விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் இதயம் வேகமாக முதுமை அடையுமா?

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 270 நாட்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார். தற்போது அவர் பூமிக்கு எப்போது திரும்பி வரக்கூடும் என்று நாசா அறிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவர்களை பூமிக்கு அழைத்து வரும் பணியை ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் ஈலோன் மஸ்கிடம் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாசாவின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட பத்து மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும், மார்ச் 19 அல்லது 20ஆம் தேதியில் பூமிக்குத் திரும்பலாம்.

'எட்டு நாள் பயணமாகச் சென்றவர், 9 மாதங்களைக் கடந்தும் விண்வெளியில் சிக்கியுள்ளார்' என செய்திகளில் இந்த விஷயம் பரபரப்பாகப் பேசப்பட்டாலும், ஒரு விண்வெளி வீரர், திட்டமிடப்பட்ட நாட்களைக் கடந்தும் விண்வெளியில் தங்கியிருப்பது இது முதல்முறையல்ல.

அமெரிக்காவின் விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ 2022-ஆம் ஆண்டு, செப்டம்பரில் 6 மாத பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றார். ஆனால் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அவரால் திட்டமிட்டபடி பூமிக்கு திரும்ப முடியவில்லை.

இறுதியாக, 371 நாட்களை விண்வெளியில் கழித்த பிறகுதான் அவரால் பூமிக்கு திரும்ப முடிந்தது. ஆனால், நீண்ட காலம் விண்வெளியில் தங்கியதால் ரூபியோவின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களால், கேப்ஸ்யூலில் இருந்து அவர் மீட்புக்குழுவினரால் தூக்கி வரப்பட்டார்.

காரணம், விண்வெளியில் நிலவும் பூஜ்ஜிய ஈர்ப்புச் சூழல் மனித உடலில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். ஒரு எளிய உதாரணம், விண்வெளியில் இருக்கும் ஒவ்வொரு மாதமும் விண்வெளி வீரர்கள் 1-2% எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர், ஆறு மாத காலத்தில் சுமார் 10% வரை எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர்.

அதுவே பூமியில் ஆண்கள் மற்றும் பெண்கள் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 0.5%-1% வரை மட்டுமே எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர்.

எனவே சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பிய பிறகு, அவரது எலும்பின் அடர்த்தி இயல்பு நிலைக்குத் திரும்ப சுமார் நான்கு ஆண்டுகள் வரை ஆகலாம்.

ஆனால், சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஒரு ஆய்வு முடிவு, விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருப்பவர்களின் உடல்நலம் குறித்த ஒரு புதிய கேள்வியை எழுப்பியுள்ளது.

விண்வெளியில் இதயம் வேகமாக முதுமையடையுமா?

அமெரிக்காவின் புகழ் பெற்ற ஜான்ஸ் ஹாகின்ஸ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட அந்த ஆய்வில், மனித ஸ்டெம் செல்களிலிருந்து வடிவமைக்கப்பட்ட இதய திசுக்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, ஈர்ப்பு விசை குறைவான சூழலில் அவை எவ்வாறு இயங்குகின்றன என 30 நாட்கள் கண்காணிக்கப்பட்டன.

அதேபோன்ற மற்றொரு தொகுதி இதய திசுக்கள், பூமியில் வைத்து கண்காணிக்கப்பட்டன. 30 நாட்களாக விண்வெளி நிலையத்திலிருந்து கிடைத்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

30 நாட்கள் பூமியில் இருந்த இதய திசுக்களுடன் ஒப்பிடும்போது, விண்வெளியில் இருந்த திசுக்கள், பூஜ்ஜிய ஈர்ப்பு விசையால் அதிகம் பலவீனமடைந்ததும், அவற்றில் சீரற்ற துடிப்புகள் இருந்ததும் கண்டறியப்பட்டது. இந்த மாற்றங்கள், விண்வெளியில் மனித இதயம் சீக்கிரமாக முதுமையடைவதைப் பிரதிபலித்தன.

இதயம் முதுமையடைவது (Cardiac aging) என்பது இதயத்தின் செயல்பாடு படிப்படியாக குறைவது. இது மனிதர்களின் வயது கூடும் போது, இயற்கையாக நிகழும் ஒரு செயல்முறைதான். ஆனால் விண்வெளியில் இருக்கும் போது, இன்னும் வேகமாக நிகழ்கிறது என்பதையே ஆய்வு தெரிவித்தது.

இந்த ஆய்வு குறித்து அறிக்கை, 'தி புரோசிடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ்' எனும் ஆய்விதழிலும் வெளியிடப்பட்டது.

பொதுவாக, மனித இதயத் திசுக்களின் துடிப்புகளுக்கு இடையே சுமார் ஒரு வினாடி இடைவெளி இருக்கும். ஆனால், விண்வெளி நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திசுக்களில் இந்த இடைவெளி 5 மடங்கு அதிகமாக இருந்தது. இருப்பினும் அவை பூமிக்கு கொண்டுவரப்பட்டு ஆய்வு செய்யபட்டபோது, அவற்றின் செயல்பாடு இயல்புநிலைக்கு திரும்பியது கண்டறியப்பட்டது.

இதயத் திசுக்களில் ஏற்படும் இத்தகைய சீரற்ற இதயத் துடிப்புகள் அரித்மியா (Arrhythmia) என்று அழைக்கப்படும்.

30 நாட்கள் இருந்ததற்கே, இத்தகைய மாற்றங்கள் எனும் போது, மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் மனிதர்கள் விண்வெளியில் தங்கியிருக்கும் போது, அவர்களின் இதயம் எந்தளவு பாதிக்கப்படும் அல்லது பூமிக்கு திரும்பிய பிறகு, அதன் தாக்கங்கள் தணிந்து இயல்பு நிலைக்கு திரும்ப எத்தனை காலம் தேவைப்படும் என்ற கேள்விக்கான பதில், இந்த ஆய்வின் அடுத்தடுத்த கட்டங்களில் தெரியவரும்.

உலகளவில் மனித இறப்புகளுக்கு இதய நோய்கள் (Cardiovascular diseases) முக்கிய காரணமாக இருப்பதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. அதிலும் 2021ஆம் ஆண்டில் நிகழ்ந்த 2.5 கோடி இதய நோய்கள் தொடர்பான இறப்புகளில், சுமார் 80% இறப்புகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்ந்தது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

மனிதர்கள் பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்து வரும் பூமியில், இதயம் தொடர்பான நோய்கள் என்பது சாதாரணமான ஒன்றாக இருக்கும் போது, மனித இனத்தின் எதிர்கால லட்சியமான 'விண்வெளியில் பயணித்து வேறு கிரகங்களில் குடிபுகுவது' சாத்தியமானால், பூஜ்ஜிய ஈர்ப்பு விசை சூழல் இதயத்தில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?

இந்த கேள்விக்கு விடை காண விஞ்ஞானிகள் பல ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சமீபத்திய ஆய்வு ஜான்ஸ் ஹாகின்ஸ் பல்கலைக்கழகத்தின், உயிரி மருத்துவ பொறியியல் துறையால் மேற்கொள்ளப்பட்டது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம், விண்வெளியில் இருந்த இதயத் திசுக்களில் காணப்பட்ட 'அரித்மியா' எனும் சீரற்ற துடிப்புகள்.

மனித இதயத்தின் மீதான ஈர்ப்பு விசையின் தாக்கம்

'அரித்மியா' குறித்து தெரிந்துகொள்ளும் முன், பூஜ்ஜிய ஈர்ப்பு விசைச் சூழல் மனித இதயத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுகுறித்து ஐஐடி மெட்ராஸின் உயிரி மருத்துவ பொறியியல் துறை உதவிப் பேராசிரியர், டாக்டர் சுவாதி சுதாகர் விளக்கினார்.

"விண்வெளியில் நிலவும் பூஜ்ஜிய ஈர்ப்புவிசைச் சூழல் காரணமாக, உடலின் திரவங்கள் மேல்நோக்கி நகரும். இதனால் 'மைய ரத்தத்தின்' (Central blood- உடலின் முக்கிய மைய நாளங்களில், குறிப்பாக இதயத்திற்கு பாயும் ரத்தம்) அளவு அதிகரிக்கும். இதயம் குறைவான ரத்தத்தை பம்ப் செய்யும், அதனால் இதயத்தின் செயல்பாடு குறையும்." என்கிறார்.

இது ரத்த அழுத்தத்திலும், இதயத் துடிப்பிலும், மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவிலும் தாக்கம் செலுத்துகிறது என்றும், பூமிக்கு திரும்பிய பிறகு விண்வெளி வீரர்களுக்கு தலை சுற்றல், மயக்கம் மற்றும் அதிக சீரற்ற இதயத் துடிப்புகள் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதற்கும் இது காரணமாக உள்ளது என்று டாக்டர் சுவாதி சுதாகர் கூறுகிறார்.

பூமிக்கு திரும்பிய பிறகு, விண்வெளி வீரர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு முறையான மருத்துவ கண்காணிப்பு தேவைப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

சீரற்ற இதயத் துடிப்புகளின் விளைவுகள்

ஜான்ஸ் ஹாகின்ஸ் பல்கலைக் கழக ஆய்வின்படியும், டாக்டர் சுவாதி சுதாகரின் விளக்கத்தின்படியும், விண்வெளியில் நீண்ட காலம் தங்கியிருக்கும் போது, சீரற்ற இதயத் துடிப்பு தொடர்ந்து இருக்கும்.

அப்படியிருக்க நீண்டகாலத்திற்கு இந்த அரித்மியா இருந்தால், மனித உடலில் அவை என்ன தாக்கங்களை ஏற்படுத்தும்?

அமெரிக்காவின், 137 வருடங்கள் பழமைவாய்ந்த தேசிய சுகாதார நிறுவனம் (National Institutes of Health- என்ஐஹச்) அரித்மியா குறித்து பின்வருமாறு விளக்குகிறது,

"உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகளின் போது உங்கள் இதயத் துடிப்பு வேகமாக அதிகரிப்பதும், ஓய்வெடுக்கும் போது அல்லது தூங்கும்போது மெதுவாக இருப்பதும் இயல்பானது. உங்கள் இதயம் அவ்வப்போது துடிப்பதைத் தவிர்ப்பது போல உணர்வதும் இயல்பானது. ஆனால் அடிக்கடி சீரற்ற துடிப்புகள் இருந்தால், உங்கள் இதயம் உங்கள் உடலுக்குப் போதுமான ரத்தத்தை செலுத்தவில்லை என்று அர்த்தம். உங்களுக்கு மயக்கம், தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்".

சீரற்ற இதயத் துடிப்பு என்பது குணப்படுத்தக் கூடியதே, ஆனால் சிகிச்சைகள் எடுக்கவில்லை என்றால் இதயம், மூளை மற்றும் உடல் உறுப்புகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என என்ஐஹச் எச்சரிக்கிறது.

"நீண்ட நாள் அரித்மியா, பக்கவாதம், இதயம் செயலிழப்பது அல்லது கார்டியாக் அரெஸ்ட் (Cardiac arrest) போன்ற உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்," என்றும் என்ஐஹச் கூறுகிறது.

பாதிப்புகளைத் தவிர்ப்பது எப்படி?

விண்வெளியில் தங்கியிருக்கும் போது இத்தகைய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான வழிகள் என்ன?

"நீண்ட விண்வெளிப் பயணங்களில் விண்வெளி வீரர்கள் தங்களது இதயங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும் மற்றும் உடலின் திரவங்கள் தொடர்பான மாற்றங்களைத் தடுக்க செயற்கை ஈர்ப்பு விசை சூழலைப் பயன்படுத்தலாம்." என்கிறார் ஐஐடி மெட்ராஸின் உயிரி மருத்துவப் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர், டாக்டர் சுவாதி சுதாகர்.

தசை வலிமை மற்றும் எலும்பின் அடர்த்தி குறைவதைத் தடுக்க, சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்கள் ஒருநாளைக்கு 2 முதல் 2.5 மணிநேரம் உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

இதற்காக பிரத்யேக உடற்பயிற்சிக் கருவிகளும், டிரெட் மில் மற்றும் சக்கரங்கள் இல்லாத ஒரு உடற்பயிற்சி சைக்கிளும் உள்ளது என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் இணையதளம் கூறுகிறது.

"ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், ரத்த அழுத்தம் மற்றும் உடல் திரவங்களின் சமநிலையை நிர்வகிக்கும் மருந்துகள் நிச்சயம் உதவும். இவை விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால், மனித உடல் விண்வெளி சூழலுக்கு பழக, இன்னும் பல ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்" என்கிறார் டாக்டர் சுவாதி சுதாகர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)