பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இடம்பெற்ற 'வீரா ராஜ வீர' பாடலின் காப்புரிமை தொடர்பான வழக்கில் ரூ.2 கோடியை செலுத்துமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வசிஃபுதின் தாகர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான வழக்கில் என்ன நடந்தது? காப்புரிமை தொடர்பான சர்ச்சைகள் தொடர்வது ஏன்?

டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வசிஃபுதின் தாகர் (Faiyaz Wasifuddin Dagar) மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

'சிவ ஸ்துதி' - 'வீரா ராஜ வீர' சர்ச்சை

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் 'வீரா ராஜ வீர' என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.

இந்தப் பாடல் தனது தந்தை நசீர் ஃபயாசுதீன் தாகர் மற்றும் மாமா ஜாஹிருதீன் தாகர் ஆகியோர் சேர்ந்து வெளியிட்ட 'சிவ ஸ்துதி' என்ற பாடலில் இருந்து நகல் எடுக்கப்பட்டுள்ளதாக, தனது மனுவில் வசிஃபுதின் கூறியிருந்தார்.

தனது தந்தை மற்றும் மாமா ஆகியோர் 1989 மற்றும் 1994 ஆம் ஆண்டு இறந்ததைத் தொடர்ந்து சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தீர்வு மூலம் தனக்கு காப்புரிமை (Copy right) வழங்கப்பட்டதாக மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

'வீரா ராஜ வீர' பாடல் ஒலிப்பதிவில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் (credit) கொடுக்கப்படவில்லை எனவும் வசிஃபுதின் தெரிவித்திருந்தார்.

ஆகவே, 'பொன்னியின் செல்வன் 2' படத்தைத் தயாரித்த மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், லைகா தயாரிப்பு நிறுவனம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

ஏ .ஆர்.ரஹ்மான் சொன்னது என்ன?

ஆனால், வழக்கு விசாரணையின்போது மேற்கண்ட குற்றச்சாட்டுகளை ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு மறுத்துள்ளது.

'சிவ ஸ்துதி' என்பது துருபத் வகையைச் சேர்ந்த பாரம்பரிய இசை எனவும் 'வீரா ராஜா வீர' பாடல், இந்துஸ்தானி மரபுகளைத் தாண்டி மேற்கத்திய இசையின் அடிப்படைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் வாதிடப்பட்டது.

'பொதுத் தளத்தில் உள்ள கிளாசிக்கல் படைப்புகள் மீது எந்த பிரத்யேக உரிமையையும் யாரும் கொண்டாட முடியாது' எனவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 25) டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம் சிங் தீர்ப்பளித்தார்.

117 பக்க தீர்ப்பு - நீதிபதி கூறியது என்ன?

117 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், 'வீரா ராஜா வீர' பாடல், சில மாற்றங்களுடன் 'சிவ ஸ்துதி' பாடலின் இசையை அடிப்படையாக கொண்டும் ஈர்க்கப்பட்டும் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

'இந்துஸ்தானி இசை மரபுகளை அடிப்படையாகக் கொண்ட இசையமைப்புகள், அதன் அசல் (Original) தன்மையை வெளிப்படுத்தினால் காப்புரிமை சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட வேண்டும்' என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

'ராகம், தாளம் போன்ற அடிப்படை விஷயங்கள் பொதுத்தளத்தில் இருந்தாலும் பாரம்பரிய கட்டமைப்புகளைப் பயன்படுத்தி தனித்துவமான இசைப் படைப்புகளை உருவாக்கும் இசையமைப்பாளர்கள், காப்புரிமைச் சட்டம் 1957ன் கீழ் உரிமை உடையவர்கள்' என நீதிபதி பிரதீபா எம் சிங் கூறியுள்ளார்.

"அனைத்து பாரம்பரிய இசை அமைப்புகளும் ச,ரி,க,ம,ப,த,நி என ஏழு ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டவை" எனக் கூறியுள்ள நீதிபதி, "அனைத்து ஆங்கில படைப்புகளும் A to Z எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டவை" எனக் கூறியுள்ளார்.

"இலக்கணத்துக்கு (grammar) எழுத்தாளர்கள் யாரும் உரிமை கொண்டாடுவதில்லை. ஆனால், தங்களின் படைப்புகளுக்கு உரிமை கொண்டாடுகின்றனர். அதுபோலவே ராகமும் பரிந்துரைக்கப்பட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை" என நீதிபதி குறிப்பிட்டார்.

"இரண்டும் ஒரே மாதிரியாக உள்ளன"

தவிர, 'வீரா ராஜா வீர' பாடலின் மையக் கரு என்பது வெறுமனே ஈர்க்கப்பட்டதல்ல எனக் கூறியுள்ள நீதிபதி, "அந்தப் பாடலைக் கேட்பவரின் பார்வையில் சிவ ஸ்துதியின் ஸ்வரங்கள் மற்றும் செவியில் தாக்கம் ஆகியவை உண்மையில் ஒரே மாதிரியாக உள்ளன" எனக் கூறியுள்ளார்.

அந்தவகையில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பு மனுதாரரின் உரிமைகளை மீறுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து ஓடிடி மற்றும் ஆன்லைன் தளங்களில் இந்தப் பாடலுக்குள்ள கிரடிட் ஸ்லைடை (Credit slide) மாற்ற வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதாவது, 'மறைந்த உஸ்தாத் நசீர், ஃபயாசுதீன் தாகர் மற்றும் ஜாஹிருதீன் தாகர் ஆகியோரின் சிவ ஸ்துதியை அடிப்படையாக கொண்ட இசையமைப்பு என மாற்ற வேண்டும்' என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கில் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி ரூபாயை டெபாசிட் செலுத்துமாறும் இந்த தொகை வழக்கின் விசாரணை முடிவுகளுக்கு உட்பட்டது எனவும் மனுதாரருக்கு செலவாக 2 லட்ச ரூபாயை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

"தன்னுடைய பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு இளையராஜா வழக்குத் தொடர்ந்த பிறகே இதுபோன்ற விஷயங்கள் வெளியில் வருகின்றன" எனக் கூறுகிறார், சினிமா விமர்சகர் ஆர்.எஸ்.அந்தணன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "காப்புரிமை தொடர்பான விவகாரங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் கெடுபிடி காட்டுவதற்கு வாய்ப்பில்லை. அவர், பணத்தைக் கொடுப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்" என்கிறார்.

காப்புரிமை சர்ச்சைகள்

கடந்த 10 ஆண்டுகளாகவே தனது பாடல்களைப் பயன்படுத்துவோர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை, இசையமைப்பாளர் இளையராஜா எடுத்து வருகிறார்.

2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலும், இதை மேற்கோள் காட்டியுள்ளார்.

'2014 ஆம் ஆண்டு முதல் எனது பாடல்களைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் பிறப்பித்த தடை செல்லும். அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என இளையராஜா அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதியன்று நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் தான் இசையமைத்த மூன்று பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக, படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார்.

'குட் பேட் அக்லி' படத்தில் 'ஒத்த ரூபாயும் தாரேன்', 'என் ஜோடி மஞ்சள் குருவி' மற்றும் 'இளமை இதோ இதோ' ஆகிய பாடல்களைக் குறிப்பிட்டு ரூ.5 கோடி ரூபாய் இழப்பீட்டை இளையராஜா கேட்டுள்ளார்.

"இசை தொடர்பான உரிமைகளை அறிந்தவர்கள், நீதிமன்றங்களை நாடி தங்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை எடுத்து வருவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்" எனக் கூறுகிறார் வழக்கறிஞர் சரவணன்.

இவர் இளையராஜா தொடர்ந்துள்ள காப்புரிமை தொடர்பான வழக்குகளை நடத்தி வருகிறார்.

காப்புரிமை கோருவது ஏன்?

தொடர்ந்து பேசிய சரவணன், "தான் இசையமைத்த பாடலுக்கு இளையராஜா எவ்வாறு உரிமை கோர முடியும் எனப் பலரும் கேட்டனர். தற்போது அறிவுசார் சொத்துரிமை என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டனர்" என்கிறார்.

"ஒரு திரைப்படத்தை தயாரிக்கும்போது இசை, பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றுக்கும் சேர்த்து பணம் கொடுக்கப்படுகிறது. அந்தப் படம் வெளிவந்த பிறகு முழு படத்தையும் விற்கலாம்.

அப்போது பாடல்களுடன் சேர்த்து படத்தை வெளியிடலாம். ஆனால், பாடல்களை மட்டும் தனியாக பயன்படுத்தும்போது அதன் உரிமை இசையமைப்பாளருக்கு மட்டுமே உள்ளது. இது அவரின் இசைப் பணிக்கான உரிமை (Musical rights). இது அறிவுசார் சொத்துரிமையில் வரும்" என்கிறார் சரவணன்.

இசையமைப்பாளர்களுக்கு அறிவுசார் சொத்துரிமை என்று ஒன்று உள்ளது என்பதை இளையராஜா நிரூபித்துள்ளதாகவும் காப்புரிமை சட்டத்தை மீறினால் இழப்பீடு கோர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

"உரிய முறையில் சொல்லவில்லை"

"பொருளாதார பின்னணி உள்ளவர்களால் காப்புரிமை தொடர்பான வழக்குகளை நடத்தி தீர்வை பெற முடியும். ஆனால், எங்களைப் போன்றவர்களுக்கு அது சாத்தியமில்லை" எனக் கூறுகிறார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கர்ணன்.

2021 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'கர்ணன்' திரைப்படத்தில், 'கண்டா வரச் சொல்லுங்க' என்ற பாடம் இடம்பெற்றிருந்தது.

'இது தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் பாடல்' என்ற சர்ச்சை கிளம்பியது. படத்தின் டைட்டில் கார்டில் சுந்தர்ராஜனின் பெயர் இடம்பெற்றிருந்தது. 'ஆனால், தங்களுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லை' என சுந்தர்ராஜனின் வாரிசுகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

"பிறரின் பாடல்களை இசையமைப்பாளர்கள் கையாளும் போது, அதற்குரிய அங்கீகாரத்தைக் கொடுக்க வேண்டும். அதைத் தங்களின் பாடல் போல பயன்படுத்துவது வேதனையைத் தருகிறது" என பிபிசி தமிழிடம் கூறினார், கர்ணன்.

'கண்டா வரச் சொல்லுங்க' பாடல் தொடர்பான சர்ச்சை, ஊடகங்களில் வெளியான பிறகே தங்களுக்குத் தெரியும் எனவும் கர்ணன் குறிப்பிட்டார்.

பாடல்களால் புகழ் கிடைத்தது, ஆனால்?

தொடர்ந்து பேசிய அவர், "பல திரைப்படங்களில் என் அப்பாவின் பாடல்களை பயன்படுத்தியுள்ளனர். நாங்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" எனக் கூறுகிறார்.

"பிரபல கேசட் நிறுவனம் ஒன்றுக்கு என் தந்தை பாடல்களை எழுதி பாடிக் கொடுத்திருந்தார். அதன் உரிமையாளரிடம் நாங்கள் கேட்டபோது, 'பாடியதற்கு பணம் கொடுத்துவிட்டேன். அது என்னுடைய பாட்டு' எனக் கூறினார்.

ஆனால், அவர்களுக்கு பாடிக் கொடுப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே (1990) மதுரை வானொலி நிலையம், தூத்துக்குடி வானொலி நிலையம் ஆகியவற்றில் இதே பாடல்களை எனது அப்பா பாடியுள்ளார். பிறகு எப்படி அவர்கள் உரிமை கோர முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

திருவிழா காலங்களிலும் கச்சேரிகளிலும் பாடுவது தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் தொழிலாக இருந்துள்ளது. "பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மூன்று மாதங்களில் திருவிழாக்கள் அதிகம் நடக்கும். அப்போது தான் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்" என்கிறார் கர்ணன்.

தான் தற்போது தேநீர் கடை ஒன்றில் வேலை பார்த்து வருவதாகக் கூறிய கர்ணன், "பாடல்களால் என் அப்பாவுக்குப் புகழ் கிடைத்தது. ஆனால், குடும்பத்தை வறுமையிலேயே வைத்திருந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் இறந்துவிட்டார்" என்கிறார்.

தனது தந்தையின் பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு வழக்கை நடத்துவதற்கான பொருளாதார பின்புலம் தங்களுக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு