கிலியன் எம்பாப்பே: மெஸ்ஸியை தொட்டவர், ரொனால்டோவை முந்தியவர்

எம்பாப்பே

பட மூலாதாரம், Getty Images

அவருக்கு 23 வயதுதான் ஆகிறது. அதற்குள்ளாக பீலே, மாரடோனா, மெஸ்ஸி என கால்பந்து நாயகர்களின் சாதனைகளை முறியடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார் கிலியன் எம்பாப்பே.

கத்தாரில் போலாந்து அணியுனான கால்பந்து உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் இரண்டு கோல்களை அடித்து பிரான்சின் வெற்றிக்கு உதவினார். 

கத்தாரில் ஆடிக் கொண்டிருப்பது அவரது இரண்டாவது உலகக் கோப்பை போட்டி. இதில் மாத்திரம் இதுவரை 5 கோல்களை அடித்திருக்கிறார். 2018-ஆம் ஆண்டில் 19 வயது இளைஞராக உலகக் கோப்பை போட்டியில் 4 கோல்களை அடித்தார்.

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஒரு பதின்ம வயது இளைஞராக கோல் அடித்த பீலேவின் பெருமையை 2018-ஆம் ஆண்டில் அவர் பகிர்ந்து கொண்டார். 

எம்பாப்பே

பட மூலாதாரம், Getty Images

உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை அவர் அடித்திருக்கும் கோல்களின் எண்ணிக்கை 9. லியோனல் மெஸ்ஸி 5 உலகக் கோப்பை போட்டிகளில் அடித்த கோல்களின் எண்ணிக்கைக்கு இது சமம். 5 உலகக் கோப்பை போட்டிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த கோல்களைவிட ஒன்று அதிகம். 

மாரடோனா, நெய்மர், தியரி ஹென்றி போன்ற பெரிய நட்சத்திர வீரர்களைவிடவும் எம்பாப்பே அதிக கோல்களை அடித்துவிட்டார்.

இன்னும் அவர் முறியடித்திருக்கும் முறியடிக்கப் போகும் சாதனைகள் நிறையவே இருக்கின்றன.

எம்பாப்பே

பட மூலாதாரம், Getty Images

கத்தாரில் இதே வேகத்தில் ஆவர் ஆடினால் 24 வயதாவதற்கு முன்பே ஒரே உலகக் கோப்பை போட்டியில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெறக்கூடும். 

1959-ஆம் ஆண்டில் பீலேயும் 1978-ஆம் ஆண்டில் கெம்பஸும், 2014-ஆம் ஆண்டில் ஜெம்ஸ் ரொட்ரிகோவும் 6 கோல்களை அடித்தே இதுவரை சாதனையாக இருக்கிறது. எம்பாப்வே இப்போதே 5 கோல்களை அடித்துவிட்டார். இன்னும் காலிறுதி உள்ளிட்ட அடுத்த கட்டப் போட்டிகள் இருக்கின்றன.

எம்பாப்வேயின் அற்புதத் தொடுகை

அர்ஜென்டினாவின் மெஸ்ஸியின் கால்களுக்கு பந்து வந்ததும் அரங்கில் இருக்கும் அவரது ரசிகர்களும் வர்ணனையாளர்களும் எப்படி சிலிர்த்துக் குரல் எழுப்புவார்களோ, கிலியன் எம்ப்பாபேக்கும் அப்படியே நடக்கிறது. போலாந்துடனான போட்டியில் இதைக் காண முடிந்தது.

போலாந்து அணிக்கு எதிரான நாக்-அவுட் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெறும் என முன்னரே கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல் பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் பிரான்ஸை போலவே போலாந்து அணியும் அவ்வப்போது கோல்வலையை நெருங்கினார்கள். 

21-ஆவது நிமிடத்தில் போலாந்தின் நட்சத்திர வீரர் லெவன்டோவ்ஸ்கி கோலுக்கு மிக நெருக்கமாகப் பந்தை அடித்து பிரான்ஸுக்கு அதிர்ச்சியளித்தார். 38-ஆவது நிமிடத்தில் போலாந்து அணிக்கு கோல் அடிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது. 

எம்பாப்பே

பட மூலாதாரம், Getty Images

ஆனால் அதன் பிறகு பிரான்சின் தாக்குதல் ஆட்டம் மிகவும் வலிமையாக இருந்தது. 45-ஆவது நிமிடத்தில் எம்பாப்வே அற்புதமாகக் கடத்திக் கொண்டுவந்த பந்தை ஜிரோ எளிதாகக் கோலாக்கினார். இதன் மூலம் பிரான்ஸுக்காக அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

74-ஆவது நிமிடத்தில் கிலியன் எம்பாப்பே தனக்கே உரிய பாணியில் பொறுமையான அதே நேரத்தில் வலிமையான ஷாட் மூலம் மற்றொரு கோலை அடித்தார். 

அவர் பந்தைக் கடத்திய விதமும் அதைப் பொறுமையாக காலால் தொட்ட விதமும் வியந்து பேசப்பட்டன. இது உலகக் கோப்பை போட்டியில் அவர் அடித்த 8-ஆவது கோல்.

எம்பாப்பே

பட மூலாதாரம், Getty Images

90 நிமிடங்களில் கழிந்தபோது மற்றொரு கோலை அடித்து அரங்கத்தை அதிரவைத்தார் எம்பாப்பே. பெனால்ட்டி பாக்ஸுக்கு சற்று உள்ளே இருந்து அவர் அடித்த பந்து கோலின் வலது மேல் மூலைக்குள் புகுந்தது. 

இதன் மூலம் 3-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் முன்னிலை பெற்றது. கடைசியில் போலாந்து அணியால் பெனால்ட்டி மூலமாக ஒரேயொரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது.

காலிறுதிப் போட்டியில் பிரான்ஸும் இங்கிலாந்தும் மோத இருக்கின்றன.

எம்பாப்பே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2018-ஆம் ஆண்டு உலகக் கோப்பை நாக்அவுட் போட்டியில் அர்ஜென்டினாவை 4-3 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியது பிரான்ஸ்.

மெஸ்ஸியின் அணியை மிரள வைத்தவர்

2018-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் அணியும் அர்ஜென்டினா அணியும் மோதின. இந்தப் போட்டியில் கோப்பையை வென்றுவிடும் முனைப்பில் இருந்தது அர்ஜென்டினா.

ஆனால் போட்டியில் அர்ஜென்டினாவை 4-3 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியது பிரான்ஸ். இந்தப் போட்டியில் 19 வயது வீரராக களமிறங்கிய எம்பாப்பே இரண்டு கோல்களை அடித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். பிரான்ஸ் அணி முதல்கோலை அடிப்பதற்குக் காரணமாக இருந்து பெனால்ட்டி வாய்ப்பைப் பெற்றுத் தந்தவரும் அவர்தான்.

அந்தப் போட்டியின் மூலம் பீலேவுக்கு பிறகு உலகக் கோப்பை போட்டியின் ஒரே ஆட்டத்தில் இரண்டு கோல்களை அடித்த பதின்ம வயது வீரர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது. 

எம்பாப்பே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2018 உலகக் கோப்பை போட்டியில் 4 கோல்களை அடித்தார் எம்பாப்பே 

இறுதிப் போட்டியில் குரோஷிய அணிக்கு எதிராக மற்றொரு கோலை அடித்து, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பீலேவுக்குப் பிறகு கோல் அடித்த பதின்ம வயது வீரர் என்ற பெருமையையும் எம்பாப்பே பெற்றார்.

மொத்தமாக தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் 4 கோல்களை அடித்தார். 

காற்றைப் போல மிக வேகமாக ஓடி பந்தைக் கடத்திச் செல்வதுதான் எம்பாப்பேயின் சிறப்பு என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இரண்டு கால்களாலும் பந்தை உதைக்கும் திறன் கொண்டவர் அவர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: