மோதியின் சைப்ரஸ் பயணம் பாகிஸ்தானை ஆதரித்த துருக்கிக்கு தரும் பதிலடியா?

பிரதமர் நரேந்திர மோதி சைப்ரஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

இந்தியா, துருக்கி இடையே உறவுகள் மோசமடைந்திருக்கும் நிலையில் பிரதமர் மோதியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதே நேரம் துருக்கி மற்றும் சைப்ரஸ் இடையேயான சர்ச்சை நன்கு அறியப்பட்டது. பிரதமர் மோதியின் சைப்ரஸ் பயணம் பாகிஸ்தானுக்கும் துருக்கிக்கும் இடையே இருக்கும் வலுவான உறவுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது.

கடந்த மாதம் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான மோதலின்போது துருக்கி வெளிப்படையாக பாகிஸ்தானை ஆதரித்தது.

அந்த மோதலின்போது மே 8ஆம் தேதி ஏராளமான டிரோன்களால் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும் அந்த டிரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்ட சோங்கர் டிரோன்கள் எனவும் இந்தியா கூறியிருந்தது.

ஆனால் இதற்கிடையில், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் சமூக ஊடகத்தில், "பாகிஸ்தான் – துருக்கி உறவு நீடூழி வாழ்க." என பதிவிட்டார்.

ஆனால் இந்தியா- பாகிஸ்தான் விவகாரங்களில் துருக்கி பாகிஸ்தானின் பக்கம் நிற்பது இது முதல் முறை அல்ல.

ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அரங்குகளில் துருக்கி பல சந்தர்ப்பங்களில் பாகிஸ்தானை ஆதரித்திருக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் துருக்கி பல வருடங்களாக பாகிஸ்தானை ஆதரித்து வந்திருக்கிறது.

மே மாதம் இறுதியில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் துருக்கிக்கு பயணம் மேற்கொண்டார்.

வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது என்ன?

பிரதமர் நரேந்திர மோதியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து ஜூன் 14ஆம் தேதி வெளியுறவுத் துறை ஒரு அறிக்கையை வெளியிட்டது.

"சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடெளலைட்ஸின் (Nikos Christodoulides) அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோதி சைப்ரஸுக்கு ஜூன் 15-16 தேதிகளில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார். சைப்ரஸுக்கு ஒரு இந்திய பிரதமர் பயணம் மேற்கொள்வது கடந்த இருபது ஆண்டுகளில் இது முதல்முறை."

இந்த பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோதி சைப்ரஸ் தொழில்துறையுடன் தொடர்புடையவர்களையும் சந்திப்பார்.

"நிகோசியாவில் பிரதமர் நரேந்திர மோதி அதிபர் கிறிஸ்டோடெளலைட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவார், இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்த இருநாடுகள் கொண்டுள்ள உறுதியையும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியாவின் தொடர்புகளையும் இந்தப் பயணம் மீண்டும் உறுதி செய்யும்," என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

ஜூன் 16 மற்றும் 17ஆம் தேதி கனடாவில் நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் மோதி கலந்து கொள்கிறார்.

அவரது வெளிநாட்டு பயணத்தின் இறுதி பகுதியாக குரோஷியாவிற்குச் செல்வார். பிரதமர் மோதி குரோஷியாவிற்கு ஜூன் 18ஆம் தேதி செல்வார். குரோஷியாவிற்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறையாகும்.

சைப்ரஸுக்கான இந்திய தூதர் என்ன சொன்னார்?

இந்தியர்கள் சைப்ரஸுக்கு பல ஆண்டுகளாக பயணம் மேற்கொண்டு வருவதாக சைப்ரஸுக்கான இந்திய தூதர் மனீஷ் தெரிவித்தார்.

ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய அவர், "இந்தியர்கள் இந்த சிறு தீவுக்குப் பல வருடங்களாக வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைத்து துறைகளிலும் பணியாற்றுகின்றனர் என்றாலும் இரண்டு முக்கிய துறைகள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகும். சுமார் 11,500 இந்தியர்கள் இங்கு வாழ்ந்து பணியாற்றுகின்றனர், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் புலம்பெயர்ந்தவர்கள்," எனத் தெரிவித்தார்.

"இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் இங்கு நிறைய மரியாதை உள்ளது. இந்திய கலாசாரம் இங்கு மிகவும் பிரபலம். பிரதமர் மோதியின் பயணம் எங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தி ஊக்கப்படுத்தும்."

சைப்ரஸ் பல விவகாரங்களில் இந்தியாவை ஆதரித்திருப்பதாக இந்திய தூதர் மனீஷ் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இடம் வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை சைப்ரஸ் ஆதரிக்கிறதா என்கிற கேள்விக்குப் பதிலளித்த மனிஷ்."இது ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது. இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு முந்தைய பயணங்களிலும் கூட்டறிக்கைகளிலும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது." என்றார்.

மேலும் அவர், "சர்வதேச பயங்கரவாதம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக போராடவும் அவர்களது ஆதரவு எங்களுக்கு உள்ளது."

"ஐரோப்பிய ஒன்றியத்துடனான தொடர்பில் சைப்ரஸ் இந்தியாவுக்கு ஒரு நல்ல நண்பன். ஜனவரி 1, 2026 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை சைப்ரஸ் வசம் வரும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது." என்றார்.

இந்த வருட இறுதிக்குள் அது இறுதி செய்யப்பட்டு சைப்ரஸின் தலைமையின் போது அமல்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.

சைப்ரஸ் சர்ச்சை என்பது என்ன?

சைப்ரஸ் தெற்கில் துருக்கி, மேற்கில் சிரியா மற்றும் வடமேற்கில் இஸ்ரேலும் அமைந்துள்ள ஒரு மத்திய தரைக் கடல் தீவு.

துருக்கி மற்றும் கிரேக்க இன மக்கள் இங்கு வசிக்கின்றனர், அவர்களுக்கு இடையில் நீண்ட காலமாக இன ரீதியான மோதல் இருந்து வருகிறது.

1974ஆம் ஆண்டில் கிரேக்க கிளர்ச்சியாளர்களின் கலகத்தைத் தொடர்ந்து துருக்கி ராணுவம் இந்த தீவின் மீது படையெடுத்தது.

அதன் பின்னர், சைப்ரஸின் புகழ்பெற்ற வரோஷா நகரை துருக்கி தனது கட்டுப்பாட்டில் எடுத்தது. ஒரு காலத்தில் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்த பல அடுக்கு மாடி கட்டடங்களைக் கொண்ட இந்த நகரம் கடந்த 51 ஆண்டுகளாக வெறிச்சோடி கிடக்கிறது.

இந்தப் பகுதியில் துருக்கி தனது 35 ஆயிரம் ராணுவ வீரர்களை பணியில் அமர்த்தியுள்ளது.

இந்தச் சம்பவத்திலிருந்து, இந்த தீவு இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கிறது. துருக்கி சைப்ரசைச் சேர்ந்தவர்கள் தங்களது பகுதி நிலத்தை ஒரு தனி நாடாக அறிவித்துள்ளனர். இதை துருக்கி மட்டுமே அங்கீகரித்துள்ளது.

அதே நேரம், கிரேக்க சைப்ரஸ் அரசு ஐக்கிய நாடுகள் மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீவை ஒருங்கிணைக்க ஐக்கிய நாடுகள் நீண்ட காலமாக முயன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதில் ஐநா இதுவரை குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை.

எர்டோகனின் சைப்ரஸ் திட்டமும், இஸ்ரேலும்

2021ஆம் ஆண்டில் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றி பேசினார். அப்போது, "சைப்ரஸின் பிரச்சினை இன்று உங்கள் தோள் மீது விழுந்துள்ளாது. அது எதிர்காலத்திலும் உங்கள் தோளில் நிலைத்திருக்கும்."

"அங்கு இரண்டு சமூகங்களும், சம அந்தஸ்து கொண்ட இரண்டு நாடுகளும் இருக்கின்றன என்பது ஏற்றுக்கொள்ளப்படாத வரையில் சைப்ரஸ் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது." என்றார்.

எர்டோகனின் இந்த கூற்றுக்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது. சைப்ரஸுக்கு தனது முழு ஆதரவு இருப்பதாக இஸ்ரேல் வலியுறுத்தி கூறிவருகிறது.

சைப்ரஸுக்கு இஸ்ரேல் ஆதரவு அளித்து வருவதால், அதற்கும் துருக்கிக்கும் இடையே மோதல் ஏற்படும் அச்சமும் அதிகரித்துள்ளது.

