குஜராத்: சூரத் தொகுதியில் பாஜக போட்டியின்றி வெற்றி - காங்கிரஸ் வேட்பாளர், சுயேச்சைகள் என்ன ஆயினர்?

பட மூலாதாரம், RUPESH SONWANE
குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர்.
இதனால், பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக சூரத் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான டாக்டர் சவுரப் பார்தி அறிவித்து அவருக்கு சான்றிதழ் வழங்கினார்.
பாஜகவும் தனது வேட்பாளர் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கியுள்ளது.
பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் "போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு" சமூக ஊடகங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பட மூலாதாரம், RUPESH SONWANE
குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 7ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற போது, சூரத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த தொகுதியில் புதிய திருப்பம் ஏற்பட்டது.
காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர்.
இதனால், அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகும் நிலை உருவானது.
சூரத்தில் உள்ள பிபிசியின் ரூபேஷ் சோன்வானே அளித்த தகவலின்படி, நிலேஷ் கும்பானியின் வேட்புமனு ரத்து செய்யப்பட்ட பிறகு போட்டியில் 9 வேட்பாளர்கள் இருந்துள்ளனர். ஆனால், அடுத்தடுத்து ஒவ்வொரு சுயேச்சை வேட்பாளர்களாக தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றுள்ளனர்.
ஆனாலும், பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் பியாரேலால் பாரதி தன்னுடைய வேட்புமனுவை திரும்ப பெறாமல் தான் இருந்தார். இறுதியில் அவரும் திரும்ப பெற்றுவிட்டார்.

பட மூலாதாரம், BBC/ SHEETAL PATEL
காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு ஏன்?
குஜராத்தின் சூரத் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவுக்கு முன்பே, எதிர்க்கட்சிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகள் அளித்த தகவல்படி, காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவில் அவரை முன்மொழிந்திருந்த 5 பேரில், மூன்று பேர் அது தங்களது கையெழுத்து இல்லை என்று கூறியதால், நிலேஷின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டுள்ளது. காங்கிரசின் டம்மி வேட்பாளர் சுரேஷ் பத்சலாவின் மனுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள பாஜக வேட்பாளர் முகேஷ் தலாலின் தேர்தல் முகவர் தினேஷ் ஜோதானி, கும்பானியை முன்மொழிந்தவர்கள் தகுதியவற்றவர்கள் என்று பாஜக வாதத்தை முன்வைக்க, ஞாயிற்றுக்கிழமை இருதரப்பு வாதங்களையும் கேட்டு முடிவை அறிவித்தார் தேர்தல் அதிகாரி.
நிலேஷ் கும்பானியை முன்மொழிந்த ஐவரில் மூவர் தாங்கள் கையெழுத்திடவில்லை என்று கூறிய நிலையில், இதுகுறித்து விளக்கமளிக்க நிலேஷ் கும்பானிக்கு ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி வரை அவகாசம் அளித்தார் மாவட்ட ஆட்சியர்.
ரமேஷ்பாய் பல்வந்த்பாய் போலரா, ஜகதீஷ் நாக்ஜிபாய் சவாலியா மற்றும் துர்வின் திருபாய் தமேலியா ஆகியோர் நிலேஷ் கும்பானியின் ஆதரவாளர்களாக கையெழுத்திட்டவர்கள். இதில் ஜகதீஷ் சவாலியா நிலேஷ் கும்பானியின் மருமகன், துர்வின் தமேலியா அவரது சகோதரர் மகன், ரமேஷ் போலாரா அவரது தொழில் கூட்டாளி ஆவார்.

பட மூலாதாரம், BHARGAV PARIKH/BBC
இவருக்கு இவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்த போதும் ஏன் அவர்கள் இப்படி செய்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரம் வெளியே வந்ததில் இருந்து அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
எனவே, தங்களது வேட்பாளரின் ஆதரவாளர்கள் கடத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் இத்தாலியா, நிலேஷ்பாயின் ஆதரவாளர்கள் கடத்தப்பட்டு ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் தொலைபேசிகள் வேலை செய்யவில்லை. யாரோ ஒருவர் அவர்களுக்கு மிரட்டல் மற்றும் அழுத்தம் கொடுத்து வாக்குமூலம் வாங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார்" என்று கூறினார்.
இதற்கிடையில் தனது ஆதரவாளர்கள் கடத்தப்பட்டுள்ளதாக கும்பானி உம்ரா காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இந்த கடத்தல் விவகாரம் தொடர்பாக பாஜக தலைவரும், சூரத் முன்னாள் மேயருமான ஜெகதீஷ் படேல் கூறுகையில், “தேர்தல் வந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜக மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதே காங்கிரஸ் தலைவர்களின் வேலை. அனைவரின் முன்னிலையிலும் தான் படிவங்கள் நிரப்பப்பட்டுள்ளன. திடீரென்று காங்கிரஸ் வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு என்ன ஆனது? இது அவர்களது படிவம், அவரது ஆதரவாளர்கள். இதில் பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












