You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முஸ்லிம், கிறிஸ்தவர் இரு தரப்புக்கும் மரணத்தை பரிசளித்த 'ஹசாசின்ஸ்' யார்? ஏன் கொன்றனர்?
- எழுதியவர், ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ
- பதவி, பிபிசி நியூஸ்
"முதியவர் ஒரு பெரிய பிரபுவைக் கொல்ல விரும்பும்போது, அவர் மிகவும் துணிச்சலான (...) இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை (...) அந்த பிரபு மறைந்தால், அவரைக் கொன்றவர்களுக்கு சொர்க்கம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சொல்லி அனுப்புகிறார்."
இந்த வார்த்தைகளுடன், வெனிஸ் நாட்டு ஆய்வாளர் மார்கோ போலோ தனது "புக் ஆஃப் வொண்டர்ஸ்" என்ற நூலில் பல தசாப்தங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கில் அவர் கண்டறிந்த விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அப்போது கிறிஸ்தவர்கள் மற்றும் முஹம்மது நபியைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் பயங்கரவாதத்தை பரப்பிய முஸ்லிம்களின் குழுவிற்கு தி ஹசாசின்ஸ் (The Hassassins) என்ற பெயரை அந்த நூலில் பயன்படுத்தினார்.
கொலைகாரன் என்ற முதல் வார்த்தையின் பொருள் என்னவென்றால், மற்றொரு நபரைக் கொல்லும் ஒருவரைக் குறிப்பிட அந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
இந்த உத்தரவுக்குக் காரணமான பெரிய தாக்குதல்களில் ஒன்று ஏப்ரல் 28, 1192 அன்று டயர் நகரில் (இன்றைய லெபனான்) நிகழ்ந்தது. அந்த நாளில், மூன்றாவது சிலுவைப் போரின் போது தலைவர்களில் ஒருவரான மான்ஃபெராட்டின் இத்தாலிய பிரபு கான்ராட், ஜெருசலேமின் மன்னராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருந்தார்.
இருப்பினும், கொண்டாட்டம் நடைபெறவில்லை. அக்கால வரலாற்றின் படி, இரண்டு தூதர்கள் ஒரு கடிதத்துடன் பிரபுவை அணுக முடிந்தது. அவர் அதைப் படித்துக் கொண்டிருக்கும்போது அந்தத் தூதுவர்கள் கத்திகளை எடுத்து அவரைக் குத்தினார்கள்.
இத் தாக்குதல் நடத்தியவர்களை யார் அனுப்பினார்கள் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை என்றாலும், அவர்கள் ஹசாசின்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டது. இது காலப்போக்கில் நாவலாசிரியர்கள், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர்களை ஊக்கப்படுத்தியது. மேலும் சமீபத்தில் ஹசாசின்ஸ் க்ரீட் வீடியோ கேம் சாகாவை உருவாக்கியவர்களையும் ஊக்கப்படுத்தியுள்ளது.
ஹசாசின்ஸ் யார்?
இந்த குழுவின் தோற்றம் கி.பி. 632 இல், முஹம்மது நபியின் மரணத்திற்குப் பிறகு, இஸ்லாம் சந்தித்த பிளவுகளுள் ஒன்று. அங்கு அவருக்குப் பிறகு இமாமாக (தலைவர்) யார் வர வேண்டும் என்பதில் வேறுபாடுகள் மற்றும் குளறுபடிகள் ஏற்பட்டதால், இன்று நாம் ஷியாக்கள் மற்றும் சன்னிகள் என்று அறியப்படும் பிரிவுகள் தோன்றின என மாட்ரிட் தன்னாட்சி பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய ஆய்வுகள் துறை பேராசிரியர், இக்னாசியோ குட்டரஸ் டீ டெரான் பிபிசி முண்டோவிடம் விளக்கினார்.
9 ஆம் நூற்றாண்டில் ஷியாக்கள் எண்ணிக்கையில் விரிவடைந்தனர். ஆனால் தலைமைத்துவத்தில் ஒரு புதிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பதுடன் இமாம் இஸ்மாயில் இப்னு ஜாஃபரின் பெயரில் இஸ்மாயிலிஸ்டுகள் என்ற ஒரு கிளை உருவானது.
இந்த கடைசி குழுவும் ஒரு பிளவுக்கு உட்பட்டது. அக்குழுவை யார் வழிநடத்துவது என்பது பற்றிய சர்ச்சைகள் எழுந்த போது நிஜார் என்ற இளவரசரைச் சுற்றி ஒரு சாரார் திரண்டனர். அவர் அலெக்ஸாண்டிரியாவில் (எகிப்து) ஆட்சியைப் பிடித்த பிறகு, அவரது இளைய சகோதரரின் சீடர்களால் கெய்ரோவில் படுகொலை செய்யப்பட்டார்.
இருப்பினும், கொலை செய்யப்பட்ட நிஜாரைப் பின்பற்றுபவர்கள், புதிய உத்தரவை ஏற்காமல், கிழக்கில் பாரசீகத்தை நோக்கி இடம்பெயர்ந்தனர். அங்கு அவர்கள் தங்கள் நம்பிக்கைகளைப் பரப்பினார்கள், அவை சன்னிகள் அல்லது ஷியாக்களால் சரியாகக் கவனிக்கப்படவில்லை.
நிஜாரிகள் கிரேக்க தத்துவம் மற்றும் எஸோதெரிசிசத்தின் கூறுகளை இஸ்லாத்தின் நடைமுறையில் இணைத்தனர்.
ஒரு துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க, இக்குழு மிஷனரிகளின் வலையமைப்பை உருவாக்கியது. இந்த பிரசங்கிகளில் ஒருவர் 11 ஆம் நூற்றாண்டில் ஹசன்-ஐ சப்பா என்ற இளம் பாரசீக நபர் ஒருவரைக் கடத்தினார். அவர் மதம் மாறி ஒரு இரகசிய சமூகத்தை உருவாக்கினார்: அந்த சமூகம் தான் ஹசாசின்கள்.
"அரேபியர்களின் இந்த காலனித்துவ முயற்சிக்கு நிஜாரிகள் ஒரு எதிர்வினை. இது மற்ற அரபு நீரோட்டங்களுடன் ஒப்பிடும் போது பாரசீக தன்னியக்கவாதம்" என்று செவில்லே பல்கலைக்கழகத்தின் (ஸ்பெயின்) இஸ்லாமிய ஆய்வுகளின் பேராசிரியர் எமிலியோ கோன்சாலஸ் பிபிசி முண்டோவிடம் விளக்கினார். .
"ஹசாசின்ஸ், அவர்களின் பங்கிற்கு, நிஜாரிகள் அனைவரையும் தீவிரமயமாக்கினர். இது ஒரு மத சாக்குப்போக்கு கொண்ட ஒரு சமூக நீரோட்டமாகும். இறுதியாக அழிக்கப்படுவதற்கு முன், அவர்கள் நினைக்கும் ஒரே விஷயம் ஒரு பயங்கரவாதக் குழுவாக மாறுவது," என்று நிபுணர் கூறினார்.
முஸ்லிம், கிறிஸ்தவர் இரு தரப்புக்கும் மரணத்தை பரிசளித்த ஹசாசின்ஸ் - ஏன் கொன்றனர்?
நிஜாரிகள் தங்கள் சொந்த நிலத்தை உருவாக்க முயன்றனர் ஆனால் அதில் தோல்வியடைந்தனர். பின்னர், ஹசன்-ஐ சப்பா பின்வாங்குவதற்கு இரானின் மலைகளைத் தேர்ந்தெடுத்தார் என்பதுடன் தெஹ்ரான் நகருக்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் எல்பர்ஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள அலாமுட் கோட்டையை கைப்பற்றினார்.
இந்தக் கோட்டை நிஜாரிகளிடம் இருந்த கோட்டை வலையமைப்பின் தலைமையிடமாக இருந்தது. மேலும், அதன் அதிகாரம் இன்றைய சிரியா மற்றும் லெபனான் வரை நீட்டிக்கப்பட்டது. அங்கிருந்து தான் அந்தப் பிரிவின் நிறுவனர், பின்னர் "மலையின் முதியவர்" என்று அறியப்படுகிறார். அவர் "இஸ்லாமிய நாடுகளில் அரசியலின் போக்கில் தீர்க்கமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முயன்றார் என விளக்கினார்.
அவரது இலக்குகளை அடைய ஹசன்-ஐ சப்பா உயர் பயிற்சி பெற்ற போராளிகளை உருவாக்கினார். முஸ்லீம் அரசுகள் மற்றும் வம்சங்கள் மற்றும் சிலுவைப்போர் பிரதேசங்களில் அவர் குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்க அவர்களைப் பயன்படுத்தினார்.
"அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற அனுமதிக்கப்படவில்லை அல்லது அதைக் கைப்பற்றவோ கட்டுப்படுத்தவோ அவர்களுக்கு வலிமை இல்லை. எனவே அவர்கள் அதை ஒரு சர்ஜிக்கல் தாக்குதல் மூலம் கையாண்டார்கள். அதாவது, அவர்கள் தப்பிக்க முடியுமா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் அங்கு சென்று ஒருவரைக் கொன்றுவிடுகிறார்கள்," என கோன்சாலஸ் ஃபெர்ரின் மேலும் கூறினார்.
ஹசன்-ஐ சப்பாவின் தலைமையிலான இயக்கம் பிரபலமானதோ அல்லது அனைவரின் வரவேற்பைப் பெற்றதோ அல்ல. மாறாக "அதிக அறிவுப்பூர்வமானது, அடிப்படைவாதத்தை உருவாக்கும் மதச் சார்பு கொண்டது," என்று வரலாற்றாசிரியர் விளக்கினார்.
ஹசன்-இ சப்பாவைப் பின்பற்றியவர்களைப் பற்றி பல செய்திகள் மற்றும் கட்டுக்கதைகள் உள்ளன. முஸ்லீம் ஆதாரங்களைப் பொறுத்தவரை அவருடைய உறுப்பினர்களை இழிவாகக் குறிப்பிடுகின்றன. அதன் உண்மையான பெயர் ஃபெடயீன் (மற்றவர்களுக்காகத் தங்களைத் தியாகம் செய்பவர்கள்) என்றாலும், அவர்கள் ஹாஷிஸ் என்ற போதைப் பொருளை உட்கொண்டவர்கள் என்பதால் அவர்கள் ஹஸ்ஸாஸின் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.
அவர்கள் ஏன் இப்படி அறியப்படத் தொடங்கினர்?
"ஹசன்-இ சப்பா பயிற்சியின் போது தனது போராளிகளிடம் சொர்க்கத்தைப் பற்றிக் கூறியதாகவும், பின்னர் போதைப்பொருள் இலைகளை உட்கொள்ள வைத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த இலைகளை மென்று தின்றோ, திரவப் பொருளாக்கிக் குடித்தோ அல்லது வேறு ஏதாவது ஒரு வகையிலோ உட்கொள்ள வைத்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின் அவர்கள் செய்ய வேண்டிய கொலைகளைச் செய்ய அவர் அவர்களுக்கு கட்டளையிட்டார்" என்று குட்டரஸ் டீ டெரான் கூறினார்.
இருப்பினும், இந்தக் கருத்து தவறானது என்றும், அக்குழுவினர் பயன்படுத்தும் தந்திரோபாயங்கள் மற்றும் அதை இழிவுபடுத்தும் முயற்சிகள் பற்றிய புரிதல் இல்லாததால் இது பரவியது என்றும் கோன்சாலஸ் ஃபெரின் நம்புகிறார்.
"அந்த போதைப் பொருளைப் பயன்படுத்திய பின் நீங்கள் கடைசியாகச் செய்ய விரும்புவது யாரையாவது கொல்ல வேண்டும் என்பது தான் என அக்குழுவில் இணைந்து பணியாற்றிய எவருக்கும் தெரியும்," என்றார்.
"அவர்கள் கமிசாக்களாக இருந்ததால், அவர்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. ஆனால் அப்படி இருந்தால் அது நிச்சயமாக ஹாஷிஷைத் தவிர வேறு ஒரு போதைப் பொருளாக இருந்திருக்கும்," என்று இந்த வரலாற்றாசிரியர் கூறினார்.
மேலும் பேசிய கோன்சாலஸ் ஃபெர்ரின், ஹசாசின் என்ற சொல்லுக்கு பின்னணியில் பிற சாத்தியமான சொற்பிறப்பியல்கள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்று "அடிப்படைவாதி" என்றும் கூறினார்.
விவசாயிகளின் குழந்தைகளை வாங்குதல் அல்லது கடத்துதல் ஆகியவை ஹசன்-ஐ சப்பாவும் அவரது வாரிசுகளும் போராளிகளின் அணிகளை வளர்க்கும் சில வழிகளாகும்.
ஆள் சேர்ப்பு செய்யப்பட்டவுடன், புதிய உறுப்பினர்களுக்கு கைகோர்த்து போரிடுவது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் தாக்குதல்களை நிறைவேற்றப் போகும் நகரங்கள் அல்லது நகரங்களின் மொழி, கலாசாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
"அவர்கள் ஒரு வகையான நிஞ்ஜாக்கள் (மரபுசாரா போர்க்கலைகளில் தேர்ச்சிபெற்றவர்கள்). மக்கள் மத்தியில் மறைந்தும், பதுங்கியும் செல்லத் தெரிந்த போராளிகள்,"என்று கோன்சாலஸ் ஃபெர்ரின் கூறினார்.
குட்டரஸ் டீ டெரான் இதேபோன்ற தகவலைத் தான் தெரிவித்தார். "அவர்கள் தங்கள் தாக்குதல்களைச் செய்யப் போகும் இடங்களில் வசிப்பவர்களின் மரபுகள் மற்றும் பேச்சு வழக்கு, நடத்தை போன்றவற்றைக் கூட அறிந்தவர்கள். மிகவும் நன்கு அறிந்த மற்றும் பண்பட்ட மக்கள்," என்று விவரித்தார்.
கொலையாளிகளின் துல்லியமான ஊடுருவல் திறன், அவர்களின் பிற திறன்களுடன் இணைந்து அவர்களை பிரபலமாக்கியதுடன் ஒரு அச்சத்தைத் தோற்றுவித்தது.
"அந்தக் கொலைகாரர்கள் சபிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுடன் தப்பி ஓடியவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் தங்களை விற்றுவிடுகிறார்கள். அவர்கள் மனித ரத்தத்திற்காக ஏங்குகின்றனர். அவர்கள் அப்பாவி மக்களை பணத்துக்காகக் கொல்கிறார்கள் என்பதுடன் அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை, ரட்சிப்பைப் பற்றி கூட," என்று அவர் தனது நூலில் எழுதியுள்ளார்.
ஆங்கிலோ-அமெரிக்கன் வரலாற்றாசிரியரான பெர்னார்ட் லூயிஸ், அவரது புத்தகமான "The Assassins: A Radical Sect of Islam"-ல், 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஜெர்மன் பாதிரியாரின் கதையை மேற்கோள் காட்டி இப்படி எழுதியுள்ளார்.
"பிசாசு போல- அவர்கள் ஒளியின் தேவதைகளாக உருமாறுகிறார்கள். அதே போன்ற தோற்றங்களை உருவாக்குகின்றனர். ஆடை, மொழிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் பல்வேறு நாடுகள் மற்றும் மக்களின் செயல்களைப் பற்றி அறிந்துகொள்கின்றனர். இவ்வாறு, செம்மறி ஆடுகளின் உடையில் மறைத்து செயல்படும் அவர்கள் அடையாளம் காணப்பட்டவுடன் மரணத்தை எதிர்கொள்கிறார்கள்," என ப்ரோகார்டஸ் என்று அழைக்கப்படும் மதத்தலைவரான லூயிஸின் கூற்றை மேற்கோள் காட்டி அவற்றை விவரித்தார்.
செவில்லே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், தனது பங்கிற்கு, இந்தக் குழுவின் உறுப்பினர்களை "வரலாற்றில் முதல் பயங்கரவாதிகள்" என்று விவரிக்கத் தயங்கவில்லை. ஏனெனில், அவர்களின் பல செயல்கள் பகல் நேரத்திலும், பொதுவெளியிலும் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டன.
"ஒரு கவர்னர் தனது துணையுடன் சந்தை வழியாகச் சென்றால், ஒரு கொலைகாரன் எங்கிருந்தோ தோன்றி, ஒரு கத்தியை எடுத்து கழுத்தை அறுப்பான். அதில் தான் உயிர் பிழைத்து வரமுடியுமா என்பது பற்றி அந்த கொலைகாரன் கவலைப்படுவதில்லை," என்று அவர் கூறினார்.
கொலையாளியின் மரணம் கூட விரும்பத்தக்கதாக இருந்தது. ஏனெனில் அவனது நடவடிக்கைகளின் அடிப்படை எப்போதும் ரகசியமாகவே இருந்தது என குட்டரஸ் டீ டெரான் மேலும் கூறினார்.
அக்குழுவின் உறுப்பினர்கள் தங்களைத் தியாகம் செய்யத் தயாராக இருக்க, ஹசன்-இ சப்பா அவர்களை மதபோதனைக்கு உட்படுத்தினார்.
மார்கோ போலோவின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்த ஏதுவாக அந்தக் கோட்டை அமைக்கப்பட்டிருந்தது.
"ஹசன்-இ சப்பா இரண்டு மலைகளுக்கு இடையில், ஒரு பள்ளத்தாக்கில், இதுவரை கண்டிராத மிக அழகான தோட்டத்தை கட்டினார். அதில் பூமியின் சிறந்த மரங்களும், பழங்களும் இருந்தன (...) தோட்டத்தின் மையத்தில் ஒரு நீரூற்று இருந்தது. அங்கு குழாய்களின் வழியாக மது, பால், தேன் மற்றும் தண்ணீர் அனுப்பப்பட்டது," என்று வெனிஸ் ஆய்வாளர் எழுதினார்.
"அவருடைய தோட்டத்திற்கு உலகின் மிக அழகான கன்னிப்பெண்களை அவர் அழைத்து வந்தார். அவர்கள் அனைத்து இசைக்கருவிகளையும் வாசிக்கத் தெரிந்தவர்கள் என்பதுடன் தேவதைகளைப் போல் பாடவும் தெரிந்துவைத்திருந்தனர். அங்கு அவர் தனது குடிமக்களை இது சொர்க்கம் என்று நம்ப வைத்தார்," என "புக் ஆஃப் வொண்டர்ஸ்" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய சாகசப் பயணி ஒருவரின் தகவலின், "கொலைகாரர்களாக மாறவிருந்தவர்களைத் தவிர, யாரும் அந்தத் தோட்டத்திற்குள் நுழையமுடியவில்லை.”
மார்கோ போலோவின் கூற்றுப்படி, ஹசன்-இ சப்பா, பயிற்சி பெற்ற போராளிகளை பழத்தோட்டத்தில் பாதுகாத்து வைத்து, அவர்கள் அங்குள்ள இன்பங்களை அனுபவிக்க வழிகளை ஏற்படுத்தினார்.
ஆயினும், தலைவர் ஒருவரைத் தண்டிக்க நினைத்தால், அவருக்கு போதைப் பொருள் கொடுத்து வெளியே அனுப்பிவிடுவார். பின்னர் அந்த நபர் போதை தெளிந்தபின், முகமதுவின் பிரசங்கங்களால் ஈர்க்கப்பட்ட அந்த "சொர்க்கத்திற்கு" மீண்டும் திரும்ப விரும்பினால், அவருக்கு ஒதுக்கப்பட்ட பணியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறுவார்.
இதனால் அவர்கள் தொடர்ந்து தங்களுக்கு அளிக்கப்பட்ட வேலைகளைச் செய்யத் தொடங்கினர். “யாரும் சொந்த விருப்பத்துடன் அந்த சொர்க்கத்தை விட்டு வெளியேற மாட்டார்கள்,” என போலோ குறிப்பிட்டுள்ளார்.
ஹசாசின்ஸ் என்ன ஆயினர்?
வடக்கிலிருந்து மங்கோலிய அடையாளத்துடன் ஒரு எதிரி அவர்களை அழிக்கும் வரை நிஜாரி அமைப்பினர் 166 ஆண்டுகள் செயல்பட்டு வந்தனர்.
"மங்கோலியர்கள் ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறினர். சிலுவைப்போர்களை விடவும் கூட அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். அவர்கள் மிகவும் காட்டுமிராண்டிகளாகவும், மேற்குலக எதிரிகளை விட நெருங்கிய இடத்திலிருந்து தாக்க முற்பட்டவர்களாகவும் இருந்தனர். எனவே, நிஜாரிகள் அவர்களுடன் சில வகையான உடன்பாடுகளை எட்ட முயன்றனர். ஆனால் அவர்கள் வெற்றிபெறவில்லை" என்று குட்டரஸ் டீ டெரான் விளக்கினார்.
அஞ்சிய செங்கிஸ் கானின் பேரன் ஹுலாகு கானின் வலிமைமிக்க ராணுவம், இதுவரை அசைக்க முடியாத கோட்டையின் மீது விரைந்து வந்து தாக்குதல் நடத்தி அதைத் தரைமட்டமாக்கியது. அந்தக் கொலையாளிகள் ஹுலாகு கானின் மாமா ஒருவரை கொன்றதாக அவர் நம்பியதாக சில தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் இது நடப்பதற்கு முன், பல முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் மற்றும் பிரபுக்கள் தங்கள் உயிர்களை அந்த குழுவினரின் கைகளில் இழந்தனர்.
கொலையாளிகளால் குறிவைக்கப்பட்ட பின்னும் உயிரைக் காப்பாற்ற முடிந்த ஒருவர் சுல்தான் சலாவுதீன். இஸ்லாத்தின் மிக முக்கியமான நபர்களில் அவர்கள் ஒருவர் என்பதுடன் 12 ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்களுக்காக ஜெருசலேமை மீட்டெடுத்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சலாவுதீன் உயிர் தப்பியது எப்படி?
"சலாவுதீன் சிலுவைப் போர்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொடர்ச்சியான பணிகளை மேற்கொண்டார். ஆனால் அந்த நோக்கத்தை அடைய அவர் சில முஸ்லீம் அரசுகள் மற்றும் ராஜ்ஜியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். அவை பெரும்பாலும் சிலுவைப் போர்களுக்கு ஆதரவாக இருந்தன. சலாவுதீனின் தொடர் பணிகளின் போது அவர் நிஜாரி கோட்டையான (இன்றைய சிரியாவில் உள்ளது) மஸ்யாஃபைக் குறிவைத்தார்," என்று குட்டரஸ் டீ டெரான் கூறினார்.
நிஜாரிகளின் பதில் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது என்பதுடன் 1185 இல் அவர்கள் அவரது வாழ்க்கையை முடிக்க கொலையாளிகளை அனுப்பினர்.
"கொலையாளிகள் சலாதீனின் முகாமிற்குள் அவரது வீரர்கள் போல் உடையணிந்து ஊடுருவினர். மேலும், அவரது கூடாரத்தில் நுழைந்து அவரைக் கொல்ல முயன்றனர். ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை "அவர் ஒரு பாதுகாப்பு மிக்க கவச உடை அணிந்திருந்ததால் அந்தக் கொலை முயற்சியில் அவர் உயிர் பிழைக்க முடிந்தது," என்று மாட்ரிட் தன்னாட்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கூறினார்.
9-வது சிலுவைப் போரில் பங்கேற்ற இங்கிலாந்தின் மன்னர் முதலாம் எட்வர்ட், 1272 இல் இந்த கொலைகாரக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியிலிருந்து தப்பினார்.
இந்த வகையான செயல்பாடுகள் மற்றும் அதற்கான பயிற்சிகளை காலப்போக்கில் அவர்கள் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கும் பெரும் தொகைகளைப் பெற்றுக்கொண்டு கற்றுக் கொடுத்தனர். இதன் மூலம், பல நூற்றாண்டுகளாக நீடித்திருக்கும் கொலைகாரர்களின் பிம்பத்தை உருவாக்கி நிலைநிறுத்த அவர்களால் முடிந்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)