அமித் ஷாவின் தமிழக வருகை: அதிமுக, பாஜக கூட்டணி இன்று இறுதியாகுமா? இன்றைய முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், PTI
இன்றைய (11/04/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே கூட்டணி மலரும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார்போல் நடைபெறும் நிகழ்வுகளும் அமைந்துள்ளன.
இதனிடையே மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு 11 மணிக்கு சென்னை வந்ததாகவும், விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பா.ஜனதா சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் வரவேற்றதாகவும் தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் அமித் ஷா பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திக்க உள்ளதாகவும், குறிப்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
மேலும், "இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது. இரு தலைவர்களும், இந்தக் கூட்டணியை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இதுகுறித்து இப்போது வரை எந்த அதிகாரபூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை. அதேபோல அமித் ஷா, தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரையும் சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து அமித் ஷா 12 மணிக்கு பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார். அமித் ஷாவின் இந்த ஒரு நாள் பயணத்தில் அதிமுக – பாஜக கூட்டணி இறுதி செய்யப்படுமா என்பது தெரியக்கூடும்," என்று தினத்தந்தி செய்தி கூறுகிறது.
டாஸ்மாக்கில் பிற மாநில பியர்களை விற்பனை செய்யத் திட்டம்

பட மூலாதாரம், Getty Images
முதல் முறையாக பிற மாநிலங்களில் தயாரிக்கப்படும் சுமார் 6 பியர் பிராண்டுகள் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படப் போவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"ஹைதராபாத்தில் உள்ள லிலாசன்ஸ் ஆல்கோ என்ற நிறுவனம் தயாரிக்கும் பிளாக்பஸ்டர் என்ற பியர் கடந்த சில வாரங்களாக டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் மற்றுமொரு பிராண்டும் கர்நாடகாவை சேர்ந்த வுட்பெக்கர் டிஸ்டில்லரீஸ் அண்ட் ப்ரூவரீஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் 4 பிராண்டுகளும் இந்த மாத இறுதிக்குள் டாஸ்மாகில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று அந்தச் செய்தி கூறுகிறது.
ஏற்கனவே உள்ள பியர் பிராண்டுகளின் விலை 140 முதல் 210 ரூபாய் வரை இருக்கும் நிலையில் தற்போது புதிதாக வர இருக்கும் பியர்களின் விலை 182 முதல் 250 ரூபாய் வரை இருக்கும் எனவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியில், "கடந்த ஆண்டைவிட, பியரின் பிரபலம் இந்த ஆண்டு குறைந்துவிட்டதாகத் தெரிகிறது. உதாரணமாக, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 7ஆம் தேதி வரை, டாஸ்மாகில் 9.05 லட்சம் பீர் கேஸ்கள் விற்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு வெறும் 7.97 லட்சம் கேஸ்களே விற்கப்பட்டன. இது 12% குறைவு. எனவே, இந்த புதிய பியர் பிராண்டுகளை அறிமுகப்படுத்துவது, நிலைமையை மாற்றக்கூடும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் நம்புகின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"டாஸ்மாகில் 35 பியர் பிராண்டுகளை விற்பனை செய்வதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் 10 பிராண்டுகள் மட்டுமே விற்பனைக்கு உள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் பல்வேறு பியர் வகைகளை வாங்க வாய்ப்பு இல்லாமல் உள்ளது. டாஸ்மாக் கடைகளில் புதிதாக லெகர் மற்றும் ஸ்ட்ராங் பியர் வகைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவை பைன்ட், டின் மற்றும் பாட்டில் அளவுகளில் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் முதன்முறையாக உள்நாட்டு கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் லெகர் பியர் அதிக விலையில் விற்பனை செய்யப்படும். மற்ற மாநிலங்களில் இருந்து பீர் வகைகள் கொள்முதல் செய்யப்படுவதால், பாட்டில்களில் அரசு முத்திரை மற்றும் க்யூஆர் குறியீடு ஒட்டும் பணிகள் கிடங்குகளில் மேற்கொள்ளப்படும். பின்னர் அவை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்படும்" என்கிறது அந்தச் செய்தி.
கிரிண்டர் செயலியை தடை செய்யக் கோரி சென்னை காவல் ஆணையர் கடிதம்

பட மூலாதாரம், Getty Images
கிரிண்டர் செயலியைப் பயன்படுத்தி போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாகவும், அந்தச் செயலியை உடனடியாக தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையர் அருண் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
"சென்னையில் போதைப் பொருள் கடத்தல், விற்பனை, பதுக்கலைத் தடுக்க காவல் ஆணையர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். காவல்துறையின் தொடர் நடவடிக்கைகளால் பல்வேறு வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதோடு, அதில் தொடர்புடைய குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த போதைப் பொருள் வழக்குகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிற மாநிலம் மற்றும் நாட்டைச் சேர்ந்தவர்களும் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்" என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "இவ்வாறு கைது செய்யப்படும் நபர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பெரும்பாலான நபர்கள் கிரிண்டர் செயலி மூலமாக பல்வேறு குழுக்களை உருவாக்கி, அதன்மூலம் சென்னையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது 10 நபர்களில் 8 பேர் இந்த கிரிண்டர் செயலியைப் பயன்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து, கிரிண்டர் செயலியை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழ்நாடு அரசுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் கடிதம் எழுதியுள்ளார்" என்கிறது இந்து தமிழ் திசையின் அந்தச் செய்தி.
போதைப் பொருள் விற்றதாக சூடான், நைஜீரியாவை சேர்ந்த 10 பேர் கைது

பட மூலாதாரம், Getty Images
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சூடான், நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 பேர் உள்பட 17 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"சென்னையில் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தப்படும் போதைப் பொருளைத் தடுக்கும் வகையில், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு என்ற சிறப்புப் பிரிவு பெருநகர காவல்துறையில் தொடங்கப்பட்டது. இப்பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர், உயர்ரக போதைப் பொருட்களைக் கடத்துவோரைக் கைது செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 9ஆம் தேதி அண்ணாசாலை பகுதியில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெங்களூருவை சேர்ந்த நிகில் என்பவர் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 2 பேர் சென்னையிலும், ஒருவர் பெங்களூருவிலும் கைது செய்யப்பட்டனர்" என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை சென்னையில் தீவிரமாக எடுக்கப்படுகிறது. சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் நைஜீரியா, சூடான் ஆதிய நாடுகளைச் சேர்ந்த 10 பேர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் மட்டும் 7 பேர்" என்று சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார் கூறியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழகத்தில் போதைப் பொருள்கள் தயாரிக்கப்படுவதில்லை. பிற மாநிலங்களில் இருந்துதான் சென்னைக்கு போதைப் பொருள் கடத்தப்பட்டு விற்கப்படுகிறது. முக்கியமாக டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்தே தமிழகத்துக்கு போதைப் பொருள் கடத்திக் கொண்டு வரப்படுகிறது. இவற்றைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகிறோம்.
அந்த வகையில், கடந்த 8 மாதங்களில் போதைப்பொருள் தொடர்பாக 996 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 2,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 135 பேர் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தொடர்ச்சியாக போதைப்பொருள் கடத்தலில் 352 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 21 கிலோ மெத்தம்பெட்டமைன் வகை போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளோம்" என்றும் விஜயகுமார் தெரிவித்ததாக தினமணியின் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
'ஈஸ்டர் தாக்குதல் ரகசியங்களை அம்பலப்படுத்திய பிள்ளையான்' - இலங்கை அமைச்சர்

சி.ஐ.டியினர் மேற்கொண்ட விசாரணையில் சிவனேசத்துறை சந்திரகாந்தனிடம் (பிள்ளையான்) ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சில விடயங்கள் அம்பலமாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார் என்று வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
"எந்தவொரு குற்றச் செயல்களையும் எமது அரசாங்கம் மறைக்கப் போவதில்லை. அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தனிடம் பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சில விடயங்கள் அம்பலமாகின.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் குறிப்பிட்டது போல கைது செய்யப்பட்ட இளைஞரிடம் பல விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன" என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அவரது சமூகப் பதிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அவர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அதில் குறிப்பாக சிலர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களாக இருந்துள்ளனர். இதன் அடிப்படையிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது" என்றும் அவர் தெரிவித்ததாக வீரகேசரி செய்தி குறிப்பிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












