You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மனித உடலின் 'நிலை மின்சாரத்தால்' பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்படுமா? - அமைச்சர் கூறியது உண்மையா?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
"காற்று, தண்ணீர் ஆகியவற்றில் இருப்பதுபோல மனித உடலிலும் மின்சாரம் உள்ளது. பட்டாசு தயாரிக்கப் பயன்படும் ரசாயனங்களில் மனித உடலில் உள்ள மின்சாரம் கலக்கும்போது சில நேரங்களில் தீ விபத்து ஏற்படுகிறது." - சட்டப்பேரவையில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறிய வார்த்தைகள் இவை.
ஏப்ரல் 22ஆம் தேதி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையின்போது, ம.தி.மு.க எம்.எல்.ஏ ரகுராமன் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறாக சி.வி.கணேசன் பதில் அளித்திருந்தார்.
மனித உடலில் உள்ள மின்சாரத்தால் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்படுமா? அமைச்சர் கூறுவதில் உண்மை உள்ளதா?
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இவற்றில் சாத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளில் மட்டும் அதிகளவில் பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.
இந்தத் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் எட்டு லட்சம் பேர் ஈடுபட்டுள்ளதாக, ஏப்ரல் 22ஆம் தேதி சட்டப் பேரவையில் குறிப்பிட்ட சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ரகுராமன், "விபத்துக் காலங்களில் ஆலை உரிமையாளர்களைக் கைது செய்வதால் இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது" என்றார்.
"மாறாக, ஆலையின் மேலாளர்களைக் கைது செய்தால் அந்தப் பணத்தை தொழிலாளர்கள் பெறுவதற்கு ஏதுவாக இருக்கும்" எனக் கூறிய அவர், "வாழ்வாதாரத்துக்காக உயிரைப் பணயம் வைத்து தொழிலாளர்கள் பணிக்கு வருவதை மனதில் வைத்து அரசு ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.
அமைச்சர் சி.வி.கணேசன் பேசியது என்ன?
இதற்குப் பதில் அளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், விபத்துகளைத் தடுப்பதற்காகவே பட்டாசு ஆலைகளில் அதிகமான ஆய்வுகள் நடத்தப்படுவதாகக் கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய கோடைக்காலங்களில் பட்டாசு ஆலைகளில் அதிக விபத்துகள் ஏற்படுவதாகக் கூறிய சி.வி.கணேசன், "ஆலை உரிமையாளர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் அரசு பார்த்துக் கொள்ளும்" என்றார்.
அவர் தொடர்ந்து பேசியபோது, "காற்று, தண்ணீர் ஆகியவற்றில் உள்ளது போல மனித உடலிலும் மின்சாரம் உள்ளது. பட்டாசு தயாரிக்கும் ரசாயனங்களில் அவை கலக்கும்போது தீ விபத்து ஏற்படுகிறது" எனக் குறிப்பிட்டார்.
'பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்கு மனித உடலில் உருவாகும் மின்சாரமே காரணம்' என அமைச்சர் பேசியிருப்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியது.
'அமைச்சர் பேசிய பிறகே விசாரித்தேன்' - எம்.எல்.ஏ ரகுராமன்
"பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்கு மனித உடலில் உள்ள மின்சாரத்தை ஒரு காரணமாகக் கூறுகிறார் அமைச்சர். அமைச்சர் பேசிய பிறகே இதைப் பற்றி விசாரித்தேன்" எனக் கூறுகிறார், சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் மருத்துவருமான ரகுராமன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பட்டாசு ஆலைக்கு தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லும்போது தாமிரத் தட்டு ஒன்றைச் சுவற்றில் பதித்திருப்பார்கள். அதில் கையை வைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது" என்கிறார்.
மனித உடலில் உள்ள எலக்ட்ரான்களை சமப்படுத்துவதற்காக இவ்வாறு செய்வதாகவும் மருத்துவர் ரகுராமன் தெரிவித்தார். ஆனால், இதுகுறித்து தனக்கு முழுமையாகத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பட்டாசு ஆலைகளில் என்ன நடக்கிறது?
ஆனால், அமைச்சர் கூறிய தகவலில் ஓரளவு உண்மை உள்ளதாகக் கூறுகிறார், சிவகாசியில் பட்டாசு ஆலையை நடத்தி வரும் மணிகண்டன். இவர் தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் (TAFMA) சங்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், " ஒவ்வொரு பட்டாசு ஆலைகளின் வெளிப்புறத்தில் தாமிரத் தகடு ஒன்றைச் சுவற்றில் பொறுத்தி வைத்திருப்போம். அந்தத் தகட்டில் இருந்து பூமிக்குச் செல்லும்படியாக கம்பி ஒன்றை இணைத்திருப்போம்" எனக் கூறினார்.
அதில் கை வைக்கும்போது மனித உடலில் உள்ள மின்தன்மை குறைந்துவிடும் என, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறுவதாக அவர் குறிப்பிட்டார். பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு விதிகளில் இது முக்கிய அம்சமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கோடைக்காலங்களில் பட்டாசு ஆலைகளில் அதிக விபத்து நடப்பதற்கான காரணத்தையும் அவர் கூறினார். அப்போது, " பட்டாசு தயாரிக்கும்போது தனித்தனியாக இருக்கும் ரசாயனங்களை ஒன்றாகக் கலக்கின்றனர். வெப்ப காலங்களில் ரசாயனங்களில் வேதிமாற்றம் ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுகிறது" என்றார்.
ஆகவே, காலை 10 மணிக்குள் ரசாயனங்களைக் கலக்கும் வேலைகளை நிறைவு செய்துவிட வேண்டும் எனவும் நேரம் செல்லச் செல்ல வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து தீ விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
'வெடிமருந்து விதிகளில் முக்கிய நிபந்தனை'
பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பான விதிமுறைகளில் தாமிரத் தகட்டைச் சுவற்றில் பொருத்துவது நிபந்தனையாக உள்ளதாகக் கூறுகிறார், தொழிலாளர் நலத்துறையின் விருதுநகர் மாவட்ட அதிகாரி ஒருவர்.
மத்திய அரசின் வெடிமருந்து விதி 2008இல் (Petroleum & Explosives Safety Organization (PESO) இது குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "எந்தவொரு மின் கடத்தா பொருள்களிலும் (insulating material) மின்சாரம் உருவாகும். தரையில் நடந்தாலும் நிலை மின்சாரம் (Static electricity) உருவாகும். ரசாயனங்கள் நிறைந்துள்ள பகுதியில் கண்ணுக்குத் தெரியாத சிறிய தீப்பொறி பட்டாலே மருந்துகள் வெடித்துச் சிதறிவிடும்" எனக் கூறினார்.
தொலைக்காட்சிப் பெட்டி அருகே கையைக் கொண்டு போகும்போது கையில் உள்ள முடிகள் சிலிர்ப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுவதையே நிலை மின்சாரம் (Static electricity) எனக் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், "பட்டாசு ஆலைக்குள் தொழிலாளர்கள் நுழைவதற்கு முன்பு, அவர்களின் உடலில் உள்ள நிலை மின்சாரம், காற்றின் வேகம், ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவை முக்கியமானவை. தோலின் எதிர்ப்புத் தன்மை (skin resistance) என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்" என்றார்.
பட்டாசு ஆலைகளில் மருந்துகளைக் கலக்கும்போது ஒருவரின் உடலில் உள்ள நிலை மின்சாரத்தின் அளவைக் குறைப்பதற்குத் தாமிரத் தட்டில் கை வைப்பது வழக்கமான நடைமுறையாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
"மனித உடலால் தீ விபத்து ஏற்படுவதற்கான ஆதாரம் உள்ளதா?" எனக் கேட்டபோது, "தீ விபத்தின்போது பெரும்பாலும் உயிரிழப்புகள் ஏற்படுவதால் அதற்கான ஆதாரத்தைக் காட்டுவது கடினம். ஆனால், இதை ஒரு நிபந்தனையாக மத்திய அரசு வைத்துள்ளது" எனக் கூறினார்.
அமைச்சர் கூறியதில் உண்மை உள்ளதா?
"மனித உடலால் தீ விபத்து ஏற்படுமா?" என அசாமில் உள்ள தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி பார்த்திபனிடம் பிபிசி தமிழ் பேசியது.
"வெடிமருந்துகளில் சோடியம், பொட்டாசியம், ஸ்ட்ரான்டியம் போன்ற உலோகங்கள் உள்ளன. ஒவ்வொரு உலோகத்துக்கும் எலக்ட்ரானை உமிழும் தன்மை இருக்கும். அப்போதுதான் அந்த உலோகம் நிலைத்தன்மையை அடையும். வெடிமருந்துகளில் நைட்ரேட், சோடியம், பொட்டாசியம் ஆகியவற்றைச் சேர்ப்பார்கள். இவை அனைத்தும் வெடிக்கும் தன்மை கொண்ட உலோகங்கள் (high explosive metals)" எனக் கூறினார் பார்த்திபன்.
மேற்கொண்டு விளக்கிய அவர், " பட்டாசு ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், வெடிமருந்துகளைக் கைகளால் உருட்டி வேலை பார்ப்பார்கள். மனித உடலில் எலக்ட்ரான் நகர்வுத் தன்மை இருக்கும். உடலில் உமிழப்படும் எலக்ட்ரானுக்கும் உலோகத்தில் உள்ள எலக்ட்ரானுக்கும் இடையில் எதிர்வினை ஏற்படும்" எனவும் அவர் தெரிவித்தார்.
"அதாவது இரண்டுக்கும் இடையில் மோதல் (Collision) உருவாகும். தொழிலாளர்களின் கைகள் வறண்டு (Dry) இருக்கும் நிலையில், மருந்துகளைக் கையாளும்போது வெடிப்பதற்கான சூழல் ஏற்படும்.
அப்போது கண்ணுக்குத் தெரியாத தீப்பொறி போன்று ஏற்படும். அதுவே விபத்து ஏற்படுவதற்கு ஒரு காரணமாக உள்ளது. அந்த வகையில் சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் கூறியது சரியான கருத்து" எனவும் பார்த்திபன் குறிப்பிட்டார்.
அதோடு குளிர்பிரதேசங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள கதவைத் திறக்கும்போதோ, குளிர்ப்பதனப் பெட்டிகளில் பால் போன்றவற்றை எடுக்கும்போதோ ஷாக் அடிப்பது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால், ஷாக் அடிக்காது. இதற்கு மனித உடலில் இருக்கும் எலக்ட்ரான்களே காரணம் என்று விவரித்தார் பார்த்திபன்.
"மனித உடலில் அதிகப்படியான அமினோ அமிலங்களும் புரோட்டான்களும் உள்ளன. இதனால் அயனிகள் (ions) உருவாகும். அதை எலக்ட்ராட் (electrod) என்பார்கள். பாசிட்டிவ், நெகட்டிவ் ஆகியவை இருப்பதால் எலக்ட்ரான்களை உமிழ்கிறது" எனவும் அவர் தெரிவித்தார்.
தாமிரத் தகடு விபத்தைத் தடுக்குமா?
தாமிரத் தகட்டில் கை வைப்பதன் மூலம் பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தடுக்க முடியும் எனக் கூறுவதில் உண்மை உள்ளதா?
இதுகுறித்து பார்த்திபனிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "தாமிரத்தில் எலக்ட்ரான் உமிழ்வது நிகழும். ஆனால், அதைக் கம்பி வழியாக பூமியில் இணைக்கும்போது அவை கீழே சென்றுவிடும். தாமிரத் தகட்டில் கை வைக்கும்போது மனித உடலில் உள்ள எலக்ட்ரான்களில் 90 சதவீதம் அளவு பூமிக்குள் கொண்டு போய்விடும்" என்று விளக்கினார்.
அதை குவென்சிங் (Quenching) என அழைப்பதாகக் கூறும் பார்த்திபன், "இது மனித உடலுக்கு நீர்ச்சத்துக் குறைபாடு போன்ற சிக்கலையும் கொடுக்கும். அதனால்தான் மருத்துவமனைகளில் சோடியம் குளோரைடு கரைசலைக் கொடுக்கின்றனர் " எனவும் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு