'5 கி.மீ.யை கடக்க 5 மணி நேரம்': திருச்சியில் கூடிய கூட்டமும் விஜயின் பேச்சும் உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், TVK
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி திருச்சியில் சனிக்கிழமையன்று (செப்டெம்பர் 13) மக்கள் சந்திப்புப் பயணத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தொடங்கினார்.
'தி.மு.க ஆட்சியை விமர்சித்தாலும் கூட்டணியை வீழ்த்தும் அளவுக்கு தவெக பலம் பெறவில்லை' எனக் கூறுகிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
'செல்வாக்கைக் காட்டும் விதத்தில் விஜய் பயணம் இருந்தாலும் வெற்றியைத் தருமா என்பது கேள்விக்குறி' என, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
விஜய்க்கு திருச்சியில் கூடி மக்கள் திரள் எதைக் காட்டுகிறது? அதுகுறித்து கட்சிகளும், அரசியல் பார்வையாளர்களும் என்ன சொல்கிறார்கள்?
ஐந்து மணிநேர தாமதம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியில் சனிக்கிழமை (14/09/2025) தொடங்கியது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து அவர் பேசவிருந்த மரக்கடை என்ற இடத்திற்கு விஜய் வந்து சேரவே ஐந்து மணிநேரத்துக்கும் மேல் தாமதமானது.
அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

பட மூலாதாரம், TVK

பட மூலாதாரம், TVK
காலை 10.30 மணிக்கு பேசுவார் என்று அறிவிக்கப்பட்ட மரக்கடையில் அவரால் மாலை சுமார் 4 மணியளவில்தான் பேச்சைத் தொடங்க முடிந்தது.
" போருக்குப் போவதற்கு முன்பாக போரில் ஜெயிப்பதற்காக குலதெய்வக் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிடுவார்கள். அதுபோல ஜனநாயகப் போருக்காக இங்கு வந்துள்ளேன்" என்றார் விஜய்.
மக்களை மோசமாக ஆண்டு கொண்டிருக்கும் தி.மு.கவையும் பா.ஜ.கவையும் கேள்வி கேட்பதற்காகவே வந்திருப்பதாகக் கூறிய விஜய், "மக்களை வாட்டி வதைக்கும் பா.ஜ.கவையும் தி.மு.கவையும் விட மாட்டோம்" என்றார்.
தொடர்ந்து விஜய் பேசுவதை சரிவர கேட்க முடியாமல் ஒலிபெருக்கியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அங்கிருந்த தொண்டர்கள் சரிவர கேட்கவில்லை எனக் கூறியும் தனது பேச்சை விஜய் தொடர்ந்தார்.
தி.மு.க, பா.ஜ.கவை சாடிய விஜய்

பட மூலாதாரம், TVK
இந்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைச் சாடிய விஜய், "இதன்மூலம் தேர்தலில் தவறுகள் தான் நடக்கும். அதற்காகவே மத்திய பா.ஜ.க அரசு இதைக் கொண்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
மக்களவைத் தொகுதிகள் மறு சீராய்விலும் தென்னிந்தியாவுக்கு எதிராக மிகப் பெரிய சதி உள்ளதாகவும் இதை தவெக எப்போதும் எதிர்க்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதி, கீழடி ஆய்வு முடிவுகள், பேரிடர் நிதி ஆகியவற்றில் மத்திய அரசு வஞ்சிப்பதாகக் கூறிய விஜய், "நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் அடையும் துன்பங்களை பா.ஜ.க அரசு கண்டுகொள்ளவில்லை. கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும் வேடிக்கை பார்க்கிறது" எனப் பேசினார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டதாக மனசாட்சி இல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதாக விஜய் விமர்சித்தார்.
தொடர்ந்து, 'கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், டீசல் விலையில் மூன்று ரூபாய் குறைப்பு, அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை, நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து ஆகியவற்றை செய்தீர்களா?' என தி.மு.க அரசை நோக்கி கேள்வி எழுப்பினார்.
'கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றம், ஆண்டுக்கு பத்து லட்சம் பட்டதாரிகளுக்கு வேலை, மாதம்தோறும் மின் கட்டணம், பழைய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை செய்வதாகக் கூறினீர்களே.. செய்தீர்களா?' எனவும் விஜய் கேள்வி எழுப்பினார்.
"தமிழ்நாட்டுக்கு மத்திய பா.ஜ.க அரசு செய்வது துரோகம் என்றால் தமிழ்நாட்டுக்கு ஸ்டாலின் அரசு செய்வது நம்பிக்கை மோசடி" எனவும் தவெக தலைவர் விஜய் விமர்சித்தார்.
"இரண்டுமே தவறு தான். இரண்டுமே ஏமாற்று வேலை தான். இரண்டு பேருமே ஏமாற்றுவதில் ஒரே வகையறா தான். இவர்கள் இருவரும் மறைமுக உறவுக்காரர்கள் என்று ஏன் சொல்கிறோம் என இப்போது புரிந்திருக்கும்" எனவும் விஜய் சாடினார்.
விஜய் பேச்சு பற்றி திருமாவளவன் கருத்து
விஜயின் பிரசாரம் குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "களப்பணியை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். இதன்மூலம் தேர்தல் அரசியலில் என்ன தாக்கம் ஏற்படப் போகிறது என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது" எனக் கூறினார்.
"தி.மு.க அணியை வீழ்த்துவோம் என பலமுனைகளில் இருந்து வரும் குரல்களில் விஜயின் குரலும் ஒன்று" எனக் கூறிய திருமாவளவன், "இது தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என நம்புகிறேன்" எனக் கூறினார்.
தவிர, தி.மு.க கூட்டணியை வீழ்த்தும் அளவுக்கு விஜய் பலம் பெறவில்லை எனவும் திருமாவளவன் குறிப்பிட்டார்.
' பார்வையாளர்கள் மட்டுமே'

"தனக்கு செல்வாக்கு உள்ளது என்பதை விஜய் காட்டிக் கொள்வதாகவே இந்தக் கூட்டத்தைப் பார்க்க வேண்டியுள்ளது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், " எம்.ஜி.ஆர் நடத்திய கூட்டங்களில் இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்றாலும் சித்தாந்தங்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அங்கு இருந்தது" எனக் கூறுகிறார்.
"ஆனால், தவெக கூட்டத்தில் கற்றுக் கொள்வதற்கு எதுவும் இல்லை. அடுத்த 30 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் அரசியல், தனித்துவம் ஆகியவற்றைக் காக்க வேண்டிய பொறுப்பு இன்றைய தலைமுறைக்கு இருக்கிறது. அதற்கான பயிற்சியும் நெறிப்படுத்துதலும் தவெகவில் இல்லை" என்கிறார் ஷ்யாம்.
விஜயின் கூட்டத்துக்கு வருகிறவர்கள் பார்வையாளர்களாக மட்டுமே உள்ளதாகக் கூறும் ஷ்யாம், "அ.தி.மு.கவில் எம்.ஜி.ஆரின் முகத்துக்குக் கவர்ச்சி இருந்தாலும் அவருக்குப் பின்னால் சித்தாந்தத்தை வலிமையாக கொண்டு செல்வதற்கான படை இருந்தது" எனவும் குறிப்பிட்டார்.
திருச்சியில் கூடிய கூட்டம் குறித்துப் பேசும் ஷ்யாம், " கூட்டத்துக்குச் சென்றோம். செல்ஃபி எடுத்தோம் என்ற மனநிலையில் தொண்டர்கள் இருந்ததையே பார்க்க முடிந்தது. இது நீண்டகால அரசியல் வெற்றியைத் தருவதற்கான வாய்ப்புகளாக பார்க்க முடியவில்லை" என்கிறார்.
இதே கருத்தை முன்வைக்கும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "ரசிகர் கூட்டம், வாக்குகளாக மாறும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், கூட்டத்தை வழிநடத்திச் செல்வதற்கான கட்டமைப்பும் திட்டமிடலும் தவெகவில் இல்லை" என்கிறார்.
'வரவுக் கணக்கில் வருவதற்கு வாய்ப்பில்லை'

பட மூலாதாரம், TVK
திருச்சி விமான நிலையத்தில் இருந்து 5 கி.மீ தூரம் செல்வதற்கு சுமார் ஐந்து மணிநேரம் விஜய்க்கு தேவைப்பட்டதாகக் கூறும் குபேந்திரன், "இதைப் பெருமையாக அக்கட்சியினர் நினைக்கலாம். மக்கள் மத்தியில் எதிர்ப்பு தான் எழுந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
"தொண்டர்களை நெறிப்படுத்தியிருந்தால் தாமதம் ஏற்பட்டிருக்காது" எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், " கூட்டங்களுக்கு எம்.ஜி.ஆர் தாமதமாக வரும் நிகழ்வுடன் இதனை ஒப்பிட்டு சிலர் பேசுகின்றனர். அன்றைய காலகட்டம் வேறு. " என்கிறார்.
"மின் மாற்றிகள், கட்டடங்கள் மீது ரசிகர்கள் ஏறி நின்றனர். நல்லவேளையாக முன்கூட்டியே மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இப்படிப்பட்ட கூட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது?" எனக் கேள்வி எழுப்பும் குபேந்திரன், "கூட்டத்தைக் கூட்டுவதால் ஏற்படும் அசம்பாவிதங்களை மனதில் வைத்து செயல்பட வேண்டும்" எனக் கூறுகிறார்.
"கூட்டத்துக்கு எத்தனை பேர் வந்தாலும் அது வெற்றிக்கான வாக்குகளாக மாறாது. ஐந்து கோடி வாக்குகள் பதிவாகும் மாநிலத்தில் வெறும் லட்சங்களில் விழும் வாக்குகளால் வெற்றி கிடைக்காது" எனக் கூறும் ஷ்யாம், " இவை வரவுக் கணக்கில் வருவதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறுகிறார்.

தவெகவுக்கு என்ன பலன்?
"திருச்சி கூட்டத்தின் மூலம் தவெகவை நோக்கி சிலர் கூட்டணிக்கு வருவார்கள்" எனக் கூறும் ஷ்யாம், " அது கட்சிக்கு லாபமாக இருக்கும். ஆனால், தனது வாக்காளர்கள் யார் என்பதை விஜய் முடிவு செய்ய வேண்டும். தன்னைப் பார்க்க வந்தவர்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வதா என்பதை அவர் பார்க்க வேண்டும்" எனவும் தெரிவித்தார்.
தவெகவின் விக்கிரவாண்டி மாநாடு, மதுரை மாநாடு, திருச்சி பிரசாரம் ஆகியவற்றை மேற்கோள் காட்டிப் பேசிய ஷ்யாம், "மூன்று கூட்டங்களிலும் அரசியல்மயப்படுத்தும் வேலைகள் என எதுவும் இல்லை. திரைக் கவர்ச்சிக்கு பின்னால் கற்றுக் கொண்டது என்ன என்பது தான் முக்கியமானது" என்கிறார்.
"ஆளும்கட்சிகள் மீது விமர்சனம் வைப்பது தான் தவெகவின் வளர்ச்சிக்கு முக்கியமானது. திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் பலன் இல்லை என விஜய் பேசினார். ஆனால், அவை என்னென்ன எனப் பட்டியல் போட்டுப் பேசியிருக்க வேண்டும்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.
'அண்ணா, எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்'

பிபிசி தமிழிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி, "இதுபோன்ற கூட்டம் அண்ணா, எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய்க்கு வந்து சேர்கிறது. இது தானாக சேர்ந்த கூட்டமாக உள்ளது" என்கிறார்.
"போக்குவரத்து நெரிசலை காவல்துறை சரியான முறையில் கையாளவில்லை" எனக் கூறும் லயோலா மணி, "கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் கட்சியின் நிர்வாகிகளும் தன்னார்வலர்களும் ஈடுபட்டனர்" எனக் குறிப்பிட்டார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் அனைவரும் அரசியல்மயப்படுத்தப்பட்டு உள்ளதாகக் கூறிய அவர், "இரண்டு மாநில மாநாடுகளை நடத்தியுள்ளோம். எங்களால் அரசு சொத்துகளுக்கு எந்தவித சேதாரமும் ஏற்பட்டதில்லை" என்று மட்டும் பதில் அளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












