You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னையை முந்திய பெங்களூரு: வெப்ப அலையால் தகிக்கும் இந்திய நகரங்கள் - என்ன காரணம்?
இந்த கோடையில் நாடு முழுவதும் பல நகரங்களில் வெப்பநிலை 40 டிகிரிக்கு மேல் உயர்ந்துள்ளது. டெல்லி போன்ற நகரங்களில் ஐம்பதை தொட்டது.
இந்திய நகரங்களில் வெப்பநிலை ஏன் இவ்வளவு அதிகரித்தது? இந்த வெப்ப அலைக்கான காரணங்கள் என்ன?
நாட்டின் மற்ற பகுதிகளை விட நகர்ப்புறங்களில் வெப்பம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வேகமாக அதிகரித்து வருகிறது. ஐஐடி புவனேஸ்வர் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது .
உலகம் முழுவதும் வெப்பம் அதிகரிப்பதற்கு புவி வெப்பமடைதலும் ஒரு காரணம். ஆனால், ஐஐடி புவனேஸ்வரின் ஆய்வில், இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் நகரமயமாக்கல்தான் நகர்ப்புற வெப்பத்திற்கு முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.
ஆய்வு செய்யப்பட்டது எப்படி?
இந்த ஆராய்ச்சிக்காக, கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் உள்ள 141 நகர்ப்புற மற்றும் கிராமப்புற நகரங்களில் பதிவான வெப்பநிலை உயர்வு, பகல் மற்றும் இரவு வெப்பநிலை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.
இந்த ஆராய்ச்சிக்காக நாசாவின் 'மோடிஸ்' (தி மாடரேட் ரிசொல்யூஷன் இமேஜிங் ஸ்பெக்ட்ரோடியோமீட்டர்) அக்வா செயற்கைக்கோளில் இருந்து இரவு நேர வெப்பநிலை தரவு ஆய்வு செய்யப்பட்டது. இது இரவில் தரை மேற்பரப்பில் இருந்து எவ்வளவு வெப்பம் வெளிப்படுகிறது என்பதை அளவிடுகிறது. 2003 முதல் 2020 வரையிலான தரவுகளும் வெப்பநிலை மாற்றப் போக்குகளைச் சரிபார்க்க ஆய்வு செய்யப்பட்டன.
இதனுடன், நகர்ப்புறங்களில் வெப்பநிலை உயர்வு மற்றும் இந்த நகரங்களை ஒட்டியுள்ள மற்ற பகுதிகளில் வெப்பநிலை உயர்வு குறித்து ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன?
இந்தியாவின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் வெப்பம் குறித்த ஆராய்ச்சி சில முக்கியமான அவதானிப்புகளை செய்துள்ளது.
இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் இரவுநேர வெப்பநிலை அதிகரித்திருப்பது இந்த ஆராய்ச்சியின் தரவுகளிலிருந்து தெளிவாகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு பத்தாண்டுக்கும் இரவு நேர நில மேற்பரப்பு வெப்பநிலை (NLST) 0.53 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.
கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள நகரங்கள் அதிக நகர்ப்புற வெப்பமயமாதலை ஏற்படுத்தியுள்ளதாக ஆராய்ச்சி காட்டுகிறது.
மொத்தத்தில், இந்தியாவில் வெப்பநிலை சராசரியாக ஒரு பத்தாண்டுக்கும் 0.26 டிகிரி செல்சியஸ் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் அதிக வெப்பம் நிலவும் 10 நகரங்கள்
- ஆமதாபாத்
- ஜெய்ப்பூர்
- ராஜ்கோட்
- டெல்லி தலைநகர் பகுதி
- புனே
- லக்னௌ
- ஆக்ரா
- பெங்களூரு
- நாசிக்
- ஹைதராபாத்
நகரங்களில் வெப்பநிலை அதிகரித்தது ஏன்?
புவி வெப்பமாதலுக்கு நகரமயமாக்கல் ஒரு முக்கிய காரணம். மனிதன் நிலத்தைப் பயன்படுத்துதல், அதில் கட்டுமானம் மேற்கொள்ளுதல் ஆகியவை இதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
பூமியின் மொத்த நிலப்பரப்பில் 1% மட்டுமே நகரங்கள் உள்ளன. ஆனால், இந்த ஒரு சதவீத நிலத்தில் உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
விரைவான மற்றும் ஒழுங்கற்ற நகரமயமாக்கல் காரணமாக சமூக பிரச்னைகளுடன், சுற்றுச்சூழல் பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன.
கான்கிரீட் மற்றும் ஆஸ்ஃபால்ட் ஆகியவை கட்டுமானத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பொருட்கள் வெப்பத்தை உறிஞ்சும். எனவே, பகலில் அதிகரித்த வெப்பநிலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் விரைவாக குறையாது.
பகுதி-நகர்ப்புற, கிராமப்புறங்களில் பகலில் அதிகரித்த வெப்பம் வேகமாக குறைவதால், இரவுகள் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால், நகரங்களில் கான்கிரீட்டில் இருந்து வெப்பம் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால் இரவு நேர வெப்பநிலையும் அதிகமாகவே இருக்கிறது.
நீரி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர். அதுல் வைத்யா கூறுகையில், "நகரில் கான்கிரீட் கட்டடங்கள், அதிக மக்கள் தொகை, ஏ.சி. ஆகியவை வெப்பத்தை அதிகரிக்கின்றன. நகரின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு சாலைகளில் ஓடும் ஏசி வாகனங்களும் காரணம். ஏசி உள்ளே குளிர்ச்சியடையும் போது, அது வெப்பத்தை வெளியே வீசுகிறது. கான்கிரீட் வீடுகளில் இருந்து கதிர்வீச்சு வெளிவருகிறது, அதனால்தான் சிமெண்ட் கான்கிரீட் வீடுகள் வெப்பமாக இருக்கின்றன. கிராமப்புறங்களில் உள்ள மண் வீடுகள் குளிர்ச்சியாக இருக்கின்றன" என்றார்.
அதிகரித்து வரும் நகர்ப்புற வெப்பத்தின் விளைவுகள்
மனித தலையீடு நகரங்களில் வெப்பநிலையை அதிகரிக்கிறது மற்றும் மனித வாழ்க்கையை தொடர்ந்து பாதிக்கிறது.
அதாவது, நகரமயமாக்கல் காரணமாக இங்கு வெப்பநிலை அதிகரித்துள்ளது. இந்த வெப்பநிலை ஆரோக்கியத்தை பாதிக்கிறது. நீரிழப்பு, ஹீட் ஸ்ட்ரோக், இதயம் தொடர்பான கோளாறுகள் மற்றும் இறப்புகள் நகரங்களில் அதிகரித்து வருகின்றன. இந்த அதிகரித்து வரும் வெப்பத்தால் சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
மனித ஆரோக்கியத்தைத் தவிர, நகர்ப்புற வெப்பமயமாதல் மற்ற விஷயங்களையும் பாதிக்கிறது. ஆற்றல் நுகர்வுடன் நகரமயமாக்கல் பெருகிவருகிறது. இதனுடன், இந்த நகரங்களில் இருந்து வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு அதிகரிக்கிறது. இவை அனைத்தும் காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கின்றன. அதிகரித்த நகர்ப்புற வெப்பநிலையால் மழை மற்றும் மாசுபாடு அளவுகள் பாதிக்கப்படுகிறது.
நகரங்களில் அதிக மக்கள் தொகை அடர்த்தியும் உள்ளது. இது நகரின் உள் கட்டமைப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை பேரழிவுகளின் போது இந்த மக்கள் தொகை அடர்த்தியால் உயிரிழப்புகள் நேரிடும். வெப்ப அலைகள், கனமழை அல்லது வெள்ளம் போன்ற காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் இயற்கை பேரழிவுகளுக்கு நகர்ப்புற மக்கள்தொகை அச்சுறுத்தலாக உள்ளது.
இப்போது ஒவ்வொரு கோடையிலும் வெப்ப அலை தோன்றுவதற்கு ஒரு காரணம் வெப்பக் குவிமாடங்கள் (Heat domes). கோடையில் நிலத்தில் இருந்து சூடான காற்று உயரும் போது, வளிமண்டலத்தில் உள்ள அதிக அழுத்தம் வெப்பக் காற்றை கீழே தள்ளுகிறது. இது காற்றை அழுத்தி வெப்பநிலையை மேலும் அதிகரிக்கிறது.
நகர்ப்புற வெப்பமாதலுக்கு என்ன தீர்வு?
உலக வளக் கழகத்தின் கணக்கெடுப்பின்படி, 2050 ஆம் ஆண்டில், உலகளவில் 10 பேரில் 7 பேர் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள்.
நகரங்களில் வெப்பநிலை உயர்வைத் தடுக்க அல்லது குறைக்க ஒவ்வொரு நகரத்திற்கும் வெவ்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நகரங்களில் பசுமையை அதிகரிப்பது பகல் நேர வெப்பநிலையை குறைக்கும் விளைவை ஏற்படுத்தும். ஆனால் இது இரவில் கான்கிரீட்-ஆஸ்ஃபால்ட்டில் இருந்து வரும் வெப்ப உமிழ்வைத் தடுக்காது.
எனவே, எதிர்காலத்தில், நகரத்தில் உள்ள கட்டுமானங்களும் அதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களும் முக்கிய பங்கை வகிக்கும்.
நகர்ப்புற வெப்பநிலை உயர்வை மனதில் வைத்து நகர்ப்புற திட்டமிடல் மற்றும் கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)