மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு கட்சி அமோக வெற்றி - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

மாலத்தீவு, முகமது முய்சு, இந்தியா, நரேந்திர மோதி, சீனா, ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
    • பதவி, பிபிசி செய்திகள்

மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் கட்சி அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அதிபர் முய்சுவின் அதிகாரம் மேலும் வலுவாகிறது.

மொத்தம் 93 உறுப்பினர்களைக் கொண்ட மாலத்தீவின் மக்களவையில் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பி.என்.சி) 66 இடங்களை வென்றதாக முதற்கட்ட முடிவுகள் சொல்கின்றன.

சீனாவுடன் நெருங்கிய உறவைப் பேண முய்சு கடைபிடிக்கும் கொள்கைக்கு இந்த வெற்றி வலுசேர்க்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சீனாவுக்கு ஆதரவானவர் என்று பரவலாகக் கருதப்படும் முய்சு, மாலத்தீவில் இந்தியா நீண்ட காலமாகச் செலுத்திவரும் செல்வாக்கைக் குறைக்க விரும்புகிறார்.

உள்ளூர் ஊடகங்கள் முய்சுவின் கட்சியின் வெற்றியை ‘சூப்பர் மெஜாரிட்டி’ என்று விவரித்துள்ளன. அரசியலமைப்பைத் திருத்துவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு இடங்களை அக்கட்சி பாராளுமன்றத்தில் எட்டியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

‘மாலத்தீவில் அனைத்தையும் கட்டுப்படுத்தும் முய்சு’

பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி) 15 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) வாக்கெடுப்புக்கு முன்னர் அது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களைக் கொண்டிருந்தது.

மாலத்தீவு ஆய்வாளரும் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளருமான அசிம் ஜாஹிர் இதுகுறித்து கூறுகையில், "முய்சுவுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை,” என்றார்.

"அரசியல் சார்ந்து பார்த்தால், மாலத்தீவின் அனைத்து அமைப்புகளும் இப்போது முய்சுவின் கட்டுப்பாட்டில் உள்ளன். அவருக்கு மாலத்தீவு நாடாளுமன்றத்தில் போதுமான எண்ணிக்கை இருப்பதால், அவரால் நீதித்துறையையும் கட்டுப்படுத்த முடியும்," என்று ஜாஹிர் கூறுகிறார்.

முய்சு கடந்த ஆண்டு இறுதியில் ஆட்சிக்கு வந்தார். அவரது தேர்தல் பிரசாரம், முந்தைய அரசாங்கத்தால் பின்பற்றப்பட்ட ‘இந்தியாவுக்கு முன்னுரிமை’ கொள்கையை முடிவுக்குக் கொண்டு வருவதை மையமாகக் கொண்டிருந்தது. அவர் இன்னும் டெல்லிக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை.

மாலத்தீவில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்க, அங்குள்ள அனைத்து இந்தியப் படைகளையும் திருப்பி அனுப்புவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

மாலத்தீவு, முகமது முய்சு, இந்தியா, நரேந்திர மோதி, சீனா, ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவுடன் நெருங்கிய உறவுகளை அடைவதற்கு முய்சு கொண்டிருக்கும் கொள்கைக்கு இந்த வெற்றி வலுசேர்க்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

சீனாவுடனான முய்சுவின் நெருக்கம்

மீட்பு மற்றும் உளவுப் பணிகளுக்காக சில வருடங்களுக்கு முன் இந்தியா மாலத்தீவுக்கு இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு விமானத்தைக் கொடுத்திருந்தது. அவற்றைப் பராமரிக்கவும் இயக்கவும் சுமார் 85 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் தங்கியிருந்தனர்.

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களின் இரண்டு குழுக்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டன. அவர்களுக்குப் பதிலாக அங்கு இந்தியாவின் தொழில்நுட்ப ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இந்திய துருப்புகள் மே 10-ஆம் தேதி மாலத்தீவை விட்டு வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய துருப்புகளை திருப்பி அனுப்புவதற்கான முய்சுவின் முடிவு, இந்தியாவுடனான மாலத்தீவின் உறவுகளை மோசமாக்கிவிட்டது. சீனா இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது போல தோன்றுகிறது.

முய்சு கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்று முதலீடுகளுக்கான பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

மாலத்தீவு, முகமது முய்சு, இந்தியா, நரேந்திர மோதி, சீனா, ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துபாயில் நடந்த ஒரு மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோதியைச் சந்தித்துப் பேசும் முய்சு. ஆனால் இதுவரை முய்சு அரசமுறைப் பயணமான இந்தியா வரவில்லை

‘மாலத்தீவுடனான உறவுகளை இந்தியா பராமரிப்பது முக்கியம்’

சென்ற மார்ச் மாதம் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி அளிப்பது போன்ற ‘ராணுவ உதவிகளுக்கான’ ஒப்பந்தத்தில் சீனாவுடன் மாலத்தீவு கையெழுத்திட்டது. இந்தியாவும் அமெரிக்காவும் முன்பு மாலத்தீவு ராணுவத்துக்குப் பயிற்சி அளித்து வந்தன.

"இப்போது ஒரு சமநிலையான வெளியுறவுக் கொள்கையை உருவாக்க ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்தியா மாலத்தீவுடனான உறவுகளை நன்றாக நிர்வகிக்காமல், முய்சுவுக்கு உதவ மறுத்தால், அவர் வெளிப்படையாக பெய்ஜிங்கைச் சார்ந்திருப்பார்," என்று ஜாஹிர் கூறுகிறார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவானதாக மாலத்தீவு தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஆனால் இது 2019-இல் பதிவான 82% வாக்குகளை விடக் குறைவு.

முதற்கட்டத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சியான எம்.டி-பி-யின் மூத்த தலைவர் ஒருவர் முய்சுவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

"எம்.டி.பி-யின் எம்.பி-க்கள் நமது ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவும், பொறுப்பான எதிர்க்கட்சியாக அரசாங்கத்தைக் கேள்வி கேட்பதற்கும் தயாராக இருப்பார்கள்," என்று அக்கட்சியின் தலைவர் ஃபயாஸ் இஸ்மாயில், எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)