You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண் தெய்வத்தின் சிலையை நிர்வாணமாக வடிவமைத்த கிரேக்க சிற்பி – அதன்பின் என்ன நடந்தது தெரியுமா?
- எழுதியவர், டாலியா வெஞ்சுரா
- பதவி, பிபிசி நியூஸ்
பண்டைய கிரேக்கத்தில் கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமாக விளங்கிய பிராக்சிட்டெல்ஸ் (Praxiteles) எனும் சிற்பி, பெண் தெய்வம் ஒன்றை 'ஆட்சேபகரமான' வகையில் நிர்வாண சிற்பமாக வடித்தார்.
மூன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக, ஆண்களின் உருவத்தை அவர்களின் எல்லா மகிமையிலும் பார்க்க பண்டைய உலகம் பழகியிருந்தது. அந்தவகையில், பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை மறைக்காமல் முழு உருவமும் நிர்வாணமாக வடிக்கப்பட்ட முதல் சிற்பமாக இது இருக்கலாம்.
பண்டைய கிரேக்கத்தின் பெண் தெய்வமான அஃப்ரோடைட்டின் (Aphrodite) சிலையை வடிவமைக்க கோஸ் தீவிலிருந்து அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
அந்தப் பெண் தெய்வத்தின் சிலையை இரு விதங்களில் வடிவமைத்தார் அவர். ஒரு சிலையில் காதல், அழகு, இன்பம் மற்றும் பேரார்வம் நிரம்பியிருந்தது.
மற்றொரு சிலையிலோ, அஃப்ரோடைட் ஒரு கையால் தன் அழியா அழகை மறைக்க வீண் முயற்சி செய்வது போன்றும், மறுகையால் ஆடை அல்லது துண்டு ஒன்றை பிடித்த வண்ணமும் இருந்தார்.
இந்தச் சிலையை கண்டு அதிர்ந்துபோன கோஸ் தீவு மக்கள், முதலில் குறிப்பிடப்பட்ட தெய்வீகமான சிலையை தங்கள் தீவுக்குக் கொண்டு சென்றனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அண்டை நகரமான சினிடோஸ்-ஐ சேர்ந்தவர்கள் நிர்வாண தெய்வத்தின் சிலையை கொண்டு சென்றனர். இந்த சிலை, கடல் பயணங்களின் போது பயணிகளை ஆசீர்வதிக்கும் என அவர்கள் நம்பினர்.
சிற்பக் கலையில் ஒரு புரட்சி
கலை ரீதியாக ஒரு பெண்ணின் உடலை நிர்வாணமாக பிரதிநிதித்துவப்படுத்தியது உண்மையில் ஒரு புரட்சி.
பெண்களின் அந்தரங்க உறுப்புகளை மறைக்கும் பாரம்பரியத்தை ப்ராக்சிட்டெல்ஸ் உடைத்துள்ளதாக கூறுகிறார், பண்டைய உலகம் குறித்த வரலாற்றாசிரியர் மேரி பியர்ட்.
“அந்தச் சிலையில் அஃப்ரோடைட் தன்னை அப்பட்டமாக நிர்வாணப்படுத்தி நம்மை ஆச்சர்யப்படுத்தவில்லை. மாறாக, தற்செயலாகத்தான் அவர் நிர்வாணமாக இருப்பது போன்று தோன்றும். அவர் குளிப்பதற்கு செல்லத் தயாராகியிருக்கலாம், அல்லது குளித்துவிட்டு அப்போதுதான் வந்திருக்கலாம். அவர் ஒருகையால் தன் அந்தரங்கத்தை அடக்கமாக மறைத்துள்ளார்,” என்கிறார் அவர்.
"தெய்வத்தை நிர்வாணமாகப் பார்க்க சிற்பி நமக்கொரு சாக்குப்போக்கு சொல்வது போன்று இருக்கிறது" என்று, 'தி இம்பேக்ட் ஆஃப் தி நியூட்' எனும் பிபிசி ஆவணப்படத்தில் பியர்ட் குறிப்பிடுகிறார்.
எனவே, "ஐரோப்பிய கலை வரலாற்றில் பெண்ணின் சிலைக்கும் ஆண் பார்வையாளருக்கும் இடையிலான குழப்பமான உறவை பிராக்சிட்டெல்ஸ் நிறுவியுள்ளார்," என்கிறார்.
கடல் தெய்வம்
‘ஆசியா மைனர்’ எனும் பகுதியின் தென்மேற்கில் உள்ள, அதாவது இப்போது நவீன துருக்கியின் டாட்சா தீபகற்பத்தில் உள்ள ஹெலனிக் (பண்டைய கிரேக்க) நகரமான அலெக்ஸாண்டிரியாவிலிருந்து ஏதென்ஸ் வரையிலான வர்த்தகப் பாதையின் மையத்தில் அமைந்திருந்த சினிடோஸின் மக்களுக்கு தைரியம் இல்லாமல் இருந்திருந்தால் இந்த சிற்பம் ஒருவேளை அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. மே முதல் செப்டம்பர் வரையிலான ஈகன் கடலில் (Aegean Sea) வீசும் பலத்த காற்றிலிருந்து கப்பல் மாலுமிகளை இந்த தெய்வம் காத்ததாக அவர்கள் நம்புகின்றனர்.
கடல் தெய்வம் என்ற அர்த்தத்தை உடைய அஃப்ரோடைட் யூப்ளோயா என்பது அவரது பெயராக இருந்தது. பாதுகாப்பான பயணங்களுக்காக மக்கள் அவரை வழிபட்டுள்ளனர். "அந்த தெய்வத்தின் உருவத்தை எல்லா பக்கங்களிலிருந்தும் பார்க்க அனுமதிக்கும் வகையிலும் அத்தெய்வத்தின் ஆசீர்வாதத்தை பெறும் வகையிலும் அவ்வாறு அச்சிலை வடிவமைக்கப்பட்டதாக அம்மக்கள் நம்பினர்" என, பண்டைய ரோமானிய எழுத்தாளர் பிளினி தி எல்டர் விவரித்துள்ளார். இந்த சிற்பம் பிராக்சிட்டெல்ஸுக்கு மட்டுமல்லாமல் உலகளவில் சிறந்த சிற்பம் என்பது அவரின் கூற்று.
அஃப்ரோடைட் சினிடியா பண்டைய உலகத்தைத் தனது அழகால் கவர்ந்தார்.
"கோஸ் தீவைச் சேர்ந்த அரசர் நிகோமெடிஸ், சினிடியாவை கடனிலிருந்து விடுவிப்பதாக உறுதியளித்து, அந்த சிலையை அங்கிருந்து வாங்க முயன்றார்" என, பிளினி தி எல்டர் தனது "நேச்சுரலிஸ் ஹிஸ்டோரியா" புத்தகத்தில் விவரித்தார்.
"ஆனால், சினிடியா மக்கள் அவர்களின் முடிவில் உறுதியாக இருந்தனர். ஏனெனில், அந்த சிலைதான் சினிடியாவை பிரபலமாக்கியது," என எழுதியுள்ளார்.
உலகிலேயே மிக அழகான சிற்பம் இதுவா?
இந்த சிலை காரணமாக அந்நகரம் பிரபலமான புனித யாத்திரை தலமாக மாறியது.
இச்சிற்பம் அக்காலத்தின் மிகவும் விரும்பத்தக்க ஒன்றாக விளங்கியதாக கருதப்படுகிறது.
"சிலையின் மீதுள்ள அன்பில் சில பார்வையாளர்கள் மூழ்கடிக்கப்பட்டதாக" பிளினி விவரித்தார்.
பண்டைய நகரமான சமோசட்டாவை சேர்ந்த சிரிய எழுத்தாளர் லூசியனுடன் தொடர்புடைய "Erōtes" அல்லது "Amores" எனும் தன் படைப்பில், உயர் அந்தஸ்து கொண்ட ஒருவர், அஃப்ரோடைட்டின் அழகில் மிகவும் கவரப்பட்டு, அந்த கோவிலில் முழு இரவையும் கழித்து, அச்சிலையுடன் உடலுறவில் ஈடுபட முயன்றதாக குறிப்பிட்டுள்ளார்.
அதை ஒரு காவலர் கண்டறிந்தபின் அவமானத்தில் அவர் ஒரு குன்றிலிருந்து கடலில் குதித்ததாக குறிப்பிடுகிறார்.
பளிங்கு கல்லில் உயிர்பெற்ற அச்சிலையின் தொடை அழகையும் பின்புறத்தின் பரிபூரணத்தையும், பாதி திறந்த வாயையும் புகழ்ந்து பலர் கவிதைகள் எழுதினர்.
அந்த சிற்பத்தைப் பார்க்க அஃப்ரோடைட் தெய்வம் தானே நிடோஸுக்குச் சென்றதாக ஒரு பாடல் வரிகள் கூறுகின்றன. "பாரிஸ், அடோனிஸ் மற்றும் அங்கைசீஸ் (கிரேக்க புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள்) என்னை நிர்வாணமாகப் பார்த்தார்கள். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். அப்படியானால் பிராக்சிட்டெல்ஸ் இதை எப்படி செய்தார்?" என அஃப்ரோடைட் கேட்பதாக அப்பாடல் வரிகள் கூறுகின்றன.
"பிராக்சிட்டெல்ஸ் எப்போது என்னை நிர்வாணமாகப் பார்த்தார்? பார்க்க தகாததை பிராக்சிட்டெல்ஸ் ஒருபோதும் பார்க்கவில்லை: அவருடைய கருவி தான் அஃப்ரோடைட்டை செதுக்கியது - ஏரெஸ் (அஃப்ரோடைட்டின் காதலன்) அதை விரும்புவார்" என, அஃப்ரோடைட் சொல்வது போன்று கிரேக்க தத்துவவியலாளர் பிளேட்டோ குறிப்பிட்டுள்ளார்.
பெண் உடலை `நாகரீகமின்றி` பிரதிநிதித்துவப்படுத்தியதன் மூலம் பாரம்பரியத்திலிருந்து விலகியதோடு, தெய்வங்களை தொலைவில் வைத்து கம்பீரமானவர்களாக காட்டாமல், அவர்களை உணர்வுபூர்வமாக மனித கிருபையை அவர்களுக்கு அளித்து அக்கலைஞர் தன் மேதைமையை வெளிப்படுத்தியுள்ளார்.
கலையில் உருவான தனி பாணி
பிராக்சிட்டெல்ஸின் வழிகாட்டுதலைப் பின்பற்றிய பல சிற்பிகள், பெண் அல்லது தெய்வத்தை ஆடையற்றவராக காட்டுவதற்கு இதுபோன்ற சாக்குப்போக்குகளை ஏற்றுக்கொண்டனர்.
இப்படி பெண்கள் நிர்வாணமாக, மற்றவர்களின் பார்வையில் இருந்து தங்களின் அந்தரங்க உறுப்புகளை மறைப்பது போன்று `போஸ்` கொடுத்து சிலைகள் அமைப்பது, ஓவியங்கள் வரைவது என தனி பாணியே உருவானது.
"பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கலை ஆர்வலர்கள் இத்தகைய தெய்வங்களால் ஈர்க்கப்பட்டனர்," என பியர்ட் குறிப்பிடுகிறார்.
அந்த கலைஞர்கள் தங்கள் சொந்த படைப்புகளில் அவற்றின் மீதான அபிமானத்தை வெளிப்படுத்தினர்.
ஆனாலும், பல நூற்றாண்டுகள் மற்றும் சமூக மாற்றங்களுடன் இத்தகைய பாணி தன் கவர்ச்சியை இழந்தது.
பெண் தன் நிர்வாண உடலை மறைக்க முயற்சிப்பது தொந்தரவு செய்வதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டத் தொடங்கினர்.
1863-ஆம் ஆண்டில், பிரெஞ்சு ஓவியர் எட்வார்ட் மானெட் இத்தகைய பாணியை உடைக்கும் அளவுக்கு நேரெதிரான ஓவியத்தை வரைந்தார்.
அதில், ஒலிம்பியா என்ற பெண் தன் நிர்வாண உடலை நோக்குபவர்களை எவ்வித வெட்கமும் இன்றி பார்ப்பது போன்று வரைந்திருப்பார். நிர்வாணம் அவரை பாதிக்கவில்லை. எந்த குறுக்கீடுகளையும் அவர் வெளிப்படுத்தவில்லை.
உங்கள் நிர்வாணம் உங்களின் முடிவு.
விலகாத மர்மம்
புகழ்பெற்ற இந்த அஃப்ரோடைட் சிலையின் அசல் காணாமல் போய்விட்டது. எப்படி என்று சரியாகத் தெரியவில்லை. அது கான்ஸ்டான்டினோப்பிலுக்குக் கொண்டு செல்லப்பட்டது அல்லது தீயில் அழிந்தது என்று நினைப்பவர்கள் உள்ளனர். ஆனால் அது ஒரு மர்மமாகவே உள்ளது.
அச்சிலை குறித்த விளக்கங்களை, அதன் நகல்கள் மூலமே நாம் அறிந்திருக்கிறோம்.
பல நூற்றாண்டுகளாக, பலர் அஃப்ரோடைட் சிலையை தங்கள் உடைமையாக்கிக் கொள்ள வேண்டும் என நினைத்திருக்கின்றனர்.
பல தலைமுறைகளாக கலைஞர்கள் நேர்மையான அதன் சாயல்களை பிரதியெடுத்துள்ளனர். ஆனால், அஃப்ரோடைட் மற்றொரு கையால் தன் மார்பை மறைப்பது போன்றோ அல்லது இருகைகளால் எதையும் மறைக்காதது போன்றோ விளையாட்டுத்தனமாகவும் சிலர் பிரதியெடுத்துள்ளனர்.
அவற்றில் சில இன்று அருங்காட்சியகங்களில் உள்ளன. வீனஸ் கொலோனா (வீனஸ் என்பது அஃப்ரோடைட்டின் ரோமானிய பெயர்), கேபிடோலின் வீனஸ், மெடிசி வீனஸ், பார்பெரினி வீனஸ், வீனஸ் டி மிலோ, போர்ஹீஸ் வீனஸ், கல்லிபிர்கோஸ் அஃப்ரோடைட் (அழகிய பின்புறத்தைக் கொண்ட அஃப்ரோடைட்) என, பல நகல்கள் உருவாகின.
அவற்றில் மூன்று நகல்கள்தான் இவை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)