கத்தாரில் திருநங்கைகளின் நிலை - 'கைதாகும் அச்சத்திலேயே வாழ்கிறோம்'

    • எழுதியவர், லாரென் மோஸ்
    • பதவி, எல்ஜிபிடி செய்தியாளர்
கத்தார்

பட மூலாதாரம், Getty Images

கால்பந்து உலகக் கோப்பையை நடத்தும் கத்தார் குறித்த சர்ச்சைகளுள் பெரும்பாலானவை அந்நாட்டில் எல்ஜிபிடி சமூகத்தினருக்கான உரிமைகள் மற்றும் தன்பாலின உறவு குற்றச்செயல் என்பது பற்றியே உள்ளது. அதே கத்தாரில் “பொது ஒழுக்கத்தை மீறியதாகக்” கூறி, எந்தவொரு விசாரணையும் அதிகாரப்பூர்வ புகாரும் இல்லாமல் திருநங்கைகளை காவலில் வைக்க முடியும். கத்தாரை சேர்ந்த திருநங்கைகள் இருவர் தங்களின் வாழ்க்கை குறித்து பிபிசியிடம் பகிர்ந்துகொண்டனர்.

“எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது, ஆனால் நாங்களும் இங்கு இருக்கிறோம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்,” என திருநங்கை பெண்ணாக வாழும் தன் முடிவு குறித்து தெரிவிக்கிறார் ஷாத். இந்த கட்டுரையில் பேசியுள்ள மற்றொரு நபரைப் போலவே ஷாத்தின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக அவருடைய உண்மையான பெயர் மாற்றப்பட்டுள்ளது. 

அவரின் பாதுகாப்பு கருதி, அனுப்பப்படும் செய்திகளை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாத வகையிலான செயலி மூலம் அவருக்கு செய்திகளை அனுப்பினோம். எங்களுக்கு வீடியோ அழைப்பு செய்வதற்காக, தன் வீட்டிலிருந்து தள்ளிச் சென்று வேறொரு இருட்டான அறையில் ரகசியமாக அழைத்தார். 

ஆண்களைப் போன்று சிகை அலங்காரம் செய்துகொள்ள தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறிய ஷாத் தன் முடியை காண்பித்தார். ஆனால், யாரால் கட்டாயப்படுத்தப்பட்டார் என்பதை அவர் தெரியப்படுத்தவில்லை. 

மார்புப்பகுதியில் காயங்கள்

மேலும், அவருடைய சட்டையை கழற்றி தன் மார்புப்பகுதியின் மேலே இருந்த காயங்களை காட்டினார். 

“ஒரு பெண்ணைப் போன்று ஆள்மாறாட்டம் செய்ததாக” கூறி தான் கைது செய்யப்பட்டபோது தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள் அவை என ஷாத் கூறினார். 

வேறு நாட்டிலிருந்து மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் பெற்ற ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை எடுக்கத் தொடங்கியதிலிருந்து உருவான மார்பக திசுக்களை அகற்றும்படி அதிகாரிகள் ஷாதிடம் கூறியுள்ளனர்.

“என்னுடைய வேலையையும் எனது நண்பர்களையும் நான் இழந்துவிட்டேன்,” என்கிறார் அவர். 

“என்னுடைய அடையாளத்தால் நான் பலமுறை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளேன். நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்.” என்றார் ஷாத். 

ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமாக கருதப்படும் 60 நாடுகளுள் கத்தாரும் ஒன்று. கத்தாரில் ஓரினச்சேர்க்கை உறவு சட்டத்திற்கு எதிரானது. ஏனெனில், அவை இஸ்லாமின் ஷரியா சட்டத்தின்படி ஒழுக்கக்கேடானதாக கருதப்படுகிறது. 

அபராதம், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிப்பது, கல்லெறிந்து மரணம் உள்ளிட்டவை அதற்கான தண்டனைகளாக உள்ளன. மேலும், இவற்றில் மரண தண்டனைக்கு எந்தவொரு பதிவும் இருக்காது. 

ஒருவர் “சமூக பாதுகாப்பு” விதிகளை மீறியதாக காவல்துறை சந்தேகித்தால், குறிப்பிட்ட நபர் “பொது ஒழுக்கத்தை மீறியதாக” எந்தவொரு விசாரணையும் புகாரும் இன்றி தடுப்புக் காவலில் வைக்க முடியும். 

கைது குறித்த அச்சம்

கைது செய்யப்படுவோமோ என்ற தொடர் பயத்திலேயே தான் இருப்பதாக ஷாத் கூறுகிறார். 

அரசு-சாரா அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், கத்தாரில் எல்ஜிபிடி சமூகத்தினர் கைது செய்யப்படுவது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அவர்களுள் உடைகள், சிகை, அலங்காரம் ஆகியவற்றின் மூலம் தங்கள் பாலினத்தை வெளிப்படுத்தியதற்காகவே திருநங்கைகளும் கைது செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. 

ஒரு நாளின் பரபரப்பான நேரங்களில் மக்கள்தொகை மிகுந்த இடங்களுக்கு செல்வதை ஷாத் தவிர்த்துவிடுகிறார். ஏனெனில், யாரேனும் அவரைப் பார்த்து போலீஸிடம் புகார் தெரிவித்துவிடுவார்கள் என அவர் நினைப்பதே இதற்கு காரணம். 

மேக்கப் அணிந்துகொண்டு “ஒரு பெண்ணைப் போன்று” நடந்ததற்காக தான் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கும் அவர், கத்தார் சட்ட அமலாக்கத்தின் ஒரு பிரிவான அரசின் பாதுகாப்புத்துறையை “ஒரு கும்பல்” என்றும் விவரிக்கிறார். 

“அவர்கள் உங்களை சிறைபிடித்துக்கொண்டு, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை மற்றவர்களிடம் சொல்ல முடியாமல் தடுப்பார்கள். பாதாள சிறையில் அடைத்து ஒரு குற்றவாளியைப் போல் நடத்துவார்கள்,” என்கிறார் அவர்.

“உங்கள் கைகளில் கைவிலங்கு பூட்டுவார்கள்,” எனக்கூறும் அவர், “இது எங்களிடமிருந்து இந்த சமூகத்தைப் பாதுகாப்பதற்காக,” என்று கூறி சிரிக்கிறார். 

ஷாத் கூறுவதுபோல் அவர் கைது செய்யப்பட்டாரா என்பதை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. ஏனெனில், அவர் கைது செய்யப்பட்டது குறித்த எந்தவொரு அதிகாரபூர்வ பதிவும் அவருக்கு அளிக்கப்படவில்லை.

கத்தார்

பட மூலாதாரம், BBC/GEMMA LAISTER

“பாலின மாற்று சிகிச்சை”

இதே மாதிரியான காரணங்களுக்காக சிறைக்கு செல்பவர்கள் “பாலின மாற்று சிகிச்சைக்காக” (conversion therapy) மருத்துவரிடம் அனுப்பப்படுவதாக ஷாத் கூறுகிறார். ஆனால், இத்தகைய எந்த “பாலின மாற்று சிகிச்சை மையங்களையும்” அரசாங்கம் செயல்படுத்தவில்லை என்றும், உரிமம் வழங்கப்படவில்லையென்றும் கத்தார் அரசு அதிகாரி ஒருவர் மறுக்கிறார். 

“என்னுடைய பாலின தேர்வுக்காக நான் நரகத்திற்கு செல்வேன் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், கடவுள்தான் என்னை இப்படி படைத்ததாக நான் நம்புகிறேன்,” என்கிறார் ஷாத். 

“நான் ஒரு பெண். என்னால் ஒரு ஆணாக இருந்திருக்க முடிந்தால் அவ்வாறே இருந்திருப்பேன். அப்போது என் வாழ்க்கை இன்னும் எளிதாக இருந்திருக்கும்.” என்றார். 

ஐரோப்பாவில் புகலிடம்

மற்றொரு திருநங்கையான சாராவின் நிலைமை இன்னும் மோசம். அவர் தற்போது கத்தாரிலிருந்து வெளியேறி ஐரோப்பாவில் புகலிடம் தேடி வருகிறார். 

எல்லாவற்றையும் அங்கேயே விட்டுவிட்டு தன் உடைமைகள் அடங்கிய ஒரேயொரு பையுடனும் கொஞ்சம் பணத்துடனும் அங்கிருந்து வெளியேறியது குறித்து அவர் கூறினார். 

“தற்கொலை செய்துகொள்வது அல்லது அங்கிருந்து வெளியேறுவது என்றவொரு கட்டத்தில் நான் இருந்தேன். இறுதியில் அங்கிருந்து வெளியேற முடிவு செய்தேன்.”

பல முறை தானும் பாலின மாற்று சிகிச்சைக்காக கட்டாயப்படுத்தப்பட்டதாக சாரா கூறுகிறார். ஆனால் ஓரினச்சேர்க்கை தொடர்பான கத்தாரின் சட்டங்களுக்கு எதிராக உலகக் கோப்பையை புறக்கணிப்பதற்கான அழைப்புகள் பலனளிக்கும் என்று அவர் நம்பவில்லை.

“இத்தகைய சட்டங்கள் வேறு நாடுகளிலும் உள்ளன. ஆனால், கத்தார் பற்றி மட்டுமே குரல் எழுப்புகின்றனர். கத்தார் உலகக் கோப்பையை நடத்தக்கூடாது என்கின்றனர்.” 

ஃபிஃபா என்றழைக்கப்படும் சர்வதேச கால்பந்து அமைப்பின் தலைமை நிர்வாகி, அரசியலை விட போட்டியில் கவனம் செலுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார். எனினும், எல்ஜிபிடிக்கு எதிரான சட்டங்களைக் கொண்ட வேறு எந்த நாடும் எதிர்காலத்தில் உலகக் கோப்பையை நடத்த முடியாது என்று உறுதியளிக்க வேண்டும் என்று பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

ஷாத் மற்றும் சாரா இருவரின் கூற்றுகளையும் கத்தார் “முற்றிலும் நிராகரித்துவிட்டது. 

உலகக் கோப்பை போட்டிக்கு "எல்லோரும் வரவேற்கப்படுகிறார்கள்" என்று ஒரு அரசு அதிகாரி தெரிவித்தார். மேலும் "நட்பின் பாலங்களை உருவாக்கவும், தடைகளை உடைக்கவும் அனைத்து தரப்பு ரசிகர்களும் கத்தாரில் ஒன்று கூடுகிறார்கள்" என்று அவர் கூறினார்.

“எவர் ஒருவருக்கும் எதிரான பாகுபாட்டை கத்தார் பொறுத்துக்கொள்ளாது” எனவும் உலகிலேயே பாதுகாப்பான நாடுகளுள் கத்தாரும் ஒன்று என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். எனினும், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் சமீபத்திய அறிக்கை இந்த கூற்றுகளை மறுக்கிறது.

ஜூலியன் ஹஜ்ஜின் கூடுதல் தகவல்களுடன் எழுதப்பட்டது.

காணொளிக் குறிப்பு, கத்தார் கால்பந்து உலகக் கோப்பை 2022: 25க்கும் மேற்பட்ட மரணங்கள்; பதில் சொல்லாத கத்தார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: