You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒன்றாக வாழும் ஆசையோடு லண்டன் புறப்பட்ட மருத்துவர் குடும்பம் - ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த சோகம்
- எழுதியவர், மோஹர் சிங் மீனா
- பதவி, பிபிசி இந்திக்காக.
- இருந்து, ஜெய்பூரிலிருந்து
குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து பல உயிர்களை பறித்துக்கொண்டது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் புகைப்படம் (மூன்று குழந்தைகளும், மருத்துவர்களான பெற்றோரும் இருக்கும் செல்ஃபி) சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
ஒன்றாக வாழவேண்டும் என்ற தங்களது கனவை பூர்த்தி செய்வதற்காக பல வருடங்களுக்குப் பிறகு பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்து கொண்டிருந்த குடும்பம் இது.
விமானம் புறப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட இந்த செல்ஃபி அவர்களது குடும்பத்துக்கு இறுதி நினைவாக அமைந்துவிட்டது.
இந்த கொடூர விபத்தில், மருத்துவர் பிரதிக் ஜோஷி, அவரது மனைவி மருத்துவர் கெளமி வியாஸ், அவர்களது எட்டு வயது மகள் மிரயா, ஐந்து வயது இரட்டை மகன்கள் பிரத்யுத் மற்றும் நகுல் உயிரிழந்தனர்.
பிரதிக் ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
ராஜஸ்தானில், குஜராத் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பன்ஸ்வாரா மாவட்டத்தை சேர்ந்த பிரதிக் ஜோஷி ஒரு கதிரியக்க நிபுணராவார் (radiologist). அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக பிரிட்டனில் தங்கியிருந்து ராயல் டெர்பி மருத்துவமனையில் கதிரியக்க நிபுணராகப் பணியாற்றி வந்தார்.
நோயியல் மருத்துவரான அவரது மனைவி, கெளமி வியாஸ் உதய்பூரில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் இணை பேராசிரியராக இருந்தார். அவர் ஒரு மாதத்துக்கு முன்பு பதவி விலகி, விபத்து நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் கல்லூரியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.
"பிரதிக்கும், கெளமியும் சுமார் பன்னிரெண்டு வருடங்கள் திருமண வாழ்வில் இணைந்திருந்தனர். அவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகளும், ஐந்து வயதான இரட்டை மகன்களும் இருந்தனர்," என ஆமதாபாத்தில் இருக்கும் பிரதிக் ஜோஷியின் உறவினரான மருத்துவர் சின்டன் ஜோஷி பிபிசிக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
"பிரதிக்கின் தந்தையான ஜெய்பிரகாஷ் ஜோஷி ஒரு கதிரியக்க நிபுணர் மற்றும் தாய் அனிதா ஜோஷி ஒரு பொதுநல மருத்துவர். அவர்கள் பன்ஸ்வாராவிலேயே மருத்துவம் பார்த்து வருகின்றனர், பிரதிக்குக்கு எம்.பி.ஏ முடித்த ஷுபி ஜோஷி என்ற இளைய சகோதரி இருக்கிறார்"
விபத்து ஏற்பட்டது முதல் மருத்துவர் கெளமி வியாஸின் இளைய சகோதரர் பிரபுத் ஆமதாபாத்தில் இருக்கிறார். அவரது சகோதரியின் குடும்பத்தை இழந்த பின்னர் மிகவும் சோகமான குரலில் தொலைபேசி மூலம் பிபிசியிடம் பேசுகையில், "நாங்கள் மூன்று பேர் உடன்பிறந்தவர்கள், கெளமி அக்காதான் மூத்தவர். அவரது மூன்று குழந்தைகளும் பள்ளி சென்றுகொண்டிருந்தனர்." எனத் தெரிவித்தார்.
கெளமி வியாஸின் பெற்றோர் தற்போது ஓய்வு பெற்றுவிட்டனர். அவரது தந்தை பொதுப்பணித்துறையில் பொறியாளராக இருந்தார், அவரது தாய் ஜிகுன்ஜ் வியாஸ்அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்தார். தற்போது அவர்கள் பன்ஸ்வாராவில் வசிக்கின்றனர்.
டிஎன்ஏ பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பு
பிரதிக் ஜோஷி மற்றும் கெளமி வியாஸின் உறவினர்கள் உட்பட பலர் தங்களது குடும்பங்களை ஆமதாபாத்திலிருந்து லண்டனுக்கு வழியனுப்ப வந்திருந்தனர்.
இப்போது தங்களது அன்புக்குரியவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக இவர்களின் உறவினர்கள் தங்களது டிஎன்ஏ மாதிரிகளை கொடுத்துவிட்டு அறிக்கைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
"அடையாளம் காண்பதற்காக எங்களது குடும்பத்தின் டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டுள்ளது. அறிக்கை வருவதற்கு 72 மணி நேரம் வரை ஆகலாம் என எங்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. தற்போது நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்." என கெளமி வியாஸின் சகோதரர் பிரபுதா பிபிசியிடம் தெரிவித்தார்.
மேலும் அவர், "சில ஆவணங்கள் கிடைக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஃபோரன்சிக் புலனாய்வுக்காக எங்களிடம் சில ஆதாரங்கள் கேட்கப்பட்டன, அவற்றை நாங்கள் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளோம். அந்த மொத்த நடவடிக்கையும் முடிவடைவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்."
"எங்களுக்கு தொடர்ந்து தொலைபேசி மூலம் தகவல்கள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. நாங்கள் டிஎன்ஏ மாதிரிகளை முதல் நாளிலேயே கொடுத்துவிட்டோம்." என்றார்.
இறப்பு குறித்த செய்தியை எவ்வாறு எதிர்கொண்டனர்?
பன்ஸ்வாரா தவிர பிரதிக் ஜோஷிக்கு ஆமதாபாத்திலும் ஒரு வீடு உள்ளது. அவர் ஆமதாபாத்துக்கு பன்ஸ்வாராவிலிருந்து குடும்பத்துடன் ஒரு நாள் முன்னதாக வந்திருந்தார். அங்கிருந்து அவர் குடும்பத்துடன் லண்டன் செல்லவிருந்தார்.
"அவர்கள் இருவரும் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து பேக்கிங் செய்தனர். அவர்களை வழியனுப்ப நாங்கள் அனைவரும் விமானநிலையம் சென்றோம்." என சிண்டன் ஜோஷி தெரிவித்தார்.
நாங்கள் விமானநிலையத்திலிருந்து திரும்பி சுமார் அரை மணி நேரம்தான் ஆகியிருக்கும், அதன் பின்னர், விபத்து குறித்த தகவல்கள் வரத்தொடங்கின. மக்கள் எங்களை அழைத்து விசாரிக்கத் தொடங்கினர், அதன் பின்னர்தான் விபத்து குறித்து எங்களுக்கு தெரியவந்தது எனக் கூறுகிறார் சிண்டன் ஜோஷி.
விபத்து பற்றிய செய்தியை ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டதாக பிரபுதா தெரிவிக்கிறார், "விமானநிலையத்திலிருந்து கிளம்பிய சிறிது நேரத்துக்கு பிறகு, விமான விபத்து பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியது, விபத்து குறித்த செய்தி எங்களுக்கு ஊடகங்கள் மூலம் தெரியவந்தது. நாங்கள் உடனே விமானநிலையத்துக்கு திரும்பினோம். அங்கு ஒரு கூச்சல் குழப்பமான சூழல் இருந்தது." என்றார் அவர்.
விமான விபத்தில் இறப்புகள் குறித்த தகவல் கிடைத்தவுடன், பன்ஸ்வாரா மாவட்ட ஆட்சியர் இந்திரஜித் சிங் யாதவ் மற்றும் காவல்துறை கண்காணிப்பளர் ஹர்ஷ்வர்த்தன் அகர்வால் அவரது வீட்டை அடைந்தனர்.
லண்டனில் குடியேற திட்டமிட்ட குடும்பம்
மருத்துவர் பிரதீக் பிரிட்டனில் அவருடைய குடும்பத்துடன் குடியேற விரும்பினார்.
தனது குடும்பத்துடன் பிரிட்டனில் குடியேற மருத்துவர் பிரதீக் ஜோஷி பல வருடங்களுக்கு முன்னரே தீர்மானித்திருந்தார்.
அவர் எஃப்ஆர் சிஎஸ் உட்பட பல மருத்துவ தேர்வுகளில் வெற்றி பெற்று இந்தியாவில் பல முன்னணி மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார். ஆனால் தன்னுடைய கல்வி மற்று தகுதிக்கு உரிய நியாயம் செய்ய வேண்டும் என தனது உறவினரான சிண்டன் ஜோஷியிடம் அடிக்கடி சொல்லி இருக்கிறார்.
"கொரோனாவுக்கு முன்னர்கூட அவர் லண்டனில் கிட்டத்தட்ட ஒரு வருடம் தங்கியிருந்தார். அவர் தனது குடும்பத்துடன் அங்கு குடியேற முடிவு செய்திருந்தார். ஆனால் பல காரணங்களால் அவர் இந்தியாவுக்கு திரும்பி வந்தார். அதன் பின்னர் அவர் மீண்டும் லண்டன் சென்று அங்கு கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்தார்." என சிண்டன் தெரிவித்தார்.
தனது குழந்தைகள் நிலையான சூழலில் ஒரே இடத்தில் வளரவேண்டும் என பிரதீக் விரும்பினார், அதனால் அவர் லண்டனில் நிரந்தரமாக குடியேற விரும்பினார்.
நாங்கள் எங்களது குடும்பத்துடன் அங்கு குடியேறவிருந்தோம். ஆனால் விதி வேறு விதமாக இருந்தது." என்றார் சிண்டர்.
"அவர் மிகவும் நல்ல குணம் கொண்டவர்"
கெளமி தனது வேலையை விட்டுவிட்டு பிரிட்டன் செல்லவிருந்தார்.
கெளமி வியாஸ் நோயியலில் எம்டி பட்டம் பெற்று உதய்ப்பூர் உம்ராடா பிஐஎம்சியில் இணை பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவர் பிரிட்டன் செல்வதற்காக தனது பணியை ராஜினாமா செய்திருந்தார்.
"அவர் ஒரு மாதத்துக்கு முன்பு ராஜினாமா செய்தார். ஒரு மாத நோட்டீஸ் காலம் திங்கள்கிழமை நிறைவடைந்தது. அவர் புதன்கிழமை லண்டன் சொல்லவிருந்தார்." என்கிறார் சிண்டன்
லண்டனுக்குக் குடியேறுவதை தள்ளிப் போடாமல் உடனே செல்ல வேண்டும் என கௌமி விரும்பியதாக சிண்டன் தெரிவிக்கிறார். மேலும் தெரிவிக்கையில், "லண்டனுக்கான விசா இறுதி செய்யப்பட்டு குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான நேரமும் நெருங்கிக்கொண்டிருந்தது. எனவே, அவரும் உதய்பூர் பிஐஎம்சியில் தனது வேலையை விட்டுவிட்டார். மேலும், ஒரு வருடம் கடப்பதை அவர் விரும்பவில்லை, எனவே உடனே இடம் மாற விரும்பினார்." என்றார்.
அவரது நோட்டீஸ் காலம் முடிந்தபின்னர், கெளமி வியாஸ் பிஐஎம்சியில் தன்னுடன் பணியாற்றியவர்களை சந்திக்க திங்கட்கிழமை சென்றார். அவர் உடன் பணியாற்றியவர்கள் அந்த நாளை நினைத்து வருந்துகின்றனர்.
பிஐஎம்சியில் அவருடன் பணியாற்றிய சக நோயியல் நிபுணரன மருத்துவர் நந்தனா மீனா, "மருத்துவர் கெளமி நம்முடன் இல்லை என்பதை எங்களால் இன்னமும் நம்பமுடியவில்லை. அவர் மிகவும் எளிமையான நட்பான நபர். அவர் திங்கட்கிழமை வந்திருந்தார், தனது குடும்பத்துடன் இருக்கப் போவது குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்," என பிபிசியிடம் தெரிவித்தார்.
பிஐஎம்சியில் கெளமியுடன் பணியாற்றிய மருத்துவர் ஜோதி, "லண்டன் செல்வதற்காக கெளமி வியாஸ் ஒரு மாதத்துக்கு முன் ராஜினாமா செய்திருந்தார். நிறுவன நடைமுறைப்படி ஒரு மாத நோட்டீஸ் காலத்தை நிறைவு செய்த பின்னர் அவர் திங்கள்கிழமை பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்." என்றார்.
"அவர் எம்டி நோயியல் நிபுணராக இங்கு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். இடைப்பட்ட காலத்தில் அவர் சிறிது காலம் தனது கணவருடன் இருக்க லண்டன் சென்றுவிட்டு திரும்பிய பின்னர் இங்கு தொடர்ந்து பணியாற்றினார்."
தனது முன்னாள் சகா கெளமியை நினைவுகூர்ந்த ஜோதி அவரைப் பற்றி குறிப்பிடுகையில், "அவர் மிகவும் நல்ல குணம் கொண்டவர். அவர் அனைவரையும் ஒரு புன்னகையுடன் எதிர்கொண்டார். நீண்ட காலத்துக்கு பிறகு மொத்த குடும்பமும் ஒன்றாக இருக்கும் என நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். பிரதிக் அவரை அழைத்துச் செல்ல லண்டனிலிருந்து வந்திருந்தார். ஆனால் இந்த சம்பவத்துக்கு பிறகு நாங்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறோம்." என்றார்.
"பிரதிக் ஜோஷி மிகவும் திறமைசாலி"
மருத்துவர் பிரதிக் ஜோஷியுடன் பிரிட்டனில் பணிபுரிந்த சிலருடன் பிபிசி செய்தியாளர் டேன் ஹண்ட் பேசினார்.
பிரிட்டனின் டெர்பி மற்றும் பர்டன் பல்கலைக்கழக மருத்துவமனைகள் என்ஹெச்எஸ் அறக்கட்டளை, "மருத்துவர் ஜோஷி மற்றும் அவரது குடும்பத்தினரின் மரணத்துக்காக அறக்கட்டளை மிகவும் வருந்துகிறது," என இரங்கல் தெரிவித்துள்ளது.
செய்தியை கேட்டபோது மிகவும் அதிர்ச்சியடைந்ததாக ஜோஷியுடன் பணியாற்றிய கதிரியக்க நிபுணர் மரியோ டிமிட்ரியோ டோனாடியோ பிபிசியிடம் தெரிவித்தார்.
மருத்துவர் பிரதிக் ஜோஷி "மிகவும் திறமைசாலி," என விவரித்தார். மே மாதத்தில் பிற கதிரியக்க நிபுணர்களுடன் இரவு விருந்துக்கு சென்றபோது மருத்துவர் ஜோஷி "மிகவும் மகிழ்ச்சியாக" இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தனது குடும்பத்தை பிரிட்டனுக்கு அழைத்து வந்து "வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குவதை" மிகவும் எதிர்நோக்கிக்கொண்டிருப்பதாக ஜோஷி தன்னிடம் சில நாட்களுக்கு முன்னர் கூறியதாக மருத்துவர் டோனாடியோ தெரிவித்தார்.
"அவர் எப்போதும் ஒரு மகிழ்ச்சியான நபராக இருந்தார், அவரது இயல்பு மிகவும் கவர்வதாக இருந்தது. அதைப் போன்ற மனிதர்களை இழப்பது உலகத்துக்கு மிகப்பெரிய இழப்பு," என்கிறார் மருத்துவர் டொனாடியோ.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு