சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு - ஆர்.எஸ்.எஸ் கருத்தும் காங்கிரஸின் 4 கேள்விகளும்

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத் தலைவர் மோகன் பாகவத்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத் தலைவர் மோகன் பாகவத்தின் அறிக்கைகள் பலமுறை இடஒதுக்கீட்டுக்கு எதிரானவையாக பார்க்கப்பட்டன

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தனது ஆதரவை திங்களன்று தெரிவித்துள்ளது.

சங்கத்தின் கொள்கை பரப்புப் பிரிவு தலைவர் சுனில் அம்பேகர், இது ஒரு முக்கியமான விஷயம் என்றும், அரசியல் அல்லது தேர்தல் நோக்கங்களுக்காக இதைப் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறினார்.

பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மற்றும் சாதியினரின் நலனுக்காக இதைப் பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.

பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரை துணை வகைப்படுத்தும் நடவடிக்கையை ஒருமித்த கருத்தை எட்டாமல் மேற்கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறினார்.

வகைப்பாடு விவகாரம் தொடர்பாக தலித் மற்றும் பழங்குடியின குழுக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, பாஜக மற்றும் பிற அரசியல் கட்சிகள் அதில் தெளிவான நிலைப்பாடு எடுப்பதை தவிர்த்து வருகின்றன.

எதிர் தரப்பான இந்தியா கூட்டணி, சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை முக்கிய விஷயமாக மாற்றியுள்ள நேரத்தில் ஆர்எஸ்எஸ்-இன் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த ஆர்எஸ்எஸ் கருத்து

சுனில் அம்பேகர்

பட மூலாதாரம், YouTube/RSS

படக்குறிப்பு, சுனில் அம்பேகர், கொள்கை பரப்புப் பிரிவு தலைவர், ஆர்எஸ்எஸ்

கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற மூன்று நாள் அகில இந்திய ஸ்வயம் சேவக் கூட்டத்தின் கடைசி நாளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை பரப்புப் பிரிவு தலைவர் சுனில் அம்பேகர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

"இந்து சமூகத்தில் சாதி மற்றும் சாதி உறவுகள் ஒரு முக்கியமான விஷயம். இது நமது தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான முக்கியமான விவகாரம். இது மிகவும் தீவிரமாக கையாளப்பட வேண்டிய விஷயம். தேர்தல் அல்லது அரசியலுக்காக மட்டுமே இதை பயன்படுத்தக் கூடாது,” என்று அம்பேகர் கூறினார்.

"எல்லா நலத்திட்டங்களிலும், பின்தங்கியிருக்கும் சாதிகளுக்கு சிறப்பு கவனம் தேவை என்று ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. அதற்கான தரவுகள் அரசுக்கு தேவை என்றால், கணக்கெடுப்பை நடத்திக் கொள்ளலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“இதற்கு முன்பும் கூட அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வருங்காலத்திலும் அதைச் செய்ய முடியும். ஆனால் இது அந்த சமூகங்கள் மற்றும் சாதிகளின் நலனுக்காக மட்டுமே செய்யப்பட வேண்டும். இதை தேர்தல் அரசியலில் கருவியாக பயன்படுத்தக் கூடாது,” என்றார் அம்பேகர்.

”இதுகுறித்து அனைவரும் கவனமாக இருக்குமாறு நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்,” என்றார் அவர்.

எஸ்சி/எஸ்டி பிரிவினரின் துணை வகைப்பாடு குறித்தும் பேசப்படுகிறது. அரசுகள் விரும்பினால் அதைச் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய அம்பேகர், ​​“அரசியல் சாசனம் அளித்துள்ள இடஒதுக்கீடு மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். இதற்கு சங்கம் எப்போதும் ஆதரவு அளித்து வருகிறது. நீதிமன்றத்தில் நடந்தது மிகவும் உணர்வுபூர்வமான விவகாரம். இதுகுறித்து அரசும், சட்ட அதிகாரிகளும் முடிவு எடுக்க வேண்டும். ஆனால், இடஒதுக்கீட்டால் பயனடைபவர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரிடையேயும் ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். இதற்கு முன் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது," என்று கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் கருத்தும் காங்கிரஸின் 4 கேள்விகளும்

மல்லிகார்ஜுன் கார்கே

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளிப்படையாக ஆதரிக்கிறார்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை எதிர்க்கட்சிகள் குறி வைத்துள்ளன.

“ஆர்எஸ்எஸ் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவானதா அல்லது எதிரானதா என்பதை நாட்டிற்கு தெளிவாகச் சொல்ல வேண்டும். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு பதிலாக மனுஸ்மிருதிக்கு ஆதரவாக செயல்படும் சங்பரிவார், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழை-எளிய சமூகத்தின் பங்கேற்பைப் பற்றி கவலைப்படுகிறதா இல்லையா?” என்று மல்லிகார்ஜுன் கார்கே சமூக ஊடக தளமான எக்ஸில் பதிவிட்டுள்ளார்.

மறுபுறம்,”சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று இன்று யாரும் வெளிப்படையாக சொல்ல முடியாது. ஆனால் இது நடக்கக் கூடாது என்றே அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் பாஜக இந்த விவகாரத்தை மீண்டும்மீண்டும் எழுப்புகிறது,” என்று பிகார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். அவர்கள் சொல்வது ஒன்று, செய்வது வேறு. அவர்களுக்கு இட ஒதுக்கீடு பற்றி எந்த கவலையும் இல்லை. பாபா சாகேப் வகுத்தளித்த அரசியலமைப்பை மாற்ற மட்டுமே இவர்கள் விரும்புகிறார்கள்,” என்றார் அவர்.

”சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆர்எஸ்எஸ் அமைப்பால் நிறுத்த முடியாது,” என்று லாலு பிரசாத் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், ஆர்எஸ்எஸ் அமைப்பை குறிவைத்து தனது எக்ஸ் பக்கத்தில் 4 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

"சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான ஆர்.எஸ்.எஸ்.ஸின் பிரசங்க கருத்துக்கள் சில அடிப்படைக் கேள்விகளை எழுப்புகின்றன. முதலாவது, சாதிவாரி கணக்கெடுப்பைத் தடுக்கும் அதிகாரம் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு உள்ளதா?"

"இரண்டாவது, சாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி கொடுக்க ஆர்.எஸ்.எஸ் யார்? மூன்றாவது, சாதிவாரி கணக்கெடுப்பை தேர்தல் பிரசாரத்திற்காக தவறாக பயன்படுத்தக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். சொல்வதன் பொருள் என்ன? அது நீதிபதியா அல்லது நடுவரா?"

"நான்காவது, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஓபிசிகளுக்கான இடஒதுக்கீட்டில் 50 சதவிகிதம் என்ற வரம்பை நீக்குவதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தின் அவசியம் குறித்து ஆர்எஸ்எஸ் ஏன் மௌனத்தை கடைப்பிடிக்கிறது?"

இதனுடன், “இப்போது ஆர்.எஸ்.எஸ் கிரீன் சிக்னல் கொடுத்துள்ள நிலையில் காங்கிரஸின் இன்னொரு உத்தரவாதத்தை அபகரித்து பிரதமர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவாரா?” என்றும் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பினார்.

பாஜக மீது அதிகரிக்கும் அழுத்தம்

யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images

படக்குறிப்பு, இந்துக்களை சாதியின் பெயரால் பிளவுபடுத்தும் முயற்சிகள் நடப்பதாக யோகி ஆதித்யநாத் பலமுறை கூறியிருக்கிறார்

சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இந்த அறிக்கை முக்கியமானது. ஏனென்றால் இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளின் இலக்காக பாஜக உள்ளது.

சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடமிருந்து மட்டுமின்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) மற்றும் ஐக்கிய ஜனதா தளம் போன்ற கூட்டணி கட்சிகளிடம் இருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான அரசு பிகாரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியது. அப்போது ஐக்கிய ஜனதா தளம் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தது. மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் -ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி இருந்தது.

ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) ஆகியவையும் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பைக் கோரியுள்ளன. சமீபத்தில், நாடாளுமன்றத்தின் ஓபிசி நலக் குழுவில் ஐக்கிய ஜனதா தளம் இந்தப் பிரச்னையை எழுப்பியது.

பாஜக இதுவரை சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளிப்படையாக எதிர்க்கவில்லை. ஆனால் அதுகுறித்து கருத்தும் தெரிவிக்கவில்லை.

சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பில் தனது இந்து வாக்கு வங்கி சிதைந்துவிடும் அபாயத்தை பாஜக காண்கிறது. அதனால்தான் அக்கட்சியால் இதை வெளிப்படையாக ஆதரிக்கவோ எதிர்க்கவோ முடியவில்லை.

இந்து சமுதாயத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் மீது பாஜக குற்றம்சாட்டியது.

இதுகுறித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக எம்பி கங்கனா ரணாவத் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கூடாது' என்று கங்கனா ரணாவத் கூறியிருந்தார்.

2019 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்தது. அரசியல் சாசனம் ஆபத்தில் இருப்பதாக எஸ்சி/எஸ்டி வாக்காளர்களிடம் செய்தியை கொண்டு சேர்ப்பதில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றதே இதற்கு முக்கிய காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கியம் என்று ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளதால், இந்த விவகாரத்தில் பாஜக முடிவெடுப்பது இனி எளிதாக இருக்கலாம்.

ஆர்.எஸ்.எஸ் எண்ணத்தில் மாற்றம்?

இந்துத்துவ அரசியல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்துத்துவ அரசியலில் இப்போது சாதி பற்றிய கேள்வி முக்கியமாக எழ ஆரம்பித்துள்ளது

2015ஆம் ஆண்டு ’இட ஒதுக்கீடு ஆய்வு’ குறித்து மோகன் பாகவத் பேசிய போது பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

மோகன் பாகவத்தின் இந்த கருத்து 2015 பிகார் சட்டப்பேரவை தேர்தலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது.

அப்போது மோகன் பாகவத்தின் கருத்துக்கு ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் விளக்கமும் அளித்தது.

இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களும், அதன் ஆதரவாளர்களும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டால், இந்தப் பிரச்னையை நொடிப்பொழுதில் தீர்த்து விடலாம் என்று 2019 இல் மோகன் பாகவத் கூறியிருந்தார்.

இந்த அறிக்கை குறித்தும் நிறைய சர்ச்சைகள் எழுந்தன. மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த ராம்தாஸ் அத்வாலே மற்றும் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் இந்த அறிக்கையில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கூறினர்.

'நாங்கள் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. இடஒதுக்கீடு விவகாரம் குறித்து ஒருமனதாக விவாதிக்கப்பட வேண்டும்,’ என்று ஆர்எஸ்எஸ் தெளிவுபடுத்தியது.

அப்போது ​​ஆர்எஸ்எஸ் பிராந்திய கொள்கை பரப்புப் பிரிவு தலைவர் பிரமோத் பாபட் பிபிசி மராத்தியிடம், “இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறுபவர்கள், அந்த நன்மையை தொடர்ந்து பெற விரும்புகிறார்களா அல்லது கைவிட விரும்புகிறார்களா என்பது அவர்களை பொறுத்து உள்ளது என்று சங்கம் நம்புகிறது,” என்று தெரிவித்தார்.

”இட ஒதுக்கீடு வேண்டுமா, வேண்டாமா என்று விவாதிப்பதற்கு பதிலாக, இட ஒதுக்கீடு பெறுபவர்களுக்கு அதன் மூலம் என்ன நன்மை ஏற்பட்டுள்ளது என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆர்எஸ்எஸ் பார்வையில் சாதிகள்

பாஜக

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தொகுதி பங்கீட்டில் சாதி சமன்பாடு குறித்து பாஜக தனி கவனம் செலுத்துகிறது

இந்துத்துவ அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் பிரெஞ்சு அறிஞர் கிறிஸ்டோபர் ஜாஃபர்லோ, 2020-ஆம் ஆண்டு ஒரு கட்டுரையில், ’மராத்தி பிராமணர்களால் உருவாக்கப்பட்ட ஆர்எஸ்எஸ், படிப்படியாக அனைத்து பின்னணியிலும் உள்ள இந்துக்களையும் ஈர்க்க முயன்றது’ என்று எழுதியுள்ளார்.

"மகாராஷ்டிராவில் அம்பேத்கர் தலைமையிலான தலித் அரசியல் எழுச்சிக்கு எதிர்வினையாக ஆர்எஸ்எஸ் தோன்றியது என்பதே உண்மை. பின்னர் அம்பேத்கர் அந்த பகுதியில் முதன் முறையாக சாதி எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கினார். அதில் மஹார் சத்தியாகிரகம் மற்றும் தலித்துகளின் கோவில் நுழைவு பிரசாரமும் இருந்தது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆட்சியில் நீடிக்க வேண்டுமானால் பகுஜன்களை இணைக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ்ஸுக்குத் தெரியும். இதன் கீழ் பா.ஜ.க, கட்சி மற்றும் ஆட்சியில் சாதிக்கு சிறப்பு கவனம் கொடுத்து வருகிறது. சமீபத்தில் ரயில்வே வாரியத்தின் தலைவராக தலித் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் பதவியில் பாஜக அமர்த்தியது.

1925ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை ஆர்எஸ்எஸ்-இல் மொத்தம் ஆறு தலைவர்கள் இருந்துள்ளனர். நான்காவது தலைவர் ரஜ்ஜு பைய்யா அதாவது ராஜேந்திர சிங் தவிர மற்ற அனைவரும் பிராமணர்கள். ரஜ்ஜு பைய்யாவும் ஒரு தாக்கூர். அதாவது எல்லா ஆர்எஸ்எஸ் தலைவர்களுமே உயர் சாதியினர்.

ஆர்.எஸ்.எஸ்.க்கு உள்ளேயும் கூட உயர்சாதியினரின் ஆதிக்கம் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இந்த ஆண்டு மே மாதம், ‘ஆர்.எஸ்.எஸ்.-சில் உயர் சாதியினரின் ஆதிக்கம்’ குறித்த பிபிசியின் கேள்விக்கு பதிலளித்த ஆர்எஸ்எஸ்-இன் ராஜஸ்தான் தர்ம பிரசார் பிரிவின் அதிகாரி ஒருவர், "கடந்த பத்து ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். நிறைய மாறிவிட்டது. நாடு முழுவதும் சுமார் இரண்டாயிரம் ஆர்எஸ்எஸ் பிரசாரகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 20 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் தலித்துகள். முன்பு இப்படி இருக்கவில்லை. ஒரு தலித் அல்லது பழங்குடியின தொண்டர் சங்கத்தின் தலைவராக ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை. பகுஜன்களை ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துடன் இணைப்பது எங்கள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகும். அதை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம்,” என்றும் குறிப்பிட்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)