You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் தேமுதிக, பாமக கட்சிகள் பலம் பெற்றுள்ளனவா? ஓர் அலசல்
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் வென்ற திமுக கூட்டணிக்கு சவாலாக இருந்தது இரண்டு தொகுதிகள். ஒன்று பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சௌமியா அன்புமணி போட்டியிட்ட தருமபுரி. மற்றொன்று, தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் போட்டியிட்ட விருதுநகர் தொகுதி. இந்த தொகுதிகளை தவிர பாமகவும் தேமுதிகவும் போட்டியிட்ட மற்ற தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற முடியவில்லை.
காஞ்சிபுரம், அரக்கோணம், ஆரணி, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய பத்து தொகுதிகளில் போட்டியிட்டது பாமக. இதில் தருமபுரியில் இரண்டாவது இடமும், கள்ளக்குறிச்சியில் நான்காவது இடமும் பெற்றிருந்தது. மற்ற 8 தொகுதிகளில் மூன்றாவது இடம் பிடித்திருந்தது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தருமபுரியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி ஆவார். முனைவர் பட்டம் பெற்றவர். அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் நிலையில், முதல் முறையாக தேர்தல் களத்தை சந்தித்தார் சௌமியா அன்புமணி.
தருமபுரி தொகுதியில் பாமகவுக்கு செல்வாக்கு அதிகம் என்பது கடந்த தேர்தல்களில் நிரூபணமான ஒன்று. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியில் இல்லாமலேயே அன்புமணி ராமதாஸ் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது இதற்கு உதாரணம்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்திற்கு 20ஆயிரம் வரை முன்னிலை வகித்த சௌமியா அன்புமணி, அடுத்தடுத்த சுற்றுகளில் பின்தங்கினார். முடிவில் அவர் 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அ. மணியிடம் தோல்வியுற்றார்.
அரக்கோணம் தொகுதியில் பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனிடம் தோற்று போனார்.
காஞ்சிபுரம், விழுப்புரம் தொகுதிகளில் பாமக மூன்றாவது இடம் பிடித்தது. கள்ளக்குறிச்சியில் 71,290 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அந்த தொதியில் இரண்டாவது இடத்தை அதிமுகவும், மூன்றாவது இடத்தை நாம் தமிழர் கட்சியும் பிடித்திருந்தன.
பாட்டாளி மக்கள் கட்சி திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் வெவ்வேறு காலகட்டங்களில் கூட்டணி சேர்ந்துள்ளது. எந்த கூட்டணியிலும் இல்லாமல் தனியாகவும் அக்கட்சி போட்டியிட்டுள்ளது. வன்னியர்கள் அதிகமாக வசிக்கும் வட மாவட்டங்களே பாமகவின் வாக்கு வங்கியாக இருக்கிறது.
2004ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தமிழ்நாட்டில் 100 சதவீத வெற்றியை பதிவு செய்ய, அதில் இடம் பெற்றிருந்த பாமகவுக்கு தமிழ்நாட்டில் 5 இடங்கள் கிடைத்தன. புதுச்சேரியில் அக்கட்சி சார்பில் எம்.ராமதாஸ் வெற்றிப் பெற்றார். அதுவே கடந்த 20 ஆண்டுகளில் இந்தக் கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
2009, 2019, 2024 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பாமக ஓரிடத்தை கூட பிடிக்கவில்லை. 2014ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த போது, தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார்.
2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, அதிமுக, பாஜக கூட்டணியில் பாமக ஏழு இடங்களில் போட்டியிட்டது. அதில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.
பாமக சட்டமன்றத் தேர்தல்களிலும் சரிவை சந்தித்து வருகிறது. 2001ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இடம் பெற்று 20 எம்.எல்.ஏ.க்களை பாமக பெற்றது. இதுவே சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக பெற்ற அதிகபட்ச வெற்றியாகும். 2016-ல் தனித்துப் போட்டியிட்ட பாமகவால் ஓரிடத்தைக்க் கூட பிடிக்க முடியவில்லை. 2021ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் 5 இடங்களில் வென்றது.
திமுகவுக்கு சவாலாக இருந்த மற்றொரு தொகுதியான விருதுநகரில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட்டார். இரு முறை நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு வாக்கு எண்ணிக்கையின் இறுதி வரை அவர் சவாலாக இருந்தார்.
2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் 3,80,877 வாக்குகள் பெற்று 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார் விஜயபிரபாகரன். கடந்த சில ஆண்டுகளாக துவண்டு போன தேமுதிக தொண்டர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இந்த போட்டி அமைந்தது. கடலூர் மற்றும் தஞ்சாவூரிலும் தேமுதிக இரண்டாவது இடம் பிடித்தது.
தேமுதிக போட்டியிட்ட மற்ற தொகுதிகளில் படுதோல்வியை தழுவியது. மத்திய சென்னையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.பார்த்தசாரதி 72,016 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார்.
இந்த தேர்தலில் மொத்தம் 11,28,616 வாக்குகளையும் 2.59% வாக்கு சதவீதத்தையும் தேமுதிக பெற்றுள்ளது. இது கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட சற்றே அதிகமாகும்.
2019ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தேமுதிக நான்கு இடங்களில் போட்டியிட்டு சுமார் 9.30 லட்சம் வாக்குகள் பெற்றது. தேமுதிகவின் வாக்கு சதவீதம் அப்போது 2.17% ஆக இருந்தது.
2005ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேமுதிக 8% வாக்குகளை 2006ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பெற்றது. 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கிட்டத்தட்ட 10% வாக்குகளை பெற்றது. அந்த கால கட்டத்தில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்றாக தேமுதிக பார்க்கப்பட்டது.
2011ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் சேர்ந்த தேமுதிக 29 இடங்களில் வென்றது. அதுவரை ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை தேமுதிக பின்னுக்குத் தள்ளியது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார்.
2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று 10%க்கும் மேல் வாக்குகள் பெற்ற தேமுதிக அடுத்து 2014ம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து 5.19% வாக்குகள் மட்டுமே பெற்றது. அதன் பின் தேமுதிகவின் வாக்கு சதவீதம் சரிந்து கொண்டே வந்துள்ளது.
பாமகவும் தேமுதிகவும் பலவீனமான கட்சிகளாகவே இருக்கின்றன என்பதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன என்று மூத்த பத்திரிகையாளர் மாலன் கூறுகிறார்.
"தருமபுரியிலும் விருதுநகரிலும் இரண்டு கட்சிகளும் தங்களுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்தன. தருமபுரியை தவிர வேறு எந்த தொகுதியிலும் பாமக பெரிய அளவில் வாக்குகளை பெறவில்லை. அதேபோல தான் தேமுதிக. மத்திய சென்னை தொகுதியில் தேமுதிக படுமோசமாக தோற்றுள்ளது. இந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் முன்னிலை பெற்றது மூலம் அவர்கள் வலுவானதாக கூற முடியாது. " என்றார்.