You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பொறியியல் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட 10% அதிகரிக்க என்ன காரணம்?
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில், நடப்பு கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நிறைவடைந்தது..
கடந்த ஆண்டை விட மாணவர் சேர்க்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், 2024ஆம் ஆண்டில் 2,49,918 மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், இந்தாண்டு 3,01,026 பேர் விண்ணப்பித்திருந்ததாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, '2025-26 ஆம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்ற 423 கல்லூரிகளில் 1,90,624 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டன. 1,53,445 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரம்பியுள்ளன. கடந்தாண்டை காட்டிலும் 30 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக இந்தாண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்'.
கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொறியியல் படிப்புகள் மீது மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரித்திருப்பதற்கு, 'செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற தொழில்நுட்பத் துறைகள் மீதான ஆர்வம், அது தொடர்பான புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது, 'கேம்பஸ் பிளேஸ்மென்ட்' தொடர்பான கல்லூரிகளின் விளம்பரங்கள்' ஆகிய காரணங்களை கல்வியாளர்கள் முன்வைக்கிறார்கள்.
அதே சமயம், தமிழ்நாட்டின் 'சாய்ஸ் ஃபில்லிங்' (Choice filling) கலந்தாய்வு அடிப்படையில் மாணவர்கள் பொறியியல் படிப்பில் அதிகளவில் சேர்வது, தனியார் கல்லூரிகளுக்கு மட்டுமே பயனுள்ளதாக உள்ளது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
பொறியியல் படிப்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட காரணம்
2024-25 கல்வியாண்டின் பொறியியல் கலந்தாய்வில், மாணவர்கள் கணினி அறிவியல் பொறியியல் (CSE) பிரிவிற்கு முன்னுரிமை அளித்தனர். அதற்கு அடுத்த இடங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகள் இருந்தன.
இந்த வருடமும் அதிக மாணவர்கள் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பாடப்பிரிவுகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
"பொறியியல் மாணவர் சேர்க்கை அதிகரிக்க இரண்டு விஷயங்களை காரணமாக சொல்லலாம், ஒன்று 'கேம்பஸ் பிளேஸ்மென்ட்' குறித்த தனியார் கல்லூரிகளின் விளம்பரங்கள். 'எங்கள் கல்லூரியில் படித்தால் 100 சதவீதம் வேலை கிடைக்கும்' என்ற வாக்குறுதியை பல கல்லூரிகள் அளிக்கின்றன." என்று கூறுகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரன்.
"அடுத்தது, செயற்கை நுண்ணறிவு தான் இனி எல்லாம் என்ற பிம்பம் இருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்துறை மீது மாணவர்களுக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருக்கும். அதோடு சேர்த்து, ஏஐ குறித்த புதிய பொறியியல் பாடப்பிரிவுகளும் மாணவர் சேர்க்கை அதிகரிக்க ஒரு முக்கிய காரணம்" என்கிறார் அவர்.
ஆனால், "சிக்கல் என்பது பல கல்லூரிகளில் ஏஐ படிப்புகளுக்கு தேவையான கட்டமைப்போ போதிய திறன் பெற்ற பேராசிரியர்களோ இல்லை. கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தை அப்படியே எடுத்து கூடுதலாக இரண்டு, மூன்று தலைப்புகளை மட்டும் சேர்ந்து ஏஐ படிப்புகள் என சில கல்லூரிகள் வழங்கி வருகின்றன." என்றும் அவர் கூறுகிறார்.
அதே சமயம், அடிப்படை பொறியியல் அல்லது அறிவியலுக்கு எப்போதும் வேலைவாய்ப்புகள் உள்ளன எனக் கூறும் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "இஸ்ரோ தொடங்கி நாட்டின் பல தொழில்துறைகளில் அடிப்படை பொறியியல் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் மாணவர்களின் திறனை வளர்க்க கவனம் செலுத்த வேண்டும். அதை விடுத்து, வெறும் ஏஐ சார்ந்த படிப்புகளை கண்மூடித்தனமாக தேர்ந்தெடுக்கக் கூடாது" என்கிறார்.
'சாய்ஸ் ஃபில்லிங்' Vs 'சிங்கிள் விண்டோ முறை'
"இந்தியாவில் ஆண்டுதோறும் பட்டம் பெறும் பொறியாளர்களில் 17% பேர் தமிழ்நாட்டிலிருந்து வருகிறார்கள். இது எந்த இந்திய மாநிலத்தையும் விட அதிகம்" என்று தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வருடம் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த கல்வியாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு தரவுகளும் அதை உறுதிப்படுத்துகின்றன.
ஆனால், "வெறும் எண்ணிக்கை இங்கு முக்கியமல்ல, உண்மையில் அனைத்து பொறியியல் மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கின்றனவா என்ற கேள்விக்கு பதில் இல்லை" என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.
தமிழ்நாட்டின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் 'சாய்ஸ் ஃபில்லிங்' கலந்தாய்வு முறையை கடுமையாக விமர்சிக்கும் அவர், மீண்டும் பழைய 'சிங்கிள் விண்டோ' கலந்தாய்வு முறையை கொண்டுவர வேண்டும் என்கிறார்.
"சிங்கிள் விண்டோ சேர்க்கை செயல்முறை கிட்டத்தட்ட 24 ஆண்டுகளாக சிறந்த முறையாக இருந்தது." என்கிறார் நெடுஞ்செழியன்.
தொடர்ந்து அதை விளக்கிய அவர், "சிங்கிள் விண்டோ முறையில் ஒரு மாணவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் சேர்க்கை கோருவார். பல்கலைக்கழக அதிகாரிகள் சென்னையில் ஒரு முகாமை அமைத்து, அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகள் உள்பட பல்வேறு கல்லூரிகளில் உள்ள காலியிடங்களைக் காண்பிப்பார்கள். மாணவர்களின் கட்-ஆப் தரவரிசை மற்றும் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளின்படி இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பொறியியல் கல்லூரிகளை எளிதாகத் தேர்ந்தெடுத்தனர்" என்று கூறுகிறார்.
ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள சாய்ஸ் ஃபில்லிங் முறை மிகவும் சிக்கலானது எனக்கூறிய நெடுஞ்செழியன், "இதில் மாணவர்கள் தாங்கள் எந்த மாதிரியான ஒரு கல்லூரியில் சேர்கிறோம் என்பதை முழுமையாக அறிய மாட்டார்கள், ஏனெனில் இந்த சேர்க்கை செயல்பாட்டில் பல்கலைக்கழக அதிகாரிகளால் எந்த விவரங்களும் வழங்கப்படாது. மேலும் மாணவர்களே கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவு குறித்த முடிவுகளை எடுக்க வேண்டும். நீங்கள் ஒருவேளை தவறான பாடத்திட்டத்தையும் கல்லூரியையும் தேர்வு செய்தால், அதை மாற்ற எந்த வழியும் இல்லை." என்கிறார்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கும் நிலையில், தாங்களாகவே சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது மாணவர்களுக்கு சவாலானதாக இருக்கும் என்கிறார் நெடுஞ்செழியன்.
"கண்ணை கட்டி காட்டில் விட்டது போன்ற ஒரு சூழலை மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள். ஒரு உதாரணம், சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர் ஒருவர் ஒரு தனியார் கல்லூரியின் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்திருப்பார். அண்ணா பல்கலைக்கழகமும் அவருக்கு அந்த இடத்தை வழங்கிவிடும். ஆனால், அதே பாடப்பிரிவு அரசு கல்லூரியிலும் இருந்திருக்கும். அதை அவர் அறிந்திருக்கமாட்டார். இதனால் யாருக்கு நஷ்டம், யாருக்கு லாபம்?" என்று கேள்வியெழுப்புகிறார் நெடுஞ்செழியன்.
குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட கல்லூரிகள்
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகள் இணையதளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் உள்ள கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் குறித்த தரவுகள் உள்ளன. அதில் சில தனியார் கல்லூரிகளில், நவம்பர்-டிசம்பர் 2024 தேர்வுகளில் மிகக்குறைவான மாணவர்களே தேர்வு எழுதியுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைச் சுட்டிக்காட்டும் நெடுஞ்செழியன், "ஒரு கல்லூரியில் 25 மாணவர்கள் தேர்வு எழுதி, அதில் 23 மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள் என்றால், அந்தக் கல்லூரியின் தேர்ச்சி விகிதம் என்பது 92 சதவீதமாக இருக்கும், ஆனால் இப்படிப்பட்ட இரட்டை இலக்க மாணவர் சேர்க்கை கொண்ட கல்லூரிகளால் மாணவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. பெயரளவுக்கு ஒரு பொறியியல் பட்டப்படிப்பு சான்றிதழ் மட்டுமே கிடைக்கும்" என்கிறார்.
தமிழ்நாட்டில் இருந்து அதிக பொறியியல் பட்டதாரிகள் உருவாகிறார்கள் என்பது சாதனையல்ல எனக்கூறும் கல்வியாளர் நெடுஞ்செழியன், "வெளிமாநிலங்களில் குறைவான கல்வி கட்டணத்தில் சிறந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தரமான கல்வியை அளிக்கின்றன. எனவே தமிழ்நாட்டின் ஏதோ ஒரு பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றால் போதும் என்ற நிலை மாறவேண்டும். இங்கு தேவை முறையான உயர்கல்வி சார்ந்த ஆலோசனை." என்கிறார்.
இந்த கருத்தை ஒப்புக்கொள்ளும் பேராசிரியரும், உயர்கல்வி ஆலோசகருமான ரவிக்குமார், "சிங்கிள் விண்டோ முறையில் இருந்த ஒரு சிக்கல் சென்னை போன்ற இடத்தில் அனைத்து மாணவர்களும், தங்களது பெற்றோருடன் ஒன்றுகூட வேண்டும் என்பது தான். மற்றபடி, ஏழை மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு அந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது" என்கிறார்.
அதேசமயம், சாய்ஸ் ஃபில்லிங் மோசமான முறை அல்ல என்று கூறும் ரவிக்குமார், "அதை அரசு இன்னும் எளிமைப்படுத்த வேண்டும். பலருக்கும் இணையத்தில் தங்களுக்கான கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் உள்ளது. அந்தந்த மாவட்டங்களில் கலந்தாய்வு என்பது நல்ல விஷயம் தான் என்றாலும், வருடம் முழுவதும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டு கடைசி நிமிடத்தில் சாய்ஸ் ஃபில்லிங் கலந்தாய்வு செயல்முறை என வரும்போது மாணவர்கள் திணறுகிறார்கள்" என்று கூறுகிறார்.
இதற்கு மற்றொரு தீர்வாக பள்ளிகளில் சாய்ஸ் ஃபில்லிங் கலந்தாய்வு குறித்து முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தும் ரவிக்குமார், "பள்ளிகளின் கடமை என்பது வெறும் மதிப்பெண் சார்ந்து மட்டுமல்ல, உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல்களையும் வழங்குவது தான்" என்கிறார்.
இது குறித்து விளக்கம் கேட்க தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தை தொடர்பு கொண்டபோது அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை.
ஆனால் பெயர் குறிப்பிட விரும்பாத அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர், "சாய்ஸ் ஃபில்லிங் முறை சிறந்த ஒன்று தான். அது குறித்த வழிகாட்டுதல்களை வழங்க போதுமான மாவட்ட அளவிலான மையங்கள் உள்ளன." என்று மட்டும் கூறினார்.
"இங்கு பல பெற்றோர் தங்களது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்கின்றனர், கடன் வாங்கி படிக்க வைக்கின்றனர். அப்படியிருக்க விவரம் தெரியாமல் ஏதோ ஒரு கல்லூரியில் பிள்ளைகளை சேர்த்து, வேலை கிடைக்கவில்லை என்றால் எந்தளவு விரக்தி அடைவார்கள் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்." என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.
"அதேசமயம், ஏதோ ஒரு வேலையைப் பெற்றுத் தருவது மட்டுமே கல்லூரிகளின் பணி அல்ல, நல்ல கல்வியையும் அளிப்பது தான். சாய்ஸ் ஃபில்லிங் முறை என்பது தனியார் கல்லூரிகளின் நலன்களுக்கானது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதை அரசு பரிசீலிக்க வேண்டும்" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு