சென்னை பரந்தூர் போராட்ட குழுவினருடன் விஜய் இன்று சந்திப்பு - இன்றைய முக்கிய செய்திகள்

டாப்5 செய்திகள்

பட மூலாதாரம், TVK

இன்றைய (20/01/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம்.

பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினரை தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று சந்திக்கப் போவதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில் போலீஸ் துறையிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது.

இன்று (திங்கட்கிழமை) போராட்டகுழுவினரையும், கிராம மக்களையும் சந்திக்கலாம் என தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் திடல் பகுதியில் சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் போலீசார் பரந்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டத்தை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர்.

இடத்தை ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நடந்து வந்த நிலையில், பரந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று பகல் 12 மணியில் இருந்து 1 மணி வரை பரந்தூர் போராட்ட குழுவினரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்திப்பார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

முன்னதாக விஜய் போராட்ட குழுவினரை சந்திக்க பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்திருந்தது. அதன்படி அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் மக்களை விஜய் சந்திக்க வேண்டும். அதிக கூட்டம் கூடாமல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்களே வரவேண்டும். அனுமதிக்கப்பட்ட வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

டாப்5 செய்திகள்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை மே மாதம் திறக்க திட்டம்

சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்படும் ரயில் நிலையத்தை வரும் மே மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகளை மேற்கோள் காட்டி தமிழ் இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் இடம்பெற உள்ளன. இந்த நிலையத்தில் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களை நிறுத்த முடியும். தற்போது, ரயில் நிலையம் அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு மே மாதத்தில் பணிகள் முடிந்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் மாவட்டங்களிலிருந்து நீண்ட தூர பேருந்துகளில் கிளாம்பாக்கத்தை அடையும் பயணிகள் எளிதாக நகருக்குள் செல்ல மின்சார ரயில்களைப் பயன்படுத்த இந்த ரயில் நிலையம் உதவியாக இருக்கும்.

டாப்5 செய்திகள்

பட மூலாதாரம், NTK

நாதகவுக்கு சுயமாக வரையப்பட்ட விவசாயி சின்னம் - இன்று அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கான சின்னத்தை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க இருப்பதாக தினமணி நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

நாம் தமிழர் கட்சி சார்பில் சுயமாக வரைந்து அனுப்பப்பட்ட விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று அந்த செய்தி கூறுகிறது. அண்மையில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற நாதக கேட்ட விவசாயி, புலி ஆகிய இரு சின்னங்களையும் வெவ்வேறு காரணங்களால் தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. இதையடுத்து, பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு சின்னத்தையோ, அல்லது கட்சி விரும்பும் சின்னத்தை 3 மாதிரிகளாக வரைந்தோ அனுப்பலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

இந்த நிலையில், நாதக சார்பில் விவசாயி சின்னம் 3 மாதிரிகளாக வரையப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒரு சின்னம் தேர்வு செய்யப்பட்டு நாம் தமிழர் கட்சிக்கு இன்று ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துவிட்ட நிலையில் திமுக, நாதக மற்றும் 55 வேட்பாளர்கள் தற்போதைய நிலையில் களத்தில் உள்ளனர்.

டாப்5 செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச இல்லம் கிடையாது - இலங்கை ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச இல்லங்களை வழங்க போவதில்லை, எனக்கும் வீடு வேண்டாம் என்று இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருப்பதாக வீரகேசரி இணையதள செய்தி கூறுகிறது.

களுத்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில், "எந்த அமைச்சருக்கும் அரச உத்தியோகபூர்வ இல்லங்களையும் வழங்கவில்லை. அனைத்து அரச இல்லங்களும் பொதுநிர்வாக அமைச்சுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தவிர்த்து ஏனைய அரச இல்லங்கள் அனைத்தையும் என்னசெய்வது என்பது தொடர்பில் யோசனை முன்வைக்கும் பொறுப்பை விசேட குழுவுக்கு வழங்கியுள்ளேன். இந்த மாற்றம் நாட்டுக்கு அவசியம். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச இல்லங்களை வழங்க போவதில்லை என்று குறிப்பிட்டோம். எனக்கு வீடு வேண்டாம் என்பதற்கான கடிதத்தை பதவியில் இருக்கும் போதே வழங்குவேன்." என்றார்.

டாப்5 செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

செக் மோசடி வழக்கில் ஷகிப் அல் ஹசனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமான ஷகிப் அல் ஹசனை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி கூறுகிறது.

ஷகிப் அல் ஹசன் மீது கடந்த டிசம்பர் 15-ம் தேதி 'செக்' மோசடி வழக்கில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த வழக்கில் அவர் ஜனவரி 19-ம் தேதிக்குள் ஆஜராகும் படி டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் ஷகிப் அல் ஹசன் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வங்காளதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)