அதே நேரம், வெளிநாட்டு படைகள் சைப்ரஸில் இருந்து விலக்கிக் கொள்ளப்படவேண்டும் என்பது உள்ளிட்ட சைப்ரஸ் குறித்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை பின்பற்றும்படி இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இதைத் தவிர வடக்கு சைப்ரஸ் மீது துருக்கி எடுத்த நடவடிக்கைகளுக்கு இந்தியா பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு வேறு ஏதேனும் நோக்கங்கள் உள்ளனவா?

ஆனால் நிபுணர்கள் பிரதமர் மோதியின் சைப்ரஸ் பயணத்தை துருக்கியைக் கடந்தும் பார்க்கிறார்கள். மோதியின் சைப்ரஸ் பயணத்திற்கு (IMEC) எனப்படும் இந்தியா- மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார பாதையோடும் தொடர்புஇருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

"ஜி-7க்கு முன்பாக நரேந்திர மோதி சைப்ரஸ் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்." என ராயல் யுனைடெட் சர்வீஸஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் டிபென்ஸ் ஆண்டு செக்யூரிட்டி ஸ்டடிஸ் அமைப்பில் இணை உறுப்பினராக உள்ள சாமுவேல் ரமணி சமூக ஊடக தளமான எக்ஸில் பதிவிட்டார்.

மோதியின் சைப்ரஸ் பயணம் துருக்கி- பாகிஸ்தான் உறவுக்கு ஒரு பதிலடியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இது அதையும் தாண்டிச் செல்கிறது. சைப்ரஸ் உடனான நல்ல உறவு IMEC-க்கான ஆதரவாக இந்தியா பார்க்கிறது. இஸ்ரேல்- சைப்ரஸிடமிருந்து எரிசக்தி எடுப்பதற்கான சாத்தியக்கூறையும் இந்தியா பார்க்கிறது.

இதற்கிடையே, கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் IMECயில் ஆர்வம் கொண்ட பத்திரிகையாளர் பால் ஆண்டோனோபெளலோஸ் (Paul Antonopoulos), இந்தியா துருக்கி இடையேயான பதற்றமான உறவுக்கு பிரதமர் நரேந்திர மோதியின் சைப்ரஸ் பயணம் முக்கியமானது என விவரித்துள்ளார்.

சமூக ஊடக வலைதளமான எக்ஸில், "பிரதமர் மோதியின் சைப்ரஸ் பயணம், 1983-ல் இந்திரா காந்தி, மற்றும் 2002-அடல் பிகாரி வாய்பாஜ்க்கு பிறகு சைப்ரஸுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முன்றாவது பயணமாகும். இந்தியா-துருக்கி இடையே பதற்றமான உறவு இருக்கும் நிலையில் இது முக்கியமானது." எனப் பதிவிட்டுள்ளார்.

புவிசார் அரசியல் நிபுணரான பிரனாய் சேட்டர்ஜி சமூக ஊடக தளமான எக்ஸில் வெளியிட்ட பதிவில், " பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவளித்த நிலையில் பிரதமர் மோதி சைப்ரஸிற்கு பயணம் மேற்கொள்கிறார். துருக்கியுடன் நீண்ட மோதல் வரலாற்றை கொண்ட நாடு சைப்ரஸ். அது இந்தியாவிற்கு வலுவான ஆதரவை தெரிவித்துள்ளது." என்றார்

சர்வதேச அரசியல் நிபுணரான கோகுல் ஷானியும் சைப்ரஸை இந்தியாவை ஆதரிக்கும் நாடு என விவரித்துள்ளார்.

"சைப்ரஸ் மற்றும் கிரீஸ் இரண்டு நாடுகளும் பயங்கரவாதம், காஷ்மீர், ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம், 1998 அணு ஆயுத சோதனை உள்ளிட்ட முக்கியப் பிரச்சனைகளில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன," என அவர் சமூக ஊடக தளமான எக்ஸில் பதிவிட்டார்.

ஆனால், பிரதமர் மோதியின் பயணத்தை துருக்கியுடனான பதற்றமான உறவுகள் என்ற கோணத்தில் மட்டும் பார்க்க முடியாது என்கிறார் சாமுவேல் ரமணி.

மேலும் அவர், "இது இஸ்ரேல்- சைப்ரஸ்- கிரேக்க முத்தரப்பு ஒத்துழைப்புக்கு நீளலாம். IEMC-க்காக பதிக்கப்படும் கேபிள்களுக்கு தேவையான மின்சாரத்தை இஸ்ரேல் வழங்கலாம். கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் இந்தியாவின் திட்டம் துருக்கிக்கு எதிரான ஒரு புகார் மட்டும் அல்ல" என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு