மாதவிடாய் வலியை போக்க உதவும் ஸ்மார்ட் ஆடை - இனி ஆறுதல் கிடைக்குமா?

மாதவிடாய் வலி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கிட்டா பால்மை
    • பதவி, வணிகச் செய்தியாளர்

மாதவிடாய் வலியைப் போக்க உதவும் உடலில் அணியும் பாடிசூட் பற்றி பவுலா ஃபிஷர் முதன்முதலில் படித்தபோது, 33 வயதான அவர் "அதை முயற்சி செய்து பார்க்க ஆர்வமாக இருந்தேன்" என்று கூறுகிறார்.

புதிய கண்டுபிடிப்பு

பல பெண்களைப் போலவே, அவரும் தனது மாதவிடாய் காலத்தில் கடுமையான அசௌகரியத்தை அனுபவித்தார். மேலும் சில மணிநேரங்களுக்கு மட்டுமே தீர்வைத் தரும் வலி நிவாரணிகளுக்கு ஒரு மாற்றுத் தீர்வு கண்டுபிடிக்கப்படும் என்று அவர் நம்பினார்.

ஹங்கேரியின் புடாபெஸ்டில் வசிக்கும் பவுலா கூறுகையில், "எனது மாதவிடாய் காலங்களில் அதிகமான வலியுடன் நான் அடிக்கடி இருந்தேன். படுக்கையிலிருந்து எழுந்து என்னால் வேலைகளைச் செய்ய முடியாது. இது எனது மனநிலை, செயல்திறனை பாதித்தது," என்று கூறுகிறார்.

பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஆல்பா ஃபெம்டெக் என்ற ஹங்கேரிய ஸ்டார்ட் அப் நிறுவனம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஓர் அறிவிப்பைப் பார்த்துள்ளார் பவுலா. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய பாடிசூட்டின் சோதனை மற்றும் வளர்ச்சிக்கு தன்னார்வலர்கள் உதவுமாறு அதில் பதிவிடப்பட்டு இருந்தது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியைப் பற்றி ஒரு கணக்கெடுப்பை முடிக்க வேண்டியிருந்தது. பின்னர் பெண்களின் ஆரோக்கியத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு மருத்துவர் பொருத்தமான பங்கேற்பாளர்களைத் தேர்ந்தெடுத்தார். தேர்வு செய்யப்பட்டவர்களில் பவுலாவும் ஒருவர்.

எப்படி செயல்படுகிறது?

ஆர்ட்டெமிஸ்' என்று அழைக்கப்படும் பாடிசூட்(bodysuit) இந்த ஆண்டின் பிற்பகுதியில் முதல் முறையாக இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. இதிலுள்ள வெப்ப பேனல்கள் மற்றும் டென்ஸ் (டிரான்ஸ்குடேனியஸ் மின் நரம்பு தூண்டுதல்) ஜெல் பட்டைகள் மூலமாக இது செயல்படுகிறது.

டென்ஸ் ஜெல் பட்டைகள் என்பது பிரசவத்தின் போது பெண்களால் பயன்படுத்தப்படுவது. இது மின் அலைகளை வெளியிடுகின்றன. இவை வலியை ஏற்படுத்தும் சமிக்ஞைகள் மூளையை அடைவதைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், வெப்ப பேனல்கள் கருப்பை மற்றும் சுற்றியுள்ள தசைகளை இலகுவாக்குகின்றன.

மாதவிடாய் வலி

பட மூலாதாரம், Getty Images

பாடிசூட்டுக்கு, சிறிய உள்ளங்கை அளவிலான பேட்டரி மூலம் சக்தி அளிக்கப்படுகிறது. இது பின்னர் புளூடூத் மூலம் வயர்லெஸ் முறையில் பயனரின் திறன்பேசியுடன் இணைக்கப்படும். இது வெப்பம் மற்றும் மின்சாரத்தின் அளவு இரண்டையும் சீராக செலுத்தப் பயன்படுகிறது.

மாதவிடாய் காலத்தில் பாடிசூட் அணிந்து பரிசோதனையில் கலந்து கொண்டபோது "முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருந்தது, எந்த வலியும் இல்லை," என்று பவுலா கூறுகிறார்.

மெரினோ கம்பளி மற்றும் செயற்கை இழைகளின் கலவையால் தயாரிக்கப்பட்ட பாடிசூட்டை அணிவது வசதியாக இருந்தது என்றார் பவுலா.

தனக்கு இருந்த ஒரே பக்க விளைவு என்னவென்றால், அவரது மாதவிடாய் வழக்கத்தைவிட கனமாக இருந்தது. "தசைகள் தளர்வாய் இருந்ததன் விளைவாக இப்படி இருக்கும் நான் கருதுகிறேன்."

பாடிசூட்டின் விலை என்ன?

மாதவிடாய் வலி

பட மூலாதாரம், Getty Images

ஆல்பா ஃபெம்டெக்கின் இணை நிறுவனரான அன்னா சோபியா கோர்மோஸ் என்பவரின் ஐடியாவில் உருவானதுதான் இந்த பாடிசூட். அவர் உடலில் அணியக்கூடிய ஸ்மார்ட் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

இவர், குறிப்பாக மாதவிடாய் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறார். மார்க்கெட்டிங் பின்னணியில் இருந்து வந்த டோரா பெல்சருடன் இணைந்து இந்த நிறுவனத்தை சோபியா உருவாக்கியுள்ளார். 

"நாங்கள் 350 பெண்களிடம் அவர்களின் மாதவிடாய் பழக்க வழக்கங்களைப் பற்றி பேசினோம். அவர்களின் அனுபவங்களை வைத்து அனைவருக்கும் ஏற்ற வகையிலான பாடிசூட்டை உருவாக்கினோம்," என்று பெல்சர் கூறுகிறார்.

அவரும் கோர்மோஸும் இணைந்து பாடிசூட் மருத்துவ சாதனமாக இல்லாமல், ஃபேஷன் பொருளாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்த பாடிசூட்டின் விலை 220 யூரோவாக(இந்திய மதிப்பில் ரூபாய் 19,000) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாதவிடாய் வலியை குறைக்க மற்றொரு கண்டுபிடிப்பு

டப்ளினர் ரெபேக்கா பவுடர்லிக்கு மாதவிடாய் காலம் என்பது வலி மிகுந்த ஒன்றாக மட்டுமல்லாமல், எண்டோமெட்ரியோசிஸ் (endometriosis) எனப்படும் பிரச்னையும் உள்ளது.

10 பெண்களில் ஒருவரை பாதிக்கும் என்று கூறப்படும் எண்டோமெட்ரியோசிஸ் என்பது கருப்பையின் வெளியே உள்ள திசுக்கள், சினைப்பை மற்றும் சிறுநீர்ப்பை போன்ற உடலின் பிற பாகங்களில் வளரும்போது ஏற்படுகிறது. இதன் உருவாக்கம் புண் மற்றும் வடுக்களை ஏற்படுத்துகிறது. மேலும் வலியையும் தீவிரமாக ஏற்படுத்துகிறது.

தனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக வெந்நீர் பாட்டிலுடன் சுற்றித் திரிவதாக ரெபேக்கா கூறுகிறார். 28 வயதான அவர் இரவுகளில்கூட அவ்வாறு செய்கிறார். இதனால் தன்னை பலரும் விசித்திரமாகப் பார்த்ததாக அவர் கூறினார்.

ஆனால் செப்டம்பர் முதல், மாதவிடாய் வலியைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட, அணியக்கூடிய மற்றொரு தொழில்நுட்ப தயாரிப்புக்கு ரெபேக்கா மாறினார். 

மாதவிடாய் வலி

பட மூலாதாரம், MYOOVI

மயோவி என்று அழைக்கப்படும் இது, சிறிய வயர்லெஸ் டென்ஸ் சாதனமாகும். இதை தொப்புளுக்குக் கீழே அல்லது அடி முதுகு பகுதியில் ஒட்டிக் கொள்ள வேண்டும்.

வட்டு வடிவில் சுமார் 8 செ.மீ அளவில் இருக்கும் இதில் ஜெல் பேட் உடன் பேட்டரி மற்றும் கண்ட்ரோல் பட்டன்கள் இருக்கும். இதை பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும் துணியுடன் வைத்து ஒட்டிக்கொள்ள கொள்ள வேண்டும். இந்தத் துணியை 20 முதல் 30 முறை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

"டென்ஸ் ஒரு விசித்திரமான உணர்வு" என்கிறார் ரெபேக்கா. "இதை விவரிப்பது கடினம். அதிக திறனுடைய மின் அலைகளை(intense pulses) பயன்படுத்தும்போது எனது வலியைக் குறைக்க உதவுகிறது.

"எனக்கு வலி நிவாரணம் உடனடியாகக் கிடைக்கிறது. ஆனால் எனக்கு ஏற்படும் எண்டோமெட்ரியோசிஸ் வலிகளை முற்றிலுமாக அகற்றுவதில்லை, அதன் அளவைக் குறைக்கிறது. எனது தசைப்பிடிப்பு வலியிலிருந்து நான் மிகப்பெரிய ஆறுதலைக் காண்கிறேன்."

அக்டோபர் 2021இல் மயோவி அறிமுகப்படுத்தப்பட்டது. இது 60 யூரோவுக்கு(ரூபாய் 5,000) விற்பனையாகிறது. இதை மான்செஸ்டரை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தயாரித்துள்ளது.

அதன் தலைமை நிர்வாகி டாக்டர் ஆடம் ஹம்தி, தேசிய சுகாதார சேவையில் பணிபுரியும்போது டென்ஸ் சாதனங்களின் செயல்திறனை நேரடியாகப் பார்த்த பிறகு இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

வயர்லெஸ் முறையில் இதை உருவாக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். மாதவிடாய், எண்டோமெட்ரியோசிஸ் அல்லது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் மற்றொரு பிரச்னை இருக்கும் அனைத்து பெண்களும் இதைப் பயன்படுத்தலாம்.

மருத்துவ ரீதியாக பாதுகாப்பானதா?

மாதவிடாய் வலி

பட மூலாதாரம், Getty Images

மகப்பேறு மருத்துவ நிபுணரான டாக்டர் கேரன் மோர்டன், டென்ஸ் சாதனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை விளக்குகிறார். "வலியை ஏற்படுத்தும் காரணியைவிட, வலியை மூளைக்கு கடத்தும் சமிக்ஞைகளை இவை தடுக்கின்றன. வெப்பத்தால் இதைச் செய்ய முடியும்," என்றார் அவர்.

இருப்பினும், மாதவிடாயால் மோசமான வலிகளை அனுபவிக்கும் யாராக இருந்தாலும், முதலில் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

நரம்பியல் நிபுணரான டாக்டர் ஸ்டீவ் ஆல்டர், மூளை, முதுகெலும்பு மற்றும் நரம்பு மண்டலத்தின் நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கும் மருத்துவர்.

வலியைக் குறைப்பதில் டென்ஸ் சாதனங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் காட்டினாலும், அவற்றைப் பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்று அவர் கூறுகிறார்.

"எப்போது, எத்தனை முறை, எந்த அளவில் டென்ஸ் சாதனங்களை நாம் பயன்படுத்த வேண்டும் என்பது சரியாகத் தெரியவில்லை," எனக் கூறுகிறார்.

இதுபோன்ற டென்ஸ் சாதனங்களை எவ்வளவு காலம் பயன்படுத்த முடியும் என்பதற்கு எந்த வரம்பும் இல்லை என்றும், மின் அதிர்வுகளுடன் அந்த நபர் எவ்வளவு காலத்திற்கு வசதியாக இருக்கிறார் என்பதைப் பொறுத்து இந்த அளவு மாறுபடும் என்றும் மயோவி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ஹம்தி கூறுகிறார்.

புடாபெஸ்டிற்குத் திரும்பிய பவுலா, ஆர்ட்டெமிஸ் பாடிசூட் ஒன்றைப் பெற ஆர்வமாக இருப்பதாகக் கூறுகிறார். "இது சந்தைக்கு வரும் வரை என்னால் காத்திருக்க முடியாது. ஏனென்றால், அதை என்னால் தவறாமல் பயன்படுத்த முடியும்," என்கிறார்.

காணொளிக் குறிப்பு, பெண்கள் எப்படிப்பட்ட பிரா அணிய வேண்டும்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: