'காளி’ சர்ச்சை போஸ்டர்: லீனா மணிமேகலையை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

பட மூலாதாரம், @LEENAMANIMEKALI
’காளி’ ஆவணப்பட சர்ச்சை போஸ்டர் தொடர்பான வழக்கில் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு எதிராக பிப்ரவரி மூன்றாம் வாரம் வரை கைது செய்வது உள்ளிட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்ன சர்ச்சை?
இயக்குநர் லீனா மணிமேகலை, தான் இயக்கிய ’காளி’ எனும் நிகழ்த்து ஆவணப்படத்தின் போஸ்டரை கடந்த ஆண்டு ஜூலை 2ஆம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அந்த போஸ்டரில் 'காளி' போன்று வேடமணிந்த பெண், தன் வாயில் சிகரெட்டுடன், கையில் பால்புதுமையினர் (LGBT) கொடியை பிடித்திருப்பது போன்று இருந்தது.
இந்த போஸ்டர் அந்த நேரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அந்த போஸ்டர் “இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக்” கூறி பல்வேறு தரப்பிலிருந்தும் அதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
மேலும், உத்தர பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் லீனா மணிமேகலைக்கு எதிராக எஃப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்பட்டது.
வழக்கு என்ன?
இதையடுத்து, தன் மீது பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இயக்குநர் லீனா மணிமேகலை மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
’காளி’ பட போஸ்டரை பகிர்ந்ததில் இருந்து தனக்கு கொலை, பாலியல் வன்புணர்வு மிரட்டல்கள் வருவதாகத் தன்னுடைய மனுவில் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக ஊடகங்களில் தனக்கு கொலை, பாலியல் வன்புணர்வு மிரட்டல் விடுக்கும் நபர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தன்னுடைய மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணைகளுக்கு உடனடி தடை விதிக்க வேண்டும் என்றும் எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டுமென்றும் அந்த மனுவில் லீனா மணிமேகலை தெரிவித்திருந்தார்.
எந்தவொரு தனிப்பட்ட நபர் அல்லது அமைப்பின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கம் தனக்குச் சிறிதும் இல்லை என லீனா மணிமேகலை அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
“அனைத்தையும் உள்ளடக்கிய தெய்வத்தையே” தன்னுடைய கற்பனை, கலை சுதந்திரம் ஆகியவற்றின் மூலம் ஓர் இயக்குநராக வெளிக்கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“தனக்கு எதிரான வழக்குகள், அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுள் ஒன்றான கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் மற்றும் வரம்பு மீறும் நடவடிக்கை” என லீனா மணிமேகலை தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?
இந்த வழக்கு இன்று (ஜன. 20) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, லீனா மணிமேகலை சார்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞர் காமினி ஜெய்ஸ்வால், மனுதாரர் லீனா மணிமேகலை கனடாவில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் படித்து வருபவர் என்றும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கம் அவருக்கு இல்லை என்றும் வாதாடினார்.
அவருடைய வாதத்தை ஏற்ற நீதிபதிகள், லீனா மணிமேகலையை பிப்ரவரி மூன்றாவது வாரம் வரை கைது செய்யக்கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், அவருக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகளில், லீனா மணிமேகலைக்கு எதிராக எவ்வித கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
”நாங்கள் உங்களை (கைது செய்யப்படுவதிலிருந்து) காத்துள்ளோம்” என உத்தரவில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவ்வழக்கில் டெல்லி, உத்தராகண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பட மூலாதாரம், @LEENAMANIMEKALI/TWITTER
யார் இந்த லீனா மணிமேகலை?
கவிஞர், ஆவணப்பட இயக்குநர், சுயாதீன திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்ட லீனா மணிமேகலை, பாலியல் - சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் ஈழப் போராட்டங்கள் குறித்தும் திரைப்படங்களையும் ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார்.
இவருடைய 'மாடத்தி', 'செங்கடல்' போன்ற திரைப்படங்கள் சர்வதேச கவனம் பெற்றுள்ளன. சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இவரது படங்கள் திரையிடப்பட்டுள்ளன. பல்வேறு சர்வதேச விருதுகளையும் லீனா மணிமேகலை பெற்றுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












