ஆயிரம் பேரின் கதி என்ன? எவரெஸ்டில் பனிப்புயலின் தாக்கம் பற்றி மீண்டு வந்தவர் தகவல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், லாரா பிக்கர்
- பதவி, சீன செய்தியாளர்
திபெத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் சரிவில் கடுமையான பனிப் புயல் தாக்கியுள்ளது. மலையின் கிழக்குப் பகுதிகளில் இருந்த முகாம்களில் 1,000-க்கும் அதிகமானோர் இந்த பனிப்புயலில் சிக்கியுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இடம் 4,900 மீட்டர் (16,000) அடி உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு செல்வதற்கான பாதையை மறைத்திருக்கும் பனியை அகற்றும் பணியில் நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உள்ளூர் ஊடகங்களின்படி, தற்போது வரை சுமார் 350 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு பக்கத்து ஊரான குடாங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. உள்ளே சிக்கியுள்ள மேலும் 200 பேர் வரை தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
"ஒரு மீட்டர் ஆழத்திற்கு பனி"

கண் விழித்து பார்த்தபோது ஒரு மீட்டர் ஆழத்திற்குப் பனி இருந்ததாக கெசுவாங் சென் என்கிற மலையேற்ற வீரர் தெரிவித்தார்.
29 வயதான கெசுவாங் சென் அக்டோபர் 4-ஆம் தேதி குடாங் நகரிலிருந்து கிளம்பி சோ ஓயு முகாமிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த மலையேற்ற பயணம் 5 நாட்கள் நீடிக்க இருந்தது.
அக்டோபர் 11-ஆம் தேதி மேலிருந்து கீழறங்க திட்டமிட்டிருந்தார். ஆனால் தீவிரமான பனிப் புயல் தாக்கியதால் அனைத்து திட்டங்களும் மாறிப்போனது.
சென் வானிலை முன்னறிவிப்பை பார்த்தபோது, அக்டோபர் 4-ஆம் தேதி பனிப்பொழிவு ஏற்பட்டு 5-ஆம் தேதி வானிலை தெளிவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகும் வானிலை தெளிவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே அவரின் குழுவைச் சேர்ந்த 10 பேர் தங்கிவிட திட்டமிட்டிருந்தனர். எனினும் இரவு நேரத்தில் புயல் மோசமடைந்து இடி மற்றும் பலத்த காற்று மற்றும் பனி வீசியதாக தெரிவிக்கின்றனர். கூடாரங்கள் இடிந்துவிடாமல் இருக்க அதன்மீது படர்ந்திருந்த பனியை விலக்க வழிகாட்டி உதவினார்.
"அடுத்த நாள் காலை நாங்கள் விழித்தபோது ஒரு மீட்டர் ஆழத்திற்கு பனி இருந்தது. அதனால் திரும்பிவிட முடிவெடுத்தோம்." எனத் தெரிவித்தார்.
அக்டோபர் 5-ஆம் தேதி கடும் பனிக்கு இடையே 6 மணி நேரம் பயணித்து இந்தக் குழுவினர் மலை இறங்கினர்.
கீழறங்கி வந்தபோது மீட்புப் பணிகளுக்காக பொருட்களை மேலே எடுத்துச் சென்ற உள்ளூர் கிராம மக்களைச் சந்தித்தனர். இந்த தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் அவர்களுடன் இணைந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
"ஒவ்வொரு ஆண்டும் கோல்டன் வீக்கின் (சீன விடுமுறை) போது பலர் மலையேற இங்கு வந்தாலும் இந்த ஆண்டு பனி அளவுக்கு அதிகமாக இருந்தது" என்கிறார் சென். எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்குச் சரிவில் இத்தகைய வானிலை அசாத்தியமானது என அவர்களின் வழிகாட்டி கூறியதாகவும் தெரிவிக்கிறார்.
தற்போது அபர் லாசா நகரை நோக்கிச் செல்கிறார். "நாங்கள் அனைவருமே அனுபவம் பெற்ற மலையேற்ற வீரர்கள். ஆனால் இந்த பனிப்புயலை சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது. நான் அதிர்ஷ்டவசமாக வெளியே வந்துவிட்டேன்." என்றார்.

பட மூலாதாரம், CCTV
வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய கடும் பனிப்பொழிவு திபெத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சரிவுகளில் தீவிரமானது. இந்தப் பகுதி மலையேற்றத்திற்குப் பிரபலமானது. தற்போது சீனாவில் தொடர் விடுமுறையால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
கடும் பனிப் பொழிவால் கூடாரங்கள் சரிந்ததாகவும் சில மலையேற்ற வீரர்கள் கடுங்குளிரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி திபெத்தின் ப்ளூ ஸ்கை ரெஸ்க்யூ குழுவிற்கு உதவி கேட்டு அழைப்பு வந்ததாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ராய்டர்ஸ் செய்திபடி, சனிக்கிழமையிலிருந்து எவரெஸ்ட் பகுதிக்குச் செல்வதற்கான நுழைவுச்சீட்டு விற்பனையை டிங்ரி கவுண்டி சுற்றுலா நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அக்டோபரில் எவரெஸ்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பம் குறைவாகவும் வானம் தெளிவாகவும் இருப்பதால், ஆண்டில் இந்த மாதத்தில் தான் மலையேற்றம் உச்சத்தில் இருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பனிப்புயலில் மலையேற்ற வீரர்களும் வழிகாட்டிகளும் சிக்கியுள்ளனர்.
"மலைப்பகுதி மிக ஈரமாகவும் குளிராகவும் இருந்தது, தாழ்வெப்பநிலை பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருந்தது" என மலையிலிருந்து மீட்கப்பட்டு தற்போது குடாங் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒருவர் தெரிவித்தார்.
"இந்த ஆண்டு வானிலை இயல்பாக இல்லை. அக்டோபரில் இத்தகைய வானிலையை எதிர்கொண்டதில்லை என வழிகாட்டி தெரிவித்தார். அனைத்தும் மிக விரைவாக நடந்துவிட்டன."

பட மூலாதாரம், CCTV
இந்தப் பிராந்தியத்தில் கடுமையான தட்பவெப்பநிலை நிலவி வருகிறது. நேபாளத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் நிலச்சரிவுகள், திடீர் வெள்ளங்கள் ஏற்பட்டு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அங்கே, கனமழையால் குறைந்தது 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் மட்மோ புயல் ஏற்படுத்திய பாதிப்பால் 1,50,000 பேர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
8,849 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் தான் உலகின் மிக உயரமான சிகரமாக திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் எவரெஸ்ட் சிகரத்தை அடைய பலர் முயற்சித்தாலும் இது மிகவும் ஆபத்தான பயணமாகப் பார்க்கப்படுகிறது.
சமீப ஆண்டுகளாக இங்கு அதிக கூட்ட நெரிசல், சுற்றுச்சூழல் பிரச்னைகள், தொடர் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












