You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹசரங்கா சுழலில் வீழ்ந்தது சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு முதல் வெற்றி
குவாஹாட்டியில் நடைபெற்ற ஐபிஎல் 11வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சீசனின் முதல் வெற்றியை சுவைத்தது.
டாஸில் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.
183 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி பேட்டிங் செய்த நிலையில் ரச்சின் ரவீந்திரா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஒன் டவுனில் இறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்து ராகுல் திரிபாதி ரன் கணக்கை ஏற்றினார்.
எனினும் 7வது ஓவரில் ஹசரங்கா வீசிய பந்தில் டீப் மிட் விக்கெட் திசையில் ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்து ராகுல் திரிபாதி ஆட்டமிழந்தார்.
2வது விக்கெட்டுக்கு இம்பாக்ட் பிளேயராக ஷிவம் துபே களமிறங்கினார். சுழற் பந்து வீச்சை சிதறடிப்பதில் திறமை மிக்கவராக அறியப்படும் ஷிவம் துபே களத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என சிஎஸ்கே எதிர்பார்த்தது. ஆனால் அவர் 10 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசரங்கா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இவருக்குப் பின் களமிறங்கிய விஜய் ஷங்கரும் ஹசரங்கா வைத்த பொறியில் சிக்கினார். 12 வது ஓவரின் 4வது பந்தை சிக்சருக்கு விளாசிய அவர் 5வது பந்தில் கிளீன் பவுல்டாகி விக்கெட்டை இழந்தார்.
ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபுறத்தில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அரை சதம் கடந்தார். இரண்டாவது ஓவரின் நடுவே தேஷ்பாண்டே வீசிய பந்து, கையில் தாக்கிய போதும், களத்திலேயே சிகிச்சை பெற்று ஆட்டத்தை தொடர்ந்தார் ருதுராஜ்.
சிக்சர் மற்றும் அவுட் என்ற அதே வியூகத்தில் 16வது ஓவரில் ருதுராஜின் விக்கெட்டையும் வீழ்த்தினார் ஹசரங்கா. சென்னை அணியின் 4 முக்கிய விக்கெட்டுகளை ஹசரங்கா வீழ்த்தினார்.
இதனையடுத்து அனுபவ வீரர் தோனி களமிறங்கினார். கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 20வது ஓவரின் முதல் பந்தை வைடாக வீசினார் சந்தீப் ஷர்மா. மீண்டும் வீசப்பட்ட பந்தில் தோனி சிக்சர் அடிக்க முயன்ற நிலையில் பவுண்டரி லைனில் நின்ற ஹெட்மயர் கேட்ச் பிடித்ததால் சென்னை ரசிகர்களின் கனவு கலைந்தது. 11 பந்துகளை சந்தித்த தோனி 16 ரன்கள் எடுத்திருந்தார்.
இதன் பின்னர் ஜேமி ஓவர்டன் களமிறங்கிய போதும் சென்னை அணி இலக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. 22 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஜடேஜா களத்தில் இருந்தார். இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
அதிரடியாகத் தொடங்கிய ராஜஸ்தான் அணி
முன்னதாக ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கின் போது முதல் ஓவரை வீசிய சென்னை அணியின் கலீல் அகமது, ராஜஸ்தானின் நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை வீழ்த்தினார்.
முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்தாலும், முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய நிதிஷ் ராணா அதிரடியாக ஆடத் தொடங்கினார். 21 பந்துகளில் அரைசதத்தை அவர் கடந்தார். அவருக்கு துணையாக மறுமுனையில் சஞ்சு சாம்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
7வது ஓவரை வீச சென்னை அணியின் சுழல் நட்சத்திரமான நூர் அகமது அழைக்கப்பட்டார். இதற்கு கை மேல் பலன் கிடைத்தது. ஃபுல்லிஷ் ஆக வந்த பந்தை சஞ்சு சாம்சன் அடிக்க லாங் ஆஃப் திசையில் சென்ற போதும் போதுமான வேகம் கிடைக்கவில்லை. இதனால் எல்லையில் இருந்த ரச்சின் ரவீந்திரா பந்தை கேட்ச் செய்தார்.
வைடு வீசிய அஸ்வின், துல்லியமாக தாக்கிய தோனி
10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 99 ரன்களை எட்டியது. அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணாவுடன் இணைந்த கேப்டன் ரியான் பராக், பதிரானா வீசிய 11வது ஓவரில் சிக்சர் விளாசினார். 100 ரன்களைக் கடந்து ஆடிய ராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னை அணி சுழல், வேகம் என பந்துவீச்சை மாற்றி தாக்குதல் தொடுத்தது.
அஸ்வின் வீசிய 12 வது ஓவரின் 4வது பந்தில் மீண்டும் தோனியின் ஸ்டம்பிங் மேஜிக் நடந்தது. அஸ்வின் வைடாக வீசிய பந்தை நிதிஷ் ராணா இறங்கி அடிக்க முயல தோனி ஸ்டம்பிங் செய்தார். இதனால் 36 பந்துகளில் 81 ரன்கள் குவித்திருந்த நிதிஷ் ராணாவின் அதிரடி ஆட்டம் முடிவுக்கு வந்தது. தோனி மற்றும் அஸ்வினின் அனுபவம் இளம் வீரரின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
விஜய் ஷங்கரின் அற்புத கேட்ச்
அதிரடி ஆட்டக்காரர் ஜூரல் அகமது வின் விக்கெட்டை நூர் அகமதுவும், ஹசரங்காவின் விக்கெட்டை ஜடேஜாவும் கைப்பற்றினர். ஹசரங்கா அடித்த பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் இருந்த விஜய் ஷங்கர் அற்புதமாக பாய்ந்து பிடித்து அவுட்டாக்கினார்.
மறுபுறம் நிலைத்து ஆடிய கேப்டன் ரியான் பராக் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பதிரானா பந்து வீச்சில் கிளீன் பவுல்டானார். யார்க்கராக வந்த பந்து நேரடியாக ஸ்டம்ப்பை பதம் பார்த்தது.
கலீல் அகமது வீசிய 19வது ஓவரில் சிம்ரன் ஹெட்மயர் சிக்சர் ஒன்றை பறக்கவிட்டார். இதே ஓவரில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் விக்கெட்டும் வீழ்ந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்தது. இதன் மூலம் சென்னை அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் 10 ஓவர்களில் ஆட்டம் முழுவதுமாக ராஜஸ்தான் அணியின் கட்டுப்பாட்டில் இருந்தது. இருப்பினும் இரண்டாவது பாதியில் படிப்படியாக சென்னை இதற்கு முட்டுக்கட்டை போட்டது.
இறுதி ஓவர்களில் விக்கெட் வீழ்ச்சி ராஜஸ்தான் அணியின் வேகத்திற்கு தடை போட்டது.
சென்னை அணியில் மாற்றம்
சென்னை அணியில் சாம்கரனுக்கு பதிலாக ஜேமி ஓவர்டன் மற்றும் தீபக் ஹூடாவுக்கு பதிலாக விஜய் ஷங்கர் களமிறக்கப்பட்டனர்.
சென்னை அணியின் வீரர்கள்
ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் ஷங்கர், ஜேமி ஓவர்டன், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பதிரானா.
ராஜஸ்தான் அணியின் வீரர்கள்
ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம் போல யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்குகின்றனர். நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்) , துருவ் ஜூரல், ஷிம்ரன் ஹெட்மெயர், ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் தேஷ்பாண்டே.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு