'ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட வீடு என்னுடையது' - பிபிசியிடம் பேசிய நபர் கூறியது என்ன?

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 2021-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சின்வாரின் புகைப்படம்.
    • எழுதியவர், அலி அப்பாஸ் அஹ்மாடி & மார்வா கமால்
    • பதவி, பிபிசி நியூஸ், பிபிசி அரபு சேவை

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட வீடு, 15 ஆண்டு காலமாகத் தன்னுடைய வீடாக இருந்ததாக, காஸாவை சேர்ந்த ஒரு பாலத்தீன நபர் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் அவர் அங்கிருந்து இடம்பெயர்ந்தார்.

சின்வார் கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேல் வெளியிட்ட ட்ரோன் காட்சியில் பகுதியளவு அழிக்கப்பட்ட கட்டடத்தைப் பார்த்து, அது தெற்கு காஸாவின் ரஃபா நகரில் ஐபின் செனா தெருவில் உள்ள தனது வீடு என, 'அதிர்ச்சியடைந்ததாகக்' கூறுகிறார் அஷ்ரஃப் அபோ தாஹா.

2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7--ஆம் தேதி, இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தவராக கருதப்படும் யாஹ்யா சின்வார் இஸ்ரேலிய படையினரால் கடந்த புதன்கிழமை கொல்லப்பட்டார்.

அவர் கொல்லப்படுவதற்கு முன்பு பகுதியளவு சேதமடைந்த கட்டடத்தில் சின்வார் இருக்கும் ட்ரோன் காட்சியை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டிருந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'இது என் வீடுதான்'

காஸா மக்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பகிர்ந்துகொள்ளும் பிபிசி அரபு சேவையின் 'காஸா லைஃப்லைன்' (Gaza Lifeline) எனும் நிகழ்ச்சியில் அபோ தாஹா பேசினார்.

ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு எதிரான நடவடிக்கையை இஸ்ரேல் ராணுவம் தொடங்கியதையடுத்து, பொதுமக்களை வெளியேறுமாறு அறிவித்ததை தொடர்ந்து, கடந்த மே 6-ஆம் தேதி ரஃபாவில் உள்ள தன் வீட்டிலிருந்து கான் யூனிஸுக்கு இடம்பெயர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

தன்னுடைய வீடு குறித்து இதுவரை எந்த தகவலையும் தான் பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

சமூக ஊடகத்தில் சின்வாரின் இறுதித் தருணங்கள் என கூறப்படும் வீடியோ காட்சியில், அது ரஃபாவில் உள்ள தங்களது வீடு போன்று இருப்பதாகக் கூறி, அவருடைய மகள் அபோ தாஹாவிடம் காண்பித்துள்ளார். அவரின் சகோதரர் இது அவர்களது வீடுதான் என்று உறுதிப்படுத்தும் வரை, தன் மகள் கூறுவதை தாஹா நம்பவில்லை.

“அது எனது வீடு தான். அந்தப் படங்களைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்,” என அபோ தாஹா கூறுகிறார்.

சின்வார் அங்கே ஏன் இருந்தார், அங்கே எப்படிச் சென்றார் என்பது குறித்து தனக்கு ஏதும் தெரியவில்லை என்றார் அவர்.

“எனக்கோ, என் சகோதரர்களுக்கோ, மகன்களுக்கோ இதில் எவ்வித தொடர்பும் இல்லை,” என்றார் அவர்.

அபோ தாஹா வழங்கிய அவருடைய வீடு குறித்த படங்கள் மற்றும் வீடியோக்களை பிபிசி சரிபார்த்தது. அவை, சின்வார் கொல்லப்பட்ட வீட்டுடன் ஓத்துப்போனது.

'பிபிசி வெரிஃபை' அந்தப் படங்களின் ஜன்னல் வளைவுகள், கதவுகளில் செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுகள், அலமாரிகள், நாற்காலிகளுடன் ஒப்பிட்டுப் பொருத்திப் பார்த்தது.

அபோ தாஹாதான் அந்த வீட்டின் உரிமையாளர் என்பதை பிபிசியால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.

யாஹ்யா சின்வார்

பட மூலாதாரம், Ashraf Abo Taha

படக்குறிப்பு, தங்கள் வீட்டின் முன்வாசல் பகுதியிலுள்ள டைல்ஸ் கற்கள், சின்வார் கொல்லப்பட்ட இடம் என இஸ்ரேல் ராணுவம் கூறும் இடத்துடன் ஒத்துப்போவதாக அபோ தாஹா கூறுகிறார்

சின்வார் கொல்லப்பட்ட காணொளி பிபிசியால் ஆராயப்பட்டது. அந்த வீடு, அப்பகுதியில் பெருமளவு அழிவுக்குள்ளான கட்டடங்களுள் பகுதியளவு மட்டும் பாதிக்கப்பட்ட வெகுசில கட்டடங்களுள் ஒன்றாகும்.

கடந்த மே மாதம் ரஃபாவில் இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச அளவில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. இதனால், 10 லட்சத்திற்கும் அதிகமான பாலத்தீனர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்ததாக, ஐ.நா., தெரிவித்துள்ளது.

காஸாவின் பிற பகுதிகளில் இடம்பெயர்ந்த பின்னர், ரஃபாவிலும் அதைச் சுற்றிலும் பலர் தஞ்சமடைந்திருந்ததால், பலரும் இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக அங்கிருந்து இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

யாஹ்யா சின்வார்

பட மூலாதாரம், IDF

'என் நினைவுகள் இவை'

ரஃபாவில் தன் உடன்பிறந்தோரின் உதவியுடன் அந்த வீட்டை தானாகவே கட்டியதாக அபோ தாஹா கூறுகிறார். அதனை கட்டுவதற்கு 2,00,000 ஷெகெல் (சுமார் ரு.45 லட்சம்) செலவானதாகவும் தாங்கள் வெளியேறும் போது அந்த வீடு நல்ல நிலைமையில் இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

ஆரஞ்சு நிற சோஃபாக்கள் மற்றும் ஆரஞ்சு நிற பாத்திரம், வீட்டிலிருந்து வெளியேறிய கடைசி தருணத்தை நினைவுபடுத்தியதாக அவர் விவரித்தார்.

“இவற்றில் சில என்னுடைய அம்மா வாங்கிக் கொடுத்தது என்பதால், விலைமதிப்பில்லாத நினைவுகள் இவை,” என அவர் தெரிவித்தார்.

“இது எனக்கு மிகவும் சோகமான விஷயம். நான் கட்டிய வீடும் என்னுடைய பணத்தையும் நான் இழந்துவிட்டேன்,” என்றார்.

“கடவுளால் மட்டுமே இதை ஈடுசெய்ய முடியும்.”

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)