சட்டம் பயின்றால் வழக்கறிஞர் தவிர வேறு என்னென்ன பணி வாய்ப்புகள் உள்ளன?

ஒரு சட்டம் பயிலும் மாணவியின் சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரியங்கா ஜா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சட்டப் படிப்பு பற்றி யாராவது உங்களிடம் கேட்டால், உங்கள் மனதில் வெள்ளைச் சட்டை மற்றும் கருப்பு கோட் அணிந்த ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் இருப்பது போன்ற தோற்றம் தோன்றலாம்.

ஆனால் சட்டம் படித்தவர்கள் வக்கீல்களாகவோ அல்லது நீதிபதிகளாகவோ மட்டும்தான் ஆகிறார்களா?

இதற்குப் பதில் 'இல்லை'.

அதனால்தான் இந்தியாவில் உள்ள 26 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் (National Law Universities - NLU) சட்டம் படிக்க விரும்புவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு சுமார் 75 ஆயிரம் விண்ணப்பதாரர்கள், இந்தச் சட்டப் பல்கலைக்கழகங்களில் உள்ள 3,000 முதல் 3,500 வரையிலான இடங்களுக்கான வழியைத் திறக்கும் தேர்வான கிளாட் (CLAT) தேர்வில் பங்கேற்றனர். இதில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் அடங்குவர்.

இந்தத் தேர்வின் மீது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்? காரணம் அந்த தேர்வு அளிக்கும் கல்வி வாய்ப்புகளும், அதை முடித்த பின்னர் கிடைக்கும் வேலை வாய்ப்புகளும்தான்.

சட்டப்படிப்பு படித்தவர்களின் எதிர்காலம் இப்போது நீதிமன்ற அறை அல்லது காகித வேலைகளுக்குடன் நின்றுவிடுவதில்லை. மாறாக, இது நீதித்துறை தவிர, கார்ப்பரேட் சட்ட நிறுவனங்கள், நிறுவனங்களின் நிர்வாக குழு, கொள்கை சிந்தனைக் குழுக்கள் (Policy Think Tank), சர்வதேச நிறுவனங்களில் இணைதல் மற்றும் தொழில்முனைவோராக (Entrepreneur) மாறுதல் உள்ளிட்ட வழிகளையும் திறந்துள்ளது.

முன்னோக்கிச் செல்வதற்கு முன், இந்தத் தேர்வு என்ன, அதன் நோக்கம் என்ன என்பதைப் பார்ப்போம்.

கிளாட் (CLAT) என்றால் என்ன?

கிளாட் (CLAT) என்றால் பொதுச் சட்ட சேர்க்கை தேர்வு (Common Law Admission Test) ஆகும், இது தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஆகும்.

இந்த தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் பெங்களூரு, ஹைதராபாத், போபால், கொல்கத்தா, ஜோத்பூர், ராய்ப்பூர், காந்திநகர், சில்வாசா, லக்னோ, பஞ்சாப், பாட்னா, கொச்சி, ஒடிசா, ராஞ்சி, அசாம், விசாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, மும்பை, நாக்பூர், சத்ரபதி சம்பாஜிநகர், சிம்லா, ஜபல்பூர், ஹரியானா, அகர்தலா, பிரயாக்ராஜ் மற்றும் கோவா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன.

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (Consortium of NLUs) ஆண்டுக்கு ஒருமுறை இந்தத் தேர்வை நடத்துகிறது. இதில் ஆங்கிலம், நடப்பு நிகழ்வுகள், சட்டரீதியான பகுத்தறிவு, தர்க்கரீதியான பகுத்தறிவு மற்றும் அளவு நுட்பங்கள் (Quantitative Techniques) ஆகிய ஐந்து பகுதிகளில் மாணவர்களின் திறனைச் சோதிக்கிறது.

இதில் வெற்றி பெறும் இளைஞர்கள், பிஏ-எல்எல்பி, பிபிஏ-எல்எல்பி மற்றும் பி.காம்-எல்எல்பி போன்ற ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

ஓராண்டு முதுநிலை (Post Graduate) படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிளாட் மூலம் நடைபெறுகிறது,

கிளாட் தேர்வை யார் எழுதலாம்?

12 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 45% மதிப்பெண்கள் பெற்ற எந்த விண்ணப்பதாரரும் இளநிலை தேர்வை எழுதலாம். பட்டியல், பழங்குடி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் 40% மதிப்பெண்களுடன் இந்தத் தேர்வை எழுதலாம்.

இளநிலை தேர்வை எழுதும் மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும்போதே கூட இந்தத் தேர்வை எழுதலாம். அதாவது அடுத்த ஆண்டு மே மாதம் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தேர்வில் பங்கேற்க தகுதியுடையவர்கள்.

முதுநிலை சேர்க்கைக்கு விண்ணப்பதாரர் எல்எல்பி-யில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெற்ற சமூகங்களுக்கு இதில் ஐந்து சதவீதம் சலுகை அளிக்கப்படுகிறது.

எந்தெந்த தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள் இந்த தேர்வில் அங்கமாக உள்ளன, பாடத்திட்டத்தில் என்னென்ன இருக்கிறது, கேள்வித்தாள் எப்படி இருக்கும் மற்றும் சில கேள்விகளுக்கான பதில்கள் தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் வலைத்தளத்தில் கிடைக்கும்.

ஆனால் இடங்கள் குறைவு, ஒவ்வொரு ஆண்டும் இதை எழுதுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். போன்ற காரணங்களால் இந்த தேர்வில் வெற்றி பெறுவது கடினமானதாக கருதப்படுகிறது. 26 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளுக்கு 3000 முதல் 3500 இடங்களே உள்ளன.

தேசிய சட்டப் பல்கலைக்கழகம், டெல்லி ஒவ்வொரு ஆண்டும் தனியாக ஒரு தேர்வை நடத்துகிறது, இது அகில இந்திய சட்ட நுழைவுத் தேர்வு (AILET) என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தேர்வு கிளாட் தேர்வு முடிந்த ஒரு வாரம் கழித்து நடக்கிறது. டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி-க்கு 120 இடங்களும், எல்எல்எம்-க்கு 81 இடங்களும் உள்ளன.

பாடத்திட்டத்தின் அமைப்பு எப்படி இருக்கும்?

ஜோத்பூர் தேசிய சட்ட பல்கலைக்கழகம் நாட்டின் தலைச்சிறந்த ஐந்து தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கேசவ் மால்பாணி கிளாட் (CLAT) தேர்வு மூலம் 2015 இல் இங்குச் சேர்ந்தார். அதன் பிறகு அவர் ஒரு கார்ப்பரேட் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

பின்னர் கிளாட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். அவர் ஒரு யூடியூப் சேனலை நடத்துகிறார், அதில் இந்தத் தேர்வு தொடர்பான முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

இந்த பாடத்திட்டத்தின் அமைப்பு குறித்துப் விளக்கிய அவர், முன்பு மக்கள் மூன்று ஆண்டுகள் இளநிலைப் பட்டமும், பின்னர் மூன்று ஆண்டுகள் சட்டப் படிப்பும் படித்தனர், ஆனால் இப்போது இந்த ஒருங்கிணைந்த பாடத்திட்டம் மூலம் இந்த இரண்டு வேலைகளும் ஐந்து ஆண்டுகளில் முடிவடைகின்றன என தெரிவித்தார்.

இதில், பிந்தைய இரண்டு ஆண்டுகளில், மாணவர்கள் தங்கள் சிறப்புப் படிப்பைத் (Honours Course) தேர்வு செய்கிறார்கள். அதாவது நிபுணத்துவம் பெற அவர்கள் கார்ப்பரேட் சட்டம், அரசியலமைப்புச் சட்டம், வர்த்தகச் சட்டம் அல்லது குற்றவியல் சட்டம் ஆகிய ஏதோ ஒன்றை தேர்வு செய்கிறார்கள்.

"கிளாட்டின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், எந்தப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் இந்தத் தேர்வை எழுதலாம். சட்டம் ஒரு தொழிலாக இப்போதும்கூடக் குறைவாக மதிப்பிடப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். சட்டம் படித்த பிறகு நீங்கள் ஒரு வழக்கறிஞர் மட்டுமே ஆவீர்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். சட்டத் துறையில் இப்போது என்னென்ன புதிய வாய்ப்புகள் வந்துள்ளன என்பது மக்களுக்குத் தெரியாது," என கேசவ் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

கேசவின் கூற்றுப்படி, ''இப்போதைய மிகப்பெரிய மாற்று வாய்ப்பு கார்ப்பரேட் வழக்கறிஞர் ஆவது. அதாவது, அவர்கள் பணிபுரியும் நிறுவனம் சட்டங்களை முழுமையாகப் பின்பற்றுகிறதா என்பதை உறுதி செய்பவர்கள். நிறுவன ஒப்பந்தங்களுக்கு அவர்கள் பொறுப்பாவார்கள். மேலும், பெரிய ஒப்பந்தங்கள், இணைப்பு அல்லது கையகப்படுத்தல் போன்ற பெரிய பேரங்களில் இவர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். அவர்கள் வணிகத்தை அமைப்பதற்கும் உதவுகிறார்கள்."

இது தவிர, வழக்காடுவது(litigation) அதாவது நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞராவது, நீதித்துறை சேவைகளில் நுழைவது அதாவது நீதிபதி ஆவது, அல்லது ஒரு பெரிய சட்ட நிறுவனத்தில் இணைவது போன்ற பல மாற்று வழிகள் உள்ளன.

கேசவ் மால்பாணி, வழக்கறிஞர்களின் தேவை அதிகரிக்கும்போது, அவர்களுக்குக் கற்பிக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்கிறார். எனவே, ஒருவர் விரும்பினால், அவர்கள் விரிவுரையாளராகவோ அல்லது சட்டப் பேராசிரியராகவோ கூட ஆகலாம்.

வேலைவாய்ப்பு மற்றும் பிற வாய்ப்புகள்

நீதியை குறிக்கும் சட்டபுத்தகம், பேனா, சுத்தியல்

பட மூலாதாரம், Getty Images

கேசவ் மால்பாணி கூற்றுப்படி, லண்டன், துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற இடங்களில் உள்ள கார்ப்பரேட் சட்ட நிறுவனங்களும் சிறந்த ஐந்து அல்லது ஆறு தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் ஆட்சேர்ப்பிற்காக வருகின்றன. இது தவிர, பெரிய தனியார் வங்கிகள் அல்லது பெரிய ஐடி நிறுவனங்களும் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு நல்ல ஊதியத்துடன் வேலை கொடுக்கின்றன.

அவர் செயற்கை நுண்ணறிவைக் (AI) குறிப்பிடும்போது கூட, சட்டம் படிக்கும் மாணவர்களின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார், "ஏஐ வந்த பிறகு பல புதிய நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன. நாட்டிலும் வெளிநாட்டிலும் எத்தனை ஸ்டார்ட்-அப்கள் வருகின்றன. இந்த அனைத்து நிறுவனங்களின் அடித்தளத்தை அமைப்பதில் ஒரு வழக்கறிஞரின் தேவை உள்ளது. இது தவிர, இந்தியாவில் சிறப்புப் பெற்ற கார்ப்பரேட் சட்ட நிறுவனங்களும் உள்ளன. மேலும், இவர்களின் ஆரம்பச் சம்பளமே மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும்."

ஹரியாணாவைச் சேர்ந்த கனிகா ஜெயின், ராஜஸ்தானில் உள்ள ஒரு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்தார். அவரது குடும்பத்தில் யாருக்கும் சட்டத் தொழிலுடன் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு ஆசிரியர் மூலம் அவருக்கு கிளாட் பற்றித் தெரியவந்தது.

அங்கிருந்து அவர் ஒரு கார்ப்பரேட் வழக்கறிஞர் ஆகும் கனவைக் கண்டார். இப்போது அவர் தேசிய சட்டப் பல்கலைக்கழகம், ஒடிசாவில் படித்து வருகிறார்.

"நான் ஒடிசா தேசிய சட்டப் பல்கலைக்கழகம் பற்றிப் பேசுவதானால், இங்கு கார்ப்பரேட் சட்டம் படிப்பவர்கள் அதிகம், மேலும் அவர்களின் ஆரம்ப சம்பளமே ஆண்டுக்கு 15 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம்." என கனிகா கூறுகிறார்.

இருப்பினும், யாருக்கு 15 லட்சம் ரூபாய் வேலைவாய்ப்பு கிடைக்கும், யாருக்கு 25 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பது மாணவர்களின் ஐந்து ஆண்டு செயல்திறனைப் பொறுத்தது. இதில் மாணவர்களின் தர மதிப்பெண்கள் மற்றும் இந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் செய்த பயிற்சித் திட்டங்களின் செயல்திறன் ஆகியவை மதிப்பீடு செய்யப்படுகின்றன.

கல்விக் கட்டணத்தைப் பற்றிப் பேசினால், அது ஒவ்வொரு சட்டப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தது. உதாரணமாக, ஒடிசா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் இது ஆண்டுக்கு சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். ஆனால் NLU மேகாலயாவில் சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் ஆகும். கூடுதலாக, விண்ணப்பப் படிவத்தை நிரப்பும்போதும் மாணவர்கள் 4000 ரூபாய் செலுத்த வேண்டும்.

எப்படித் தயாராவது?

சட்டப் பயிலும் மாணவர் சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

கடைசியாக மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், ஒரு மாணவர் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறப் பின்பற்ற வேண்டிய படிகள் என்ன? இந்தக் கேள்வியை நாங்கள் கனிகாவிடம் கேட்டோம்.

"முதலில், கணிதத்தைப் பயிற்சி செய்யத் தொடங்குங்கள். கணிதப் பகுதி கடைசியில் வருகிறது என்று மாணவர்கள் பெரும்பாலும் நினைக்கிறார்கள், சில சமயங்களில் மாணவர்கள் அதை முயற்சி செய்வதில்லை, மற்ற பகுதிகளில் நன்றாகச் செயல்பட முயற்சிக்கிறார்கள்," என அவர் சொல்கிறார்.

"ஆனால் நீங்கள் முழுமையான மதிப்பெண்களைப் பெறக்கூடிய ஒரே ஒரு பிரிவு இது என்பதால் கணிதத்தைத் நிச்சயமாக முயற்சி செய்ய வேண்டும். அதாவது தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கும்," என்று அவர் கூறுகிறார்.

மாதிரித் தேர்வுகளை (Mock Tests) தொடர்ந்து எழுதுவது அவசியம் என்று கனிகா கூறுகிறார். இதற்குக் காரணம், அவை உண்மையான தேர்வை விடக் கடினமானவை. யாராவது அதை வெற்றிகரமாக முடித்தால், உண்மையான தேர்வை எழுதும் போது, அது எளிதாக இருக்கும்.

கனிகாவின் கூற்றுப்படி, பொது அறிவுப் படிக்கும்போது குறிப்புகளை எடுத்துக்கொள்வது மறுபார்வை செய்வது எளிதாக்குகிறது.

"தேர்வு எழுதுவதற்கு யாரும் நாள் முழுவதும் படிக்கத் தேவையில்லை. பயப்படவும் தேவையில்லை. தேர்வு எழுதும் போது மனம் எவ்வளவு அமைதியாக இருக்கிறதோ, அவ்வளவு எளிதாக நேர மேலாண்மை இருக்கும். ஆம், தேர்வுக்கு முன் முழுமையாகத் தூங்குங்கள்," என்கிறார் கனிகா.

கிளாட்டில் அறிவை விட சமயோஜிதமான சிந்தனை அதிகம் சோதிக்கப்படுகிறது என்று கனிகா கூறுகிறார். நீங்கள் 12 ஆம் வகுப்பில் இருக்கும்போதே இந்தத் தேர்வை எழுதுவதால், அதன் தயாரிப்புக்காக யாரும் தனியாக ஏதும் செய்யத் தேவையில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பயிலும் மாணவர்கள் பிரத்யேகமாக தயாராக வேண்டுமா?

கேசவ் மால்பாணி இதற்கு 'ஆம்' என்று பதிலளிக்கிறார்.

"இது ஆங்கிலம் தேவைப்படும் ஒரு தேர்வு. சட்டப் புத்தகங்கள், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் அல்லது சட்ட நிறுவனங்களில், அனைத்து ஆவணங்களும் ஆங்கிலத்தில் தான் இருக்கும்."

இந்தி உள்ளிட்ட பயிற்று மொழிகளில் படித்தவர்கள் தயாராகும் போது தங்கள் ஆங்கிலத்தையும் மேம்படுத்த வேண்டும்.

பயிற்சி மையத்தில் (Coaching) பயிலாமல் இந்தத் தேர்வில் எளிதாகத் தேர்ச்சி பெற முடியுமா?

கேசவ் கூறுகையில், "ஆம், தயாராக முடியும். இன்று இணையம் மிகப்பெரிய ஊடகம். அங்கு உங்களுக்கு நிறைய உள்ளடக்கம் கிடைக்கிறது. ஆனால் இதுவே ஒரு பாதிப்பும் தான், ஏனென்றால் இவ்வளவு பெரிய உள்ளடக்கத்தில் எது வேலைக்கு ஆகும், எது ஆகாது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். எனவே ஒரு சரியான வழிகாட்டுதல் ஒரு வழிகாட்டியிடமிருந்து கிடைக்கிறது, அதாவது சரியான பாதையைக் காட்டக்கூடிய ஒருவரிடமிருந்து கிடைக்கிறது," என கேசவ் கூறுகிறார்.

கிளாட்டுக்கு பல தனியார் பயிற்சி மையங்கள் கிடைக்கின்றன. இங்கு முழுப் படிப்புக்கான கட்டணம் பொதுவாக 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கும். ஆனால் இந்தக் கட்டணம் பயிற்சி மையம் எந்த நகரில் உள்ளது, அது ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் பயிற்சியா என்பதைப் பொறுத்தும் மாறுபடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு