எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் - திமுக, சிவசேனை உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்

காங்கிரஸ் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குற்றவியல் அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து, இந்திய குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனை நோக்கி டெல்லியில் இன்று பேரணியாக புறப்படும் முன்பு நாடாளுமன்றத்தை இணைக்கும் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்திய எதிர்க்கட்சி எம்.பிக்கள்.

வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது மோதி பெயர் குறித்து பேசியதாக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்றும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் சூரத் நீதிமன்றம் வியாழன்று உத்தரவிட்டது. எனினும், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

“ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய அவர்கள் (பாஜக) அனைத்து வழிகளிலும் முயன்றனர். உண்மையைப் பேசுபவர்களை வைத்துக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, ஆனால் நாங்கள் தொடர்ந்து உண்மையைப் பேசுவோம். ஜேபிசியை நாங்கள் தொடர்ந்து கோருவோம், தேவைப்பட்டால், ஜனநாயகத்தைக் காப்பாற்ற சிறைக்குச் செல்வோம்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏஎன்ஐ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

`திருடனை திருடன் என்று கூறுவது நமது நாட்டில் குற்றமாக மாறியுள்ளது. திருடர்களும் கொள்ளையடித்தவர்களும் சுதந்திரமாக உள்ள நிலையில் ராகுல் காந்தி தண்டிக்கப்பட்டுள்ளார். இது நேரடி ஜனநாயக படுகொலை ஆகும். அனைத்து அரசு அமைப்புகளும் அழுத்தத்தில் உள்ளன. இது சர்வாதிகாரம் முடிவதற்கான தொடக்கம்` என்று மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே விமர்சித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த போராட்டத்தை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடத்துவோம். எங்களை மிரட்டவும் , குரலை ஒடுக்கவும் முடியாது. பிரதமருடன் தொடர்புடைய அதானியின் ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு பதிலாக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்திய ஜனநாயகத்துக்கு ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.

வயநாடு எம்பி பதவியில் இருந்து காங்கிரஸின் ராகுல் தகுதி நீக்கம்

பட மூலாதாரம், Getty Images

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

“பிரதமர் மோதியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக உள்ளனர். குற்றப் பின்னணி உள்ள பாஜக தலைவர்கள் அமைச்சரவையில் சேர்த்துகொள்ளப்படும் வேளையில், எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களின் பேச்சுக்காக தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர்.

இன்று, நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை நாம் கண்டுள்ளோம்” என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

“பிரதமர் மோதி, அதானி ஆகியோருக்கு எதிராக ராகுல் காந்தி எப்போது கேள்வி எழுப்பினாரோ அப்போதே ராகுலின் குரலை ஒடுக்க அவருக்கு எதிராக இத்தகைய சதி வேலைகள் தொடங்கின. இது ஜனநாயகத்திற்கு எதிரனாது, பாஜகவின் சர்வாதிகாரப்போக்கை காட்டுகிறது” என்று காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

“மக்களவையில் இருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்துள்ளது, எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க நினைக்கும் பழி வாங்கும் நடவடிக்கையாகும். இத்தகைய நடவடிக்கையால் எங்களின் குரல்கள் மேலும் சத்தமாக ஒலிக்கும், ஜனநாயகத்தின் கொள்கைகளை மதிக்காத சக்திகளுக்கு எதிரான எங்களின் பிணைப்பு மேலும் வலுவடையும். நாங்கள் அவருடன் நிற்கிறோம்” என்று திமுக எம்பி கனிமொழி கருணாநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நாடாக இந்தியா எங்கே போகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பினோய் விஸ்வம் கேள்வி எழுப்பினார்.

ராகுலின் எம்.பி பதவி தகுதி நீக்கம் துரதிருஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ், இது போன்ற அவதூறு விஷயங்களில் எம்பிக்கள் உறுப்பினர் பதவியை இழந்தால், 70 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர்களை இழப்பார்கள், அவர்களில் பெரும்பாலோர் பாஜகவைச் சேர்ந்தவர்களாக இருப்பர் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, ராகுல் காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான பிரியங்கா காந்தி, "நீரவ் மோடி ஊழல் - ரூ.14,000 கோடி. லலித் மோடி ஊழல் - ரூ.425 கோடி. மெஹுல் சோக்ஸி ஊழல் - ரூ. 13,500 கோடி. நாட்டின் பணத்தை கொள்ளையடித்தவர்களை பாஜக காப்பாற்றியது ஏன்? விசாரணையில் இருந்து கட்சி ஓடுவது ஏன்? இது குறித்து கேள்வி எழுப்புவோர் மீது வழக்குகள் போடப்படுகின்றன. ஊழல்வாதிகளை பாஜக ஆதரிக்கிறதா?" என்று இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

சட்டப்படியே நடவடிக்கை: பாஜக

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்ட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் கே. அண்ணாமலை கூறும்போது, சட்டத்தின்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஒரு சாதாரண மனிதனுக்கு என்ன சட்டம் பொருந்துமோ அதுவே ராகுல் காந்திக்கும் பொருந்தும். அதுதான் ஜனநாயகம். ராகுல் குற்றவாளி என்று உறுதிப்படுத்திய தண்டனையை உறுதிப்படுத்தியிருப்பது நீதிமன்றம் என்பதால் அதன் அடிப்படையிலேயே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் மக்களவை சபாநாயகருக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

வழக்கின் பின்னணி என்ன?

2019ம் ஆண்டு பொதுத்தேர்தல் சமயத்தில் ஏப்ரல் மாதம், கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோதியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட எளிய மக்களின் பணத்தை திருடி நீரவ் மோதி, லலித் மோதி, முகுல் ஷோக்சி, விஜய் மல்லையாவுக்கு நரேந்திர மோதி வழங்குவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாக தி இந்து செய்தி வெளியிட்டது.

"எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அதெப்படி அனைத்து திருடர்களுக்கும் மோதி என்ற துணைப் பெயர் இருக்கிறது எனத் தெரியவில்லை," என ராகுல் காந்தி பேசியதாக செய்திகள் வெளிவந்தன.

ராகுல் காந்தியின் இந்த பேச்சு தொடர்பாக குஜராத் மாநில சூரத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வியாழனன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என நீதிபதி ஹெ.ஹெ. வர்மா அறிவித்தார்.

மேலும், இந்திய தண்டனைச் சட்டம் 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின்படி ராகுல் காந்தி அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். அதே சமயம் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, அவருக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: