பஷர் அல் அசத் : ஒரு கண் மருத்துவர் சிரியாவின் சர்வாதிகார அதிபர் ஆனது எப்படி?

பஷர் அல் அசத்

பட மூலாதாரம், Getty Images

சிரியா அதிபர் பஷர் அல் அசத்தின் வாழ்க்கையில் பல முக்கியமான தருணங்கள் உள்ளன. ஆனால் அவற்றுள் அவர் வாழ்ந்த இடத்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடந்த கார் விபத்துதான் அதிமுக்கியமானது.

தனது தந்தையிடம் இருந்து அதிகாரத்தைப் பெற்று நாட்டை வழிநடத்துவதற்கு பஷர் அல் அசத்திற்கு ஆரம்பத்தில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. அவரது மூத்த சகோதரர் பஸாலுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது.

கடந்த 1994ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டமாஸ்கஸ் அருகே நடந்த ஒரு கார் விபத்தில் பஸால் உயிரிழந்தார். அப்போது பஷார் லண்டனில் கண் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார்.

பஸாலின் மரணத்தைத் தொடர்ந்து, சிரியாவின் அதிபராவதற்கு பஷார் தயார்படுத்தப்பட்டார். தற்போது அவர் நூறாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற, லட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்த ஒரு மோசமான அதிபராக இருக்கிறார்.

ஆனால், கண் மருத்துவராக இருந்த பஷர் அல் அசத், போர்க்குற்றம் சுமத்தப்பட்ட ஒரு சர்வாதிகாரத் தலைவராக எப்படி மாறினார்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தந்தையின் வழியில் நடந்தார்

அசத் 1965ஆம் ஆண்டு, ஹபீஸ் அல்-அசத், அனிசா மக்லூஃப் ஆகியோருக்குப் பிறந்தார்.

அவர் பிறந்தபோது, சிரியா, மத்திய கிழக்கு மற்றும் இதர பிராந்தியங்களில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. அந்த நேரத்தில், அப்பகுதிகளில் உள்ள அரசியலில் அரபு தேசியவாதம் ஆதிக்கம் செலுத்தியது. சிரியாவிலும் அதே நிலைதான்.

எகிப்துக்கும் சிரியாவுக்கும் (1958-1961) இடையிலான குறுகிய கால கூட்டுறவு, தோல்வியில் முடிந்த பிறகு பாத் கட்சி, ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சியும் அரபு தேசியவாத கருத்தை ஊக்குவித்தது. அன்றைய பெரும்பாலான அரபு நாடுகளைப் போலவே, சிரியாவும் ஒரு ஜனநாயக நாடாக இல்லை மற்றும் பல கட்சிகளை உள்ளடக்கிய தேர்தல் முறை அங்கு இல்லை.

அசத்தின் குடும்பம் அலாவைட் எனப்படும் சிரியாவை சேர்ந்த ஒரு பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த பிரிவைச் சேர்ந்த பலர் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டின் ராணுவத்தில் சேர்ந்தனர்.

அசத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அசத்தின் தந்தை ஹஃபீஸ் சுமார் முப்பது ஆண்டுகள் சிரியாவின் அதிபராக இருந்தார்

அப்போது ஹபீஸ் அல் அசத் ஒரு ராணுவ அதிகாரியாகவும், பாத் கட்சியின் தீவிர ஆதரவாளராகவும் பிரபலமடைந்தார். அவர் 1966ஆம் ஆண்டு சிரியாவின் பாதுகாப்பு அமைச்சரானார்.

தனது அதிகாரத்தைப் பலப்படுத்தி 1971ஆம் ஆண்டு ஹபீஸ் அல் அசத் சிரியாவின் அதிபரானார். 2000ஆம் ஆண்டு, அவர் இறந்துபோகும் வரை அவர் அதிபராகவே பதவி வகித்தார்.

அவரது ஆட்சிக்காலம் சிரியாவின் சுதந்திரத்திற்குப் பின்பு உள்ள வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சிகளை ஒடுக்கி, ஜனநாயக தேர்தல்களை நிராகரித்து அவர் இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்தார்.

அவர் சோவியத் ஒன்றியத்துடன் இணைந்து செயல்பட்டார். ஆனால் 1991 வளைகுடா போரில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் இணைந்தார்.

லண்டனில் மருத்துவப் படிப்பு

அஸ்மா அல்-அக்ராஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அஸ்மா அல்-அக்ராஸ்

அசத் அரசியல் மற்றும் ராணுவத்தில் இருந்து வெகு தொலைவில் வேறுபட்ட பாதையைத் தேர்வு செய்தார். அவர் மருத்துவராகப் பணியாற்ற முடிவு செய்தார்.

டமாஸ்கஸ் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, அவர் 1992ஆம் ஆண்டு, லண்டனில் உள்ள வெஸ்டர்ன் ஐ மருத்துவமனையில் கண் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற பிரிட்டன் சென்றார்.

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான A Dangerous Dynasty: The Assads என்ற பிபிசி ஆவணப்படத்தின்படி, லண்டனில் உள்ள வாழ்க்கையை பஷார் மிகவும் விரும்பினார். லண்டனில்தான் பஷார் தனது வருங்கால மனைவி அஸ்மா அல்-அக்ராஸை சந்தித்தார்.

கடந்த 1994ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தனது மூத்த சகோதரரான பஸல் உயிரிழந்த பிறகு பஷாருடைய வாழ்க்கையின் போக்கு அடியோடு மாறியது. சிரியாவின் அடுத்த தலைவராக அவரைத் தயார் செய்வதற்காக உடனடியாக லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டார்.

அதன் பிறகு, பஷார் ராணுவத்தில் சேர்ந்தார், மக்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவதற்கான பணிகளைத் தொடங்கினார்.

மாற்றத்திற்கான கனவுகள்

அசத்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, அசத் குடும்பம் சிரியாவை அரை நூற்றாண்டு காலமாக ஆட்சி செய்து வருகிறது

ஹஃபீஸ் அல்-அசத் 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார். அதையடுத்து, 34 வயதான பஷார் சிரியாவின் அதிபராக நியமிக்கப்பட்டார். இதற்காக சிரிய அரசியலமைப்பில் அதிபராவதற்கு குறைந்தபட்ச வயது தேவை 40இல் இருந்து குறைக்கப்பட்டது.

அவர் "வெளிப்படைத்தன்மை, ஜனநாயகம், வளர்ச்சி, நவீனமயமாக்கல், பொறுப்புக் கூறல் மற்றும் அரசு சார்ந்த சிந்தனை" போன்றவை குறித்துப் பேசினார்.

அதிபராகப் பதவியேற்ற சில மாதங்களுக்குப் பிறகு, பஷார் அஸ்மா அல்-அக்ராஸை மணந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்: ஹபீஸ், ஜீன் மற்றும் கரீம்.

தொடக்கத்தில், அரசியல் சீர்திருத்தம் மற்றும் ஊடக சுதந்திரம் பற்றிய பஷாரின் சொல்லாட்சி பல்வேறு சிரிய மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவரது தலைமை, மேற்கத்திய நாட்டில் கல்வி பயின்றது ஆகியன மாற்றத்துக்கான புதிய சகாப்தத்தைக் குறித்தது.

சிரியாவில் சிறிது காலத்திற்கு சிவில் விவாதம் மற்றும் "டமாஸ்கஸ் ஸ்பிரிங்" எனப்படும் கருத்து சுதந்திரத்தைப் பற்றிய விவாதமும் நடைபெற்றது. ஆனால் 2001ஆம் ஆண்டின்போது, பாதுகாப்புப் படையினர் மீண்டும் தங்களது ஒடுக்குமுறையைத் தொடங்கி, அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களைக் கைது செய்தனர்.

அதிபராகப் பொறுப்பேற்ற தொடக்கத்தில் தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வரையறுக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை பஷார் அறிமுகப்படுத்திய அதே வேளையில், அவரது உறவினரான ராமி மக்லூப்ஃபின் எழுச்சியும் காணப்பட்டது. மக்லூஃப் ஒரு பரந்த பொருளாதார சாம்ராஜ்யத்தை நிறுவினார், இது செல்வமும், அதிகாரமும் இணைந்து செயல்படுவதைக் குறிப்பதாக விமர்சகர்கள் கூறினர்.

இராக் மற்றும் லெபனான்

லெபனானில் உள்ள ஒரு பாலத்தில் தொங்கவிடப்பட்ட ரஃபிக் ஹரிரியின் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபிக் ஹரிரியின் படுகொலை அசத் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியது.

கடந்த 2003ஆம் ஆண்டில் நடந்த இராக் போரால், அசத் மற்றும் மேற்கத்திய அரசுகளுக்கு இடையிலான உறவுகள் பெரும் சரிவைச் சந்தித்தது. இராக் மீது அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பை சிரியா அதிபர் எதிர்த்தார். அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகளின் அடுத்த இலக்காக சிரியா இருக்கலாம் என்ற அவரது அச்சம் இதற்குக் காரணம் என்று சிலர் கூறினர்.

அதே 2003ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், இராக் தொடர்பான நடவடிக்கைகள், லெபனானில் சிரியாவின் இருப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்கா, சிரியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.

கடந்த 2005ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், லெபனானில் சிரியாவின் முக்கிய எதிரிகளில் ஒருவரான முன்னாள் லெபனான் பிரதமர் ரஃபிக் ஹரிரி பெய்ரூட்டில் ஒரு மிகப்பெரிய வெடிப்பு சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு சிரியா மற்றும் அதன் நட்பு நாடுகள்தான் காரணம் என்றும் குரல்கள் எழுந்தன.

இதையடுத்து, லெபனானில் எதிர்ப்புகள் வெடித்தன. சிரியா மீது சர்வதேச அளவில் அழுத்தங்கள் எழுந்தன. இதனால் லெபனானில் சுமார் 30 ஆண்டுக்கால ஆக்கிரமிப்பிற்குப் பிறகு சிரியா வெளியேறியது.

அசத் மற்றும் லெபனானில் அவரது முக்கியக் கூட்டாளியான ஹெஸ்பொலாவும், 2020ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் ஹெஸ்பொலா ஆயுதப் படையைச் சேர்ந்த ஒருவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்த போதிலும், ஹரிரியின் படுகொலையில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்று தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

அரபு வசந்தம்

எதிர்ப்பாளர்கள் அசத் மற்றும் அவரது தந்தையின் சுவரொட்டிகளை கிழித்து எறிந்தனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "அரபு வசந்தம்" எதிர்ப்புகள் 2011ஆம் ஆண்டு சிரியாவில் நடந்தது

அசத் ஆட்சியின் முதல் பத்தாண்டு காலத்தில் இரானுடனான சிரியாவின் உறவு வலுப்பெற்றது. மேலும் கத்தார், துருக்கி ஆகிய இரு நாடுகளுடனும் சிரியா உறவுகளை வளர்க்கத் தொடங்கியது.

ஆரம்பத்தில், பஷாருக்கு ரியாத்தின் ஆதரவு இருந்தபோதிலும், சௌதி அரேபியாவுடனான உறவுகள் ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தன.

ஒட்டுமொத்தமாக, வெளியுறவுக் கொள்கையில் அசத் தனது தந்தையின் வழியையே பின்பற்றினார். நேரடி ராணுவ மோதல்களைத் தவிர்த்து கவனமாக உத்திகளைக் கையாண்டார்.

கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அவரது மனைவி அஸ்மா அல்-அசத் வோக் பத்திரிக்கைக்கு அளித்த ஒரு நேர்காணலில், அவர்களது நாடு "ஜனநாயக முறையில்" வழிநடத்தப்படுவதாக அவர் கூறினார்.

அதே நாளில், துனிசியாவை சேர்ந்த காய்கறி வியாபாரியான முகமது பௌசிஸி ஒரு பெண் காவலர் தன்னை அறைந்ததால் தீக்குளித்தார். இது துனிசியாவில் மக்கள் மத்தியில் ஒரு கடும் எதிர்ப்பைத் தூண்டியது, இதனால் அந்நாட்டின் அதிபர் ஜைன் எல் அபிடின் பென் அலியின் ஆட்சி கவிழ்ந்தது.

இந்த எழுச்சியால் எதிர்பாராதவிதமாக எகிப்து, லிபியா, ஏமன், பஹ்ரைன், சிரியா போன்ற அரபு உலக நாடுகள் முழுவதும் புரட்சிகர இயக்கங்கள் ஏற்பட்டது.

கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், சிரியாவில் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதை அடுத்து சில நாட்களுக்குப் பிறகு தெற்கு நகரமான தாராவிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. சுவர்களில் அதிபர் அசத்தை எதிர்த்து வாசகங்களை எழுதியதற்காக குழந்தைகள் கைது செய்யப்பட்டனர்.

