You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கரூர் கூட்ட நெரிசல்: அரசியல், சட்டம், கட்சி ரீதியாக விஜய்க்கு காத்திருக்கும் சவால்கள்
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
கரூரில் விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக மாவட்ட, மாநில நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுவிட்டார்.
கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளனர்.
"வரும் நாட்களில் பொதுமக்களை எதிர்கொள்வதில் பல்வேறு சிக்கல்களை விஜய் எதிர்கொள்ள நேரிடும்" என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தவெகவின் அரசியல் பயணத்தில் கரூர் சம்பவத்தின் தாக்கம் எப்படி இருக்கும்?
கரூர் வழக்கு - என்ன நடந்தது?
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய், கடந்த சனிக்கிழயமைன்று (செப்டெம்பர் 27) பரப்புரை மேற்கொண்டார். அவர் பேசி முடித்துவிட்டுக் கிளம்பியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் சிக்கிக் கொண்டனர். அதில், 41 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மதியழகன் நேற்றைய தினம் (29/09/2025) கைது செய்யப்பட்டுவிட்டார்.
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது. பரப்புரைக் கூட்டம் நடைபெற்ற இடம், கரூர் அரசு மருத்துவமனை, உயிரிழந்தவர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குச் சென்று அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தியுள்ளார்.
அதேநேரத்தில், சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.
விஜய் பிரசாரம் செய்ய தடை விதிக்குமாறு கோரியும் ஒரு தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது.
'தவெக அணுகுமுறையில் தோல்வி' - ஷ்யாம்
தவெகவின் அணுகுமுறையில் தோல்வி ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர் "துயர சம்பவத்துக்குப் பிறகு ஒரு கட்சி எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பது முக்கியம். ஆளும்கட்சி என்பதால் களத்துக்கு தி.மு.க வந்துவிட்டது. பா.ஜ.க, அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டன" என கூறுகிறார்.
"சசிகலாவும் கூட பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். ஆனால், மக்களை சந்திப்பது தொடர்பாக தவெக தலைமை மற்றும் நிர்வாகிகளிடம் எந்தப் பதிலும் இல்லை" எனவும் ஷ்யாம் குறிப்பிட்டார்.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு கீழ்மட்டத்தில் கட்டமைப்பு இல்லாததை பிரதான காரணமாக முன்வைக்கும் ஷ்யாம், "மருத்துவமனைக்கு கட்சித் தலைவர் வராவிட்டாலும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்திருக்க வேண்டும். அவர்கள் சென்று பார்க்காததன் மூலம் கட்சிக்கு கட்டமைப்பு இல்லை என்பது தெளிவாகிறது" என்கிறார்.
"கட்சியின் கட்டமைப்பு சரியாக இல்லாவிட்டால் தேர்தலின்போது வாக்குகளைப் பெறுவதில் சிக்கல் இருக்கும். இது தோல்வியில் முடியும். நேரில் ஆறுதல் கூறுவதற்குச் சென்றால் தங்களுக்கு ஏதேனும் நேரும் என்ற அச்சம் இருந்தால் அரசியலுக்கு வரவே கூடாது" எனவும் ஷ்யாம் தெரிவித்தார்.
"ஆனால், அடிப்படைக் கட்டமைப்பு என்பது கட்சிக்கான நீண்டகால பிரச்னை" எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், " உடனடியான பிரச்னை என்பது சட்டரீதியானது. தேர்தலுக்கு எட்டு மாதங்களே உள்ளன. அதற்குள் பிரச்னைகளை சரிசெய்ய முடியுமா என்பது கேள்விக்குறி" என்கிறார்.
அடுத்து வரக் கூடிய சிக்கல்கள் என்ன?
"வரும் நாட்களில் விஜய் பரப்புரையில் எந்த மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்?" என, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"வரும் நாட்களில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சில பரப்புரைகளை மேற்கொள்ள முடியாது. நீதிமன்றத்துக்கு தவெக சென்றுள்ளது. சி.பி.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தாலும் கட்டுப்பாடுகள் வரவே செய்யும்" எனக் கூறுகிறார்.
இதற்கு மாறான கருத்தை முன்வைக்கும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், கரூர் சம்பவத்தைப் பொறுத்தவரை விஜய் மீது தான் அனைவரின் கவனமும் திரும்பியிருப்பதாக கூறுகிறார். " ஆளும்கட்சியை பொருத்தவரை எத்தனை அனுமதிகளை வேண்டுமானாலும் தரலாம். களத்தில் அது தவெகவுக்கு எதிர்மறையாகவே முடியும்" என்கிறார்.
'கூட்டணி சேரும் கட்சிகளுக்கும் சிக்கல்'
"கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் காவல்துறைக்கு சில கடமைகள் இருப்பதைப் போன்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் சில கடமைகள் உள்ளன" எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "மதியம் 12 மணிக்கு ஐந்தாயிரம் பேர் வந்தனர் என்றால் ஏழு மணிக்கு பத்தாயிரம் பேர் வருவார்கள் என ஊகித்திருக்க வேண்டும்" என்கிறார்.
"2026 சட்டமன்றத் தேர்தலில் கரூரில் தவெகவை சேர்ந்த நிர்வாகிகள், விஜயின் படத்தைக் காட்டி வாக்கு கேட்க முடியாது" எனக் கூறும் ஷ்யாம், " அரசியல் ரீதியாக இதனை எதிர்கொள்வதற்கு அவர்களுக்குத் தெரியவில்லை என்றே தோன்றுகிறது" எனக் கூறுகிறார்.
"மக்களை எதிர்கொள்வதில் விஜய்க்கு சிக்கல் வரும். கரூர் சம்பவத்தை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. திரைக் கவர்ச்சியும் கூட்டத்தைக் கூட்டும் நபராகவும் இருப்பதாலேயே ஒருவரால் அரசியல் தலைவர் ஆக முடியாது." என்கிறார் ஷ்யாம்.
"2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு மட்டுமல்லாமல் அக்கட்சியுடன் கூட்டணி செல்லும் கட்சிகளுக்கும் இது பிரச்னையை ஏற்படுத்தும்" எனவும் அவர் தெரிவித்தார்.
'விஜய்க்கு காத்திருக்கும் 3 வகையான சவால்கள்'
கரூர் சம்பவத்தின் மூலம் சட்டம், அரசியல் மற்றும் கட்சி ரீதியாக மூன்று வகையான பிரச்னைகளை விஜய் எதிர்கொள்ளலாம் எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வழக்கில் முதல் குற்றவாளியாக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனையும் அடுத்து புஸ்ஸி ஆனந்த் மற்றும் இதர நிர்வாகிகளைச் சேர்த்துள்ளனர். வழக்கில் விஜயைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது சட்டரீதியான சவாலாக இருக்கும்" எனக் கூறுகிறார்.
"இரண்டாவதாக, அரசியல் ரீதியாக இந்த விவகாரத்தில் இருந்து தவெக எப்படி வெளிவரப் போகிறது என்பது முக்கியம். கடந்த கால பொதுக் கூட்டங்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய நிகழ்வுகள் கூட உள்ளன. ஆனால், இவ்வளவு பேர் இறந்துபோனதாக எந்த சம்பவங்களும் இல்லை" எனக் கூறுகிறார், ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.
தொடர்ந்து பேசிய அவர், "மூன்றாவதாக, தவெகவின் அரசியல் வியூகங்களில் சிக்கல் உள்ளது. இதைத் தலைமையின் பிரச்னையாக பார்க்கிறேன். சம்பவத்துக்குப் பிறகு விஜய் சென்னை சென்றுவிட்டார். அடுத்தநிலையில் உள்ளவர்கள் யாரும் செல்போனை எடுக்கவில்லை. ஒரு சம்பவத்துக்குப் பிறகு அனைவரும் ஓடிப் போய்விட்டதாக பார்க்க முடியும்" என்கிறார்.
சதி செய்துவிட்டதாக கூற முடியுமா?
கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய அ.தி.முக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தவெக பரப்புரைக்கு தமிழ்நாடு அரசு போதுமான ஏற்பாடுகளைச் செய்யவில்லை. அதுவே அசம்பாவிதம் நிகழ்வதற்குக் காரணம்" என செய்தியாளர்களிடம் பேசுகையில் குற்றம்சாட்டினார்.
இதனை மேற்கோள் காட்டிப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் ரீதியாக தி.மு.க எதிர்ப்புக்கு இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா எனப் பார்க்கின்றனர். 'காவல்துறை தவறிவிட்டது.. சதி நடந்துள்ளது' என்றெல்லாம் கூறுவதற்கு இது தான் காரணம்" என்கிறார்.
'சம்பவங்கள் தொடரவே செய்யும்'
கரூரில் பரப்புரை செய்வதற்கு விஜய் வந்த பேருந்தை பின்தொடர்ந்து அக்கட்சியின் தொண்டர்கள் சென்றனர். இவ்வாறு பின்தொடர வேண்டாம் எனவும் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர் கூட்டத்துக்கு வரவேண்டாம் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியிருந்தார்.
" பின்தொடர வேண்டாம் எனக் கூறிவிட்டு தொடர்வதற்கு அனுமதிப்பதை தங்களின் செல்வாக்காக பார்க்கின்றனர். இரண்டாயிரம் பேர் பேருந்துடன் நகர்கின்றனர். அதைத் தடுக்க வேண்டிய கடமை ஒருங்கிணைப்பாளர்களுக்கும் தலைமைக்கும் உள்ளது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
"பரப்புரை மேற்கொள்ளப்படும் இடங்களில் உள்ளூர் ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்தால் இதேபோன்று பல சம்பவங்கள் தொடரவே செய்யும். இனி இவ்வாறு நடக்காது என்று சொல்வதற்கு உத்தரவாதங்கள் இல்லை" எனவும் ஷ்யாம் குறிப்பிட்டார்.
கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக மூத்த நிர்வாகிகளிடம் விளக்கம் பெற பிபிசி தமிழ் முயன்றது. அதற்கான முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.