ஹனுமான்கைண்ட்: அடையாளங்களைக் கடந்து சாதித்த இந்திய 'ராப்பர்' ஒரே பாடலில் புகழின் உச்சம் தொட்டது எப்படி?

பட மூலாதாரம், Hanumankind/Instagram
- எழுதியவர், ஜோயா மாதீன்
- பதவி, பிபிசி டெல்லி
இந்திய ராப் இசைக்கலைஞர் ஹனுமான்கைண்ட் குறுகிய காலத்தில், நாட்டின் வளர்ந்து வரும் ஹிப்-ஹாப் இசைப்பிரிவின் ஒரு தனித்துவமான முக்கிய கலைஞராக உருவெடுத்துள்ளார். அவரது பாடல் டிராக்கான 'பிக் டாக்ஸ்’ உலகளாவிய தரவரிசையில் முதலிடத்தை எட்டியது மட்டுமல்லாமல், கென்ட்ரிக் லாமரின் 'நாட் லைக் அஸ்’ பாடலையும் முந்தியது.
பிக் டாக்ஸ் (Big Dawgs) பாடல் வீடியோவில், 'ஹனுமான்கைண்ட்’ என்று அழைக்கப்படும் 31 வயதான சூரஜ் செருகட் தன் எல்லையற்ற ஆற்றலை வெளிப்படுத்துகிறார்.
இந்த பாடலுக்கான காட்சிகள், கிணறு போன்றதொரு அமைப்பில் (மரணத்தின் கிணறு) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பெரிய மர பீப்பாய் போன்ற அமைப்புக்குள் இளைஞர்கள் புவியீர்ப்பு விசையை மீறி ஸ்டண்ட் செய்யும் ஒரு ஆச்சரியமான காட்சி அமைப்பை கொண்டுள்ளது. வாகனங்கள் சுற்றி வட்டமிடுகையில், ஹனுமான்கைண்ட் ராப் செய்து கொண்டே நடனமாடுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தயாரிப்பாளர் கல்மி ரெட்டி மற்றும் இயக்குனர் பிஜோய் ஷெட்டியுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தப் பாடல், ஜூலை மாதம் வெளியானதிலிருந்து, ஸ்பாட்டிஃபை (Spotify) செயலியில் 132 மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீம்களையும், யூடியூபில் 83 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றுள்ளது. இது சூரஜ் செருகட் உலகளாவிய புகழைப் பெற உதவியது.
மேலோட்டமாக பார்த்தால், செருகட்டின் இசை ஹிப்-ஹாப் முறையை பின்பற்றி தெருவோர வாழ்க்கையின் கதைகளை வெளிப்படையான பாடல் வரிகள் மூலம் முன்வைக்கிறது.
ஆனால் உற்றுநோக்கினால், தனது தனித்துவமான அடையாளங்களை வெளிப்படுத்த இசையை இந்த ராப்பர் பயன்படுத்துகிறார் என்பது தெரிகிறது.
ஏழ்மை பின்புலம் கொண்ட கலைஞர்களுக்கான பாடல்

பட மூலாதாரம், Big Dawgs/YouTube
கேரளாவில் பிறந்த செருகட், தனது குழந்தைப் பருவத்தில் இருந்தே உலகம் முழுவதும் பயணிக்கும் சூழலில் வளர்ந்தார்.
ஒரு முன்னணி எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரியும் அவரது தந்தையின் பணி காரணமாக பிரான்ஸ், நைஜீரியா, எகிப்து மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இவர் வசித்துள்ளார்
தனது குழந்தை பருவத்தின் ஆரம்ப ஆண்டுகளை டெக்சாஸின் ஹூஸ்டனில் கழித்தார். இங்குதான் அவரது இசை பயணம் வடிவம் பெற்றது.
அமெரிக்காவில் நன்கு அறியப்பட்ட கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை ராப் கலாசாரத்தை போலல்லாமல், ஹூஸ்டன் ஒரு தனித்துவமான ஹிப்-ஹாப் கலாசாரத்தைக் கொண்டுள்ளது, அது அதன் சொந்த வடிவத்தில் இருக்கும்.
ஹூஸ்டனின் ஹிப்-ஹாப் நிகழ்ச்சிகளில், இருமல் மருந்தை போதை மருந்தாக பயன்படுத்துகின்றனர். அது ஏற்படுத்தும் மயக்க விளைவு "வாய் குளறுதல்'' ரீமிக்ஸ் உருவாக்க வழிவகுத்தது. இருமல் மருந்தின் தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் இசைத் தடங்கள் மெதுவாக்கப்படுகின்றன.
டெக்சாஸ் ஹிப்-ஹாப் ஜாம்பவான்களான டிஜே ஸ்க்ரூ, யுஜிகே, பிக் பன்னி மற்றும் ப்ராஜெக்ட் பாட் போன்றவர்களுடன் தனது இசை மறைமுகமாக ஒத்துப்போவது பற்றி செருகட் அடிக்கடி பேசியுள்ளார். சிறிய வயதில் இருந்தே அவர்களின் இசையை கேட்டு வளர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது ராப் பாடல்களில் டெக்சாஸ் ஹிப்-ஹாப் ஜாம்பவான்களின் ஆதிக்கம் இருந்தாலும், அவர் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு 2021 இல் இந்தியா திரும்பிய பிறகு அவரது பாணி மேலும் வளர்ந்தது.
அவர் வணிகப் பிரிவில் பட்டம் பெற்றார் மற்றும் கோல்ட்மேன் சாச்ஸ் போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்தார். இது தனக்கான வேலை இல்லை என்பதை உணர்ந்த அவர் முழுநேரமாக ராப் இசையைத் தொடர முடிவு செய்தார்.
அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் போலவே, செருகட்டின் இசையும் பல்வேறு நாடுகளில் வசித்த அவரது அடையாளத்தை கைவிட்டு, இந்திய வேர்களுடன் மீண்டும் இணைவதற்கான அவரது முயற்சியை பிரதிபலிக்கிறது.
அவரது பாடல்கள் பெரும்பாலும் தென்னிந்திய தெருவோர வாழ்க்கையின் போராட்டங்களை துணிச்சலாக பிரதிபலிக்கின்றன. வலிமையான குரல் கவர்ச்சியான தாளங்களுடன் கலந்து ரசிகர்களை ஈர்க்கிறது. எப்போதாவது, தபேலா பீட் மற்றும் சின்தசைசர்கள் அவரது சக்தி வாய்ந்த வசனங்களுக்கு துணைபுரிகின்றன.
"எங்கள் தேசத்தில் எங்களுக்கு பிரச்னைகள் உள்ளது, ஏனென்றால் கட்சிகள் போரில் உள்ளன" என்று அவர் செங்கிஸ் என்ற பாடலில் ஏளனம் செய்கிறார். இது அவர் வசிக்கும் பெங்களூரின் சாலைகளில் படமாக்கப்பட்டுள்ளது.
பிரபலமான ராப் பாடல்களில் பயன்படுத்தப்படும் அணிகலன்கள் மற்றும் ஆடம்பரத்தை பிக் டாக்ஸ் பாடலில் செருகட் தவிர்த்துள்ளார். மேலும், ஆடம்பரமான கார்களை பயன்படுத்தாததுடன், சிறிய நகரங்களில் வசிக்கும் ஸ்டண்ட்மேன்களை நடிகர்களாக தேர்ந்தேடுத்துள்ளார். இந்த கலைஞர்கள் மறைந்து வரும் இந்தியக் கலை வடிவத்தின் உறுப்பினர்களாகவும், ஏழ்மை பின்புலத்தை கொண்டவர்களாகவும் உள்ளனர்.
வீடற்ற உணர்வு
"இவர்கள்தான் உண்மையில் துணிந்து ரிஸ்க் எடுப்பவர்கள்" என்று அவர் காம்ப்ளக்ஸ் இணையதளத்திடம் குறிப்பிட்டார்.
ஆனால் அவரது இசையின் அதீத ஆற்றல் பலரை ஈர்த்தாலும் சில விமர்சனங்களையும் தேடித் தந்தது.
அவரது பாடல்கள் இந்திய ரசிகர்கள் மத்தியில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்துவதாக சிலர் கருதுகின்றனர். உள்ளூர் மொழிகளில் ராப் செய்யும் பல ராப் பாடகர்களை போலல்லாமல், செருகட் ஆங்கிலத்தில் பாடுகிறார், இது ஆங்கிலம் பேசாத பார்வையாளர்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தாது.
மற்றவர்கள் அவரின் இசை மேற்கத்திய கலைஞர்களை மிக நெருக்கமாகப் பிரதிபலிப்பதாகவும், அவரது இந்திய அடையாளத்திற்கு ஒரு அடையாள அணுகுமுறையை மட்டும் கடைப்பிடிப்பதாகவும் விமர்சிக்கின்றனர்.
"அவரது பாடல் இந்தியர்களையும் தெற்காசியர்களையும் வெஸ்டர்ன் ராப் பிரிவில் முக்கிய கலைஞர்களாக முன்னிறுத்தியது சிறப்பாக உள்ளது" என்று நியூ ஜெர்சியில் உள்ள ஆய்வு மாணவர் அபித் ஹக் கூறினார்.
"ஆனால் அவர் ஒரு அமெரிக்க ராப்பரை பிரதிபலிப்பதால் இந்தியாவின் பார்வையில் இருந்து விலகி இருப்பது போல் தெரிகிறது. பிக் டாக்ஸ் இசை வீடியோ இந்திய அழகியலை நம்பியிருந்தாலும், பாடல் வரிகளும் இசையும் இந்திய யதார்த்தத்திலிருந்து விலகிவிட்டதாக உணர்கிறோம்," என்று அவர் மேலும் விவரித்தார்.
"உண்மையில் இதுதான் சொந்த இடம், வீடு என்று எந்த பகுதியையும் அழைக்க முடியாத ஒருவனாக நான் இருக்கிறேன். பல நாடுகளில் வசித்திருப்பதால் அதன் ரசனைகள் என்னை இப்படி வடிவமைத்துள்ளது என்று நான் நினைக்கிறேன். நான் இசையை உணரும் விதத்தையும் அது வடிவமைத்தது, மக்கள் மற்றும் கலாசாரங்கள் என்னுள் தாக்கங்களை ஏற்படுத்தியது" என்று காம்ப்ளக்ஸ் இணையதளத்திடம் செருகட் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
துள்ளலை ஏற்படுத்தும் தெருக் கலைஞர்
செருகட் தன்னை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
"நான் ஒரு இந்திய ராப்பர் அல்ல, ஆனால் நான் இந்தியாவில் இருந்து வந்த ஒரு ராப்பர்" என்று அவர் முந்தைய நேர்காணல்களில் கூறினார், அவர் நாட்டில் வளர்ந்துவரும் ஹிப்-ஹாப்பை தாண்டி தன்னை நிலைநிறுத்துவதாக விளக்கினார்.
அதே சமயம் செருகட் தனது தனித்துவமான பாணிக்காக ஆன்லைனில் இனவெறி கருத்துகளையும் சரமாரியாக எதிர்கொண்டார்.
சில சர்வதேச ரசிகர்கள் அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்கின்றனர், ஏனெனில் அவர் அவர்களின் எதிர்பார்ப்புகளைப் போல தோற்றம் அல்லது தொணியை கொண்டிருக்கவில்லை.
இதற்கிடையில், அவரது இந்திய பார்வையாளர்கள் அதே காரணங்களுக்காக அவரை விமர்சிக்கிறார்கள். அவர் இந்திய அடையாளத்தின் பிம்பத்துடன் இன்னும் ஒத்துப்போக வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அவரை எந்த கலாசாரத்துடனும் பொருத்திப் பார்க்க முடியவில்லை என்பதைதான் பல ரசிகர்கள் மிகவும் நேசிக்கிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை, அவர் ஒரு வகைத் துள்ளலை ஏற்படுத்தும் தெருக் கலைஞர். அவர் தான் கடந்து வந்த பழைய ஹிப் ஹாப் மரபுகளை எடுத்து புதிய சமூக வர்ணனையுடன் புகுத்தி பாடல் இயற்றுகிறார்.
"அவர் இந்திய பார்வையாளர்களை திருப்திப்படுத்த முயற்சிக்கவில்லை, அது அவரது இசையில் பிரதிபலிக்கிறது, மேலும் அவர் அதைப் பற்றி வருந்தவில்லை," என்று டெல்லியைச் சேர்ந்த மனநல மருத்துவர் அர்னாப் கோஷ் கூறினார். இவர் சமீபத்தில் பிக் டாக்ஸ் மூலம் ஹனுமான்கைண்ட் பற்றி அறிந்தார்
"அவரது இசையை நான் கேட்கும் போது அது உலகில் எங்கிருந்தும் உருவாகி இருக்கலாம் என்று தோன்றுகிறது. அந்த வகையான உலகளாவிய தன்மை என்னை ஈர்க்கிறது." என்றார்.
ஒரு தெற்காசிய ராப்பரால் என்ன சாதிக்க முடியும் என்ற முன்முடிவுகளை முறியடித்து, தனது சொந்த அடையாளத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது செருகட்டின் மிகப்பெரிய வெற்றியாகவும் - சவாலாகவும் இருக்கலாம்.
அவர் ஒருமுறை கூறியது போல், "நீங்கள் சில விஷயங்களை உங்கள் வேர்களாக வைத்திருப்பீர்கள், ஆனால் நீங்கள் கோட்பாட்டில் சமரசம் செய்யாமல் சூழலுக்கு ஏற்றவாறு பாணியை மாற்றியமைப்பது உங்களுடைய விருப்பம்"
இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