இதற்குப் பிறகு, சிரிய மக்களிடம் உரையாற்றுவதற்கு அசத் இரண்டு வாரங்கள் காத்திருந்தார். நாடாளுமன்றத்தில், சிரியாவை குறிவைத்து நடத்தப்படும் "சதி" திட்டங்களை முறியடிப்பதாக உறுதியளித்தார், மேலும் பல்வேறு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டார்.

தராவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டினால், ஆர்ப்பாட்டம் அதிகரித்து, சிரியாவின் பல்வேறு நகரங்களில் அசத் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோஷங்கள் எழுந்தன.

சில மாதங்களுக்குள், நாடு முழுவதும் அரசாங்கத்திற்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.

சர்வதேச தலையீடு, ஜிஹாதிகள் மற்றும் போர்க் குற்றங்கள்

ஜூன் 26, 2014 அன்று சிரியாவின் அலெப்போ நகரில் நடந்த வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து இடிந்த கட்டடங்களை மக்கள் ஆய்வு செய்தனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிரியாவின் பல்வேறு நகரங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரில் அழிந்துள்ளன.

சிரியாவில் மோதல் தீவிரமடைந்ததால், சர்வதேச சக்திகளின் தலையீட்டுக்கு மத்தியிலும், உயிரிழப்புகள் பல்லாயிரக்கணக்கில் இருந்து லட்சங்களாக உயர்ந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா, இரான் மற்றும் இரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் அசத்தின் படைகளுடன் இணைந்து செயல்பட்டன. மற்றொருபுறம் துருக்கி மற்றும் வளைகுடா நாடுகள் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களை ஆதரித்தன.

தொடக்கத்தில், அசத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஜனநாயகம் மற்றும் அனைவருக்கும் சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தாலும், விரைவில் அதில் மதம் சார்ந்த கோஷங்களும் எழத் தொடங்கின. மேலும் சன்னி முஸ்லிம்களின் பெரும்பான்மையைவிட அலாவைட் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கம் சாதகமாக இருப்பதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

பிராந்திய அளவிலான தலையீடு சமூக பிரிவினைவாதத்தை ஆழமாக்கியது. இஸ்லாமிய பிரிவுகள் அலாவைட் பிரிவுகளுக்கு எதிராக விரோதப் பேச்சுகளைத் தொடுத்தனர். ஹெஸ்பொலா தலைமையில் இயங்கும் இரானுக்கு விசுவாசமான ஷியா போராளிகள் அசத்தின் அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக சிரியாவில் குவிந்தனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு, அசத்தின் அரசாங்கம் சரிவின் விளிம்பில் இருப்பது போலத் தோன்றியது, அது நாட்டின் பல்வேறு பகுதிகளின் கட்டுப்பாட்டை இழந்தது. இருப்பினும், ரஷ்யாவின் ராணுவத் தலையீட்டால் நிலைமை தலைகீழாக மாறியது, அசத் முக்கியப் பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாடு பெற முடிந்தது

காஸா போர்

சிரியா

பட மூலாதாரம், Getty Images

அசத் ஆட்சியின் மூன்றாவது தசாப்தத்தில் சிரியாவில் மோசமான பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டபோதிலும், இந்த மிகப்பெரிய சவாலில் இருந்து அதிபர் தப்பியதாகத் தோன்றியது.

இருப்பினும், 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதலைத் தொடங்கியது, இதனால் காஸா போர் ஏற்பட்டது. அதன் விளைவுகளை லெபனானும் சந்திக்க வேண்டியதாக இருந்தது. குறிப்பாக அசத்தின் கூட்டாளியான ஹெஸ்பொலாவை இது பாதித்தது.

இந்தப் போர்ச் சூழல் ஹெஸ்பொலாவுக்கு அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணம் உள்படப் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியது.

லெபனானில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்த அதே நாளில், இஸ்லாமிய குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிப் படைகள் சிரியாவில் திடீர் தாக்குதலைத் தொடங்கி, நாட்டின் இரண்டாவது நகரமான அலெப்போவை கைப்பற்றினர்.

தெற்குப் பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவியதை அடுத்து அவர்கள் ஹமா மற்றும் பிற நகரங்களையும் கைப்பற்றியுள்ளனர் .

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)