) மீது காதல் வயப்படுகிறார் வீரமல்லு.
சார்மினாரில் வைரத்தை திருடும்போது கையும் களவுமாகப் பிடிபடுகிறார். இதற்காக இவரை தண்டிக்காமல், குதுப்ஷாஹி இவருக்கு ஒரு வேலை கொடுக்கிறார். டெல்லியில் உள்ள கோஹினூர் வைரத்தை திருடுவதுதான் அந்த வேலை.
இதற்காகத் தனது நண்பர்களுடன் டெல்லி செல்லும் வீரமல்லு சந்திக்கும் சவால்கள் என்ன? அவர் எப்படி ஔரங்கசீப்பை சந்திக்கிறார்? கோஹினூர் வைரத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு?
இதுதான் படத்தின் மீதி கதை.

பட மூலாதாரம், FB/Mega Surya Production
இந்தத் திரைப்படம் முழுவதும் பவன் கல்யாணை சுற்றியே நடக்கிறது. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் யாருக்கும் பெரிதாக முக்கியத்துவம் தரப்படவில்லை. நடிகர் பாபி தியோல் ஔரங்கசீப் கதாபாத்திரத்தில் தோன்றி வில்லனாக தனது நடிப்பை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். அதுவும் முதல் பாதியில் மட்டுமே. 2வது பாதியில் அதுவும் நீர்த்துப் போய்விடுகிறது.
கதாநாயகி இருக்கிறார் என்பதால் நிச்சயம் காதல் பாடல்களும் உண்டு. ஆனால், அவர் படத்தில் இல்லையென்றாலும் கதையில் எந்த பாதிப்பும் இருந்திருக்காது.
திரைக்கதை ஆழமாக இல்லாமல் மேலோட்டமாகச் செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பல சண்டைகள் தொகுக்கப்பட்டு படமாக ஆக்கப்பட்டது போலத் தோற்றமளிக்கிறது.
வைரத்தை திருடும்போது 2 சண்டைக் காட்சிகள். ஹீரோ ஏழை மக்களைக் காப்பாற்றும்போது ஒரு சண்டைக் காட்சி, சனாதன தர்மத்தைக் காப்பதற்கான முயற்சியின்போது 2 சண்டைக் காட்சிகள் என சண்டைகளுக்கு படத்தில் பஞ்சமில்லை. இதுதவிர இரண்டாவது பாதியில் அதிரடியான சில சாகசக் காட்சிகளும் காத்திருக்கின்றன.
காதல், எமோஷன், சென்டிமென்ட் என எதையும் இந்த திரைக்கதை தொடாதபோதும், சில காட்சி அமைப்புகளின் மூலம் ரசிகர்களை சில இடங்களில் புல்லரிக்கச் செய்கிறது.
மற்றொருபுறம் எந்த இடத்திலும் ஹீரோ சனாதன தர்மத்தை எதிர்க்கவில்லை. பாஜகவின் இந்துத்துவா கொள்கையைத்தான் பவன் கல்யாண் தொடர்ந்து முன்மொழிகிறார் என்பது இந்தப் படத்தின் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
முதல் பாதியில் விறுவிறுப்பாகச் செல்லும் திரைப்படம், இரண்டாவது பாதியில் மெதுவாக நகர்கிறது. இது ரசிகர்களை கடைசி வரை இருக்கையில் அமரவைக்கத் தவறிவிட்டது.
"கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?" என்ற பாகுபலி ஃபார்முலா இந்தப் படத்திற்கு கைகொடுக்கவில்லை. சொல்லப்போனால் படத்தின் 2ஆம் பாகம் வருமா என்பதே சந்தேகம்தான்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்ட்ரி கொடுத்திருந்தாலும் பவன் கல்யாணின் எனர்ஜியில் எந்தக் குறையும் இல்லை. 5 ஆண்டுகள் படப்பிடிப்பு நடந்தபோதிலும் அவரது தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை.
சுனில், நாசர், சுப்பராஜு என நிறைய பேர் திரையில் தோன்றினாலும் அவர்களின் எந்தக் காட்சிகளும் மனதில் நிற்கவில்லை. ரகுபாபுவின் நகைச்சுவை முயற்சிகளும் தோற்றுப்போயின.
'சூப்பர் பவர் கொண்ட நாயகன்'

பட மூலாதாரம், FB/Mega Surya Production
படத்தில் ஹீரோவுக்கு அதீத சக்திகள் உள்ளன. இயற்கைப் பேரிடரை முன்கூட்டியே கணிக்கும் வல்லமை கொண்டவர். விலங்குகளுடன் உரையாடும் ஆற்றல் கொண்டவர். தர்மத்தை காப்பதற்காகத் தனது உயிரைக்கூட அர்ப்பணிக்கத் தயங்காதவர். இவரின் இந்தப் பண்புகளால் வில்லன் உள்பட அனைவரும் இவரிடம் இலகுவாகப் பழகுகின்றனர்.
இந்தப் படத்தில் கிராபிக்ஸ் முக்கியப் பங்காற்றியுள்ளது. ஆனால், சில இடங்களில் கிராஃபிக்ஸ் காட்சிகள் நன்றாகப் பொருந்தவில்லை. இதைப் பார்க்கையில் விட்டலாச்சாரியா படத்தில் என்.டி.ஆர், ஸ்டூடியோவில் இருந்தபடியே குதிரை ஓட்டுவதுதான் நினைவுக்கு வருகிறது.
கீரவாணியின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அருமை. ஒளிப்பதிவு, தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு என அனைத்தும் இதுவொரு வரலாற்று காலகட்ட படம் என்பதை நியாப்படுத்துகிறது. ஞானசேகர் மற்றும் மனோஷ் பரமஹம்சாவின் பணிகள் அற்புதம்.
தோட்டா தரணியின் கைவண்ணம் நிறைய இடங்களில் பிரமாண்டமாக மிளிர்கிறது. பிரவீனின் படத்தொகுப்பு கச்சிதம். புர்ரா சாய் மாதவின் வசனங்கள் சிறப்பு.

படத்தின் நிறை, குறைகள்
நிறைகள்:
- பவன் கல்யாணின் காட்சிகள்
- சண்டை காட்சிகள்
- முதல் பாதி
குறைகள்:
- மெதுவாக செல்லும் இரண்டாம் பாதி
- எதிர்பாராத முடிவு
- மோசமான கிராஃபிக்ஸ் காட்சிகள்
இந்தப் படத்தை க்ரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கியிருந்தாலும், பவன் கல்யாணே இயக்கியது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
இது வரலாற்றுக் காலகட்ட கதைதான் என்றாலும் இதன் நோக்கம் அரசியலாகவே இருக்கிறது.
(இந்த விமர்சனத்தில் இருக்கும் அனைத்துமே முற்றிலுமாக எழுத்தாளரின் சொந்த கருத்துகள் மட்டுமே.)
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












