அம்பேத்கர் படம் வைத்திருந்த மாணவரை தாக்கிய சக மாணவர்கள் - கல்விக்கூடங்களில் தொடரும் சாதிய மோதல்

அம்பேத்கர் புகைப்படத்தை வைத்திருந்த மாணவனை சக மாணவர்கள் தாக்கினார்களா?

பட மூலாதாரம், Screengrab

படக்குறிப்பு, ராணிப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்
    • எழுதியவர், சுஜாதா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகேயுள்ள அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் இரு தரப்பு மாணவர்கள் முன்விரோதம் காரணமாக கடந்த வாரம் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டதாக காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

ஆனால் இந்த விவகாரத்தில், அம்பேத்கர் படத்தை மாணவர் ஒருவர் தனது போனில் வைத்திருந்ததால் அவர் தாக்குலுக்கு உள்ளானதாக நீலம் பண்பாட்டு மையம் சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்திருந்தது.

இருதரப்பு மாணவர்கள் மோதிக் கொண்ட விவகாரத்தில் என்ன நடந்தது? அம்பேத்கர் புகைப்படத்தை போனில் வைத்திருந்த காரணத்திற்காக மாணவர் தாக்கப்பட்டாரா?

மோதல் தொடங்கியது எப்படி?

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகாவிலுள்ள பாட்டிகுளம் என்ற ஊரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 3 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது.

இந்தக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கடந்த 23ஆம் தேதியன்று, பி.ஏ. ஆங்கிலம் பயிலும் மாணவர்கள் இரு தரப்பாகப் பிரிந்து வகுப்பறையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

மோதலைத் தடுக்க பேராசிரியர்கள் முயன்றதையடுத்து, கல்லூரி வளாகத்திற்கு வெளியே சென்று இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் சோளிங்கர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மோதலில் ஈடுபட்டதாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இருதரப்பையும் சேர்ந்த 12 மாணவர்கள் மீது முன்விரோதம் காரணமாக சண்டையிட்டதாகக் கூறி நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது காவல்துறை.

இந்தச் சம்பவத்தில் அம்பேத்கரின் புகைப்படத்தைக் கொண்ட மொபைல் ஃபோன் கவரை பயன்படுத்திய காரணத்திற்காக பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர் தாக்கப்பட்டதாக நீலம் பண்பாட்டு மையமும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.

அம்பேத்கர் படத்தை வைத்திருந்ததே மோதலுக்கு காரணமா?

அம்பேத்கர் புகைப்படத்தை வைத்திருந்த மாணவனை சக மாணவர்கள் தாக்கினார்களா?
படக்குறிப்பு, அம்பேத்கர் படத்தை மாணவர் வைத்திருந்ததற்காக தாக்கப்பட்டதாக நீலம் பண்பாட்டு மையமும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் குற்றம் சாட்டுகின்றன.

மோதலில் ஈடுபட்டத்தற்காக கைது செய்யப்பட்டு காவல்நிலைய பிணையில் வெளிவந்த மாணவர் பிரசாந்த் பிபிசியிடம் சம்பவம் குறித்து விளக்கினார்.

"நான் அம்பேத்கர் புகைப்படம் இருக்கும் ஃபோன் கவரை பயன்படுத்தி வந்தேன்," என்று கூறும் அவர், தன்னுடன் படிக்கும் சதீஷ் என்ற மாணவன் "அம்பேத்கர் படத்தை ஏன் வைத்திருக்கிறாய், அம்பேத்கர் புகைப்படத்தைப் பார்த்தால் எனக்கும் எனது நண்பர்களுக்கும் எரிச்சலாக உள்ளதென்று" தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார்.

தன்னுடைய ஃபோன் கவரை தூக்கிப் போடுமாறு சதீஷ் வற்புறுத்தியதாகவும், அதற்கு தானும் தன்னுடைய நண்பரான கேஷலும் எதிர்ப்பு தெரிவிக்கவே இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்றும் கூறுகிறார் பிரசாந்த்.

அதைத் தொடர்ந்து கல்லூரி முடியும்போது சதீஷின் நண்பர்கள் சிலர் கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக பிரசாந்த் பிபிசியிடம் தெரிவித்தார்.

"சதீஷ் தரப்புக்கு ஆதரவாக 15 நபர்கள் வந்திருந்தனர். கல்லூரிக்குள் வந்த அவர்கள் என்னையும், என் நண்பனையும் தாக்கினர். பதிலுக்கு நாங்களும் அவர்களைத் தாக்க முயன்றோம். மேலும் அம்பேத்கர் படத்தை வைத்திருந்ததைச் சொல்லி எங்களை மோசமான வார்த்தைகளால் திட்டினார்கள்," என்றார்.

மாணவர்களை கைது செய்த காவல்துறை

அம்பேத்கர் புகைப்படத்தை வைத்திருந்த மாணவனை சக மாணவர்கள் தாக்கினார்களா?
படக்குறிப்பு, இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை காவல்துறை கைது செய்தது.

மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பிரசாந்த், சதீஷ் உள்பட 5 மாணவர்களைக் கைது செய்தனர்.

காவல் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பட்டியலின மாணவர் ஒருவரை துணிகளைக் கழற்றி நிர்வாணமாக காவல்துறையினர் சோதனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

"காவல் நிலையத்திற்கு என்னை அழைத்துச் சென்று நிர்வாணமாக சோதனையிட்டனர். பேப்பரில் எழுதிக் கொண்டு வந்து என்னிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினர்," என பிபிசியிடம் பேசிய போது மாணவர் கேஷல் விவரித்தார்.

மோதலில் ஈடுபட்ட மாணவர் பிரசாந்தை கைது செய்து அழைத்துச் சென்ற காவல்துறை, அவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

"காவல்துறையினர் ஒரு தரப்புக்கு சாதகமாகச் செயல்படுகின்றனர். பிரச்னைக்குரிய காரணத்தை மறைத்து விட்டு முன்விரோதம் காரணமாக இரு பிரிவினரிடையே மோதல் நடந்ததாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் வெளியிலிருந்து கல்லூரிக்குள் வந்த நபர்களை காவல்துறை கண்டுகொள்ளவில்லை," என்று பிரசாந்த் பிபிசியிடம் தெரிவித்தார்.

பேராசிரியர் மீது குற்றச்சாட்டு

சோளிங்கர் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் துறைத் தலைவரான சேகர் பாரபட்சமாக செயல்படுவதாக அவர்மீது பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

"எங்கள் கல்லூரியின் தமிழ் துறைத் தலைவர் சேகர், பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர்களை பாகுபாட்டுடன் நடத்துவார். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த வெளியாட்கள் கல்லூரிக்குள் நுழைந்து மோதலில் ஈடுப்பட்டனர். ஆனால் அவர்களின் பெயர்களை காவல்துறைக்கு தெரிவிக்காமல் அவர் மறைத்து விட்டார்," என்று மாணவர் கேஷல் கூறினார்.

இதுகுறித்து தமிழ் துறை பேராசிரியர் சேகரை தொடர்பு கொண்டு பேசிய போது, "நாங்கள் சண்டை ஏற்படுவதைப் பார்த்து அங்கு சென்றோம். எங்களால் சண்டையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நிர்வாக இயக்குநர் சுஜாதா காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் காவல்துறையினர் ஆங்காங்கே நின்று கொண்டிருந்த மாணவர்களை அடையாளம் கண்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களின் பெயர்களை அவர்களிடமே கேட்டு எங்களுக்கு அனுப்பி வைத்தனர். நான் மாணவர்களின் சுய விவரங்களை காவல் நிலையத்திற்குத் தெரியப்படுத்தவில்லை," என்று தமிழ் துறை பேராசிரியர் சேகர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பேராசிரியர் மீது மாணவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் சுஜாதா, "கல்லூரி வளாகத்திற்குள் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அடித்து சண்டையிட்டுக் கொண்டனர். ஓடிப்போய் பார்த்தபோது என்ன செய்வது என்றே தெரியவில்லை. உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தேன்.

சண்டையிட்டவர்களின் அடையாளம் வேண்டும் என காவல்துறை கேட்டபோது நான் தான் அவர்களின் பெயர்களை எழுதிக் கொடுத்தேன். தற்போது அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

பிரச்னையை கையில் எடுத்த விடுதலை சிறுத்தைகள்

அம்பேத்கர் புகைப்படத்தை வைத்திருந்த மாணவனை சக மாணவர்கள் தாக்கினார்களா?

பட மூலாதாரம், Screengrab

அரசு கலைக்கல்லூரிக்குள் புகுந்து அம்பேத்கர் படத்தை வைத்திருந்த மாணவர்களைத் தாக்கிய வெளிநபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ரமேஷ் கர்ணா தெரிவித்துள்ளார்.

"இந்தப் பிரச்னையில் கல்லூரி நிர்வாகமே தலையிட்டு மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளோம். மேலும் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த வெளியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார் ரமேஷ் கர்ணா.

சாதி அடையாளம் கொண்ட டி-ஷர்டுடன் கல்லூரிக்குள் நுழைந்த வெளிநபர்கள் யார் என்று ராணிப்பேட்டை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, பாமகவுக்கும், கல்லூரிக்குள் நுழைந்த நபர்களுக்கும் எந்தத் தொடர்பு இல்லை என்று தெரிவித்தார்.

"இப்போது அம்பேத்கர், காடுவெட்டி குரு, வீரப்பன் படங்களை பயன்படுத்துவது இளைஞர்களிடையே ஃபேஷன் ஆகிவிட்டது. காடுவெட்டி படத்தைப் பயன்படுத்தியதால் அவர் பாமகவை சேர்ந்தவர் எனச் சொல்ல முடியாது.

இந்த பிரச்னையை கல்லூரி நிர்வாகம் சரியாகக் கையாளவில்லை. மேலும் அடையாளம் தெரியாத அந்த வெளிநபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என பாமகவை சேர்ந்த சரவணன் கூறினார்.

கல்விக்கூடம் சாதிய கூடமாக மாறுகிறதா?

அம்பேத்கர் புகைப்படத்தை வைத்திருந்த மாணவனை சக மாணவர்கள் தாக்கினார்களா?

சோளிங்கரில் நடந்த மோதல் குறித்த காணொளியை தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ள நீலம் பண்பாட்டு மையம், கல்விக்கூடங்கள் சாதிய கூடங்களாக மாறி வருவதாக பெற்றோர்கள் அஞ்சுகின்றனர் என்று கருத்து தெரிவித்துள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய நீலம் பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த உதயா, "பட்டியலின மாணவனை அடிக்கக்கூடிய எண்ணம் எங்கிருந்து முதலில் உருவாகிறது எனச் சிந்திக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மீதுதான் இங்கு குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. இது கவலைக்குரிய விஷயம்," என்று தெரிவித்தார்.

அம்பேத்கர் போட்டோவை வைத்திருந்ததற்காக அடித்தார்கள் என்பதே பெரிய குற்றம்தான். வெளி ஆட்கள் உள்ளே வந்து தாழ்த்தப்பட்ட மாணவனை அடித்தபோது உயிர் போயிருந்தால் மிகப் பெரிய சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு தமிழ்நாடு முழுவதுமே வன்முறையாக மாறியிருக்க வாய்ப்புள்ளது. அதனால் இதுபோன்ற பிரச்னைகளை காவல்துறை நேர்மையாகக் கையாள வேண்டும்," என்று உதயா தெரிவித்தார்.

இது குறித்து வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் சதீஷை தொடர்பு கொண்டு பிபிசி பேசியபோது, "பிரசாந்திடம் அம்பேத்கர் படத்தை தூக்கிப் போடு என்று சொன்னேன். அதை கேஷல் கேள்வி கேட்டான். அப்படியே இருவருக்கும் இடையே சண்டை தொடங்கியது.

அதன் பிறகு அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் என்னுடைய அண்ணன் கோபிக்கு தகவல் தெரிவித்தேன். வெளியில் இருந்து ஆட்களை யாரும் நான் வர சொல்லவில்லை.

காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று என்னை விசாரணை செய்து இவ்வாறு சண்டை போடக்கூடாது, மீறினால் சிறை தண்டனை கிடைக்கும் என காவலர்கள் தெரிவித்தனர்," என்றார். அதன் பிறகு தன்னுடைய பெற்றோரும் தன்னை கண்டித்ததாக தெரிவித்தார்.

"நான் சொல்லியது தவறு. என் தவறை நான் உணர்ந்துவிட்டேன். தெரியாமல் ஏதோ பேசி விட்டேன்," என்று மாணவர் சதீஷ் கூறினார். கல்லூரிக்குச் சென்று மாணவர்களுடன் எப்பொழுதும் போலப் பழகி வருவதாகவும் அவர் பிபிசியிடம் பேசும்போது தெரிவித்தார்.

குற்றச்சாட்டுக்கு காவல்துறையின் பதில் என்ன?

சோளிங்கர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற மோதல் தொடர்பாக வேலூர் சரக டி.ஐ.ஜி, முத்துசாமியை தொடர்பு கொண்டு பேசியபோது, இரு தரப்பு மாணவர்களும் வெளியிலிருந்து ஆட்களை வரச் சொல்லியதாகத் தெரிவித்தார்.

"கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும் அவர்களுக்குத் தெரிந்தவர்களை கல்லூரிகளுக்கு வரச் சொல்லி மோதலில் ஈடுபட்டுள்ளார்கள்.

வெளியிலிருந்து கல்லூரிக்குள் நுழைந்து மோதலில் ஈடுபட்டவர்களை காணொளி காட்சிகளை வைத்து அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அடையாளம் காணப்பட்ட நபர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்," என்று கூறினார்.

பட்டியலின மாணவர்கள் நிர்வாணப்படுத்தி சோதனை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்துக் கேட்டபோது, "அனைத்து மாணவர்களும் பெற்றோர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டனர். விசாரணையின்போது யாரையும் துன்புறுத்தவில்லை," என்று பதிலளித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: