டைட்டானிக் : நீர்மூழ்கியில் பத்திரிகையாளருக்கு நேர்ந்த திகில் அனுபவம் - உயிர் தப்பியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜரோஸ்லாவ் லுகிவ்
- பதவி, பிபிசி செய்திகள்
ஆழ்கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை நேரில் காண, ‘டைட்டன் நீர்மூழ்கி’யில் சென்ற சுற்றுலா பயணிகள் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், கடந்த 2000 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பலை நேரில் காண, நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்தபோது தமக்கு நேர்ந்த திகில் அனுபவத்தை நினைவுகூருகிறார் அமெரிக்க பத்திரிகையாளரான மைக்கேல் கில்லன்.
“ஆழ்கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் குறித்து தகவல்களை சேகரிக்கும் முதல் பத்திரிகையாளர் என்ற வாய்ப்பு எனக்கு கிடைத்ததால் அப்போது நான், மிகுந்த உற்சாகமாக இருந்தேன்” என்கிறார் டாக்டர் கில்லன்.
அப்போது தான் அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான ஏபிசி நெட்வொர்க்கில் அறிவியல் பிரிவு ஆசிரியராக இருந்ததாக பிபிசி ரேடியோ 4 க்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
கடலுக்கு அடியில் நீந்துவதில் நிபுணத்துவம் வாய்ந்த பிரையன் மற்றும் கப்பல் மாலுமியான விக்டர் ஆகியோருடன், ரஷ்யாவின் ‘அகாடமிக் எம்ஸ்டிஸ்லாவ் கெல்டிஷ்’ எனும் ஆராய்ச்சிக் கப்பலில் இருந்து கடலில் இறக்கப்பட்ட ஒரு சிறிய ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலில், டைட்டானிக் கப்பல் இருக்கும் இடத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம் என்று தமது திகில் அனுபவத்தை விவரிக்க தொடங்கினார் கில்லன்.
டைட்டானிக் கப்பலை சுற்றிப் பார்த்த குழுவினர், தங்களது பயணம் நன்றாக சென்று கொண்டிருந்ததாக உணர்ந்தனர். அதையடுத்து அவர்கள் அருகில் இருந்த கடற்பகுதிக்கு செல்ல முடிவு செய்தனர்.
சட்டென்று மாறிய சூழல்
ஆனால், அதன் பின்னர் தான் உயிர் தப்பிப்போமா என்று எண்ணும் அளவிற்கு கில்லன் குழுவினர் நெருக்கடியில் சிக்கினர்.
“கடுமையாக சேதமடைந்திருந்த டைட்டானிக் கப்பலின் பின்பகுதியை நாங்கள் அடைந்தபோது, கடலுக்கு அடியில் ஏற்பட்ட வேகமான நீரோட்டத்தில் சிக்கிக் கொண்டோம். அதன் விளைவாக, டைட்டானிக் கப்பலின் இயந்திர கழிவுகள் இருந்த பகுதிக்கு மேல் எங்களின் நீர்மூழ்கி கப்பல் தள்ளப்பட்டு மிதக்கும்படி ஆனது”
“அப்போது அங்கு திடீரென ஓர் விபத்து ஏற்பட்டது. அந்த மோதலை நாங்கள் உணர்ந்தோம். அதன்பின் சில நொடிகளில் டைட்டானிக் கப்பலின் துருப்பிடித்த இயந்திர கழிவுகள் எங்கள் மேல் விழ ஆரம்பித்தன” என்று 23 ஆண்டுகளுக்கு முன் தமக்கு நேர்ந்த டைட்டானிக் அனுபவத்தை நினைவுகூருகிறார் கில்லன்.
‘கதை முடிந்து விட்டதாக நினைத்தேன்’
கடலுக்கடியில் ஆபத்தில் சிக்கிக் கொண்டோம் என்று எங்களுக்கு பளிச்சென புரிந்தது. ரஷ்யாவின் மிக் ரக போர் விமானங்களை இயக்குவதில் வல்லமை வாய்ந்த விமானியான விக்டர், எங்களை நீர்மூழ்கிக் கப்பலில் கடலின் மேல்மட்டத்துக்கு கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தார்.
“நாம் பயணிக்கும் கார் சேற்றில் சிக்க நேரும்போது, அதில் இருந்து வெளியே வர முயற்சிப்பதை போன்று, நாங்கள் பயணித்த நீர்மூழ்கிக் கப்பலை மீண்டும் கடலின் மேல் பரப்பிற்கு கொண்டு வர விக்டர் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தார். அதனால் நாங்கள் அவரை தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருந்தோம்”
“விக்டரின் திறமையால், இறுதியில் ஒரு வழியாக எங்கள் நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் இருந்து வெளியே வந்தது. ஆனால் அதற்கு முன், சேதமடைந்த டைட்டானிக் கப்பலுக்கு அருகே நாங்கள் சிக்கிய அந்த திகில் நிறைந்த தருணத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது” என்று அதிர்ச்சியுடன் கூறுகிறார் கில்லன்.
“அவ்வளவுதான் எல்லாம் முடிந்துவிட்டது; இந்த உலகைவிட்டு விடைபெறும் நேரம் வந்துவிட்டது என்ற எண்ணம் எழவே, கடவுளே நாங்கள் இங்கிருந்து வெளியேற முடியுமா? என்ற கேள்வியுடன் எல்லோருக்கும் ‘குட்பை’ என்று என் மனதிற்குள் சொல்ல ஆரம்பித்தேன்.ஆனால் இறுதியில் அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு ஏதோ நிகழ்ந்தது. நாங்கள் கடல் நீரில் மிதப்பது போல உணர்ந்தோம் ” என்று தனது உயிர் போராட்டத்தை விவரிக்கிறார் அவர்.
இறுதியாக, “விக்டரை பார்த்து, நாம் தப்பித்துவிடுவோமா என்று பொருள்படும் படி, ‘ஓகேவா’? என்று நான் பயத்துடன் கேட்டேன். அதற்கு அவர், பிரச்சனை எதுவும் இல்லை என்று ரஷ்ய மொழியில் கூறிய வார்த்தையை கேட்ட பிறகே நான் நிம்மதி அடைந்தேன். ‘நோ ப்ராப்ளம்’ என்று விக்டர் சொன்னதை மறக்கவே முடியாது” என்று அவருடனான தனது டைட்டானிக் பயண அனுபவத்தை நினைவுகூருகிறார் மைக்கேல் கில்லன்.

பட மூலாதாரம், Google
இரண்டரை மணி நேர உயிர் போராட்டம்
“டைட்டானிக் கப்பலுக்கு அருகே எங்களின் நீர்மூழ்கி கப்பல் விபத்தில் சிக்கியபோது, இக்கட்டான அந்த சூழலில் இருந்து கடலின் மேற்பரப்புக்கு வர எங்களுக்கு இரண்டரை மணி நேரத்திற்கு மேல் ஆனது” என்கிறார் டாக்டர் கில்லன்.
கடலுக்கு அடியில் ஏற்படும் அபரிமிதமான நீர் அழுத்தத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பல்கள், 2000 ஆம் ஆண்டில் ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளிடம் மட்டுமே இருந்தன என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
கடலுக்கு அடியில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை ஒப்பிடும்போது, 7.8 மீட்டர் (28 அடி) நீளம் கொண்ட தங்கள் ரஷ்ய மிர் ரக நீர்மூழ்கி கப்பல் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று கூறும் கில்லன், டைட்டானிக் கப்பலின் உட்புறம் ஓர் மாளிகை போல காட்சியளிப்பதை அதன் படங்களை பார்த்தபோது உணர்ந்திருக்கிறேன் என்கிறார்.
தனக்கு தண்ணீரில் பயணிக்க பயமாக இருந்ததை ஒப்புக்கொள்ளும் அவர், சிதிலமடைந்த டைட்டானிக் கப்பல் குறித்து செய்தி சேகரிக்க கிடைத்த முதல் வாய்ப்பை தான் இழக்க விரும்பாததால், அந்தப் பயணத்தை தைரியத்துடன் மேற்கொண்டதாகவும் கூறுகிறார்.
கில்லன் குழு உயிர் தப்பியது எப்படி?
“நீ்ர்மூழ்கிக் கப்பலில் பயணிக்கும் போது என்னவெல்லாம் நேரலாம் என்பது குறித்து, டைட்டானிக் கப்பலை நோக்கிய பயணம் தொடங்குவதற்கு முன் எங்களுக்கு விவரிக்கப்பட்டது. மற்றொரு நீர்மூழ்கிக் கப்பல் நெருக்கடியில் சிக்கிய உண்மை சம்பவத்தின் போது நிகழ்ந்தவை குறித்தும் அப்போது விவரிக்கப்பட்டது.
அந்த குறிப்பிட்ட சம்பவத்தில், நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த முக்கியமான நபர் ஒருவர், கப்பல் நெருக்கடியில் சிக்கிய போது பதற்றம் அடைந்ததன் விளைவாக, கப்பலுக்குள் தண்ணீர் புக நேரிட்டதாகவும், அதன் காரணமாக அவர்களின் நிலைமை மேலும் மோசமானதாகவும் எங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது” என்று தங்களின் பயணத்தில் இருந்த ஆபத்து குறித்து முன்கூட்டியே விவரிக்கப்பட்டதையும் நினைவுகூருகிறார் மைக்கேல் கில்லன்.
“அந்த விஷயம் எனது மனதில் நன்றாக பதிந்திருந்தால், எங்களின் நீர்மூழ்கிக் கப்பல் நெருக்கடியை சந்தித்த போது நான் பீதியடையவில்லை. மாறாக குழுவில் யாரேனும் பயப்பட்டால் அந்த சூழலையும் சமாளிக்கும் அளவுக்கு விழிப்புணர்வுடன் இருந்தேன்”
“விழிப்புணர்வான அந்த மனநிலை தான் நெருக்கடியான சூழலில் இருந்து என்னை திசை திருப்பியது. அந்த தருணத்தில் வேறு எதைப் பற்றி சிந்திக்காமல் இருந்ததற்கு அப்போதைய எனது மனநிலை தான் முக்கிய காரணம்”
அதன் பின்னர், “கடலுக்கடியில் நாங்கள் சுவாசிப்பதற்காக கொண்டு சென்றிருந்த ஆக்சிஜன் இன்னும் எவ்வளவு நேரத்திற்கு வரும்? அது தீர்வதற்குள் அந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்? என்று ஒரு விஞ்ஞானியாக யோசிக்க தொடங்கினேன்” என்கிறார் அவர்.
“அந்த இக்கட்டான சூழலில் இருந்து எப்படி வெளிவருவது என்று யோசிக்க தொடங்கினேன். ஆனால், ஒரு கட்டத்தில் அந்த கடினமான நிலையில் இருந்து தப்பிக்க வாய்ப்பு மிகக் குறைவு என்று அறிந்தபோது, அந்த சூழலை மிகவும் மோசமானதாக உணர்ந்தேன்.
அப்போது என் மனதுக்குள் ஓர் குரல் ஒலித்தது. அது, ‘உங்களின் முடிவு இப்படித்தான் இருக்கும்’ என்று சொல்வது போல் இருந்தது. அந்த குரலை கேட்டதும் இயற்கைக்கு மாறான அமைதியை அனுபவித்தேன்” என்கிறார் பத்திரிகையாளர் கில்லன்.
தற்போது ஆழ்கடலில் மாயமாகி இருக்கும் ‘டைட்டன் நீர்மூழ்கி’ குறித்து கில்லனிடம் கேட்டபோது, அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு போனார்.
“ஐந்து சுற்றுலா பயணிகளுடன் டைட்டன் நீர்மூழ்கி மாயமான செய்தியறிந்து என் இதயம் நொறுங்கி போய் உள்ளது. கடலுக்கடியில் அந்த ஐந்து பேரும் அனுபவிக்கும் கடினமான சூழல் குறித்து எனக்கு நன்றாக தெரியும். அந்த கொடுமையான சூழலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த ஆபத்தில் இருந்து அவர்கள் அனைவரும் மீண்டு வர மனமுறுகி பிரார்த்திக்கிறேன்” என்று கண்ணீர் மல்க கூறினார் மைக்கேல் கில்லன்.
அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்து கொண்டிருந்த டைட்டானிக் கப்பல் 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி, பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. தற்போது கடலுக்கடியில் சுமார் 4000 மீட்டர் ஆழத்தில் சிதைந்த நிலையில் அந்த கப்பல் உள்ளது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












