You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பணப் பிரச்னையை தாண்டி விமானப் பணிப்பெண்ணாகி சாதித்த மகளை இழந்து வாடும் குடும்பம்
"மிகவும் இக்கட்டான சூழலுக்கு மத்தியில் அவள் படித்து விமான பணிப்பெண் வேலைக்குச் சென்றாள். இந்த விபத்து எங்களை வெகுவாக பாதித்துள்ளது."
மைதிலி பாட்டீலின் நெருங்கிய நண்பர் ஒருவர் பிபிசி மராத்தியிடம் தெரிவித்த வார்த்தைகள் இவை.
ஆமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை நேரிட்ட விமான விபத்தில் பலியானவர்களில் மைதிலியும் ஒருவர்.
ஏர் இந்தியா விமானத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் உட்பட 242 பேர் பயணம் செய்தனர். விபத்தில் 241 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.
அந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் மொத்தம் 12 பேர் இருந்தனர். அதில் இருவர் விமானிகள்.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட தகவல்களின் படி விமானத்தை இயக்கிய விமானிகளின் பெயர்கள் கேப்டன் சுமித் சபர்வால் மற்றும் க்ளைவ் குந்தர்.
'விமான பணிப்பெண்ணாகும் கனவு இருந்தது'
மைதிலி மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் நாவா கிராமத்தைச் சேர்ந்தவர்.
ஜூன் 11-ஆம் தேதி அன்று மும்பையில் இருந்து ஆமதாபாத்திற்கு பணிக்காக வந்தார். அவர் இந்தியாவில் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா 171 என்ற விமானத்தில் ஜூன் 12-ஆம் தேதி பணியில் ஈடுபட்டார்.
விமானம் விபத்துக்குள்ளான செய்தி வெளியே வந்தவுடன் மைதிலியின் குடும்பத்தினர் மிகவும் கவலையடைந்தனர். மைதிலியின் நிலைமை குறித்து எந்த தகவலும் வராத சூழலில் அவரின் குடும்பத்தார் ஆமதாபாத்திற்கு சென்றனர்.
மைதிலியின் குடும்பத்தில் அவருடைய பெற்றோர், இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி உள்ளனர். மைதிலி மூத்த பெண் ஆவார். 12-ஆம் வகுப்பு வரை அவருடைய கிராமத்தில் இருந்த டி.எஸ். ரெஹ்மான் பள்ளியில் பயின்றார். சிறு வயதில் இருந்தே அவருக்கு விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற கனவு இருந்தது.
பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய சூழலில் இருந்தது அவருடைய குடும்பம். மிகவும் இக்கட்டான சூழலில் படித்து முடித்துவிட்டு பிறகு ஏர் இந்தியாவில் பணியாற்ற ஆரம்பித்தார்.
'மைதிலியின் குடும்பத்தினருக்கு அரசு ஆதரவு அளிக்க வேண்டும்'
நாவா கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரும், அவரது உறவினருமான ஜித்தேந்திர மத்ரே, பிபிசி மராத்தியிடம் பேசிய போது, "மிகவும் குறைவான வசதிகளைக் கொண்டு படித்த அவர் விமானப் பணிப்பெண்ணாக மாறினார். மைதிலியின் இறப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் ஆமதாபாத் சென்றோம். மைதிலி திரும்பி வரப் போவதில்லை. ஆனால் அவரின் குடும்பத்திற்கு ஆதரவு தேவைப்படுகிறது. அரசும் நிர்வாகமும் அந்த ஆதரவை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்," என்று கூறினார்.
மைதிலி படித்த பள்ளியின் முதல்வர் டெய்ஸி பால், 'மைதிலி அமைதி, அறிவு மற்றும் மகிழ்ச்சி நிறைந்த மாணவியாக இருந்தார்' என்று நினைவு கூறுகிறார்.
முன்னாள் மாணவர்களின் சந்திப்பிற்காக, 2 மாதங்களுக்கு முன்பு, பள்ளிக்கு வந்த மைதிலி , மாணவர்களிடம் இந்த பிரிவில் இருக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடியதாக கூறுகிறார் டெய்ஸி.
அவருடைய அப்பா மோரேஷ்வர் பாட்டீல் ஒப்பந்த அடிப்படையில் ஓ.என்.ஜி.சியில் பணியாற்றி வந்தார். அவருடைய அம்மா குடும்பத் தலைவியாக இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு மோரேஷ்வருக்கு உடல் நிலை மோசம் அடைந்ததால் அவரால் தொடர்ச்சியாக வேலைக்கு செல்ல இயலவில்லை.
பணியில் இருந்து அவர் விலகிய நிலையில் குடும்பத்திற்கு நிலையான வருமானம் இல்லாத நிலை இருந்தது. இந்த சூழலில் பணிக்குச் சேர்ந்த மைதிலி பாட்டீல் குடும்பத்தின் மொத்த நிதி சுமையையும் சுமந்து கொண்டிருந்தார். தற்போது மைதிலியும் இல்லாத நிலையில் அவருடைய குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
விபத்து எப்போது நடந்தது?
கடந்த வியாழக்கிழமை ஏர் இந்தியா விமானம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே விபத்தில் சிக்கியது.
விமானம் அருகில் இருந்த விடுதி ஒன்றில் மோதியது. பிபிசியிடம் பேசிய மருத்துவமனை ஊழியர், "இந்த விபத்துக்குப் பிறகு, கரும்புகை எங்கும் பரவியது. உயிரிழந்த உடல்கள் ஆங்காங்கே கிடந்தன. 2001-ஆம் ஆண்டு ஏற்பட்ட குஜராத் நிலநடுக்கத்தை இந்த விபத்து நினைவுப்படுத்தியது," என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
டாடா குழுமம் தன்னுடைய கவலையை வெளிப்படுத்தியுள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கான முழு சிகிச்சை செலவையும் ஏற்பதாக டாடா குழுமம் கூறியுள்ளது. விமானம் மோதியதில் சேதமடைந்த பி.ஜே. மருத்துவக் கல்லூரியின் விடுதிக் கட்டடத்தைக் கட்டித் தரவும் டாடா குழுமம் முன்வந்துள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு