டைட்டானிக் கப்பலை தேடிச் செல்லும் நீர்மூழ்கிப் பயணம் எப்படியிருக்கும்?- அனுபவம் பகிரும் யூடியூபர்

பட மூலாதாரம், ALAN ESTRADA
”உலகளவில் மிகவும் பிரபலமான அந்த டைட்டானிக் கப்பலை, இதற்கு முன்னால் ஆவணப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் நாம் பார்த்திருப்போம். இந்த பூமியில் அத்தனை சிறப்பு வாய்ந்த ஒன்றை, நீங்கள் உங்கள் கண்களால் அருகில் சென்று பார்ப்பது என்பது நிச்சயம் தனித்துவமான அனுபவம்தான்”என்கிறார் ஆலன் எஸ்ட்ராடா.
தற்போது ஆழ்கடலில் மாயமாகியிருக்கும் இதே ‘டைட்டன் நீர்மூழ்கியில்’ கடந்தாண்டு டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்றிருந்தார் இந்த ஆல்ன் எஸ்ட்ராடா.
’டைட்டன் நீர்மூழ்கி’ பயண அனுபவங்களை அவர் இந்த கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறார்.
ஆழ்கடலுக்கடியில் 4000மீட்டர் ஆழத்தில், சிதைந்துகிடக்கும் ’டைட்டானிக்’ கப்பலை நேரடியாக பார்வையிடும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்துவிடாது.
ஆனால் அத்தகைய வாய்ப்பைதான் ‘டைட்டன் நீர்மூழ்கி கப்பல்’ வழங்கிவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அழ்கடலில் தொலைந்துபோன இந்த நீர்மூழ்கியைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
காணாமல் போயிருக்கும் நீர்ழூழ்கியில் 5 பேர் இருக்கிறார்கள். அவர்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பது அனைவரின் பதற்றத்தையும் அதிகரித்திருக்கிறது.
110 ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய பிரமாண்ட ‘டைட்டானிக் கப்பலை’ காண வேண்டும் என்ற ஆர்வமே, இந்த நீர்மூழ்கி பயணத்திற்கு ஆதாரமாய் அமைந்தது.
மெக்சிகன் யூடியூபரும், நடிகருமான ஆலன் எஸ்ட்ராடா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல ஆர்வமாக இருந்தார். அந்த ஈர்ப்பு அவரை டைட்டானிக் கப்பலின் அருகே அழைத்துச் சென்றது.
’டைட்டன் நீர்மூழ்கியில் அப்போது பயணம் செய்த அனைவரும், தங்களுடைய பயணத்தில் இருக்கும் அபாயங்கள் குறித்து நன்கு அறிந்திருந்தனர்’ என்று பிபிசியிடம் கூறுகிறார் எஸ்ட்ராடா. இவர் ‘ஆலன் அரௌண்ட் தி வேர்ல்ட்’ ( "Alan around the world") எனும் தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்தவர்.
”டைட்டன் நீர்மூழ்கியில் மேற்கொண்ட பயணத்தின்போது, நான் ஒருபோதும் பாதுகாப்பற்றதாக உணரவில்லை. அந்த பயணத்தில் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து நான் நன்கு அறிந்திருந்தேன். ஒருவேளை கடலுக்கடியில் அத்தனை பெரிய ஆழத்தில் ஏதாவது தவறு ஏற்பட்டு, நீர்மூழ்கி வெடித்து சிதறுவதற்கு கூட வாய்ப்பிருக்கிறது என்பதை நான் உணர்ந்திருந்தேன்” என்கிறார் ஆலன் எஸ்ட்ராடா.
ஆழ்கடலில் மேற்கொள்ளும் இந்த அசாதாரண பயணங்கள் குறித்து, கொரோனா பேரிடர் காலத்தில் தனக்கு தெரியவந்ததாக கூறுகிறார் ஆலன் அஸ்ட்ராடா.
அந்த சமயத்தில் தனது யூடியூப் சேனலுக்காக வித்தியாசமான முறையில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்பதற்கான வழிகளை அவர் தேடிக்கொண்டிருந்தார்.
தோல்வியில் முடிந்த முதல் பயணம்

பட மூலாதாரம், OCEANGATE
ஆழ்கடல் நீர்மூழ்கி பயணம் குறித்து தெரிய வந்ததும், அந்த பயணத்திற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வதற்கு ஸ்பான்சரை தேடினார் ஆலன் .
ஏனென்றால் இந்த பயணத்திற்கான விலை 1,25,000 அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் இது ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை. இந்த விலை 2023ஆம் ஆண்டு இரட்டிப்பாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு, டைட்டன் நீர்மூழ்கியில் மேற்கொண்ட பயணம் வெற்றிகரமாக முடியவில்லை. அவர்கள் கரையிலிருந்து கிளம்பிய சில மணி நேரங்களிலேயே, தொழில்நுட்ப கோளாறு காரணமாகக் கரைக்கு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த பயணத்தில் ஆலனுடன், நீர்மூழ்கியின் பைலட் ஸ்டாக்டன் ரஷ் மற்றும் 3 சக பயணிகள் இருந்தனர்.
ஆனால் ஒராண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த பயணம் ஒருங்கிணைக்கப்பட்டு, வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
டைட்டானிக் கப்பலை பார்வையிட வேண்டும் என்ற ஆசையில், அட்லாண்டிக் பெருங்கடலின் அடி ஆழத்திற்கு செல்ல, இந்த பயணத்தை மேற்கொள்ள விரும்புபவர்கள் முதலில் ஒரு ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும்.
‘இந்த பயணத்தின்போது ஆபத்துக்கள் ஏதேனும் நேரிட்டால் அதற்கு ஓஷன் கேட் நிறுவனம் பொறுப்பாகாது’ என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
” இந்த பயணத்தில் நடக்கக்கூடிய விஷயங்களாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒவ்வொன்றையும் நீங்கள் கவனமுடன் படிக்க வேண்டும். நீர்மூழ்கி கப்பல் மூலம் ஆழ்கடலுக்குள் செல்லும் இத்தகைய பயணம் ஆபத்தானதாக இருக்கலாம்.
ஆனால் வாழ்க்கை என்பதே ஆபத்து மிகுந்த ஒன்றுதான். ஒருவேளை இந்த பயணத்தை வெற்றிகரமாக நாம் முடித்துவிட்டோம் என்றால், நீருக்கடியில் மூழ்கிக் கிடக்கும் அந்த கம்பீர கப்பலைக் கண்ட மதிப்பிற்குரிய வாய்ப்பை நாம் அடைந்திருப்போம்” என்கிறார் ஆலன்.
” உலகளவில் மிகவும் பிரபலமான அந்த டைட்டானிக் கப்பலை, இதற்கு முன்னால் ஆவணப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் நாம் பார்த்திருப்போம். வரலாற்றில் அதுகுறித்த பல தகவல்களையும், கதைகளையும் நாம் கேட்டிருப்போம்.
இந்த பூமியில் அத்தனை சிறப்பு வாய்ந்த ஒன்றை, நீங்கள் உங்கள் கண்களால் அருகில் சென்று பார்ப்பது என்பது நிச்சயம் சிறப்புவாய்ந்த செயல்தான்”என்றும் ஆலன் குறிப்பிடுகிறார்.
டைட்டன் நீர்மூழ்கியின் பயணம் எப்படியிருக்கும்?

பட மூலாதாரம், Reuters
“டைட்டன் நீர்முழ்கி தனது பயணத்தை துவங்கும்போது, ஒரு ராக்கெட் கிளம்புவது போன்ற உணர்வை கொடுத்தது. ஆனால் அதன்பின் அதில் சொல்லிகொள்ளும்படி எந்த அனுபவமும் இல்லை” என்கிறார் ஆலன்.
”இதில் பெரிதாக எந்தவொரு சிறப்பும் இல்லை. நீங்கள் ஒரு கேப்ஸ்யூலுக்குள் இருப்பது போல தோன்றும். கிளாஸ்ட்ரோ ஃபோபியா (claustrophobia) போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு இது மிக கடினமான விஷயம். அவர்களால் இதை செய்ய முடியாது. ஆனால் இதற்கு மேல் இந்த பயணம் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை.
ஆனால் கடலுக்கடியில், சிதலமடைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பல் அருகே நாம் செல்லும்போது, ஒரு இனம் புரியாத ஈர்ப்பு உருவாகும்” என்றும் ஆலன் குறிப்பிடுகிறார்.
கார்பன் ஃபைபர் மற்றும் டைட்டானியத்தால் செய்யப்பட்ட இந்த நீர்மூழ்கி கப்பலுக்குள் அவ்வளவு இடம் இருக்காது. கப்பலுக்குள் இருக்கும் ஒருவர் தன்னுடைய இடத்திலிருந்து நகர்வது கடினமாக இருக்கும்.
இந்த நீர்மூழ்கி, சுமார் 2.8 மீட்டர் அகலமும், 2.5 மீட்டர் உயரமும், 6.7 மீட்டர் ஆழமும் கொண்டது. இதில் பயணம் செய்யும் 5 நபர்களுக்கு, 96மணி நேரத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.
முதலில் கடலில் மேற்பரப்பிலிருந்து 4000மீட்டர் அடி ஆழத்திற்கு செல்வதற்கு 2 மணி நேரம் ஆகும் என கூறப்படுகிறது. பின் அங்கிருந்து டைட்டானிக் கப்பல் மூழ்கி கிடக்கும் இடத்திற்கு செல்ல 4 மணி நேரம் ஆகும். பின் அங்கே ஆய்வு செய்துவிட்டு வெளியேற 2 மணி நேரம் ஆகும்.
நீர்மூழ்கியை எளிதாக கட்டுபடுத்த முடியும்

பட மூலாதாரம், ALAN ESTRADA
நீர்மூழ்கிக்குள் இருந்தபோது, அதனை தன்னால் கட்டுப்படுத்த முடிந்தது என்று ஆலன் கூறுகிறார்.
வீடியோ கேம் கண்ட்ரோலர் போல தோற்றமளிக்கும் ஒரு சாதனத்தால், இந்த நீர்மூழ்கி கப்பல் இயக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.
”நீர்மூழ்கியை முன், பின், மேலே, கீழே என நான்கு புறமும் திருப்புவதற்கான வசதிகள் அதில் உள்ளன. அது கையாள்வதற்கு மிகவும் எளிமையான ஒன்றுதான். ஆனால் அங்கே சிக்கல் என்னவென்றால், அவ்வளவு அடர்த்தியான இருளுக்குள், டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் இருக்கும் இடத்திற்கு தகவல் தொடர்பு மற்றும் வழிசெலுத்துதல் அமைப்புகளை இயக்குவதுதான் சவாலான விஷயம்” என்று ஆலன் கூறுகிறார்.
இந்த பயணத்தின்போது, தங்களுடைய இலக்கை அடைவதற்குள் ஒரு திரைப்படத்தின் குறிப்பிட்ட பகுதியை பார்த்து முடித்துவிட்டார் ஆலன் எஸ்ட்ராடா.
இந்த டைட்டன் நீர்மூழ்கியை உள்ளிருந்து யாரும் திறந்துவிட முடியாது. வெளிப்புறத்திலிருந்து அதற்கான சிறப்பு உபகரணங்களை வைத்துதான் திறக்க முடியும்.
இதன் காரணமாக, தற்போது காணாமல் போயிருக்கும் நீர்மூழ்கியில் இருக்கும் 5 பேரும் வெளிப்புறத்திலிருந்து மற்றவர்களின் உதவி இல்லாமல் தப்பிக்க முடியாது என்ற இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.
”இப்போது நீர்மூழ்கிக்குள் இருக்கும் யாராலும் எதையும் செய்ய முடியாது. அவர்கள் மீட்கப்படும் வரை காத்திருக்க வேண்டும். எனக்கு தெரிந்தவரையில், அவர்கள் அனைவரும் தகவல் தொடர்புகளை திரும்ப பெறுவதற்கு முயற்சி செய்துகொண்டிருப்பார்கள்” என்று ஆலன் எஸ்ட்ராடா கூறுகிறார்.
அறிவியல் ஆய்வும், பணக்காரர்களின் பொழுதுபோக்கும்

பட மூலாதாரம், Getty Images
இத்தனை பெரிய தொகையை செலுத்தி, கடலின் அடி ஆழத்திற்கு பயணம் மேற்கொள்ளும் இதுபோன்ற செயல்கள் மிகவும் சர்ச்சைக்குரியது என்று ஆலன் தெரிவிக்கிறார்.
இதுபோன்ற பயணங்கள் மேற்கொள்வது பணக்காரர்களுக்கு, வேடிக்கையான விஷயமாக இருக்கிறது என சிலர் நினைக்கலாம். ஆனால் அதேசமயம் இத்தகைய சவால்கள் நிறைந்த பயணங்களை, ஆய்வாளர்கள் முக்கியமான ஆழ்கடல் ஆய்வுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டைட்டன் நீர்மூழ்கியில் தொலைந்து போயிருப்பவர்கள் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என ஆலன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
அதேசமயம், ‘இத்தகைய நிகழ்வு ஒரு இருண்ட அத்தியாயம். இதிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்’ எனவும் ஆலன் கவலையுடன் குறிப்பிடுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












